புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் குறித்த பல மர்மங்களுக்குள் நாம் போகவில்லை. சித்தர்களும், யோகிகளும் வாழ்ந்த தமிழ் மண்ணில் அரவிந்தர் குறித்த ஆன்மீக மாயை ஆதிக்க சக்திகளால் தொடர்ந்து கட்டமைக்கபடுகிறது. ஆனால், ஒரு விடுதலைப் போராளியான அரவிந்தர் எப்படி ஆன்மீகவாதியானார், ஏன், எதனால்? என்பதற்கு பாரதியார், பாரதிதாசன், வ.ரா ஆகியோர்களே சாட்சியாகும்;
பாரதியாரும், அரவிந்தரும் சம காலத்தவர்கள்!
தேச விடுதலைக்காக பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடியதால் இருவரும் தேடப்படும் குற்றவாளியாக வெள்ளைக்கார அரசால் அறிவிக்கப்பட்டனர்.
பிரிட்டிஷ் ராஜ்யத்தில் இருந்து விடுபட்டு பிரென்ச் அரசின் வசமிருந்த புதுச்சேரியில் பாரதி அடைக்கலமான செய்தி அறிந்து தானும் புதுச்சேரி வந்து சேர்ந்தார் அரவிந்தர். தன்னை நம்பி வந்த அரவிந்தரை தமது நண்பர் சங்கர செட்டியார் வீட்டின் மூன்றாம் மாடியில் தங்க வைத்து பாதுகாத்தார் பாரதியார். பிறகு தான் அரவிந்தர் தனி இடம் பார்த்து குடிபோனார்.
அரவிந்தர் இலக்கியத் தரமுள்ள எழுத்தாளர், பெரிய மேதாவி, பல மொழிகள் அறிந்தவர். கலை ரசனையாளர், அறிஞர்.
நமது பாரதியாரைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? ஆங்கிலம், பெங்காளி,சமஸ்கிருதம் என ஆறேழு மொழிகள் தெரிந்தவராதலால் அரவிந்தரும், பாரதியாரும் ஒத்திசைந்த கருத்துக்களோடு மிக நெருங்கிப் பழகினார்கள்.
எழுத்தாளர் வ.ரா விவரணையின்படி, சம்பாஷணையின் மாண்பிலும், இனிப்பிலும் அரவிந்தருக்கும், பாரதியாருக்கும் இணையாக யாரையுமே சொல்ல முடியாது…’’என்கிறார், வ.ரா.
ஆயினும் பிரிட்டிஷ் போலீசார் புதுச்சேரிக்கு வந்து பல இடையூறுகளை செய்த வண்ணம் இருந்தனர். ஆனால் அதையெல்லாம் கடந்து பாரதியார் இந்தியா இதழை நடத்தி வந்ததோடு, சுதேசமித்திரனுக்கும் சுதந்திர வேட்கை தரும் கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதி அனுப்பி வந்தார். இதனால் பாரதியார் நடத்திய இந்தியா இதழ்கள் வாசகர்களை சென்றடையவிடாமலும், அவருக்கு சந்தா பணம் கிடைக்காமலும் தடுத்து விட்டனர்.
பாரதியார் மிகப் பெரிய மேதாவி. அவர் நினைத்திருந்தால் பிரிட்டிஷ் அரசில் பெரிய உத்தியோகம் பெற்றோ, அல்லது தி இந்து முதலான ஆங்கில பத்திரிக்கையில் சேர்ந்தோ, கை நிறைய சம்பாதித்து காதல், இயற்கை ரசனை, ஆன்மீக, பக்தி பாடல்கள் எழுதி தாகூரைப் போல சுகபோகவாசியாக இருந்திருக்க எல்லா வாய்ப்புகளும் இருந்த போதிலும் தவிர்த்தவர். லட்சியங்களுக்காக வறுமையை வலிந்து ஏற்றவர்.
அரவிந்தரோ பணக்கார வீட்டுப் பிள்ளை. இங்கிலாந்தில் கேம்பிரிஜ் கல்லூரியில் படித்தவர். மிகப் பெரிய பரோடா சமஸ்தானத்தில் சம்பளத்தில் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தவர். அந்தக் காலத்து பெரிய, பெரிய வி.ஐ.பிக்களின் நட்புள்ளவர். சுதந்திர தாகத்தால் புதுச்சேரி வந்த அரவிந்தருக்கு அவரது நண்பர்கள் தாராளமாக பணம் அனுப்பி வந்தனர். ஆனால், அது போலீசாரால் தடுக்கப்பட்டதால் தடுமாறினார்.
