டாஸ்மாக் தனியார் மயம்; சாதகமா? பாதகமா?

-சாவித்திரி கண்ணன்

தனியார் மயத்தால் தரமான சரக்கு கிடைக்குமா? அரசின் வருமானம் அதிகமாகுமா? குறையுமா? சிறைக் கம்பி வழியாக தரப்பட்ட மது விற்பனை, அடிமாட்டுச்  சம்பளம், ஊழியர்கள் நடத்தப்பட்ட விதம், பார்களின் சுகாதாரக்கேடுகள், கணக்கு காட்டாமல் ஆட்சியாளர்கள் மது விற்பனையில் அடைந்த ஆதாயம் ஆகியவை தனியார் மயத்தால் முடிவுக்கு வருமா?;ஓர் அலசல்;

”மது​பான விற்​பனை​யில்​ ரெஸ்​டோ பார்​, தனி​யார்​ம​யம்​ குறித்​து ஆலோ​சித்​து வரு​கிறோம்​. டாஸ்​மாக்​ தனி​யார்​ மயமாகிறது” என தமிழக மது​விலக்​கு மற்​றும்​ ஆயத்​தீர்​வை துறை அமைச்​சர்​ விக்​னேஷ் தெரிவித்துள்ளார். இதில் உள்ள நன்மை, தீமை இரண்டையும் பார்ப்போம்;

‘ஒரு தொழிலை எப்படியெல்லாம் செய்யக் கூடாது’ என்பதற்கு அத்தாட்சியாக திகழ்ந்தது தான் டாஸ்மாக்! அரசாங்கமே டாஸ்மாக் நடத்தத் தொடங்கிய பிறகு தான் தமிழகத்தில் குடிப்பழக்கம் தாறுமாறாக அதிகரித்தது.

”டாஸ்மாக்கில் வரைமுறையற்ற வகையில் ஊழல் முறைகேடுகள் கடந்த காலங்களில் நடந்துள்ளதன் விளைவாக அதற்கு முற்றுப் புள்ளி வைக்கவே தனியார் மயம்” என தவெக அரசு வட்டாரத்தில் சொல்கிறார்கள்!

மக்களின் குடிப்பழக்கத்தை அதிகரிக்கச் செய்ய அரசின் அதிகாரம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியருக்கு டாஸ்மாக் விற்பனையை அதிகரித்து தரும் பொறுப்பு நிர்பந்திக்கப்பட்டது. ”கேவலம், இந்த அக்கிரமத்தை செய்வதற்காக கஷ்டப்பட்டு படித்து கலெக்டாரானோம்..?” என்று அவர்கள் வருந்திய நிகழ்வுகள் பல!

மக்கள் ரத்தத்தை உறிஞ்சி பணம் ஈட்டும் பேராசைக்கார வணிகராக அரசே மாறியதன் பின்னணியில் ஆட்சியாளர்களின் சுய ஆதாயமும் இருந்தது.

1971-ல் மதுவிலக்கைத் தளர்த்தி மதுப் புழக்கத்தை ஆரம்பித்து வைத்தார், கருணாநிதி. இந்த காலகட்டத்தில் (1971-1973 ஆண்டுகளில்) மது விற்பனை மற்றும் வரிகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 26 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் வந்தது. சமூகத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளையடுத்து கருணாநிதி மீண்டும் 1973 -ல் மது விலக்கை அறிமுகப்படுத்தினார்.

இதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து 1983 ஆம் ஆண்டு மதுவிலக்கை தளர்த்தி, டாஸ்மாக்கை கொண்டு வந்தது  எம்.ஜி.ஆர் தான்!  15 கோடி அரசின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட டாஸ்மாக் மூலம் அப்போது அரசுக்கு வருமானமாக 139 கோடி ரூபாய் கிடைத்தது!

இதற்குப் பிறகு சரியாக இருபதாண்டுகள் கழித்து டாஸ்மாக்கின் சில்லறை விற்பனையை தமிழக அரசே கையில் எடுத்துக் கொண்ட வழிமுறையை உருவாக்கியவர் ஜெயலலிதா தான்!

