தவெக அரசின் பட்ஜெட்; மாற்றமா? ஏமாற்றமா?

-சாவித்திரி கண்ணன்

தவெக அரசின் முதல் பட்ஜெட் வந்துள்ளது! பட்ஜெட் போடுவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதில் உள்ள ஓட்டைகளை அடைப்பது! போடப்படும் பட்ஜெட் பணத்தில் சரி பாதி அரசியல்வாதிகள், அதிகாரிகள் பைக்கு போவதை தடுப்பார்களா? காட்டப்படாமல் களவாடப்படும் பணத்தை அரசு கஜானாவிற்கு திருப்புவார்களா?  கடன் இல்லாத தமிழகத்தை கட்டமைப்பார்களா?;

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரியபெல்சின் இன்று சட்ட சபையில் வைத்து பேசினார். முதல்வர் விஜய்யின் வீழ்ச்சியும், எழுச்சியும் இந்த பட்ஜெட் சொல்லும் செய்தியிலும், அது நடைமுறைக்கு வரும் வகையிலும் தான் தீர்மானிக்கப்படும்.

ஒரு பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒத்துக்குகிறார்கள் என்பதை மட்டுமே பார்க்காமல், தேவைப்படும் நிதி எவ்வளவு? ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என தெரியும் போது தான் நமக்கு பேரதிர்ச்சியே ஏற்படுகிறது.

அரசுக்கு வர வேண்டிய வருவாய் ஆட்சியாளர்களின் பைகளுக்கு போகாமல் தவிர்க்க முடிந்தால் அது தான் சிறப்பாகும்;

தமிழ்நாடு அரசின் 2026-2027 ஆண்டுக்கான  பொது பட்ஜெட் – ரூ.3,50,027 கோடி ஆகவும், திருத்தப்பட்ட பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ..2,26,74 கோடியாக உள்ளது. முதல் பட்ஜெட்டில் புதிய வரிகளை போட்டு அதிருப்தியை பெற வேண்டாம் என முற்றிலும் தவிர்த்துள்ளனர்.

பதிவுத் துறையில் தற்போது செய்துள்ள சீர் திருத்தங்களால்- அதாவது ஊழல் தடுப்பு நடவடிக்கைகளால் ரூ15,000 கோடிகள் கூடுதல் வருமானம் அரசுக்கு கிடைக்கும் என்றால், இத்தனை வருடங்களாக இது எங்கெங்கே போனது என்ற கேள்வி எழுகிறது.

ஆனால், இதே போன்ற  அதிரடி சீர்திருத்தங்களை எல்லா துறைகளிலும் செய்வதன் மூலம் அரசு கஜானாவுக்கு வராமல் ஊழல்வாதிகளால் பங்கு போடப்பட்ட  பெரும் பணம் அரசு கஜானாவுக்கு வரும்.

உதாரணத்திற்கு நெடுஞ்சாலைத் துறைக்கு சராசரியாக ரூ20,000 கோடிகள் சாலை போடவும் பராமரிக்கவும் ஒதுக்கப்படுகிறது. என்றால், அதில் 30 சதவிகிதம் – அதாவது, 6,000 கோடி அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கமிஷன் பணமாக சென்று விடுகிறது. மேலும், பொருட்களுக்கு அதிக விலை காட்டுவதில் 2,000 கோடிகள் போய்விடுகிறது. தேவையற்ற இடங்களில் கமிஷனுக்காகவே சாலை போடுவதில் 4,000 கோடிகள் வீணாகிறது. எனவே நேர்மையான நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தினாலே நெடுஞ்சாலைத் துறையில் 12,000 கோடிகளை மிச்சப்படுத்தலாம் என்கிறார்கள், அந்தத் துறையில் உள்ள மூத்த பொறியாளர்கள்!

ஆனால், நெடுஞ்சாலைத் துறையில் அதே ஊழல் அதிகாரிகள் தற்போதும் கோலோச்சும் நிலையில் இந்த ஆட்சியில் மாற்றம் ஏற்படுமா? என்பது சந்தேகமாக உள்ளது.

இதே போல சென்ற ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறைக்கு (2025-2026)  ரூ.46,767  கோடி ஒதுக்கப்பட்டது.

2026–2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு 44,527 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தவெக அரசு.

ஆகவே பள்ளிக் கல்வித் துறைக்கு குறைவாக ஒதுக்கிவிட்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையில் அரங்கேறும் பகாசூர ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தால், சில ஆயிரம் கோடிகள் மிச்சமாகும்.

