ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப் போல, நாட்டுக்கு இளைத்தவர் அரசு பள்ளி ஆசிரியர்களா? யாரும் கேட்க நாதியில்லாதவர்கள் அரசு பள்ளி மாணவர்களா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சதா சர்வகாலமும் அரசு பள்ளி ஆசிரியர்களை – பொதுப் பணிகளுக்கு – மக்கள் தொகை கணக்கெடுப்பு -போன்றவற்றுக்கு இழுத்தால், என்னாவது மாணவர்களின் படிப்பு..?
எனது நாற்பத்தியொரு கால பத்திரிகையாளர் பணியில் அரசு பள்ளிகளின் நிலைமை ஆண்டுக்கு ஆண்டு கவலைக்கிடமாகவே சென்று கொண்டுள்ளது. ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு அவல நிலையில் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ஏறத்தாழ புதிய ஆசிரியர் நியமனங்கள் அரிதினும் அரிதாகவே உள்ளது. குறைந்த ஆசிரியர்கள், அடிப்படைத் தேவைகளின் போதாமை ஆகியவற்றோடு கல்வி கற்று முன்னேறத் துடிக்கும் அரசு பள்ளி இளந்தளிர்களை முடக்கி போடும் வண்ணம் எதற்கெடுத்தாலும் பொது வேலைகளுக்கு ஆசிரியர்களை கூப்பிடு என்ற போக்கு அரசுத் துறையில் நிலவுகிறது.
வாக்காளர் பட்டியல் திருத்தம், வீடு வீடாகச் சரிபார்த்தல் பணிகளா? கூப்பிடு, அந்த வாத்திகளை!
ஓட்டுப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி அலுவலர் பணியா? கூப்பிடு அந்த வாத்திகளை!
தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியா? வீடுவீடாகப் போகச் சொல் அந்த ஆசிரியர்களை!
இப்படி எதற்கெடுத்தாலும் அரசு பள்ளி ஆசிரியர்களை ஆட்டுவிக்கும் போக்கு சுதந்திரம் பெற்றது தொடங்கி மாறவில்லை.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் வீட்டுக் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிப்பதில்லை. வக்கில்லாத ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்து பிள்ளைகள் தானே படிக்கிறார்கள். அவர்கள் படித்து என்னாகப் போறது..என்ற அலட்சியமா?

ஏன் தனியார் பள்ளி ஆசிரியர்களை அழைத்து இந்த தேச சேவைக்கு ஒத்துழைப்பு தாருங்கள் எனக் கேட்கும் தைரியம் உண்டா ஆள்வோருக்கு?
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு கணக்கெடுப்புப் பணிகளில் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் நிர்பந்தித்து ஈடுபடுத்தப்படுகின்றனர். வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால் அரசு பள்ளி மாணவர்களூக்கான கற்பித்தல் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சி முடக்கபடுகிறது.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியின் முதற்கட்டமாக வீடுகள் பட்டியலிடல், வீட்டுக் கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கான பயிற்சி முகாம்கள் ஜூலை 17 முதல் 31 வரை நடந்தது.
அரசு பள்ளி கல்லூரிகளில் வேலை பார்க்கும் 80 சதவிகித ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பாலிடெக்னிக்கில் வேலை பார்க்கும் விரிவுரையாளர்களையும் இந்தப் பணியில் கண்காணிப்பாளர்களாக ஈடுபடுத்துகிறார்கள்!
இதனால் அரசு பள்ளிகளில் பெரும்பாலான வகுப்பறைகள் வெறிச்சோடி உள்ளன. கற்பித்தல் பணி நடக்க வேண்டிய இடங்கள் காற்றாடிக் கொண்டுள்ளன..!
பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பாடங்களை எடுக்கும் ஆசிரியர்கள் இந்த கணக்கெடுப்பு பணிக்காக பெருமளவு ஈடுபடுத்தப்படுவதால் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் இந்த மாணவர்களுக்கு பாடங்களையும் நடத்த விடாமல், சிறப்பு வகுப்புகளும் எடுக்கவிடாமல் இளந்தளிர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கத் துணிந்து விட்டனர் அதிகாரிகள்.

