அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை போராடித் தடுத்தனர் மதுரை மக்கள்! திண்டுக்கல் மாலிப்டினம் சுரங்கத்தை இனி மறுக்கவே முடியாதா? திண்டுக்கல் காஞ்ச மலை, கவுதி மலையை இனி ஜிண்டால் நிறுவனம் தின்று ஜீரணிப்பதை தடுக்க முடியுமா? ஒட்டுமொத்த இயற்கை வளங்களையும் எதிர்ப்பில்லாமல் அதானி, வேதாந்தாக்கள் சூறையாட ஒரு மசோதா;
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை) திருத்த மசோதாவாம்! (Union Govt’s Mines and Minerals Amendment Bill)
இந்தியாவில் அதானியின் சாம்ராஜ்ஜய்த்தை விரிவுபடுத்த விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலைகள் போடுவது, சிமெண் உற்பத்தி, தொலைகாட்சி சேனல்கள், மின் உற்பத்தி நிலையங்கள், உணவு உற்பத்தி வாய்ப்புகள், ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பு.. என எல்லாவற்றையும் தூக்கி கொடுத்தது போல் சுரங்கங்களையும் தூக்கி ஒப்படைக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது.
கனிமம் கொண்ட நிலம் என்பது, ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் அளவுகோல்களுக்கு ஏற்ப கனிமப் பொருட்களைக் கொண்டுள்ள எந்தவொரு நிலமாகவும் வரையறுக்கப்பட்டு இனி அபேஷ் செய்யப்பட்டுவிடும்.
மாநில அரசுக்கு ஏற்கனவே கனிமச் சுரங்க ஒப்பந்ததாரர்கள் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தால், இச்சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வரும் போது, நிலுவையில் உள்ள வரித் தொகையை செலுத்தத் தேவையில்லை என்பது எவ்வளவு உச்சகட்ட அயோக்கியத்தனம்.
முக்கிய மற்றும் அரிய வகைக் கனிமங்கள் விட்டு வைக்கக் கூடாது எனும் கருத்து அமெரிக்கா 2019ம் ஆண்டு சொன்னதாகும். எதிர்காலப் பொருளாதாரத்தை கருதி சுமார் 300 வகையான கனிமங்களை முக்கியக் கனிமங்கள் என்று அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளதை இவர்கள் வழிகாட்டலாக ஏற்றுக் கொண்டு இந்தியா அமெரிக்கா இடையே 2021 ஆம் ஆண்டு முக்கியக் கனிமங்களுக்கான ஒப்பந்தங்கள் உருவாக்கிவிட்டனர்!
இந்தியாவின் கனிம வளத்தை தோண்டி எடுத்து அதானி அமெரிக்காவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு எந்த இடையூறும் இல்லாத மாநில அரசுகளின் அதிகாரத்தை பிடுங்கி பொதுமக்களின் கருத்து சொல்லும் உரிமையை மறுத்து MMDR 1957 சட்டத்தில் ஏகப்பட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டு வருவதை தடுக்க நாதியற்று கிடக்கிறோம்.

இது மாநில அரசுக்கு தன் சொந்த நிலத்தின் மீதுள்ள உரிமையை அபகரிக்கிறது. இதன் மூலம் மாநில அரசின் மிகப் பெரிய வரி வருவாய் பறி போகிறது என்பதையெல்லாம் கடந்து இந்த நிலத்தை கார்ப்பரேடுகள் எந்த எதிர்ப்புகளும் இல்லாமல் சூறையாடிச் சுரண்டிக் கொழுக்க இந்த மசோதா தடையில்லா சான்றிதழ் வழங்குகிறது என்பதே நமது பெருங் கவலையாகும்.
உண்மையில் இந்த மசோதாவின் உண்மை நோக்கம் என்பது மாநில அரசும், மத்திய அரசும் பாதுகாக்க வேண்டிய இயற்கையின் மீதான தங்கள் உரிமைகளையும், கடமைகளையும் விட்டுக் கொடுத்து ஒருசேர கார்ப்பரேட்களுக்கு கையளிப்பதாகும்.
தற்போது வரை மாநில ஆட்சியாளர்கள் சுரங்க உரிமையாளர்களுடன் கைகோர்த்து இந்த இயற்கை செல்வங்களை சூறையாடி கிடைக்கும் வருமானத்தின் ஒரு மிகச் சிறிய பகுதியை அரசு கஜானாவிற்கு கொண்டு, வந்து பெரும் பகுதியை தங்களுக்குள் பங்கிட்டு வந்தனர்.
தற்போது சிறிய கொள்ளையர்கள் இதில் இருந்து விலக்கப்பட்டு பகாசூரக் கொள்ளையர் வசம் இவை ஒப்படைக்கப்பட உள்ளன. இதில் அதானி, அம்பானி போன்ற இந்த பகாசூரக் கொள்ளையர்கள் இனி இந்தியாவின் இயற்கை செல்வங்களை வாரி வழித்தெடுத்து வெளிநாடுகளுக்கும் அனுப்பி பணம் பார்ப்பார்கள்.
மோடியின் பாஜக ஆட்சி என்பது ஒரு போதும் மக்கள் நலனுக்கான ஆட்சியல்ல. இது அதானி, அம்பானி ஆகியோரின் நலன்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஆட்சியாகும் என்பது இந்த கனிம வள மசோதாவே கண்கண்ட சாட்சியாகும்!
இந்தியாவில் காணப்படும் 24 வகையான மிக முக்கியக் கனிமங்களையும் 6 வகையான அணுக் கனிமங்களையும் தோண்டி அள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலே மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிக்கிறதென்றால், இது இயற்கைவளக் கொள்ளையருக்கு கதவைத் திறந்து சல்யூட் அடிக்கும் ஆட்சி என்பதில் என்ன சந்தேகம்?
எதையும் தாங்கும் இளிச்சவாயர்களாக நினைக்கிறார்கள், மக்களை!
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே ரொம்பப் பரவாயில்லை!
முகலாய காலத்து படையெடுப்புகளால் அள்ளிச் சென்றதெல்லாம் இன்றைய ஒன்றியக் கொள்ளையர்கள் முன்பு ஒன்றுமேயில்லை…!
செல்வங்கள் மட்டுமே அந்தக் காலத்தில் கொள்ளை போயின! இவர்களோ நம் அடிமடியிலேயே கைவைக்கிறார்கள்!
இந்தியாவை இந்த பாஜக அரசு மக்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இடமாகவே பார்க்கவில்லை.
மலைகள், மண், மண்ணுக்குள் இயற்கை புதைத்து வைத்துள்ள கனிமங்கள்…என அனைத்துமே இந்தப் பேராசைக்காரர்களின் கண்களுக்கு செல்வமாகத் தான் தெரிகிறது. இயற்கை என்பது ஒரு போதும் அழிக்கக் கூடாத செல்வம். அவை காலாகாலத்துக்கும் பாதுகாக்க வேண்டிய செல்வம். அடுத்தடுத்த தலைமுறைகளுக்குமான செல்வம் என்பதை இவர்கள் உணர்வதேயில்லை.
எப்படி உணர்த்தப் போகிறோம்? தெரியவில்லை.
சாவித்திரி கண்ணன்























Leave a Reply