பள்ளிக் கல்வித் துறையில் சுமார் 18 வகையான விலையில்லா பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் முக்கியமானது  மதிய உணவுக்கான பொருட்களில் அடிக்கப்படும் கொள்ளை கொடூரமானது. சத்துணவுக்கு கொள்முதல் செய்யும் முட்டை மிக சிறியது. 45 கிராம் அளவுள்ளது. வழக்கமான முட்டை 60 கிராம் கொண்டது. இந்த முட்டை சந்தையில் ரூ 3 லில் இருந்து ரூ3.50  காசுகளுக்கு கிடைத்த நிலையில் அதை திமுக அரசு ரூ 5.60 காசுக்கும், பிறகு 6.25 காசுக்கும் கொள்முதல் செய்தனர். ஒரு நாளைக்கு 80,000 முட்டைகள் எனும் போது, ஆண்டுக்கு எவ்வளவு லாபம் என பார்த்தால் பெரும் மலைப்பே ஏற்படும்.

தவெக அரசின் முதல்வர் விஜய், ”நாங்கள் மக்கள் பணத்தை தொடமாட்டோம்” எனச் சொன்னது உண்மை என்றால், இந்த ஆட்சியில் புதிதாக டெண்டர் விடும் போது இது அம்பலப்பட்டுவிடும். இதில் நேர்மையாக நடக்கிறார்களா? எனப் பார்ப்பதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.23,357 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருந்து, மாத்திரை கொள்முதலில் நடக்கும் ஊழல்களை களைந்தால் மிகப் பெரிய அளவு பணம் மிச்சப்படுத்தலாம். அதில் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தலாம். செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கண்ணியமான சம்பளம் வழங்கலாம்.

இதே போல மணல் குவாரிகள், கனிம வளக் குவாரிகளை அரசே நேரடியாக நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு நடத்தினால் மோசடிகளை முடிவுக்கு கொண்டு வந்து மறைக்கப்பட்ட சுமார் 60,000 கோடிகளை அரசு கஜானாவிற்கு கொண்டு வரலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக டாஸ்மாக் மதுவில் சென்ற ஆட்சியாளர்கள் சுமார் ஒரு லட்சம் கோடிகளை கள்ளத்தனமாக விற்று சுருட்டினார்கள். அதை அரசு கஜானாவிற்கு திருப்ப முடிந்தால், தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை முதல்வர் விஜய் சிரமமின்றி நிறைவேற்றலாம்.

இந்த வகையில் தற்போதைய வருமானத்தைக் காட்டிலும் ஒரு மடங்கு அதிகமான வருமானம் அரசுக்கு கிடைக்கும்.

சென்ற ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற கடன் 10 லட்சம் கோடிகள் அப்படியே உள்ளது. ஊதாரிச் செலவுகள், ஊழல்களை குறைக்க முடிந்தால், இனி கடன்களை வாங்காமலே நல்லாட்சி தரலாம். இதையெல்லாம் இந்த ஆட்சியாளர்கள் செய்வார்களா? தெரியாது.

உழைக்கும் அரசு ஊழியர்களை அத்துக் கூலிகளாக வைக்காமல் வேலையை நிரந்தரமாக்குவதில் எந்த அளவுக்கு ஒரு அரசு வெற்றி பெறுகிறதோ, அதுவே உண்மையான மக்கள் நல அரசாகும்.

ஆகவே மக்களே நாம், ”அந்த இலவசத்தை தரலையே, இந்த இலவசத்தை சொன்னியே தரலையே” எனக் கேட்பதற்கு மாற்றாக ”ஊழல் இல்லா நிர்வாகத்தை தா” என அரசை நிர்பந்தப்படுத்தினாலே போதும், அவரவர் தேவைகளை அவரவர் உழைத்த பணத்தாலேயே அடையலாம்.

”இந்த இலவசங்கள் எங்களுக்கு வேண்டாம்…” என்று மக்கள் சொல்லக் கூடிய வகையில் பொருளாதார வளத்தை உறுதிபடுத்தினால் மட்டும் போதாது. ‘உழைப்பில்லாமல் கிடைக்கும் எந்த பணமும், பரிசுகளும் எங்களுக்கு வேண்டாம்’  என்ற மனநிலையை மக்களிடம் உருவாக்கும் பண்பாட்டுச் சூழல்களையும் கட்டமைப்பதில் வெற்றி பெறும் போது தான் ஆட்சி மாற்றத்திற்கான நியாயம் உறுதிப்படும்.

தவெக அரசின் பட்ஜெட்டை பொறுத்த வரை அது நேர்மையான நிர்வாகத்தை சாத்தியப்படுத்துவதில் தான் மாற்றமா? ஏமாற்றமா? என்பதற்கு விடை கிடைக்கும்.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time