ஜெயகாந்தனும், கலைஞரும்!

kalaignar and jayakanthan

ஒரு மாலை நேரம் ஜெயகாந்தன் இல்லம் சென்றேன்.”தோழர், முன்பு ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்று துக்ளக்கில் எழுதினீர்கள்.அது 1973 ல் எழுதினீர்கள். அதற்கு பின்பு எவ்வளவோ அரசியல் அனுபங்கள் ஏற்பட்டிருக்குமல்லவா?அதை நீங்கள் எழுதலாமே என்றேன்.
உடனே அவரிடமிருந்து வேகமாக ஒரு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என நான் எதிபார்க்கவில்லை.

“ஆமாம், நல்ல யோசனை! சோவிடம் பேசட்டுமா?”என்றவர், செல்போன் எங்கே என சுற்றும்,முற்றும் பார்த்து,தேட தொடங்கியதும், தோழர்,ஒரு நிமிஷம்,துக்ளக்கில் நீங்க இப்ப எப்படி எழுத முடியும்..?என்றேன்.

”ஏன்..?  என்றார்.

“இல்ல தோழர், முன்பு நீங்கள் துக்ளக்கில் எழுதிய கால கட்டத்தில் நீங்களும்,சோவும் காமராஜரை ஆதரிப்பவர்களாக இருந்தீர்கள்.ஆனால், இன்றோ, சோ ப ஜ கவை ஆதரிப்பவராகவும்,ஜெயலலிதாவை ஆதரிப்பவராகவும் உள்ளாரே..!”
”சரி,அப்ப எந்த பத்திரிகையில் எழுதாலாம்?”
தற்போதுள்ள அரசியல் பத்திரிகைகளில் ஏதாவது ஒன்றில் எழுதலாம்,ஜுனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போட்டர்..இவற்றில் ஒன்றில் எழுதலாம்.
என்றேன்.

ஒரு சில வினாடி யோசித்தவர்,அப்ப நக்கீரனிலேயே எழுதிடுறேன். கோபாலிடம் பேசிடுறேன்.” என்றவர் அவரே,தன் செல்போனில், நக்கீரன் கோபலுக்கு போன் போட்டார்.
“கோபால் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்.ஒன்றுமில்லை. சாவித்திரி கண்ணன் ஒரு யோசனை சொன்னார். அது சம்மந்தமாத்தான்! நாளை மாலை வாங்களேன். ம்.. வந்திடுறீங்களா.. சரி” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

“அப்ப நாளைக்கு நீங்களும் வந்திடுங்களேன்”என்றார்.
சரி தோழர்” என்று சொல்லி நானும் விடை பெற்று வெளியே வந்தவுடன், நக்கீரன் கோபாலிடமிருந்து போன் வந்தது .
என்னதம்பி, என்ன விஷயம்? ஏன் ஜெயகாந்தன் கூப்பிடுகிறார்?” என்றார்.

விஷயத்தை சொன்னவுடன், அவர் மகிழ்ச்சியுடன்,”ரொம்ப நல்லது.எதுக்கும் நாளைக்கு நீயும் வந்திடு, கண்ணா..! மனுஷர்,ரொம்ப கோபக்காரர் பாத்துக்க, நீயும் வந்திட்டா நல்லா இருக்கும்.” என்றார்.
அடுத்த நாள் மாலை நானும், அண்ணன் நக்கீரன் கோபலும் ஒன்றாகவே ஜெ கே வீட்டிற்கு சென்றோம்.
தோழர் எழில்முத்துவும் அங்கிருந்தார்.

