பேச்சுகள் மட்டுமல்ல, அரசியலே ஆபாசமாகிக் கொண்டுள்ளது!

-சாவித்திரி கண்ணன்

பகை அரசியல் நெருப்பை பற்ற வைத்து விட்டால், அதை பிறகு அணைப்பது மிகவும் அரிது. மக்கள் நலன் சார்ந்த அரசியலை முற்றிலும் மறுதலித்துவிட்டு தனிப்பட்ட  விருப்பு, வெறுப்பு சார்ந்த அரசியல் தமிழகத்தில் மேலோங்கி வருகிறது. ‘தவெக அரசை தலையெடுக்கவிடாமல்  கவிழ்த்தே தீருவது’ என்ற உதயநிதியின் உச்சகட்ட வெறுப்பினூடே ஆபாச பேச்சும் கலந்தது;

ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை…!

”விசாரணைக்கு அழைத்துள்ளோம். இன்று இரவே காவல் நிலைய ஜாமீனில் விடுவித்துவிடுவோம்” என அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

அதென்னவோ தெரியவில்லை!

அடக்க முடியாத ஆத்திரம், வெறுப்பு, வன்மம் உதயநிதி அவர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் மீது!

தேர்தல் முடிவு வந்த போதே அவரை தேற்றி வழிக்கு கொண்டு வருவதற்கே தலைமைக் குடும்பம் தடுமாறிவிட்டதாம். மற்ற பல சீனியர் தலைவர்கள் வந்து சமாதானப்படுத்திய போது, ’’எடப்பாடி முதல்வராவதைக் கூட ஏற்றுக் கொள்வேன். விஜய் ஒரு போதும் முதலமைச்சர் ஆகக் கூடாது’’ என இளவரசர் உதயநிதி கோபத்தின் உச்சத்திற்கு போனதால் தான், நடக்கக் கூடாதவை எல்லாம் அரங்கேறி, எல்லாம் பெய்லியர் ஆனது.

அரசியல் வாழ்க்கையில் பொது நலனுக்காகவோ, அநீதியை தட்டிக் கேட்டோ ஒருவர் கைதாவது பெருமைக்குரிய விஷயம்.

ஆனால், கண்ணியக் குறைவான ஆபாச பேச்சுக்காக ஒரு அரசியல் தலைவர் கைதாவது அவமானம்!

தஞ்சையில் விவசாயிகள் மத்தியில் நஞ்சை விதைக்கும் வகையில் பேசிய உதயநிதி மேல் பதியப்பட்ட வழக்குகளில் அவர் கைதுக்கான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன;

வார்த்தைகளாலோ, சைகைகளாலோ அல்லது செயல்களாலோ பெண்ணின் கண்ணியத்துக்கும் மானத்துக்கும் பங்கம் விளைவித்தல். (BNS 79)

தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்படி பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளைத் தடுத்தல். (2002 – பிரிவு 4)

தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின்படி மின்னணு வடிவத்தில் ஆபாசமான தகவல்களை வெளியிடுதல், பரப்புதல் (2000 – பிரிவு 67)

பொது இடங்களில் ஆபாசமாகப் பாடுதல் அல்லது ஆபாசமாக பேசுதல். BNS 296 (b)

பொது அமைதியை சீர்குலைத்து குற்றம் செய்ய தூண்டும் நோக்கத்துடன் ஒருவரை திட்டமிட்டே அவமதிப்பது. (BNS 352)

ஆக, காவிரி தண்ணீரை திறக்க மறுக்கும் கர்நாடகத்தைக் கண்டித்தோ, இதில் நடு நிலை தவறி நடக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவோ போராடி கைதாகி இருந்தால், அது திமுக தொண்டர்களுக்கும் பெருமை தந்திருக்கும்.