ஆனால், அதே சமயம் இந்த மாவட்ட கல்வி முதன்மை அதிகாரிகள் சூட்சுமகாக ஒரு காரியம் செய்து ஒரு பொதுக் கருத்தை கட்டமைக்கிறார்கள். அதாவது தங்கள் பணி நேரம் போக மாலை நேரங்களில் இந்த வேலை செய்யுங்கள்- மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் செய்யுங்கள் என உத்திரவிட்டதாக வக்கனையாக பத்திரிகை செய்திகளை வரவழைத்துக் கொள்கிறார்கள்!
உண்மையில் இந்தப் பணி ஒரு முழு நேரப் பணியாகும். காரணம் சில ஆசிரியர்களுக்கு சுமார் ஆயிரம், இரண்டாயிரம், இரண்டாயிரத்து ஐநூறு வீடுகளை கணக்கெடுக்க பணி தந்துள்ளனர். சிற்றூர்களில் 250 வீடுகளோடு முடிகின்றது. எட்டு மணி நேரம் பணி செய்தால் கூட ஒரு நாளைக்கு 25 வீடுகள் தான் முடிக்க முடியும். இவர்களாலோ அரை நாள் தான் பணி செய்ய முடிகின்றது. இதனால் தான் இந்த விவகாரம் கோர்ட்டுக்கு போய் உள்ளது.
முன்னதாக மக்கள் ஒவ்வொருவரையும் இணையதளம் மூலம் சுய கணக்கெடுப்புக்கு பதிவு செய்ய அரசு வசதி செய்தது. இப்படி சுயபதிவு செய்தால் ஐ.டி. எண் கிடைக்கும். கணக்கெடுக்க வரும் ஆசிரியரிடம் அந்த எண்ணை தெரிவித்தால் பதிவு செய்வார்கள். அதன் பிறகு முழுமையான கணக்கெடுக்க வருகையின் அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். ஆனால், மக்களில் ஒரு சதவிகிதத்தினரே இப்படி சுய கணக்கெடுப்பு பதிவு செய்துள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்களில் ஒரு பிரிவினரை காலையிலும் மற்றொரு பிரிவினரை மதியத்திற்கு மேலும் கணக்கெடுக்க அனுப்புகின்றனர். பள்ளி நேரம் முடிந்தவுடன் அனைவரையும் மீண்டும் ஈடுபடுத்துகின்றனர்.
காலை முதல் மதியம் வரை வீடுவீடாக அலைந்து விட்டு மதியம் பள்ளிக்கு வந்தால், அவர்களால் எவ்வாறு பாடம் நடத்த முடியும்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகின்ற இந்த கணக்கெடுப்பில் வீடு வீடாகச் சென்று, 34 கேள்விகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கேள்வித்தாளைப் பயன்படுத்தி, அனைத்து வீடுகளிலும் கணக்கெடுப்பை நடத்திடுகின்றனர். பெரும்பாலும் மக்களின் பொருளாதாரம் தொடர்பான கேள்விகளையே கேட்கின்றனர். வாடகை வீடா, சொந்த வீடா? ஓட்டுவீடா கூரை வீடா? குளிர்சாதன பெட்டி இருக்கிறதா? இணையதள வசதி உள்ளதா? என்ன வாகனம் வைத்துள்ளீர்கள்? இப்படியான கேள்விகளுக்கு மட்டும் பதில்களை பெற்று செல்கின்றனர். வீட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை, சாதி போன்ற விபரங்கள் குறித்து பின்பொரு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்கிறார்கள். ஒவ்வொரு ஆசிரியருக்கும் குறைந்தபட்சம் 250 குடும்பங்களை சர்வே செய்யச் சொல்கின்றனர்.
ஊராட்சிகளில் மக்கள் தொகை விபரங்களை கணக்கெடுக்கும் பணியை கண்காணிக்க வி. ஏ. ஓ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஏனோ தெரியவில்லை கண்காணிப்பு பணியில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் சிறப்பாசிரியர்களை கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும் என்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அதிகார தோரணையில் உத்தரவு போடுகின்றனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பகுதி நேர ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பள்ளிக் கூடத்தில் உடற்பயிற்சி, ஓவியம், இசை, கம்யூட்டர், கல்வி போன்றவற்றை கற்பிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 16 ஆண்டுகளாகத் தற்காலிக ஆசிரியர்கள் என்ற தலைப்பில் வெறும் ரூ 15,000 ஊதியத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களை முழு நேர ஊழியர்களாக்கி கண்ணியமான சம்பளம் வழங்க கேட்டு போராடி வருகின்றனர். இந்த சம்பளத்தைக் கொண்டு குடும்பம் நடத்த இயலாமல் வெளியிடங்களிலும் வேலை பார்த்து சமாளித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் இவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வேலை செய்கின்றனர். ஆகவே மற்ற நாட்களுக்கும் இவர்கள் பணிக்கு வர வேண்டும் என்றால், அதற்கான ஊதியத்தை நிர்ணயித்துவிட்டுத் தான் அவர்களை பணியில் ஈடுபடுத்த முடியும். ஏனென்றால், அவர்கள் பெறுவது பகுதி நேர ஊழியர்களுக்கான சம்பளம் தான். அதிகாரப் பதவியில் இருந்தால் அறிவைப் பயன்படுத்தும் அவசியமே கிடையாது என நினைக்கிறார்களோ, என்னவோ இந்த முதன்மை கல்வி அதிகாரிகள்!
அந்தக் காலத்தில் நிதி குறைவு, படித்தவர்கள் பற்றாக்குறை போன்றவற்றால் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம். தற்போது படித்து வேலை இல்லாதவர்கள் பெருகி நிற்கும் காலத்திலும், அரசு கஜானாவில் இதற்காகவென்று பணம் ஒதுக்கப்படும் நிலையில் இந்த ஆசிரியர்களையே எல்லாவற்றுக்கும் அழைத்துக் கொண்டிருந்தால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி என்னாகும்..?
நமது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது. பட்டப்படிப்பு படித்து – வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வைத்தும் வேலை கிடைக்காமல் லட்சோப லட்சம் இளைஞர்கள் வாடுகின்றனர். இவர்களில் ஆர்வம் உள்ளோரை இந்தப் பெரும்பணியில் ஈடுபடுத்தி ஒரு சம்பளம் வழங்கினால், அது அவர்களுக்கும் பேருதவியாக இருக்கும். ஆசிரியர்கள் மீது திணிக்கப்படும் கூடுதல் பணிச் சுமை குறையும். மாணவர்களின் கல்வி பாதுகாக்கப்படும்.
சாவித்திரி கண்ணன்























Dear Editor, please explain the pension given to Teachers community and Salary disbursement over 20 years period and how many schools developed and shut down. Any owner will invest 1 lac and expect returns more, but in Teacher case only expenses and no revenue!!