உதயநிதியின் உக்கிரமான அரசியலை வெற்றி கொள்வாரா, விஜய்?

சாவித்திரி கண்ணன்

அச்சமூட்டும் வெறுப்பு அரசியலுக்கு வலுவான அடித்தளம் போடுகிறார், தமிழக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். விஜய்யின் அமைதி, நிதானம் ஆகியவற்றையே அவரது பலவீனமாக சித்தரிக்கும் தாக்குதல்கள், இறுதியில் விஜய்யை இன்னொரு ஜெயலலிதாவாக மாற்றி திமுகவை எதிர்கொள்ள வைக்குமோ..?  கடந்த கால அரசியல் காட்டும் பாடம் என்ன?;

எதிர்கட்சியை எதிரியாக பாவிப்பது,

ஆட்சி செய்வோரை கோழையாக சித்தரித்து தாக்குதல்  தொடுப்பது,

குரலை உயர்த்தி பேசி, ‘தான் மட்டுமே மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்’ போன்ற மாயையை உருவாக்குவது..

என்ற திமுகவின் கடந்த கால காலாவதி அரசியலைத் தான் கையில் எடுத்திருக்கிறார், உதயநிதி ஸ்டாலின்.

அதிலும் மிக முக்கியமாக தாங்கள் எதிர்ப்பவர்களை ‘கேரக்டர் அசாசினேஷன்’ செய்வதன் மூலமாக தன்னை கதாநாயகனாக காட்டுவது, திமுகவின் பாரம்பரிய அரசியல் குயுக்தியாகும்.

உண்மையில் சதாசர்வ காலமும் வெறுப்பு, வன்மத்தை விதைக்கும் அரசியலை இன்றைய தலைமுறை விரும்புவதில்லை.

ஆனால், உதயநிதி ஸ்டாலின் அளவுக்கு அதிகமான வெறுப்பு அரசியலை விதைக்கிறார். அவருக்கு விஜய் ஆட்சியை குதறி எடுத்து ‘கேரக்டர் அசாசினேஷன்’ செய்வது ஒன்றே லட்சிய வெறியாகிவிட்டது. அந்த வெறியை அவர் கட்சியின் அடிமட்டம் வரை கடத்துகிறார். இது ஒரு பாசிச வன்முறை அரசியல் போக்காகும்.

ஆனால், விஜய் அரசியலுக்கும், ஆட்சி நிர்வாகத்திற்கும் புதியவர் என்பதால், எதையும் நேர்மறைத் தன்மையோடு அணுகினால் வெற்றி பெறலாம் என இயல்பாக செயல்படுகிறார். அதை ‘கோழைத்தனம்’, ‘திறமையின்மை’, ‘அக்கறையின்மை’.. ஆகிய கடுமையான சொல்லாடல்களால் உதயநிதி சாடுகிறார்.

திமுகவின் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சிகள், அதிரடி தாக்குதல்கள் ஆகியவற்றை கடந்து முதலமைச்சர் விஜய் செயல்படுவதற்கு அவர் மீது மக்கள் கொண்டுள்ள அபார அன்பும், நம்பிக்கையுமே கை கொடுக்கிறது எனத் தோன்றுகிறது.

இது போன்ற வெறுப்பு அரசியல் கருணாநிதிக்கே கை கொடுக்கவில்லை என்பதை உதயநிதி உணர்வாரா?  ”எம்.ஜி.ஆர் ஒரு கோழை, பயந்தாங்கொள்ளி, அரசியல் அறிவு அறவே இல்லாதவர், கோமாளி, லதா, மஞ்சுளாவோடு டான்ஸ் ஆடத் தான் லாயக்கே அன்றி, நிர்வாகத் திறமை இல்லாதவர்…” என்று அன்று கருணாநிதி கட்டமைத்த ஒரு வலுவான பிம்ப அரசியலை ஆரம்பத்தில் படித்தவர்களே அதிகம் நம்பினர்.

சிறு வயதில் பள்ளிக் கூட பருவத்தில் நான் திமுக பொதுக் கூட்டங்களுக்கே அதிகம் செல்வேன். அங்கே எம்.ஜி.ஆர் பற்றி கூறப்பட்ட மேற்கூறியவற்றை அப்படியே நம்பியும் இருக்கிறேன். அப்போதே கலைஞரின் காதலனாகி எம்.ஜி.ஆரை ஏகத்துக்கும் எதிர்த்து நண்பர்களிடம் வாதாடியுள்ளேன்.

நான் பத்திரிக்கை துறைக்கு வந்த பிறகு தான் பல உண்மைகளை உணர்ந்தேன். பலதரப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றவர்களோடு பேசிய பிறகே எனக்கு யதார்த்தம் தெரிய வந்தது. ‘எம்.ஜி.ஆர் புத்தி கூர்மையானவர், சிஸ்டமேட்டிக்காக செயல்படும் நிர்வாக ஆற்றல் பெற்றவர், அனைத்துக்கும் மேலாக எதிரில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உளவியல் நுட்பங்களை வேகமாக உள்வாங்கி செயல்பட்டவர்’ என அறிய வந்து வியந்தேன்.

”எம்.ஜி.ஆர் மத்திய அரசிடம் மண்டியிடக் கூடியவர், இந்திராகாந்திக்கு பயப்படுகிறவர். மொத்தத்தில் எம்.ஜி.ஆர் ஒரு தொடை நடுங்கி. கலைஞரே அச்சமற்றவர்..’’ என்று ஒரு காலத்தில் பொது புத்தியில்  ஆழமாக பதிய வைத்திருந்தனர், திமுகவினர்.

