தன்னார்வ அமைப்புகளை முடக்குவது, விளிம்பு நிலை மக்கள் மீதான தாக்குதலே! 

- நீதிபதி ஹரிபரந்தாமன்

வெளிநாட்டு நிதிப் பெறுதல் (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 ஐ கொண்டு வருவதன் மூலம் தொண்டு நிறுவனங்களை துடைத்தழிக்கவும், மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு… போன்ற பற்பல வகைகளில் ஏழை, எளியோருக்கு கிடைத்து வந்த உதவிகளை முடக்கவும் மத்திய பாஜக அரசு துடிக்கிறது. இந்த மசோதாவின் பின்னணி மற்றும் ஆபத்துக்களை பற்றி விவரிக்கிறார், நீதிபதி ஹரிபரந்தாமன்;

FCRA சட்டம் பற்றிய வரலாறு

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் வெளிநாட்டு நிதிப் பெறுவதற்கு எந்த தடையும் இல்லை.வெளிநாட்டு நிதியின் மூலம் இந்தியாவில் ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இதன் மூலம் பல கோடி ஏழை, எளிய மக்கள் பயன்பெற்றனர். இவற்றில் பல்லாயிரம் பேர் வேலை வாய்ப்பும் பெற்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் 1976 ஆம் ஆண்டு வரை வெளிநாட்டு நிதிப் பெறுவதற்கு எந்த தடையோ, முறைப்படுத்தாலோ இல்லை.

1976 ஆம் ஆண்டில் தான், வெளிநாட்டு நிதிப் பெறுவதற்கு ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தி முதன் முதலாக ஒன்றிய அரசு சட்டம் இயற்றியது. மத, கல்வி, சமூகம் சார்ந்த தன்னார்வ அமைப்புகள்  வெளிநாட்டு நிதிப் பெறமுடியும் என்பதற்கு வழிவகைச் செய்தது இச்சட்டம்.

அதே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், அரசு ஊழியர்கள், பொது நிறுவன ஊழியர்கள் ஆகியோர் வெளிநாட்டு நிதிப் பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

வெளிநாட்டு நிதிப் பெறுவதற்காக தனி வங்கிக் கணக்கு வைப்பதும், அந்தக் கணக்குகள் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்பட்டு, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புவதும் (Filling of Returns) வெளிநாட்டு நிதிப் பெறும் தன்னார்வ அமைப்புகள் 1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி செய்யவேண்டும்.

வெளிநாட்டு நிதிச் (ஒழுங்குமுறை) சட்டம் தேவையா?

வெளிநாட்டிலிருந்து பெறும் நிதியை முறைப்படுத்தும் சட்டம் தேவை என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஓர் இறையாண்மை கொண்ட நாடு வெளிநாட்டு நிதியை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். உலகில் பலநாடுகளில் வெளிநாட்டு நிதிப் பெறுவதை முறைப்படுத்தும் சட்டங்கள் இருக்கின்றன. எனவே 1976 ஆம் ஆண்டு சட்டம் தேவையான ஒன்றே. அதில் தவறேதுமில்லை.

1976 ஆம் ஆண்டு சட்டத்திற்கு 1985-ல் திருத்தம்

1976 ஆம் ஆண்டு சட்டம் 1985ல் திருத்தப்பட்டது. இந்த திருத்தத்தின் மூலம் வெளிநாட்டு நிதி பெரும் தன்னார்வ அமைப்புகள்  ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கொண்டு வரப்பட்டது.  இதைப் புதுப்பிக்கவேண்டிய அவசியமில்லை. இதுவும் அவசியமான ஒன்றே.