அந்த காலகட்டத்தில் என்ன நடந்தது? என வ.ரா எனப்படும் வா.ராமசாமி தன்னுடைய மகாகவி பாரதியார் நூலில் கூறி இருப்பதாவது;
போலீசார் சுதேசிகளின் பண வருவாய் ஊற்றுகளை அடியோடு வற்றும்படி செய்துவிட்டார்கள். இந்த முயற்சியின் பயனாக அரவிந்தரிடமும் பணமில்லாமல் போய்விட்டது. எப்படி உணவுப் பொருட்களை வாங்குவது?
நான் அப்போது அரவிந்தரின் ஆசிரமத்தில் தங்கி இருந்தேன். ஒரு நாள் காலையில் சமைப்பதற்கு ஒன்றுமே இல்லை. ”காய்கறி வாங்கக் கூட பணமில்லை என்ன செய்வது?” என அரவிந்தரைக் கேட்டோம்.
”என்ன சாமான்கள் மிச்சமிருக்கின்றன?” என அவர் கேட்டார்.
”அரிசி, மிளகாய் வற்றல், நல்லெண்ணெய், உப்பு” என்றோம்.
”சாதம் சமைத்து மிளகாய் வற்றலை பொறித்து வையுங்கள்” என்றார்.
இந்த வறுமைச் சூழல் அரவிந்தர் முன்பின் அறியாதது. வறுமையை எதிர்கொள்ளும் துணிச்சல் பாரதியாரிடம் இருந்தது. ஆனால், பாவம் அரவிந்தரிடம் இல்லை.

அன்றைய தினம் இந்தியாவின் விடுதலை வேள்விக்கு தலைவராக போற்றப்பட்ட திலகர் சொன்ன ஒரு வாக்கியம் தற்போது நினைவு கூரத்தக்கது; தேச பக்தன் ஒருவன் தீவிரவாதியாகவோ, புரட்சிக்காரனாகவோ தன் வாழ்க்கையைத் தொடங்கி தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி காணாமல் போனால் அவன் மிதவாதியாக, வேதாந்தியாக மாறிவிடுகிறான்’’ என்கிறார்.
அது தான் அரவிந்தர் விஷயத்திலும் நடந்தது.
இதை இப்படி விவரிக்கிறார், வ.ரா; இந்த மாறுதல் பாரதியாருக்கு பிடிக்கவில்லை. இந்தியாவின் விடுதலைக்கு அரும்பாடுபட்டு வருகிறார் என்று தான் பாரதியாருக்கு அரவிந்தரிடத்தில் அளவுகடந்த பிரேமை இருந்தது. ஆனால், அரவிந்தர் போராட்டத்தை விட்டு விலகிப் போவதாகத் தெரிந்ததும், பாரதியார், கொஞ்சம் கொஞ்சமாக அவரை அணுகுவதையே தவிர்த்துக் கொண்டார்’’ என்கிறார்.
இந்தச் சூழலில் பாரதியார் அரவிந்தரிடம் ஒரு எதிர்பாராத மாற்றத்தை காண்கிறார். அரவிந்தரிடம் ஏற்பட்ட மாற்றம் குறித்து பாரதியார் பாரதிதாசனிடம் கூறியதை பாரதிதாசன் வார்த்தைகளிலேயே கேட்போம். ( ஆதாரம் பாரதிதாசன் எழுதிய மகாகவி பாரதி நூல்)
அரவிந்தரை சந்தித்துவிட்டு வழக்கம் போல இல்லம் திரும்பிய பாரதியார், மிகச் சோர்ந்து காணப்பட்டார்.
”ஏன் இவ்வாறு வாடியிருக்கிறீர்கள்?” எனக் கேட்டேன். நடந்ததை பாரதியார் பகர்ந்தார்;
”நானும், அரவிந்தரும் உரையாடிக் கொண்டிருந்தோம். முன்பின் தெரியாத எவனோ ஒருவன் அரவிந்தர் காலில் விழுந்தான். அவரும் ஆசி வழங்கினார். பிறகு அரவிந்தர் என்னைப் பார்த்து, ”நீரும் இவ்விதம் ஊரார் வணங்க சீரும், சிறப்பும் தேடலாமே’’ என்றார். அரவிந்தர் உள்ளம் சமத்துவ உணர்வுடையதன்று அறிந்தேன். அது மேடு,பள்ளங்கள் நிறைந்த காடு..’’ என்றார், பாரதி.