ஆபாசமாகப் பேசி கைதான ஒரு தலைவருக்கு ஆதரவாக தெருவில் இறங்கி போராட வேண்டிய அவலச் சூழல் இன்றைய திமுக தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது வருத்தமாகத் தான் உள்ளது.

தவெக அரசு குறித்து திமுகவினர் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் விடுவதோடு, மற்றவர்களையும் விட வைத்து, சூழல் காரணமாக விலக நேர்ந்த தோழமைக் கட்சிகளையும் பகைத்து தனிமைப்பட்டார்கள்!

இது தான் சந்தர்ப்பம் என்று பாஜகவும் திமுகவை தன்னை நோக்கி ஈர்த்துக் கொண்டது. இதோ, ”திமுகவை வைத்துத் தான் தொகுதி வரையறை மசோதாவை தாக்கல் செய்யவுள்ளனர். அதற்கு துணை போக வேண்டாம்” என ராகுல்காந்தி எச்சரித்தால், அவர் மீது பாய்கிறார், தயாநிதிமாறன்.

காவிரி விவகாரத்தில் விஜய்யின் முயற்சிக்கு ”கர்நாடகா போகக் கூடாது” முதல் முட்டுக்கட்டையை திமுக தான் போட்டனர்.

விஜய் கர்நாடகா செல்லப் போவதாக அறிவித்த உடனேயே அதற்கு கர்நாடத்தில் நல்ல ரியாக்‌ஷனே முதலில் வெளிப்பட்டது. அங்குள்ள முக்கியஸ்தர்கள், வி.வி.ஐ.பிக்கள், பொதுமக்கள் ”நீண்ட வருடங்களுக்கு பிறகு நேசத்துடன் ஒரு தமிழகத் தலைவர் இங்கு  பேச்சு வார்த்தைக்கு வருகிறார். கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் போல கர்நாடகத்திற்கு எதிராக கண்டணங்களை வைக்காமல், கைகுலுக்கி பேச வருவது ஆரோக்கியமானது” என பரவலான பேச்சு அடிபட்டது. பல பத்திரிகைகளிலும் இவை வெளிப்பட்டன. டி.கே சிவகுமாரும் விஜய் வருவதில் முதலில் மகிழ்ச்சியையே வெளிப்படுத்தினார்.

ஆனால், தமிழகத்தில் திமுகவைத் தொடர்ந்து, அதிமுக, கம்யூனிஸ்டுகள்..உள்ளிட்ட பலரும் ”கர்நாடகத்திற்கு போக வேண்டாம்” என்று எதிர்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியது துரதிஷ்டமானதாகும்! இந்தப் பகை உணர்வின் விளைவாக கன்னட அமைப்பினரும் விஜய் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு சிவகுமாரும் நிலைமை மோசமாக போவதை அறிந்து ”விஜய் வர வேண்டாம்” எனக் கூறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

விஜய் அறிவித்த கையோடு, கர்நாடகா புறப்பட்டிருந்தால் சுமூகமாக பேச்சு வார்த்தை நடந்திருக்கும். இன்னும் சொல்வதென்றால், கர்நாடகா முதல்வருக்கு டெலிபோனில் தகவல் தெரிவித்துவிட்டு, நீர்வளத் துறை தலைமை பொறியாளர் மற்றும் ஓரிருவரோடு முதல்வர் போயிருக்கலாம்.

அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஒருமுறை ஈரோடில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது கர்நாடகா தண்ணீர் தரப் போவதில்லை என்ற செய்தியை அவர் கூடச் சென்று கொண்டிருந்த அவரது நேர்முக துணை செயலாளர் கவனத்திற்கு கொண்டு வரவும், ”காரைத் திருப்புங்கள் பெங்களுருக்கு” என அங்கிருந்து அப்படியே எந்த அறிவிப்புமின்றி, கர்நாடக முதலமைச்சர் குண்டுராவ் வீட்டிற்கே சென்று, நட்புணர்வோடு பேசி தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்தார்.

