உண்மையிலேயே இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை, இவர்களுக்கு! ஜெய்பீம் சினிமாவை விஞ்சும் நிஜமான சோகக் கதைகள்..! உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற அப்பாவி பழங்குடிகளை நள்ளிரவு புகுந்து தூக்கிச் சென்று பொய் வழக்குகள் புனைந்து, குண்டர் சட்டத்தை பாய்ச்சும் காவல் துறையின் கர்ண கொடூரத் திருவிளையாடல்கள்;
நன்றாக உழைத்து கண்ணியமாக வாழ்ந்தாலும், கருமமே கண்ணாக குழந்தைகளை தங்கள் கஷ்டத்திற்கு இடையிலும் படிக்க வைத்து உயரத் துடித்தாலும், காவல் துறையின் கண்களுக்கு இவர்கள் குற்றப் பரம்பரையாகத் தான் தெரிகிறார்கள்!
தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் பழங்குடியினர் சற்று கணிசமாக வாழும் மாவட்டமாகும். இது காவல் துறையில் உள்ள சோம்பேறி போலீசாருக்கு ரொம்ப செளகரியமாக போய்விட்டது. மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் செயல்களில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய குறைந்தபட்ச முயற்சிகளைக் கூட செய்யாமலோ அல்லது உண்மை குற்றவாளிகளை காப்பாற்றவோ பிள்ளை பூச்சிகளாக, வாய் பேசத் தெரியாத அப்பாவிகளான பழங்குடியினத்தார்களை அதிரடியாக வீட்டிற்கு வந்து இழுத்துச் சென்று விடுகிறார்கள்!
சமீபத்தில் நடந்துள்ள சில சம்பவங்களை பார்க்கையில் ஜெய் பீம் படத்தின் சோகங்களை மீண்டும், மீண்டும், இந்த பழங்குடிகள் எதிர்கொண்டு வாழ்வது நமக்கு தெரிய வருகிறது.

பேராசிரியரும், தோழருமான கல்யாணி அவர்கள் பணி ஓய்வுக்கு பிறகு பழங்குடி மக்களுக்காக செயல்பட்டு வருகிறார். பழங்குடிகளின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருகிறார். ஜெய்பீம் படத்தில் சொல்லப்பட்ட உண்மை சம்பவத்தில் இவரது தொடர்பும் உண்டு. கேட்க நாதியற்ற பழங்குடி மக்களை காவல் துறையினர் படுத்தும்பாடுகளை இவர் சொல்லும் போது கல்லும் கனிந்துருகி கனிந்துவிடும்.
காவல் துறையினர் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை பழங்குடி இருளர்கள் மீது சுமத்தி, ஒப்புக்கொள்ள சித்தரவதை செய்து சிறையில் அடைப்பது என்பது காலங் காலமாக நடந்து வருகிறது. அதிமுக,திமுக,தவெக யார் ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையின் இந்த மனப்போக்கில் கடுகளவு மாறுதல் இல்லை என்பதை பார்க்கும் போது மனம் கனக்கிறது என விவரிக்கிறார், பேராசிரியர் கல்யாணி.
பழங்குடி செல்வராசு செந்துரை வட்டத்தில் உள்ள நல்லாம்பாளையம் சமத்துவபுரத்தில் வாழ்கிறார். இவர் எப்படி கைது செய்யப்பட்டார் என்று அவரது மனைவி சகுந்தலா கூறுவதாவது; என் கணவர் விவசாயக் கூலி. நானும் விவசாயக் கூலி. எங்களுக்கு இரண்டு பிள்ளைகள், ஒரு பொண்ணு. எல்லோரையும் நல்லா படிக்க வைக்கத் தான் நானும், எங்கணவரும் பாடுபடறோம்.
போன மாதம் என் கணவர் மதியம் 3.30 மணீக்கு வீட்டில் படுத்திருந்த போது நான்கைந்து போலீசார் வீட்டுக்கு வந்து ”என்னப்பா உன் பைக்கை எடுத்துட்டு உம் பிள்ளை ஊரச் சுத்துறான். பொம்பளை பிள்ளைகளை கேலி செய்திருக்கான். நீ ஸ்டேசனுக்கு வா உன்னை விசாரிக்கணும்”னு அழைச்சுட்டு போயிருக்காங்க… நான் வேலை முடிந்து இரவு ஏழு மணிக்கு வீடு திரும்பிய போது வீடு பூட்டி இருக்கிறது. கணவர் எங்க போனாருன்னு தெரியாமல் தவித்து ஒரு வழியாக பக்கத்து ஊரில் எங்கம்மா வீட்டுல இன்னொரு சாவி கொடுத்து வச்சுறுந்ததால் அதை வாங்கி வந்து வீட்டுக் கதவை திறந்து உள்ளே போனால் பேன் சுத்திகிட்டு இருக்கு. டி.வி ஓடிகிட்டு இருக்கு. வீட்டு வாசலில் இருந்த பைக்கையும் காணோம். நைட்டு பூரா அவரு எங்க போனாருன்னு தெரியாமல் தவித்து அடுத்த நாள் எல்லா இடத்திலும் தேடும் போது மாலை நேரம் ஒரு அட்வகேட் ஒருவர் எனக்கு உன் புருஷனை போலீஸ் சந்தேக கேஸில் பிடித்துட்டு போயிருக்காங்க…என்னு சொல்ல விழுந்தடிச்சு நாங்க எல்லாம் உடையார் பாளையம் காவல் நிலையம் போறோம்.
அங்கே என்னைப் போலவே பழங்குடி பெண்களான மஞ்சுளா, சூர்யா ஆகியோரும் தவித்துக் கொண்டு நின்றனர்.
மஞ்சுளாவிடம் விசாரித்த போது அவரது கணவர் செல்வகுமாரை தீடீரென்று வீட்டு வந்து போலீஸ் அழைத்தனர். நேற்று நீ டூ வீலர் ஒட்டும் போது ஒருவர் மீது மோதிவிட்டாய் அவர் இறந்துவிட்டார். வா,விசாரிக்க வேண்டும் என அழைத்துள்ளனர். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என அவர் கூறியதை அவர்கள் காதிலேயே வாங்காமல் அவரை அழைத்துக் கொண்டு டூவிலரையும் எடுத்துச் சென்று விட்டனர்…என்றார்.
சூர்யாவிடம் விசாரித்த போது, அவர் கணவர் பாண்டியனை அதி காலை 1.30 மணியளவில் போலீசார் நால்வர் வந்து காரணமே சொல்லாமல் அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த டூவிலரையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் நாங்கள் காவல் நிலையம் வந்து காத்துக் கிடந்தும் எங்கள் கணவன்மார்களை பார்க்க முடியலை. ஆகஸ்ட் 7 ஆம் தேதி என் கணவரை ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அந்த அளவுக்கு அவரை அடித்து நொறுக்கி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். போலீஸ் உங்களை அடிச்சாங்களா? என்று ஓடிபோய் வேனில் இருந்த என் கணவரிடம் கேட்டேன். அவங்க அவரது தோளில் அழுத்தி, பேசக் கூடாது என சைகையில் சொல்லவே அவரால் பேசவும் முடியவில்லை.

