மாறுகிறதா, அரசியல் களம்? திசை மாறுமா திமுக?

-சாவித்திரி கண்ணன்

தமிழர்களுக்கும் ஒற்றுமைக்கும் வெகு தூரம். நம்மை பிரித்து வைத்து விளையாடுவதில் கைதேர்ந்த பாஜகவின் வலையில் திமுக விழுந்து விடக் கூடாது என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும். Fair Delimitation என்பதில் உள்ள ஆபத்துக்களை தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் உணர்ந்து ஒருமித்து ஒரு முடிவுக்கு வர வாய்ப்புள்ளதா? ஓர் அலசல்;

தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவை,  நல்வாய்ப்பாக்கி அதிக எம்.பி.க்களை கொண்ட தி.மு.க.வின் உதவியுடன் மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற பா.ஜனதா திட்டமிட்டு காய் நகர்த்தி, திமுக தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறது.

திமுக தரப்பில் பாசிடிவ்வான சிக்னல் கிடைத்துள்ளது…என்றும் பாஜக தரப்பில் பேசி வருகிறார்கள்! திமுக தயவின்றி இந்த தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறவே வாய்ப்பில்லை.

நாய் வாலை நிமிர்த்த முடியாது.

பாஜக அரசிடம் நேர்மையை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

Fair Delimitation என்று ஆசை காட்டி எந்த அளவிலும் உங்களுக்கு தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது. ஆதரவு தாருங்கள் என்பதோடு, கூடவே மகளீருக்கு 33 சதவிகித ஒதுக்கீட்டையும் சேர்த்தே செய்துவிடலாம். பெண்களுக்கான உரிமைக்காக இதை ஆதரியுங்கள் என பாஜக அரசு விரித்த வலையில் திமுக விழுந்துள்ளது என்றே என்னுடைய வட இந்திய ஊடக நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

திமுகவை மட்டுமல்ல, சரத்பவாரின் தேசியவாத காங்கிரசையும் பாஜக தங்களுக்கு ஆதரவாக தூக்கிவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் செய்துள்ள அளவில்லா ஊழல் முறைகேடுகளில் இருந்து தப்பி தங்களை தற்காக்க பாஜகவின் Fair Delimitation திட்டத்தை திமுக ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை…என நேஷனல் அளவில் உள்ள ஆங்கில ஊடகத்தின் மூத்த செய்தியாளர் என்னிடம் அடித்துப் பேசுகிறார்கள்.

இந்தச் சூழலில்பாஜகவின் இந்த அச்சுறுத்தலுக்கு திமுக அடிபணியக் கூடாது என்பதே நம் வேண்டுகோளாகும்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறிய செய்தி கவனத்திற்குரியது;

”தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுக நிலைப்பாட்டினை தெரிந்து கொள்ளுவதற்கு தான் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தை காங்கிரஸ் விருப்பத்தின் பேரில் தவெக கூட்டுகிறது. இது எங்களுடைய கருத்து மட்டும் அல்ல. பொதுவாக அரசியல் தெரிந்த அனைவரின் கருத்து என தெரிவித்துள்ளார்’’ அன்புமணி.

இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறிய பிறகான புதிய சூழலில் திமுக தன் நிலைபாட்டை அனைத்து கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் திட்டவட்டமாக எடுத்து வைக்குமா என்ற சந்தேகம் அரசியல் நோக்கர்களிடம் இருந்தது.

அதிர்ஷ்டவசமாக புதிய தவெக ஆட்சியும் தொகுதி மறுவரையறை விஷயத்தில் வலுவாக எதிர்ப்பு தெரிவிப்பது நேற்றைய தினம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த அனைத்து கட்சி எம்.பிக்கள் தீர்மானத்தில் வெளிப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  – தவெக மீதான விரோத போக்கைக் கடந்து – திமுக தமிழ்நாட்டு நலனுக்காக தொகுதிமறுவரையறையை எதிர்க்க ஓரணியில் நிற்க வேண்டும்.

