மனித உரிமை, பெண்ணுரிமைகளை மீட்கும் சட்டப் போராட்டங்களில் சாம்பியனாக திகழ்பவர் பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்! ஜீவனாம்சம் கோரிய இஸ்லாமியப் பெண் ஷாபானு வழக்கு, சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கான உரிமை போன்ற பல பரபரப்பான, சர்ச்சைக்குரிய முக்கிய வழக்குகளை நடத்தி வென்றவர். அவர் பத்திரிகையாளர் ரிதுமேனனுடன் நடத்திய சுவையான உரையாடலின் அரிய வரலாற்றுப் பதிவுகள்;
இந்திரா ஜெய்சிங் இந்தியாவின் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட முதல் பெண்ணாவார். இவர் வாதாடிய வழக்கால் தான் தெருவோர வியாபாரிகள் சட்டம் போன்ற சட்டங்கள் உருவாயின. சபரிமலையில் பெண்கள் நுழைவுக்கான சட்டப் போராட்டம், கேரளாவில் சிறுபான்மையின கிறிஸ்தவ பெண்களுக்கு சமமான பரம்பரை உரிமைகளை வழங்க வழிவகுத்த மேரி ராய் வழக்கு, ரூபன் தியோல் பஜாஜ் என்ற குடிமைப்பணி அலுவலர் வழக்கு, பஞ்சாப் காவல்துறை அலுவலர் கே.பி.எஸ்.கில் மீதான பாலியல் வழக்கு, பாலியல் சீண்டலுக்கு ஆளாகி ராஜினாமா செய்த ஜபல்பூர் பெண் நீதிபதிக்கு நியாயம் கோரி நடந்த வழக்கில் தோற்றாலும், பாராளுமன்றத்திற்கு வந்த பதவி நீக்க தீர்மானம் என இவரது முயற்சிகள் இந்தியா முழுமையும் பேசப்பட்டவை.
இந்திரா ஜெய்சிங்குடன் பத்திரிகையாளர் ரிது மேனன் நடத்திய உரையாடல்’ The Constitution Is My Home’ என்ற தலைப்பில் நூலாக வெளி வந்துள்ளது. இதில் தனது அனுபவங்களை இந்திரா ஜெய்சிங் விரிவாகப் பேசுகிறார். இந்த நூலில் அரசியல் சட்ட மாண்புகளை உறுதி செய்யும் வகையில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஆளுமைகளைப் பற்றி குறிப்பிடுகிறார். அதே போல அதற்கு எதிராக இருந்தவர்களைப் பற்றியும் பெயரைக் குறிப்பிட்டும், குறிப்பிட்டாலும் கூறுகிறார்.
குடிமக்களின் உரிமைகளை உறுதி செய்வதில், மனிதர்களின் கண்ணியத்தைக் காப்பதில் ஒருவர் எப்படி செயல் பட்டார் என்பதை வைத்து தான் இந்திரா ஜெய்சிங் மனிதர்களை எடை போடுகிறார். ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த போது, இந்திரா ஜெய்சிங், ( இப்போதைய உள்துறை அமைச்சரான) அமித்ஷாவின் பிணை மனுவை உறுதியாக எதிர்த்தார். Lawyers Collective என்ற அமைப்பிலும், Leaflet என்ற சட்ட இணைய இதழிலும் பங்காற்றி வருகிறார். 2018 ஆம் ஆண்டில், ஃபார்ச்சூன் என்ற இதழ் உலகின் ஐம்பது முன்னணி ஆளுமைகளில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. இந்திரா ஜெய்சிங் இந்த நூலில் கூறுகிறார்:

” 1999 -ல் எழுத்தாளர் கீதா ஹரிஹரன் தனது மகன் பெயரில் வங்கியில் பணத்தை முதலீடு செய்யப் போனார். இந்து சட்டப்படி தந்தை தான் ஒரு குழந்தையின் இயற்கையான பாதுகாவலர்.எனவே தந்தை சம்மதம் இல்லாமல் பணத்தை ஏற்க முடியாது என ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. இந்த நடைமுறையை எதிர்த்து தொடர்ந்த வழக்கிற்கு கிடைத்த தீர்ப்பு, தாய்க்கும் தந்தைக்குள்ள்ள அனைத்து உரிமைகளும் உண்டு என்ற வரலாற்று வெற்றியானது. இதன் விளைவாக தனித்து வாழும் பெண்களின் குழந்தைகளை தந்தையின் கையொப்பம் இல்லாமல் பள்ளிகளில் அனுமதிப்பதற்கும், கணவனைப்பிரிந்து வாழும் பெண்களின் குழந்தைகளுக்கு கடவுச்சீட்டு வழங்குவதற்கும் எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என பெண்ணிய உரிமை நிலை நாட்டப்பட்டது.
