பாசக அரசு 2014ல் ஆட்சிக்கு வந்தது முதல் அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. கூட்டாட்சி கேள்விகுள்ளாகியுள்ளது. சட்டங்கள் வழியே சிறுபான்மையினரை சரிய வைக்கும் முயற்சிகளும், நீதிமன்றங்களின் வழியே நிராதரவாக்கும் நிலைமைகளும் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்தச் சூழலில் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறார், நீதிபதி ஹரிபரந்தாமன்;
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இயற்றப்படும் சட்டங்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தர மறுக்கும் நிலை தொடர்கிறது.
சுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத அளவில் மாநில அரசுகள் ஆளுநர்களின் செயல்பாட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகுவது வாடிக்கையாகிவிட்டது.
பாசக அரசு பல்வேறு விதமான ஒடுக்கு முறைகளை சிறுபான்மையரின் மேல் – குறிப்பாக இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்கள் மேல் – கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
பாசக ஆட்சி, பாராளுமன்றம் மூலமாக பல சட்டங்களை இயற்றியும், தன்னாட்சி அமைப்புகளான CBI, ED, IT, Election Commision, NIA போன்ற அமைப்புகளை பயன்படுத்தியும் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கிறது.
இந்த தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற அரசமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நிதிமன்றங்கள் தவறிவிட்டன.
குறிப்பாக, குடியுரிமை திருத்த சட்டம்,
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம்,
பாப்புலர் பிரண்ட் இந்தியா (Popular Front of India) தடை,
படுதா (HIJAB) அணிய தடை,
உமர்காலித் போன்ற சமூக செயல்பாட்டாளர்கள் UPA சட்டத்தில் பல ஆண்டுகளாக சிறை,
மருத்துவர் கபில்கான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
இஸ்லாமியர் குடியிருப்புகளை புல்டோசர் கொண்டு இடித்தல்

என்பதாக இந்த கடும் தாக்குதல்களின் வரிசை நீள்கின்றன! இவ்வித தாக்குதல்களை பாஜவின் ஒன்றிய அரசும், பாசக ஆளும் மாநில அரசுகளும் தொடர்ந்து செய்கின்றன. தமிழ் நாட்டில் ஆட்சி செய்த, செய்து கொண்டிருக்கின்ற எந்த ஆட்சியாளர்களும் இவ்விதம் செய்ததில்லை. ஆனால், அந்த காரியத்தை இங்குள்ள உயர் நீதிமன்றம் செய்வதாக விமர்சனங்கள் உள்ளன.
இந்த வகையில் திருப்பரங்குன்றத்தில் மசூதி மற்றும் தர்காவிற்கு அருகில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தும் தீர்ப்பையும், திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்காவில் ஆடு வெட்டி விருந்து வைப்பதற்கு தடை அளித்த தீர்ப்பையும், சமீபத்தில் மே-26 இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாளில் ஆடு,மாடு வெட்டுவதற்கு தடை அளித்த தீர்ப்பையும் சுட்டிக் காட்டலாம்.
சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த ஒரு தீர்ப்பு இஸ்லாமிய சமூகத்திற்கு கடும் பாதிப்பை உருவாக்கும் என விமர்சிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு 2024 ஆம் ஆண்டில் போட்ட தமிழ் நாடு அரசின் அரசாணை எண் 31 ஐ ரத்து செய்யும் விதமாக பட்டியல் இனத்தில் இருந்தோ, பிற்பட்ட அல்லது மிக பிற்பட்ட வகுப்பில் இருந்தோ இஸ்லாம் மதத்திற்கு மாறுபவர்கள் பின்தங்கிய வகுப்பினராக கருதப்படமாட்டார்கள் என்கிறது.
மேற்சொன்ன தீர்ப்பு ரத்து செய்த அரசாணை எண் 31 தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில், பட்டியல் இனத்தில் இருந்தோ, பிற்பட்ட அல்லது மிக பிற்பட்ட வகுப்பில் இருந்தோ இஸ்லாம் மதத்திற்கு மாறுபவர்கள் பின் தங்கிய வகுப்பினரே என்று தெளிவுபடுத்தப்பட்டது.