உலகமயமாக்கலின் தாக்கம்

1990 முதல் அனைத்து துறைகளிலும் உலகமயம் என்ற கோட்பாடு பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அதனையொட்டி இந்தியாவிலும் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. இதன் விளைவாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்து செயல்படத் தொடங்கின. சர்வதேச அறக்கட்டளைகள் அதிக அளவில் திட்டங்களைச் செயல்படுத்தின. வெளிநாட்டு நன்கொடைகளின் (நிதியின்) அளவும் பரிமாற்ற முறைகளும் வேகமாக அதிகரித்தன. 2,000 ஆண்டு முதல் இணைய வங்கி சேவைகள், மின்னணு நிதிப் பரிமாற்றங்கள் (SWIFT உள்ளிட்டவை) மற்றும் உலகளாவிய நிதி வலையமைப்புகள் பெருமளவில் வளர்ந்தன.

இக்கால கட்டத்தில் இந்தியாவில் ஆயிரக்கணக்கான புதிய தன்னார்வ அமைப்புகள் பதிவுசெய்யப்பட்டன. அதாவது, குழந்தைகள் நலன், பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல், மனித உரிமைகள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், பேரிடர் நிவாரணம் என பன்முகத் துறைகளில் தன்னார்வ அமைப்புகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ல் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நிகழ்வும், 2008 ஆம் அண்டு நவம்பர் 26 ல் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குலும், உலக அளவில் பயங்கரவாதத்திற்கான நிதி உதவி (Terrorist Financining) , பண மோசடி (Money Laundering) மற்றும் நாடுகளுக்கு இடையிலான நிதி பரிவர்த்தனைகள் (Cross-border Financial Transctions) குறித்த கண்காணிப்பு அதிகரிக்க வழிவகுத்தது.  வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் KYC உள்ளிட்ட கண்காணிப்பு நடைமுறைகள் வலுப்படுத்தப்பட்டன.

இந்தச் சூழலில் சூழலில் இந்தியாவும் பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA – 2002), வங்கியில் KYC விதிமுறைகள், வங்கி கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் நடவடிக்கை எடுத்தது.

இந்த புதிய நிலைமையை எதிர்கொள்ளும் நிலையில்  1976 ஆம் ஆண்டு வெளிநாட்டு நிதிச் (ஒழுங்குமுறை) சட்டம் இல்லை. அந்தச் சட்டத்தில் போதாமை இருந்தது. ஆகவே, இந்த சட்டம் நியாயமானதே!

புதிய வெளிநாட்டு நிதிச் (ஒழுங்குமுறை) சட்டம், 2010

இப்படியான சூழலில் 1976 ஆம் ஆண்டுச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக புதிய சட்டம் ஒன்றை அரசு பாராளமன்றத்தில் நிறைவேற்றியது. அதுவே வெளிநாட்டு நிதிச் (ஒழுங்குமுறை) சட்டம், 2010 ஆகும்.

இந்தச் சட்டத்தில் தான் முதல்முறையாக, பதிவை புதுப்பிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டது. அதாவது இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் அமைப்புகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுபிக்கவேண்டும்.

அதுமட்டுமல்லாது எந்நேரமும் பதிவை ரத்துசெய்யக் கூடிய அதிகாரத்தையும் 2010 ஆம் ஆண்டு சட்டம் ஒன்றிய அரசுக்கு வழங்கியது. மேலும் பதிவு செய்வதற்கான தகுதி மற்றும் நிபந்தனைகளைக் கடுமையாக்கியது.

2010ஆம் ஆண்டு சட்டத்திற்கு முன் வெளிநாட்டில் இருந்து பெரும் நிதியில் நிர்வாக செலவுக்கு எந்த வரம்பும் இல்லை. ஆனால்  2010ஆம் ஆண்டு சட்டம்,  வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் தன்னார்வ அமைப்புகள்  50 விழுக்காட்டிற்கு மேல் நிர்வாக  செலவு செய்யக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விதித்தது.

2010 ஆம் ஆண்டு சட்டத்தின் நோக்கங்கள்; 

இந்த 2010 ஆம் ஆண்டுச் சட்டம் இரண்டு நோக்கங்களைக் குறிப்பிடுகிறது.

ஓன்று, தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் வெளிநாட்டு நிதிப் பெறுவதையும் அல்லது பயன்படுத்துவதையும் முறைப்படுத்துகிறது.