ஒரு நாள் கூட அரசியல் அமைப்புச் சட்டத்தை கையில் எடுத்துச் செல்லாமல் நான் நீதிமன்றம் சென்றதில்லை. இந்த அரசியல் சட்டம் தான் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய விமான பணிப்பெண்கள் மேலாளர்கள் ஆக முடியாது என்ற நிலையை மாற்றியது. வாழ்வதற்கு வழியின்றி (குற்ற நோக்கம் ஏதுமின்றி) நடைபாதைகளில் வியாபாரம் செய்பவர்களின் (ஓல்கா டெல்லிஸ் வழக்கு) கண்ணியத்தை பாதுகாத்தது. என்னுடைய பார்வையில் பஞ்சாப் தீவிரவாதத்தை ஒடுக்கியதாக அனைவராலும் பாராட்டப்பட்ட காவல்துறை தலைவரான கே.பி.எஸ்.கில், ஒரு பெண்ணை (ரூபன் தியோல் பஜாஜ்) பாலியல் ரீதியாக சீண்டியவர் தான். அவர் ஒரு கதாநாயகன் அல்ல.
உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் தீர்ப்பிற்குப் பிறகு, 2019 ஜனவரியில், பிந்து அம்மிணி, கனக துர்கா என்ற இரு பெண்கள் சபரிமலை உச்சிக்குச் சென்றனர். இவர்கள் அப்படி சென்றதற்காக கோவில் பூசாரிகள் செய்த சடங்கை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தோம். பிந்துவிற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், பூசாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சபரிமலைத் தீர்ப்பு சீராய்வுக்கு சென்றது. ஐந்து நீதிபதிகள் தீர்ப்பை, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் சீராய்வு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்ற விதிக்கு புறம்பாக ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு வழக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதாவது பெண்களின் வழிபாட்டு உரிமையை மறுதலிக்கும் விதமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார். பெண்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக நாயர் சமூகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இடதுசாரிகள் ஆண்ட கேரள அரசும் பெண்கள் சபரிமலைக்குச் செல்வதை தடுத்தது. வழக்குத் தொடுத்த பிந்து அம்மிணி கேரளாவை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. குடியுரிமைகளை, மத நம்பிக்கைகள் பாதிக்கக் கூடாது.

பல்வேறு சட்ட ஆணையங்கள் பரிந்துரை செய்தாலும், தொடர்ந்து வரும் அரசுகள் பெண்களுக்கு சமமான உரிமையை உறுதி செய்யும் வகையில் தெளிவான சட்டங்கள் இயற்றவில்லை. தனிநபர் சட்டங்கள் ( personal laws) அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பான ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ (ஆணும் பெண்ணும் சமம்) என்ற விசாரணைக்கு உட்படும் போது தான் –சடங்கு, வழக்கம், நம்பிக்கை என்ற பெயர்களில் நிலவும் – ஆண், பெண் பாகுபாடுகளைக் களைய முடியும். பண்டைய மூட நம்பிக்கையால் கணவன் தனக்கு மனைவியை அடக்கும் உரிமை இருப்பதாக நினைத்துக் கொள்கிறான். இப்போது கூட திருமணச் சொத்துகளுக்கு (matrimonial property) கூட்டு உரிமை (joint ownership) வழங்கும் சட்டம் இல்லை.