ஆனால், அறிவிப்பு வெளியானது தொடங்கி சர்ச்சைகள் றெக்கைகட்டி பறந்த போதிலும்’ ‘விஜய் பெங்களுர் செல்வாரா? இல்லையா?’ என்பதில் அமைச்சர்களுக்கே குழப்ப நிலை நிலவி முரண்பட்டு பேசினர். மிகவும் காலம் தாழ்த்தி முதல்வர் விஜய் தான் போவதை அறிவிக்கும் போது, அங்கு சூழல்கள் மாறிவிட்டன.

மற்றொரு முக்கிய விஷயம், கர்நாடகாவில் சென்ற ஆண்டுகளில் சித்தராமையா முதல்வராக இருந்த போது சட்டப்படியான தண்ணீரை கணிசமாக திறந்துவிட்டு, ஓரளவு குறைத்து தருவார். ஆனால், ”சிவகுமார் கபினியில் நிறைந்து வழிந்து உபரிநீர் வரும் வரை அடாவடியாக திறக்க மறுத்ததின் பின்னணியில் திமுக ஏதேனும் அழுத்தம் தந்திருக்கக் கூடும்” என்ற சந்தேகத்தை அமைச்சர் நிர்மல்குமார் வெளிப்படுத்தி இருந்தார்.

ஏனென்றால், திமுக குடும்பத்துடன் சிவகுமாருக்கு மிக நெருக்கமான தொடர்புகள் உண்டு. கடந்த சட்டமன்ற தேர்தலில் ‘காங்கிரஸ் தவெகவோடு போகக் கூடாது’ என டி.கே. சிவகுமார் ஒரு வலுவான லாபி செய்து, ராகுல்காந்திக்கு அழுத்தம் தந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையே.

முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சிக்கவும், அவரது இமேஜை சிதைக்கவும் துடித்துக் கொண்டிருந்த உதயநிதி காவிரி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார். நிதானமிழந்து மிகக் கடுமையாகவே அமைச்சர்களையும் விமர்சித்தார்.

தவெக ஆட்சியை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் வெறியாக உள்ள உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கவுள்ள (ஆகஸ்ட்5, 2026) பட்ஜெட் கூட்டத் தொடரில் சில அசம்பாவிதங்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாகவும் பரவலாக பேசப்பட்டு வந்த சூழலில், தான் இந்த ஆபாச பேச்சு விவகாரத்தை உதயநிதிக்கு எச்சரிக்கை விடுக்கும் வாய்ப்பாக விஜய் பயன்படுத்தியுள்ளார் என நினைக்கிறேன்.

கைது நடவடிக்கை என்றவுடன்ஊழலில் ஊறித் திளைத்த அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி ஆகியோரும் நீதிமன்றம் சென்று நிம்மதி அடைந்தனர். ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு கூட செந்தில் பாலாஜியை சிறைப்படுத்தி விசாரிக்க இயலாத நிலை உள்ளது. இதோ தற்போதும் நீதிமன்றம் வழியே உதயநிதி உடனே விடுவிக்கப்பட வேண்டும் என்ற உத்திரவை பெறுகின்றனர். இந்த ரீதியில்  நீதி பரிபாலன அமைப்பு முறையை செல்வாக்கானவர்கள் தங்களுக்கானதாக மாற்றிக் கொள்ளும் வரையில் நியாயங்களை நிலை நாட்டுவது அரிதினும் அரிது.

அன்று கருணாநிதி காலகட்ட திமுகவின் ஆபாச பேச்சுக்களால் காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் பாதிக்கப்பட்டனர். தற்போது விஜய் குறிவைக்கப்பட்டுள்ளார். உதயநிதி காலத்து திமுகவின் பகை அரசியலோ தன் தலையில் தானே கொள்ளி வைத்துக் கொள்ளும்  தன்னழிப்பு அரசியலுக்கு வித்திட்டுக் கொண்டுள்ளது.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time