பட்ஜெட் எனும் பம்மாத்துகளே விவசாய வீழ்ச்சிகளுக்கு காரணம்!

-சாவித்திரி கண்ணன்

அன்றும் சரி, இன்றும் சரி விவசாயம் குறித்த உள்ளார்ந்த புரிதல், அக்கறை இரண்டுமே இந்த வேளாண் பட்ஜெட்டை உருவாக்கும் அமைச்சர்களுக்கும் இருப்பதில்லை, அதிகாரிகளுக்கும் இருப்பதில்லை. அதற்கு இவ்வளவு நிதி, இதற்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு என மாய்மாலங்கள் செய்வதைத் தவிர்த்து, அதிகார அழுத்தத்தில் இருந்து வேளாண்மையை ஏன் விடுவிக்க முடிவதில்லை?

விவசாயத்திற்கென்று தனியாக பட்ஜெட் என்ற அம்சத்தை முதன் முதலில் கொண்டு வந்தது, திமுக அரசாங்கம் தான்!

அந்த வகையில் அப்போதே நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். ஆனால்,  அந்த அடிப்படை புரிதலும், அக்கறையும் வருவதற்கு வேளாண் அமைச்சரும், அதிகாரிகளும் நம்மாழ்வாரின் பேச்சுக்களை கேட்க வேண்டும். நூல்களை வாசிக்க வேண்டும்.

1980 களிலேயே இடதுசாரி விவசாய இயக்ககங்களோடு தொடர்பில் இருந்தாலும் கூட, 1990 களில் நம்மாழ்வார் அவர்களோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டிருக்காவிட்டால் எனக்கும் இப்போதிருக்கும் புரிதல் ஏற்பட்டிருக்காது.

’உழவர் குரல்’ மற்றும் ’விவசாயம் இன்று, நேற்று, நாளை’ என்ற இரு நூல்களை நான் எழுதியுள்ளேன். இவை குமுதம் இதழ் நடத்தும் மண் வாசனையில் தொடராக வந்து நல்ல வரவேற்பை பெற்றவை;

ஒவ்வொரு ஆண்டும் வேளாண் பட்ஜெட் வருகையில் நான் விமர்சித்து வருகிறேன்.

திமுக ஆட்சி காலத்தில் தலைமை செயலாளராக எனதருமை நண்பர் இறையன்பு அவர்கள் இருந்த போது ஊடகங்களில் வருவனவற்றை வேகமாக உள்வாங்கி அற்புதமாக செயல்பட்டார். அந்த வகையில் பொது நலனுக்கான நற்கருத்துக்களை எதில் வாசித்தாலும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளரை அழைத்து பேசி கூடுதல் தகவல்களையும் பெற்று மிகச் சிறப்பாக செயல்படுத்துவார்.

அந்தப்படி நான் எழுதிய பல கட்டுரைகளில் உள்ள தகவல்களை, கருத்துக்களை வாசித்தவுடன் அக்கறையெடுத்து உடனே செயல்படுத்திவிட்டு அதன் பிறகு தொடர்பு கொண்டு பேசிடுவார்! அப்போதெல்லாம் நான் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்று அவருக்கு நன்றி சொன்னால், அவரோ நான் அல்லவா உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ..என நன்றியை எனக்கே திருப்பி சான்றோருக்கே உரிய பண்பை வெளிப்படுத்துவார். அப்படியான வகையில் விவசாயத் துறையில் நான் எழுதிய இயற்கை வேளாண்மைக்கான பல முன்னெடுப்புகளை அவர் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இருந்தாலும் கூட நான் ஒரு விவகாரத்தை அன்றும் சொன்னேன். இன்றும் சொல்வேன்;

விவசாயி தான் உண்மையான எஜமானன். இந்த ஆட்சியாளர்கள் பணமோ, நிதியோ, சலுகைகளோ,  மானியமோ தந்து காப்பாற்ற வேண்டிய நிலையில் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வைத்திருக்கிறீர்கள்.

அதற்கு இவ்வளவு நிதி, இதற்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு என ஏன் மாய்மாலங்கள் செய்கிறீர்கள்?