கிறிஸ்தவமும், முஸ்லிமும் தங்கள் மதத்திற்கு வருவதை வரவேற்கும் வகையில் சடங்கு செய்கின்றன. மதமாற்றம் என்ற சடங்கு நடக்கவில்லையென்றால், மதமாற்றம் (conversion) என்று சொல்லி குற்றவியல் நவடிக்கை எடுக்க முடியாது. விரும்புகிற மதத்தை கடைபிடிக்கும் உரிமை அரசியல் சட்டப்படி ஒருவருக்கு உண்டு. அரசமைப்புச் சட்டத்தில் ‘மாற்றம்’ என்ற சொல் இல்லை. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, பார்சி மதச் சட்டங்கள் முறையாக எழுதப்பட்டால் (codified) அவை அரசியலமைப்புச் சட்ட ஆய்வுக்கு உட்படும். இதனால் நம்பிக்கை என்ற பெயரில், உலமாக்கள், பூசாரிகள், மதகுருக்கள் விளக்கம் கொடுத்து நடக்கும் பல்வேறு பாகுபாடுகளைப் போக்க முடியும். தனித்து வாடகை வீட்டில் இருப்பதை விட, சமயங்களில் ஒரு பெண் தனது கணவர் வீட்டில் பாதுகாப்பற்று இருக்கிறாள்.
முக்கியமான சட்டங்கள் அவசரச் சட்டங்களாக இயற்றப்படுவதால் விவாதங்கள் நடைபெறுவதில்லை.

இந்தியா – பாகிஸ்தான் என்ற பிரிவினையோடு நாட்டின் விடுதலை சாத்தியமானது. எனவே ,இரண்டு நாடுகளில், எங்கு போவது என்று முடிவெடுக்க முடியாமல் மக்கள் இருந்தனர். இந்தியாவில் குடியுரிமை பெற்றிருப்பதால், மற்ற நாட்டின் குடிமகனாக முடியாது என்று சட்டம் சொல்லவில்லை. முஸ்லிம்கள், குடியுரிமை பெறுவதை தடை செய்யும் குடியேற்ற திருத்தச் சட்டம் சரியானது அல்ல. 2014 க்குப் பிறகு, (தேர்தல் பத்திர வழக்கு, நீதிபதிகள் நியமன ஆணைய வழக்கு நீங்கலாக) இந்திய அரசுக்கு எதிராக முக்கியமான தீர்ப்புகள் ஏதும் வரவில்லை. உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தவர்களில் 15 % பேரை நீதிபதிகளாக இந்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
உயர்நீதிமன்ற வளாகத்தில் முஸ்லிம் மதத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சை பேசிய நீதிபதி சரத்யாதவ் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் வால்மீகி இராமாயணத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு எழுதுகிறார். அரசு (executive), சட்ட அவைகள் (legislature), நீதிமன்றங்களுக்கு (judiciary) ஆகியவைகளுக்கு இடையில் நிலவும் அதிகாரப் பகிர்வுகள் நீர்த்துப் போகச் செய்யப்படுகின்றன.
இத்தகைய நடவடிக்கைகள் இது வரை நாம் பெற்றுள்ள முற்போக்கான சட்டமுறைமையை பின்னோக்கி இழுப்பவையாகும். ‘எல்லாவிதமான சட்ட வழிகளும் அடைக்கப்பட்டால் ஒத்துழையாமை என்பது கடமையாகிவிடும்’ என்று காந்தி சொல்லுவார். அந்த மேற்கோள் இப்போதும் பொருத்தமாக உள்ளது. அனைத்து சிக்கல்களுக்கும் நீதிமன்றத்தை நாடுவது என்பது, அரசியலற்ற இயக்கங்களுக்கு வழி வகுக்கும். மக்களின் கூட்டு சக்தியை நீர்த்துப் போக வைக்கும். இந்த நிலையில் குடிமைச் சமூகங்களே பேச்சுரிமையையும், அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.”
பீட்டர் துரைராஜ்























அருமையான பதிவு.. புத்தகம் எங்கு கிடைக்கும்