2003 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று அதிரடி அறிவிப்பாக அப்போதைய அதிமுக அரசு மதுபானங்களின் சில்லறை விற்பனையை முழுமையாக டாஸ்மாக் தன் வசம் எடுத்துக் கொண்டது.  சில்லறை விற்பனையை அரசு தன் வசம் எடுத்துக் கொண்ட 2003-2004 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் 3,639.93 கோடி ரூபாயாக எகிறியது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 811 கோடி (2,828 கோடி) அதிகமாகும்.

அரசு மது விற்பனையை கையில் எடுத்த பிறகு தான், மக்கள் விரும்பாத – எதிர்ப்பு தெரிவிக்கிற இடங்களில் – எல்லாம் போலீஸ் மற்றும் அரசின் நிர்வாக பலத்தைப் பயன்படுத்தி வலிந்து மதுக் கடைகள் திறக்கப்பட்டு எதிர்த்து போராடிய மக்கள் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டார்கள்.

இப்படியே இதில் கிடைக்கும் மது வருவாய் அதிகரிப்பையே ஒரு முக்கிய இலக்காக்கி, அரசாங்கம் செயல்பட்டதன் காரணமாக கடந்த 23 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் மதுக் குடித்து மாய்ந்தவர்கள் எண்ணிக்கைக்கு கணக்கு வழக்கில்லை. கண்டிப்பாக லட்சக் கணக்கில் உழைக்கும் தொழிலாளிகள் மதுவுக்கு அடிமையாகி மாண்டனர் என்பதற்கு தமிழகத்தில் தெருவிற்கு தெரு பெருகியுள்ள விதவைகளின் கன்னாபின்னா எண்ணிக்கையே சாட்சியாகும். அத்துடன் தற்போது தமிழ் நாட்டின் லட்சக்கணக்கான ஆண்கள் உழைக்கும் திரானியற்ற குடி நோயாளிகளாக உழன்று தங்கள் வீட்டுக்கே பாரமாகியுள்ளனர்.

சரியாக 20 ஆண்டுகள் கடந்த நிலையில், மது விற்பனையில் 2024-25 ஆம் ஆண்டு அரசுக்கு லாபமாக 48,344 கோடிகள் கிடைத்துள்ளது பெருமைப்படத்தக்கதல்ல.

தமிழகத்தில் பெருவாரியாக மக்கள் உண்ணுகின்ற அரிசி உற்பத்தி படிப்படியாக வீழ்ச்சி அடைந்து, தற்போது மற்ற மாநிலங்களை நம்பி  நாம் உள்ள நிலையில், மது உற்பத்தியிலும், விற்பனையிலும் மட்டும் சாதனை படைத்திருப்பது  தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சியாகும்.

ஆக, மது விற்பனையில் மண்டையை போட்டு உழற்றிக் கொள்ளாமல் அதை தனியாருக்கு தாரை வார்ப்பது நல்ல விஷயமாக மாற வேண்டும் என்றால், மது புழக்கத்தை ‘கண்ட்ரோல்’ பண்ணுவதில் அரசு காட்டும் அக்கறையில் தான் உள்ளது.

அரசாங்கம் மதுவை சில்லறை விற்பனை செய்த போது திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் அந்த துறை அமைச்சர்கள் கணிசமான மதுவை அரசு கணக்கில் காட்டாமல் கள்ளத் தனமாக விநியோகம் செய்து அரசுக்கு வருமானம் போகாமல் பல ஆயிரம் கோடிகள் ஆதாயம் அடைந்தனர். இந்த ஊழல் முறைகேட்டை முடிவுக்கு கொண்டு வந்தாலே அரசுக்கு இன்னும் பல ஆயிரம் கோடிகள் வருமானம் கிட்டும்.