உதாரணத்திற்கு இந்த வேளாண் பட்ஜெட்டில் சிலவற்றைப் பார்ப்போம்;

# கரும்பு சாகுபடிப் பரப்பை அதிகரிக்க ரூ.9 கோடி மதிப்பீட்டில் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்கிறது பட்ஜெட்.

கரும்பு விவசாயிகள் கொடுத்த கரும்பிற்கான பணத்தை உடனே செட்டில்மெண்ட் பண்ணினாலே போதும். ஆனால், அதை தராமல் இழுத்தடிக்கும் ஆலை முதலாளிகளும், அதை வேடிக்கை பார்க்கும் அரசாங்கமும் இருப்பதால் தான் இனிப்பு சர்க்கரையை தரும் விவசாயி கசப்பான அனுபவங்கள் பெற்று கண்ணீர் வடிக்கிறான். கரும்புக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை, அதற்கான பணம் உரிய நேரத்திலும் கிடைப்பதில்லை. அதே போல கரும்புக் கழிவில் இருந்து மிக லாபகரமான மது தயாரிக்கும் எந்தப் பெரு நிறுவனமும், அதற்கு மூலப் பொருளை உற்பத்தி செய்து தந்த விவசாயிகளுக்கு தற்போது வரை ஒரு ரூபாய் கூடத் தருவதில்லை.

இதற்கெல்லாம் நியாயம் செய்யுங்கள் போதும். உங்க நிதி விவசாயிக்கு தேவையில்லை. அவன் கேட்பதெல்லாம் தனக்கு நீதி வேண்டும் என்பது தான்!

இதே போல ரூ.2 கோடி மதிப்பீட்டில் பனை பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்படும். இதன் மூலம் பனை விதைகள், பனங்கன்றுகள் விநியோகம் செயல்படுத்தப்படும் என்கிறது பட்ஜெட்.

பனை விவசாயத்தை வளர்க்க நினைத்தால், அரசாங்கம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்! பனை மரத்தை பயன்படுத்த விவசாயிகளுக்கு எந்தத் தடையும் இல்லை. பனங்கள் இறக்கி பயன்படுத்தி கொள்ளலாம் என்ற ஒற்றை அறிவிப்பு போதுமே! தமிழ் நாட்டில் அரசு எந்தச் செலவும் செய்யத் தேவையின்றி, பார்க்கும் இடம் தோறும் பனைமரங்கள் செழித்துக் குலுங்குமே!

பயன் கிடைக்கும்மென்றால் அந்த பனையை கண்ணுக்கு கண்ணாக விவசாயியே பாதுகாப்பான். இதற்கு விவசாயிகளுக்கு பணம் எதற்கு? ஆக, பிரச்சினையின் மூலத்தை மூடி மறைத்து, ஏன் இந்த பம்மாத்து திட்டங்கள்..! இதைப் போலத் தான் அனைத்துமே உள்ளன;

# வளமான மண்; வளமான வருங்காலம் என்பதால், மண்ணின் வளத்தை பாதுகாக்க தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம் ரூ. 122.51 கோடி செலவில் உருவாக்கப்படும் என்கிறது பட்ஜெட்.

ஆண்டுக்கு ஆண்டு இரசாயன உரப் பயன்பாட்டை அதிகரித்து – குறிப்பாக யூரியா பயன்பாட்டை அதிகப்படுத்திக் கொண்டேபோகாமல், அதை படிப்படியாக குறைத்து இயற்கை உரப் பயன்பாட்டிற்கு வித்திடுவதில் உறுதிப்பாடே அரசுக்கு சுத்தமாக இல்லாத போது இதெல்லாம் வெறுமே பணத்தை விரயமாக்கி சிலர் மட்டுமே ஆதாயம் அடையவே பயன்படும்.

# சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க ‘தமிழ்நாடு சிறுதானிய இயக்கமாம்’ ரூ..63.81 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுமாம்.

சிறுதானியங்களை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யுங்கள். அதன் பிறகு சாகுபடி பரப்பை அதிகப்படுத்தும் பொறுப்பை விவசாயிகளே செய்வார்கள்.