இத்தகைய அரசாணை 31 வெளியிடுவதற்கான தேவை வந்த பின்னணி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, தமிழ்நாடு அரசின் கடிதம் 4-2-2010-ன் தேதியக் கடிதமும் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தமிழ்நாடு அரசின் 22-8-2012-தேதியக் கடிதமும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 4.5.2017 மற்றும் 17.5.2019 தேதிய கடிதங்களும் பட்டியல் இனத்தில் இருந்தோ, பிற்பட்ட அல்லது மிக பிற்பட்ட வகுப்பில் இருந்தோ இஸ்லாம் மதத்திற்கு மாறுபவர்கள் முன்னேறிய வகுப்பினர் என்று திட்டவட்டமாக கூறியது.
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் பின்தங்கிய வகுப்பினர் என்பதை 1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சட்டமன்றத்தில் கொண்டு வந்த சட்டம் தெளிவுபடுத்தியது. அந்த சட்டம் அரசமைப்பு சட்டம் அட்டவணை ஒன்பதிலும் இணைக்கப்பட்டுள்ளது. பின்னர் கலைஞர் முதல்வராக இருந்த போது இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு அளித்தார்.
ஆனால், மேற்சொன்ன அரசின் பல கடிதங்களை ஒட்டி, தமிழ்நாடு அரசின் வருவாய் துறை மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு பின்தங்கிய வகுப்பினருக்கான சான்றிதழ் தர மறுத்தது. தமிழ்நாடு அரசு தேர்வாணையமும் (TNPSC) மதம் மாறிய இஸ்லாமியர்கள் முன்னேறிய வகுப்பினர் என்று மேற்சொன்ன அரசின் கடிதங்களின் அடிப்படையில் கருதியது.
இந்த நிலையில் 1994 ஆம் ஆண்டு சட்டத்தை அடிப்படையாக கொண்டு, உயர்நிதிமன்றத்தின் மிகப் பெரும்பாலான நீதிபதிகள் மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு பின் தங்கிய வகுப்பினருக்கான சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால், ஓரிரு நீதிபதிகள் மதம் மாறும் இஸ்லாமியர் முன்னேறிய சாதியினர் என்றே அரசின் கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளித்தனர்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் 2024ஆம் ஆண்டு அரசாணை எண் 31 வெளியிடப்பட்டு, மதம் மாறிய இஸ்லாமியர்களும் பின் தங்கிய வகுப்பினரே என்று தெளிவுபடுத்தப்பட்டது.
ஆனால், மேற்சொன்னபடி, உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர்.சாமிநாதன் அவர்கள் அரசாணை எண் 31ஐ ரத்து செய்து சமீபத்தில் தீர்ப்பளித்தார்.
2022ஆம் ஆண்டில் இதே நீதியரசர் ஜி.ஆர்.சாமிநாதன் அவர்கள், மதம் மாறிய இஸ்லாமியர் பின்தங்கிய வகுப்பினர் என்று அரசணை மூலம் தெளிவுபடுத்தாத நிலையில், மதம் மாறிய இஸ்லாமியர் முன்னேறிய வகுப்பினர் என்றும், அவர்களுக்கு பின் தங்கிய வகுப்பினர் சான்றிதழ் பெற முடியாது என்றும் தீர்ப்பளித்தார்.
மேற்சொன்ன அரசாணை எண் 31 ஐ ரத்து செய்த சமீபத்திய தீர்ப்பை எதிர்த்து முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ளது. மேல்முறையீட்டில் இதுவரை தீர்ப்பு வெளிவரவில்லை.
எனவே, அரசமைப்பு சட்ட பாதுகாப்பு இயக்கம், மதம் மாறிய இஸ்லாமியர்கள் பின்தங்கிய வகுப்பினர் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோருகின்றது
இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு ஆகஸ்ட் 21, 2026 அன்று மாலை 4 மணி தொடங்கி இரவு எட்டுமணி வரை சென்னை YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் உச்சநீதிமன்றம் சுயேச்சை அமைப்பாக செயல்பட வேண்டும் என்று பணிக்காலத்திலேயே உரக்க குரல் கொடுத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், மக்கள் பிரச்சனைகளை தொடர்ந்து எழுதி வரும் THE WIRE -இணைய ஊடகத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராசன், நடிகர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் பிரகாஷ் ராஜ் மற்றும் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு இயக்க நிர்வாகிகளும், மேலும் பல முக்கிய ஆளுமைகளும் பேச உள்ளனர்.
இதில் ஜனநாயகத்தின் மாண்புகளை காப்பாற்ற விரும்பும் அனைவரும் கைகோர்ப்பது கடமையாகும்..என சட்ட பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்

மேனாள் நீதிபதி,
சென்னை உயர் நீதிமன்றம்






















திண்டுக்கல் ஆர்சி சர்ச் ஜாதி பிரச்னையால் சில வருடங்களுக்கு முன் மூடப்பட்டது . நீதிபதி ஹரிபரந்தாமனார் விழுப்புரம் ஏரியூர் சர்ச் ஜாதி பாகுபாட்டை நேரடியாக கண்டறிந்தார் .ஆனால் .கிறிஸ்துவத்தில் ஜாதி பாகுபாடு இல்லை என்று ரோம் பிஷப் அறிவித்தார். இப்படி உலக கிறிஸ்தவ தலைமை அறிவித்த பிறகும் மதம்மாறியவர்களை எஸ்சி என அடையாளப்படுத்துவது நியாயமா?
முடப்பட்ட சர்ச் கோர்ட் தலையிட்டு சமரசமாகி திறக்கப்பட்டது