சென்ற ஆட்சியில் போலி மதுபானங்களைக் கூட டாஸ்மாக்கில் கொண்டு வந்து ஏழெட்டு பேர் சாக காரணமானார் செந்தில் பாலாஜி. போலி மதுவை முடிவுக்கு கொண்டு வந்து தரமான மது விற்பனையை உறுதிபடுத்த வேண்டும். தனியார் பார்கள் அழகாக பராமரிக்கப்பட்ட வாய்ப்புள்ளது. அதே சமயம் தாறுமாறாக விலை வைத்து அவர்கள் லாபம் பார்க்காமல் கண்காணிக்க வேண்டும்.

அடுத்தகட்டமாக தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பனங்கள் தடை விலக்கப்பட்டு அந்த இயற்கை மதுவின் உற்பத்தி மற்றும் விற்பனையை முறைப்படுத்தினால் விவசாயிகளும், குடிமகன்களும் அரசுக்கு கோடானுகோடி நன்றி செலுத்துவார்கள்.

தொடக்க காலத்தில் ( 2003) அரசுப் பணிக்கு சேர்ந்திருந்த தற்காலிக ஊழியர்களை அதிரடியாக டாஸ்மாக்கிற்கு மாற்றி அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூபாய் 4,000 என நிர்ணயிக்கப்பட்டது. நியாயப்படி ரூ 12 ஆயிரமாவது ஊதியம் வேண்டும் என அப்போது அவர்கள் கோரிக்கை வைத்ததை அரசு பொருட்படுத்தவில்லை.

இவ்வளவு அதிக லாபம் தரும் துறையின் ஊழியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியத்தை – வாழும் தகுதியற்ற ஊதியத்தை – தந்ததன் காரணமாக அப்போதே அவர்கள் சில்லறைக்காசான ரூபாய் 2 அல்லது மூன்றை தராமல் அதில் ஒரு லாபம் பார்க்க ஆரம்பித்தனர்.

இவர்களை இன்று வரை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ஊழியர்களாக்காமல் அத்துக் கூலிகளாகவே வைத்துள்ளது அரசாங்கம். சென்ற ஆட்சியில் 18,000 மாக இருந்த இவர்களின் ஊதியத்தை தற்போதைய தவெக அரசு 25 சதவிகிதம் அதிகரித்து தந்துள்ளது அவ்வளவே!

தற்போது தனியார்மயமாக்கலுக்கு பிறகு வேலை இழக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கண்ணியமான முறையில் செட்டில்மெண்ட் பணம் தந்து அரசு தன் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

2003-க்கு முன்பு தனியார் கடைகளுக்கு ஏலம் விடப்பட்டபோது, கார்டெல் (கூட்டுச் சதி) அமைத்து அரசுக்கு வர வேண்டிய வருவாயை தனியார்கள் ஏய்த்தனர். அதைத் தடுக்கவே அரசு சில்லறை விற்பனையைத் தொடங்கியது எனச் சொல்லப்பட்டது. இதே தவறு மீண்டும் அரங்கேறாமல் தனியார் விற்பனையை முறைப்படுத்தினால் தான் இந்த முயற்சி பலனளிக்கும். இல்லையென்றால் பெருத்த அவப் பெயரே அரசுக்கு ஏற்படும்.

தனியாருக்கு மது விற்பனையை தாரை வார்க்கும் தவெக அரசு மது விற்பனையை சிறிது குறைத்தாலும், நேர்மையாக நிர்வாகம் நடத்தினாலே பழைய வருமானத்தை காட்டிலும் அதிகமாகவே வருமானம் கிடைக்கும். தற்போதைக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் மதிப்புக் கூட்டு வரி (VAT) மற்றும் கலால் வரி (Excise Duty) மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு பங்கம் இல்லாமல் தனியார்மயமாக்கல் நடந்தால் பிரச்சினை வராது.

அதே சமயம் பழைய வருமானம் குறையுமானால், அரசின் மீது மக்களுக்கு பெரும் சந்தேகமே ஏற்படும்.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time