எங்களைவரவேற்ற ஜெ கே “ கோபால், சாவித்திரி கண்ணன் சொன்னார், நல்ல யோசனையா பட்டது. உங்க பத்திகையிலே என் அரசியல் அனுபவங்களை தொடராக எழுதலாம்னு தோணுச்சு”
உடனே கோபால்,” ரொம்ப சந்தோசம் அண்ணே”
.முதல்ல இரண்டு இஷ்யூவிலே நீங்க எழுதுறீங்க என்று விளம்பரம் செய்துடறேன்..!”என்றதோடு, ஒரு நல்ல தொகையை கவரில் வைத்து ஜெயகாந்தனிடம் கொடுத்து, நான் உங்களுக்கு வேற என்ன செய்யனும்’ என்றார்.

நான் சொல்லச் சொல்ல எழுதுவதற்கு ஒருவரை ஏற்பாடு செய்யுங்கள்..சாவித்திரி கண்ணனுக்கு
சவுரியப்படுமானாலும் சரி தான்”என்றார்.
நான் பணிவாக,இல்லை தோழர், எனக்கு சவுரியப்படாது. நம்ம,எழில்முத்துவை எழுத வைத்து கொள்ளுங்கள் என்றேன்.

அதன்படி எழில்முத்துவிற்கும் ஒரு சம்பளம் தருவதாக கோபால் ஒத்துக் கொண்டார்.
நக்கீரன் கோபாலும் மிகுந்த உற்சாகத்தோடு விளம்பங்கள் செய்தார். நாட்கள் உருண்டோடிக் கொண்டே இருந்தது.ஆனால், ஜெ கே எதையுமே எழுதித் தரவில்லை. நக்கீரன் கோபால் என்னிடம், ‘’கண்ணா,என்னன்னு கொஞ்சம் கேட்டு சொல்லேன்”என்றார்.
நான் ஜெ கே வீட்டிற்குச் சென்றேன்.”என்ன தோழர், எதுவும் எழுதலையா?” என்றேன்.
“இல்லை கண்ணன் , இப்ப இருக்கிற சூழல்ல, நான் எதும் எழுதினா நல்லா இருக்காது”என்றார்.
ஏன் தோழர் இப்படி சொல்றீங்க?” என்றேன்.

“அந்த காலத்துல நான் தி மு க வையும், கருணானிதியையும் ரொம்ப கடுமையா விமர்சித்து தான் அதிகம் பேசி, செயல்பட்டுள்ளேன்.இப்ப அதை நினைவு கூர்வதில்,எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லை”.என்றார்.

நான் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவரை பாத்த வண்ணம் இருந்தேன்.
இன்றைக்குள்ள நிலையில் கருண நிதி பற்றியும்,
தி மு க பற்றியும் என் மதிப்பீடு மாறியுள்ளது..அரசியல் சூழல்களின் மாற்றம் ஒரு காரணம் என்றாலும், காலமும் நம்மை பக்குவப்படுத்தி விடுகிறது தானே ..” என்றார்.
நீங்க சொல்றது சரி தான் தோழர்.அப்ப நான் கோபால் கிட்ட சொல்லிவிடுகிறேன்.என்று கூறி விடை பெற்றேன்.

நக்கீரன் கோபால் அண்ணனை சந்தித்து ஜெ கே கூறியதை அப்படியே கூறினேன்.
வேறு யாராயிருந்தாலும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் நிச்சயம் வெளிப்படுத்தி இருப்பார்கள்.

ஆனால், கோபால் அவர்கள், நான் பேசியதை உள் வாங்கி கொண்டு, ஒரு நிமிடம் அமைதி காத்துவிட்டு, “அவர் சொல்றதும் சரி தான்…’என்றார்.
ஆம், எந்த திமுகவையும், கலைஞரையும் தீவிரமாக,ஆக்ரோஷமாக ஜெயகாந்தன் தாக்கி விமர்சித்தாரோ, அந்த திமுக வின் தலைவர் கருணாநிதியை கடைசி காலத்தில் நேசித்தார். அதற்கு பிராமணியத்தின் மீதான அவரது பிரேமை சற்று விலகியதும் ஒரு காரணமாயிருக்கலாம்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time