அன்று இரவு ஒரு மணி வரை காத்திருந்தும் அவர் திரும்பவில்லை. ஆகவே அடுத்த நாள் சென்ற போது அவரை திருச்சி மத்திய சிறை அழைத்து போவதாகக் கூறி எங்கள் மூவரையும் உடையார் பாளையம் நாலு ரோடு பைபாஸ் அருகே வேனில் அழைத்து போகையில் வந்து பார்த்து துணிமணிகளை தந்துவிட்டு போகலாம் என்றார்கள். அப்போது அவர் உடலில் பல காயங்களை பார்த்தவுடன் எனக்கு அழுகை வந்தது. என் கணவரோ அழைத்துச் செல்லப்பட்ட செல்வகுமார், பாண்டியன் இருவருக்கும் இதே நிலை தான். மூன்று பேருமே எந்த வம்பு தும்புக்கும் போனதில்லை. ஆனால், அவங்க ஆறு பொய் வழக்குகள் புனைந்துள்ளனர். தற்போது இந்த மூவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
நடந்தேயிராத ஒரு சம்பவத்திற்காக என் கணவரை உள்ளிட்டவர்களை விசாரிக்க அழைத்துச் சென்று – குடும்பத்திற்கு அந்த தகவலும் தராமல் வைத்திருந்து காவல் நிலையத்தில் அவரை அடித்து நொறுக்கி பல பொய் வழக்குகளை போட்டுள்ளனர்…என்கிறார் சகுந்தலா.
இதையடுத்து ஜூலை 10 ஆம் தேதி கைதாகியுள்ள செல்வியின் கணவர் கரிகாலன், லதாவின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரின் கைதுகளை கேட்டாலும் கலங்க வைக்கிறது. நாங்க செய்திராத ஒன்றுக்காக அழைத்துச் செல்லப்படுவதும், வந்த இடத்தில் மூன்று பொய் வழக்குகளை போட்டு அடித்து நொறுக்கி மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்து திருச்சி சிறைச்சாலை அழைத்துச் செல்வதும் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
தற்போது ஒரு மாதம் கடந்த நிலையில் இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என்கிறார்கள். வழக்கறிஞர்கள்பணம் பிடுங்குகிறார்கள்.போலீசாரும் பணம் கேட்டு நச்சரிக்கிறார்கள். அநியாயக் கைது, காவல்துறை சித்திரவதை பொய் வழக்கு..என கணவன்மார்களை சிறையில் அடைத்து, அவர்களின் கூலி வேலை செய்யும் மனைவிமார்களிடம் வழக்கறிஞர்களும், காவல்துறையும் இரக்கமின்றி பணம் பறிப்பதை பார்த்தால்.., நாம் எப்படிப்பட்ட உலகத்தில் வாழ்கிறோம் என அதிர்ச்சியாக உள்ளது.
இது நினைத்துப் பார்க்க முடியாத அக்கிரமமாக உள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் முதலமைச்சருக்கு புகாராக அனுப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்!
சாவித்திரி கண்ணன்























ஏழைகள் வாழ இடமே இல்லையா? என்றைக்கு இவர்கள் துயர் தீரும்?