ஏனெனில், அகில இந்திய அளவில் பாஜகவிற்கு முழுமையான எதிர்ப்பில் இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே.

இந்தப் பாதுகாப்பு கவசத்தை தகர்க்க பாஜகவிற்கு துணை போவது தான் Fair Delimitation க்கு ஆதரவளிப்பது. இதை நீங்கள் செய்து கொடுத்துவிட்டால், பிறகு இந்திய ஆட்சிக் கட்டிலில் இருந்து காலாகாலத்திற்கும் பாஜகவினரை அகற்ற முடியாது.

கடந்த காலங்களில் அதிமுகவும்,பாமகவும் பாஜகவின் பாதம் தாங்கியாக இருந்து நாட்டிற்கு செய்த பாவத்தை தற்போது அவர்களோடு சேர்ந்து திமுகவும் செய்துவிடக் கூடாது.

மத்திய பாஜக கூட்டணி அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் விஜய் நடத்திய தமிழக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் சட்டமன்றத்திலாவது இதற்கு திமுக உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக, அஇஅதிமுக, பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது எனக்கு வருத்தமளித்தது. 2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும்.தொகுதி மறுவரையறை (delimitation) பற்றித் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம்..எனக் கூறியுள்ளது கவனிக்கதக்கதாகும்.

”காங்கிரஸ் என்ற துரோகியை வீழ்த்த பாஜக என்ற எதிரியை ஏற்கலாம் தவறில்லை” எனப் பேசி தங்கள் ஆதரவாளர்களை ஏற்க செய்துவிடலாம் என திமுக நம்புகிறது.

சரி, வாதத்திற்காக, ‘காங்கிரஸ் திமுகவிற்கு துரோகம் செய்தது’ என்பதை ஏற்றுக் கொண்டாலும், அதற்காக தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்யலாமா, திமுக?

தமிழ் மக்களுக்கு திமுகவிடம் இருக்கும் ஒரே பிடிமானம் பாஜகவை சமர்சமின்றி எதிர்ப்பார்கள் என்ற நம்பிக்கை தான். அதனால் தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை அள்ளிக் கொடுத்தனர்.

# முஸ்லீம்கள் அதிகமாக உள்ள தொகுதிகள் உடைக்கப்பட்டு

அவர்களின் வாக்குகளை சிதறடித்து வெவ்வேறு தொகுதிகளுக்கு திருப்பிவிடுவார்கள்!

# இதனால் பாஜக எதிர்ப்பு தொகுதிகளே இல்லாமல் – அதாவது ஒரு தனிப்பட்ட கட்சி நலனுக்கு ஏற்ப தொகுதி வரையறை செய்வார்கள். இதை ஏற்கனவே அஸ்ஸாம், காஸ்மீரில் நிரூபித்துள்ளனர். இதனால் தான் அங்கெல்லாம் பாஜக வெற்றி பெற இயலுகிறது.

என்பதாக மே17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கூறியுள்ளதை பரிபூரணமாக நான் ஏற்கிறேன். திருமுருகன் காந்தி திமுக எதிர்ப்பாளர் அல்ல.

இதில் கூடவே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தேர்தல் கமிஷனும் அவர்களிடம் இருப்பதால் சிறுபான்மையினர், திராவிட இயக்க ஆதரவாளர்கள் ஆகியோரின் வாக்குரிமையையும் காலியாக்கிவிடுவார்கள்! ஆகவே தமிழ் நாட்டை எடுத்து பாஜகவிற்கு தாரை வார்த்த கதையாக திமுகவின் Fair Delimitation ஆதரவு நிலை முடிந்துவிடும்.

ஆகவே, அந்தத் தவறை, அதிமுக, பாமக, தேமுதிக செய்தாலும் திமுக ஒரு போதும் செய்யக் கூடாது என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time