இந்திராகாந்தி ஆட்சியில் பட்டவர்த்தனமான சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறந்தது. அன்று ஊழலில் ஊறித் திளைத்த கருணாநிதி மீது ‘சர்காரியா கமிஷன்’ விசாரணை நடந்தது. ‘கருணாநிதி கைதாவார், தண்டிக்கப்படுவார்’ என்ற எதிர்பார்ப்பு எங்கும் நிலவியது. எனவே, கைதுக்கு பயந்து கருணாநிதி அடக்கி வாசித்தார்.

எம்.ஜி.ஆரின் செல்வாக்கு கண்டு பொறாமைப்பட்டு, இன்றைய உதயநிதியைப் போலவே சதாசர்வகாலமும் வயிறு எரிந்த கருணாநிதி, எம்.ஜீ.ஆரை வீழ்த்த இந்திரா காந்தியோடு நட்பை புதுப்பித்து கொண்டார்.

”நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என கூட்டணி கண்டார்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றியை சாக்காக வைத்து, எம்.ஜி.ஆர் ஆட்சியை கவிழ்க்க இந்திராகாந்தியை நிர்பந்தித்தார். எம்.ஜி.ஆர் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. சரிபாதி இடங்களை காங்கிரசுக்கு தாரை வார்த்து, தாழ்ந்து பணிந்தார், கருணாநிதி. அப்போதும் கூட, ‘கூட்டணி வென்றால் யார் முதல்வர்?’ என்பதை இந்திராகாந்தி தான் முடிவு செய்வார் என்பதையும் ஒத்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆரை கோழையெனக் கூறி வீர வசனம் பேசிய கருணாநிதியின் சுயரூபம் அப்போது தான் தமிழக மக்களுக்கு தெரிய வந்தது. இதனால் தமிழக மக்கள் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மரண அடி தந்தனர்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு அரசியலில் அடி எடுத்து வைத்த ஜெயலலிதா மீதும் அவநம்பிக்கை பிம்பத்தைத் தான் திமுகவினர் கட்டி எழுப்பினர். ஜெயலலிதா நடிகையாக இருந்தவர் என்பதால் அவரை பாலியல் ரீதியாக மிக ஆபாசமாகப் பேசுவது இவர்களுக்கு மேலும் செளகரியமானது.

ஜெயலலிதாவின் அரசியல் குறித்து எனக்கு கடுமையான விமர்சனம் இருக்கிறது. ஆனால், கருணாநிதியின் கோழைத் தனத்தை, போலி தமிழ்பற்றை, பித்தலாட்ட ஈழ ஆதரவை அம்பலப்படுத்தி, துணிச்சலுக்கு இலக்கணமாக தன்னை நிருபித்தவர் ஜெயலலிதா. ஒரு வகையில் ஜெயலலிதா ஒரு அராஜகவாதியாக மாறியது கூட திமுகவின் அழித்தொழிப்பு அரசியலை எதிர் கொள்வதற்குத் தான்.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு வீழ்ந்து கிடந்த திமுகவை உயிர்பித்தது, ‘பாஜக என்ற பாசிச எதிர்ப்பு அரசியல்’ தான். இந்த காலகட்டத்தில், அதாவது, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் இரண்டின் போதும், நான் திமுகவை அதன் பாசிச பாஜக எதிர்ப்புக்காக தீவிரமாக ஆதரித்து நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதினேன்.

ஆனால், ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள்ளாகவே ஸ்டாலின்  பெரிய கொத்தடிமை என்பது பாஜகவின் அனைத்து மக்கள் விரோத சட்ட திட்டங்களையும் லேபிள் மாற்றி வைத்து தமிழகத்தில் அமல்படுத்திய போது அம்பலப்பட்டது. உண்மையில் எடப்பாடி பழனிச்சாமி, ‘சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 27 இடங்கள் மட்டுமே தந்தது. வெற்றிக்கான தொகுதிகளை அதிமுகவிற்கு வைத்துக் கொண்டது’ ஆகியவற்றின் மூலம், ‘ஸ்டாலினை ஒப்பிடும் போது, தான் ஒன்றும் பெரிய கொத்தடிமை இல்லை’ என்பதை செயலில் நிரூபித்தார். ஆகவே, என்னைப் போன்றோர் தெளிவு பெற்றோம்.

திமுக ஒரு கொள்கையற்ற சந்தர்ப்பவாத கட்சி…என்பது சட்டமன்ற தேர்தல் முடிவு வந்தவுடனே பாஜக கட்டளைக்கு அடி பணிந்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க முயன்ற போதே வெளிப்பட்டு விட்டது. தன் கோழைத்தனத்தை சாதுரியமாக மறைத்துக் கொண்டு, சத்திய ஆவேச தோற்றம் காட்டினாலும், வருகின்ற தொகுதி மறுவரையறை மசோதாவின் போதோ, 2029 நாடாளுமன்ற தேர்தலின் போதோ  அல்லது அதற்கும் முன்னதாக வெகு சீக்கிரமோ திமுகவின் சுய ரூபம் அம்பலப்பட்டே தீரும்.

அதே சமயம் மீண்டும், மீண்டும் வன்ம அரசியலைக் கையாளும் திமுக, அதை எதிர்கொள்வதற்கு – அமைதியாக சென்று கொண்டிருக்கும் விஜய்யை – அதி கோப ஜெயலலிதாவாக மாற்றிவிடுவார்களோ..? என்றும் எண்ணத் தோன்றுகிறது.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time