பறிக்கப்பட்ட விவசாய நிலங்களில் பாதுகாக்கப்பட வேண்டும் வேளாண்மை!

-பவா சமத்துவன்

செய்திகளுக்கு பின்னால்…!

பரந்தூரில் விமான நிலையம் வருவதை எதிர்த்து 1000 -நாட்களுக்கும் மேலாக நீடித்த ஒரு நெடிய, வலி மிகுந்த போராட்டத்தின் சாட்சியாக நின்ற இந்த மண், இன்று விடுதலையின் காற்றை சுவாசிக்கிறது.மண் வளமிக்க இந்த வேளாண் நிலத்தை வேறு வகை பயன்பாட்டுக்கு திருப்பாமல் செய்ய விஜய்யின் தவெக அரசு வேண்டியது என்ன? என்பது குறித்த ஓர் அலசல்;

மீட்கப்பட்ட மண்: ஏகனாபுரத்தின் புதிய விடியலும் மாற்றுப் பாதையும்..!

“எங்க ஊரைக் காப்பாத்தணும் எங்க சாமி..!” என்று கண்ணீரோடு எல்லையம்மன் சன்னதியில் நின்ற ஏகனாபுரம் மக்களின் கூட்டுப் பிரார்த்தனை இன்று பலித்திருக்கிறது.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்கள், தனது அரசியல் பயணத்தை – முதல் போராட்ட களமான இதே ஏகனாபுரம் மண்ணில் தொடங்கி, “எப்பாடு பட்டாகிலும் இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்துவேன்” என்று அளித்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளார்.

சென்னைக்குப் பேராபத்தை விளைவிக்கும் அந்தப் பெரும் திட்டம் நிறுத்தப்பட்டதன் மூலம், ஏகனாபுரம் தமிழக வரைபடத்தில் அழிக்கப்பட முடியாத ஓர் அடையாளமாக மாறியுள்ளது.

ஆனால், போராட்டம் வென்றுவிட்டாலும் நம் முன் ஒரு பெரும் கேள்வி எஞ்சி நிற்கிறது.இந்த திட்டத்திற்கு மொத்தம் 5,746 ஏக்கர் நிலம் தேவைப்பட்ட நிலையில் அதிகார அழுத்தம் மற்றும் நெருக்கடி தந்து முந்தைய அரசால் இத்திட்டத்திற்காகக் சுமார் 1,770 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு பகுதி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

ஆயினும், பெரும்பகுதி விவசாயிகள் எதிர்த்த நிலையில், கைவிடப்பட்ட இந்த திட்டத்திற்கான நிலத்தை – பச்சை வயல்கள், ஏரி, குளங்கள், வளமான மண் கொண்ட பூமியை – இனி என்ன செய்வது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பரந்தூர் பகுதியில் விமான நிலையம் வரும் என்று நம்பி அன்றைய ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்தன. பலர் நிலத்தை வாங்கி குவித்ததால் கடந்த ஓரிரு ஆண்டுகளில் நிலங்களின் மதிப்பு 10 மடங்கு உயர்ந்த நிலையில், தற்போது அது சரிந்துள்ளது. இதை ஈடுகட்ட அவர்கள் ’சிப்காட் தொழிற்சாலை கொண்டு வர வேண்டும்’ என்கிறார்கள்! தமிழ் நாட்டில் தேவைக்கும் அதிகமாகவே சிப்காட் உள்ளன. பல இடங்களில் சிப்காட்டிற்காக பறிக்கப்பட்ட நிலங்கள் பயனற்று விடப்பட்டுள்ளன.

நில மீதமளிப்பும், வரலாற்று முன்னுதாரணங்களும்..!

இந்தியச் சட்ட வரலாற்றில், அரசு ஒரு பொதுநலத் திட்டத்திற்காக நிலத்தைக் கையகப்படுத்தி, பின்னர் மக்கள் போராட்டத்தால் அத்திட்டம் கைவிடப்பட்டால், அந்த நிலங்கள் எவ்வாறு மறுபயன்பாட்டுக்கு உள்ளாகின என்பதற்குப் பல முன்னுதாரணங்கள் உள்ளன.

சிங்கூர் (மேற்கு வங்கம்): டாடா நானோ தொழிற்சாலைக்காகக் கையகப்படுத்தப்பட்ட சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம், விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மீண்டும் விவசாயிகளுக்கே திருப்பியளிக்கப்பட்டது.

கான்கிரீட் தளங்களாக மாறிய அந்த நிலத்தை மீண்டும் விவசாயப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப் பல ஆண்டுகள் தேவைப்பட்டாலும், “விவசாய நிலம் விவசாயத்திற்கே” என்ற தார்மீக நீதி அங்கு நிலைநாட்டப்பட்டது.

மகாராஷ்டிரா மற்றும் கோவா: சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக (SEZ) எடுக்கப்பட்டுப் பின்னர் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்ட பல நிலங்கள், சூழலியல் பூங்காக்களாகவும் (Eco-parks), வேளாண் சார்ந்த சிறுதொழில் மையங்களாகவும் உருமாற்றம் செய்யப்பட்டன.

ஏகனாபுரத்தில் கையகப்படுத்தப்பட்ட 1,770 ஏக்கர் நிலமும் அரசுக்குச் சொந்தமாகிவிட்ட நிலையில், மக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சுவிடும் நிலையில், என்னென்னவோ வதந்திகள் உலவுகின்றன!