இது குறித்து வ.ரா சொல்கிறார்; பாரதியார் ஆஷாடபூதி வேதாந்தி அல்லர். ஆத்ம விசாரம் செய்யும் கழைக்கூத்தாடி அல்லர். விரைவில் பரலோக யாத்திரை சித்திக்க வேண்டும் என்ற சோம்பேறிகளின் கூட்டத்தைக் கண்டால் சீறி விழுவார். அவர் மகாகவி. இணையற்ற கலைஞன். உலகத்தை ஆண்டு அனுபவிக்க வந்த உத்தமன். ‘வெள்ளத்தின் பெருக்கை போல் கவிப் பெருக்கும், கலை பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்று பதவி கொள்வார்’ எனப் பாடியவர்’’ என்கிறார்.
வெறும் கையோடு புதுச்சேரி வந்த அரவிந்தர் பெயரில் இன்று பல ஆயிரம் கோடிச் சொத்துக்கள் இருக்கலாம். பணம் படைத்தோருக்கும், வெளிநாட்டாருக்கும் அது சொர்க்க பூமியாக இருக்கலாம். இதைத் தொடர்ந்து அங்கு பாலியல் புகார்கள், கொலை, தற்கொலை, நிர்வாகச் சீர்கேடு… சர்ச்சைகள் அணி வகுக்கலாம். எதற்கு இதைப் பற்றி வீண் பேச்சு, நேர விரயம்!
பொய்மையை புறம் தள்ளி உண்மையாக வாழ்ந்து மறைந்தார், நம் பாரதியார், தமிழ் திருநாட்டில் வெள்ளத்தின் பெருக்கை போல கவிப் பெருக்கையும், கலை பெருக்கையும் ஏற்படச் செய்து பல கோடித் தமிழர்களை பள்ளத்தில் இருந்து மீட்டு விழி பெற்று, பதவி கொள்ள செய்திருக்கிறார்…!
என்றென்றும் நம் நாடி, நரம்புகளில் தன்னைத் தானே கண்டுணரும் தன்மான உணர்ச்சியை ஓடச் செய்துவிட்டார், மகாகவி பாரதியார். பாரதியாரின் ஆன்மீகப் பாடல்களில் அவர் மீண்டும், மீண்டும் நமக்குச் சொல்வது, ”ஒருவன் தானே கடவுள் என்றுணர வேண்டும்” என்பதே. ”அறிவே தெய்வம்” என்றார்.
பாரதியார் ஆன்மீகத்திற்கு எதிரியல்ல. அவரே ஒரு ஆன்மீகத் தேடல் கொண்ட சித்தர் தான். அரவிந்தரிடம் உண்மையான ஆன்மீகத்தை பாரதியால் காண முடியவில்லை. அரவிந்தரின் ஆன்மீகம் துறவுக்கானது அல்ல, சொத்து, சுகங்கள், அந்தஸ்த்துகள் போன்ற வரவுக்கானது என்பதால் விலகி வந்தார்.
”காவித் துணி வேண்டா, கற்றைச் சடை வேண்டா;
பாவித்தல் போதும், பரம நிலையெய்துதற்கே” என்றார்,பாரதி.
இதைத் தான் நமது திருமூலர்,
”தன்னை அறிந்த பின் பிறிதொரு தெய்வமில்லை’’ என்றார்.
சாவித்திரி கண்ணன்























அரவிந்தர் புதுச்சேரி வருவதற்கு காரணமாக இருந்தவர் விவேகானந்தரின் சிஷ்யை மகாகவி பாரதியின் குரு நிவேதிதா தான். சகோதரி நிவேதிதாவுக்கு உலகம் முழுவதும் தொடர்பு இருந்தும் பாரதியாரோடு 1906 ஆம் ஆண்டு ஏற்பட்ட குரு சிஷ்யர் காரணமாக அவன் தன்னுடைய குருநாதராக நிவேதிதாவை வரித்துக் கொண்டான் .எனவேதான் 1910 ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு அரவிந்தர் நிவேதிதாவாள் அனுப்பப்பட்டார் . பாரதி நடத்திய இதழ்களில் நிவேதிதா தொடர்ந்து கட்டுரைகள் வழங்கி உள்ளார் என்றும் கடிதத் தொடர்பு இருந்தது என்றும் செல்லம்மாள் பாரதி குறிப்பிட்டுள்ளார் .
சிறையில் இருக்கும் காலத்திலேயே அரவிந்தர் பகவான் கிருஷ்ணரை விஸ்வரூப தரிசனமாக தரிசித்துள்ளதாக கூறியுள்ளதும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு விலகிச் சென்றதும் அப்பொழுதே தொடங்கி விட்டது. அரவிந்தர் பாரதி வ.வே.சு.அய்யர் உறவுகள் பற்றியும் மண்டையும் குடும்பத்தாரின் பங்களிப்பு பற்றியும் ஆய்வுக்குரிய கட்டுரைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்