#  ரூ.27.21 கோடி மதிப்பீட்டில் பருத்தி உற்பத்தியைப் பெருக்கிட ‘பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்’ உருவாக்கப்படும், என்கிறது பட்ஜெட்.

பருத்தி சாகுபடி தமிழகத்தின் மிக முக்கியமான பணப்பயிர்களில் ஒன்றாகும். ஆனால், சந்தையில் பருத்திக்கு நிலையான மற்றும் நியாயமான விலை கிடைப்பதில்லை.அத்துடன் தேவையற்ற வெளிநாட்டுப் பருத்தி இறக்குமதியால் உள்நாட்டு பருத்திக்கு உரிய விலை கிடைப்பதில்லை. போதாக்குறைக்கு ஹைப்ரிட் விதைகளை நிர்பந்தித்து விவசாயத்தை படுகுழிக்கு தள்ளியதே அரசு தான். மரபு மாற்று பருத்தி விதையால் மோசமான  பூச்சி தாக்குதல், நோய்களை பயிர்கள் எதிர்கொண்டு விவசாயி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.

அரசின் கொள்கைகளே ஆகப் பெரிய வில்லன்;

ஆக, விவசாயப் பிரச்சைனைகள், துன்பங்கள், விவசாயிகளின் வறுமை அனைத்துமே அரசின் கொள்கைகளில் தான் உள்ளது.

டாஸ்மாக் சரக்கு விற்பனைக்காக அருமையான இயற்கை பனங்கள்ளை இறக்க தடை விதித்து பனை விவசாயத்தையே அழித்துள்ளீர்கள்.

சர்க்கரை ஆலை முதலாளிகளும், மதுபான முதலாளிகளும் பயன்பெறுவதற்கு கரும்பு விவசாயிகளை கண்ணீர் விட வைக்கிறீர்கள். உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தேவையில்லாமல் வெளிநாட்டு பருத்தியை இறக்குமதி செய்கிறீர்கள். ஆபத்தான விதைகளை நிர்பந்தித்து விவசாயத்தையே சிதைக்கிறிர்கள்.

சுதந்திரத்திற்கு முன்பு வரை, மன்னர்கள் ஆட்சி முதல் பிரிட்டிஷ் ஆட்சி வரையில் விவசாய விளை பொருட்களுக்கு வரி போட்டுத் தான் அரசாங்கங்களே இயங்கின! ஆனால், படித்த மேதாவி அதிகாரிகளால் இயக்கப்படுகின்ற தற்போதுள்ள அரசாங்கமோ, தன்னை விவசாயிகளுக்கு ஏதோ தானங்களும், சலுகைகளும் தந்து வாழவைக்கும் பரோபகாரி தோற்றத்தை உருவாக்கி ஏமாற்றுகின்றது!

ஒரு நேர்மையான அரசாங்கம் செய்ய வேண்டியது என்னவென்றால், விவசாயம் செய்வதற்கான உகந்த சூழலை உருவாக்கித் தருவது தானே அன்றி, வேறொன்றுமில்லை.

# விவசாய உற்பத்திக்கான தகுந்த நீர்மேலாண்மை நிர்வாகத்தை தருதலும்,

# விவசாய நிலப்பரப்பை பாதுகாத்தலும்,

# உற்பத்தியான தானியங்களை இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றித் தருவதும்,

# விவசாய உற்பத்தி பொருள்களுக்கு உரிய லாபத்தை விவசாயிகள் பெறுவதற்கு உத்திரவாதம் அளித்தலுமே,

ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமையாகும். ஆனால், இந்த நான்கு அம்சங்களிலுமே மத்திய, மாநில அரசுகள் இரண்டும் படுதோல்வி அடைந்துள்ளன!

கடைசியாக ஒன்று விவசாயிகள் நிலத்தை நிர்பந்தித்து கார்ப்பரேட்களுக்கு தரமாட்டோம் என்ற ஒற்றை வார்த்தையை அடுத்த வேளாண் பட்ஜெட்டிலாவது பதிவிடுங்கள்!

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time