அதை வெறுமனே தரிசாகப் போடுவதோ அல்லது மாநில முழுக்க மக்கள் எதிர்ப்புக்குள்ளாகி வரும் சிப்காட்டுக்கு ஒதுக்குவதோ,அந்த மண்ணுக்குச் செய்யும் துரோகமாகும்.

விவசாயத்தை காப்பாற்றத் தான் இந்த விமான நிலையத் திட்டமே ரத்து செய்யப்பட்டது.அந்த நோக்கம் சிந்தாமல்,சிதறாமல் நிறைவேற வேண்டும்.

அந்த நிலம், மீண்டுமொரு முறை இந்தத் தாய்மண்ணின் அடிப்படை இயல்பான “விவசாயத்திற்கே” உயிர் கொடுக்க வேண்டும்.

இந்தப் பகுதியில் வாழ்கின்ற ஒரு மண்ணின் மைந்தனாகவும், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தடுக்கக் கோரி அதிகம் எழுதியும், பேசியும் வந்த ஊடகவியலாளனாகவும் புதிய அரசுக்கு நான் முன்வைக்கும் சில மாற்றுத் திட்டங்கள்:

வட தமிழகத்திற்கான வேளாண் பல்கலைக்கழகம்:

விவசாயமே மூலாதாரமாகக் கொண்ட வட தமிழ்நாட்டில், விவசாயத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஒரு பிரம்மாண்டமான ‘வேளாண் பல்கலைக்கழகம்’ (Agricultural University) அமைப்பது காலத்தின் கட்டாயமாகும்.

நவீன விவசாயத்தின் தொட்டில்: இந்த 1,770 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை, நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் பயிர்கள் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஒரு பன்னாட்டுத் தரத்திலான பல்கலைக்கழகமாக மாற்றலாம்.

இதன் மூலம், விவசாயம் செய்யத் தயங்கும் வட தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரம் இளைஞர்களை, விவசாயத் தொழில் முனைவோர்களாக (Agri-Entrepreneurs) மாற்றுவதற்கான வழிகாட்டுதலை இப்பல்கலைக்கழகம் வழங்கும்.

தென்னிந்தியாவின் தலைமைத் தானியக் கிடங்கு:

ஒவ்வொரு பருவமழை காலத்திலும் தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படும் பல ஆயிரம் டன் நெல் மூட்டைகள், போதிய பாதுகாப்புக் கிடங்குகள் இன்றித் திறந்தவெளியில் மழையிலும் வெயிலிலும் நனைந்து முளைவிடுவதை நாம் செய்திகளில் காண்கிறோம்.

விவசாயிகளின் ரத்தமும் வியர்வையுமான அந்த நெல்மணிகள் வீணாவதைத் தடுக்க ஒரு நிரந்தரத் தீர்வு தேவை.

நவீன சேமிப்பு மய்யம் (Modern Silos): மீதமுள்ள நிலப்பரப்பில், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும் அதிநவீன ‘தானியச் சேமிப்புக் கிடங்குகளை’ (Silos) அரசு நிறுவலாம். இது தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயப் பாதுகாப்பிற்கும் அரணாக அமையும்.

இந்தத் தானியக் கிடங்கு அமைப்பதன் மூலம் போக்குவரத்து, பராமரிப்பு, தரக்கட்டுப்பாடு எனப் பலநூறு உள்ளூர் இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். விவசாய நிலம், விவசாயிகளின் உழைப்பைப் பாதுகாக்கும் அரணாகவே மாறுவது ஒரு கவித்துவமான நீதியாகும்.

வேளாண் காடுகள்; இயற்கை உரம் தயாரிப்பு;

தற்போதைய விவசாய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வேளாண் காடுகளை இங்கு உருவாக்கலாம். அதற்கான மண் வளம் கொண்ட பூமி தான் இது. பூமி வெப்பமயமாவதை தடுக்கவும், மழை பெயவிக்கவும் இவை அவசியமாகும். இந்த வேளாண் காடுகளில் கிடைக்கும் இழைதழைகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கலாம்.

மேலும் இந்தப் பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் ஆடு,மாடு வளர்ப்பை ஊக்கப்படுத்தி இங்கு இயற்கை உரம் தயாரிக்கும் பண்ணையை நிறுவலாம்.

இப்பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து தமிழக அரசே ஒரு விவசாய கூட்டுப் பண்ணை திட்டத்தை உருவாக்கி, அதில் மரபு வழியிலான பயிர்களை இயற்கை உரமிட்டு வளர்க்க ஊக்குவிக்கலாம்.

நிறைவாக…

தமிழக பொது பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள விவசாய ஊரக வளர்ச்சி திர்ட்ட்டங்கள், வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள பல விவசாய வளர்ச்சி திட்டங்களுக்கான பரிசோதனைக் களமாக பரந்தூர் விவசாய நிலப் பகுதியை பயன்படுத்த  தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பரிசீலிக்கும் என நம்புகிறோம்.

கட்டுரையாளர்;  பவா சமத்துவன்

மூத்த பத்திரிகையாளர்

எழுத்தாளர், ஊடகத் துறை முன்னோடி

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time