இரண்டு, தேசிய நலனுக்கு எதிராக வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவதை தடைசெய்தது.

வெளிநாட்டு நிதிச் (ஒழுங்குமுறை) சட்டம், 2010-த்தில் பாஜக அரசு செய்த தொடர் திருத்தங்கள்; 

2010 ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 2016, 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில்  திருத்தங்களைச் செய்தது,பாஜக அரசு.

இதன் மூலம் வெளிநாட்டு நிதி பெறுவதில் மிகப் பெரும் சிக்கல்களை தன்னார்வ நிறுவனங்கள் எதிர்கொண்டன. வெளிநாட்டு நிதிப் பெறும் தன்னார்வ அமைப்புகளை செயலிழக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.

கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் 

 

தன்னார்வ அமைப்புகளில் கணிசமானவை கிறிஸ்துவர்கள் நடத்தி வந்தவை. இந்த அமைப்புகள் மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் போன்றவைகளை  விளிம்பு நிலை மக்களுக்காக நடத்துகிறது. இதற்காக வெளிநாட்டு நிதியையும் பெறுகிறது. எடுத்துக்காட்டாக அன்னை தெரசா பெயரில் உள்ள தன்னார்வ அமைப்பு விளிம்பு நிலை மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது. இது போன்ற தன்னார்வ கிறிஸ்த்துவ அமைப்புகளின் மேல் மதமாற்றம் செய்வதாக வதந்தியைப் பரப்பி தாக்குதல் தொடுக்கும் வகையில் இந்த தொடர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கடுமையான 2020ஆம் ஆண்டு திருத்தம்;

2020 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட திருத்தம், வெளிநாட்டு நிதி பெறும் தன்னார்வ அமைப்புகள் புது தில்லியில் உள்ள பாரத ஸடேட் வங்கியின் பிரதான கிளை மூலம் மட்டுமே  வெளிநாட்டு நிதி பெறவேண்டுமென்ற மிக கடுமையான நிபந்தனையை விதித்தது.

இதற்குமுன் நிதிப் பெறும் தன்னார்வ அமைப்புகள் எங்கு செயல்படுகின்றதோ அங்குள்ள வங்கிகளின் மூலம் நிதியைப் பெற்றன. ஆனால் அது இனி சாத்தியம் இல்லை. இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தன்னார்வ அமைப்புகள் வெளிநாட்டு நிதியை புது தில்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையின் மூலமே பெறவேண்டும் என்ற புதிய நிலையை உண்டாக்கியது இந்த 2020ஆம் ஆண்டு திருத்தம்.

அதனால் குறிப்பாக சிறிய தன்னார்வ அமைப்புகள், அறக்கட்டளைகள் செயல்படுவது மிகவும் சிரமத்திற்கு உள்ளானது.

2026 ஆம் ஆண்டு திருத்த மசோதா

2010 ஆம் ஆண்டு வெளிநாட்டு நிதிச் (ஒழுங்குமுறை) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில் 2026 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 19 ஆம் நாளன்று ஒன்றிய உள்துறை அமைச்சரால் மக்களவையில் வெளிநாட்டு நிதிச் (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, -2026 அறிமுகப்படுத்தப்பட்டது.

தன்னார்வ அமைப்பின் சொத்துக்கள் பறிமுதல் 

2026 திருத்த சட்டத்தில், வெளிநாட்டு நிதிச் (ஒழுங்குமுறை) சட்டம் 2010ல்  புதிய அத்தியாயம் IIIA- வை இந்த மசோதா சேர்க்கிறது.

இந்தப் புதிய அத்தியாயம் IIIA, விளிம்பு நிலை மக்களுக்காக செயல்படும் தன்னார்வ அமைப்புகளின் சொத்துகளை ஒன்றிய அரசு கையகப்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது.

கீழ்கண்ட மூன்று நிகழ்வுகளில், தன்னார்வ அமைப்புகளின் சொத்துக்களை ஒன்றிய அரசு கையகப்படுத்தும் அதிகாரத்தை இந்த புதிய அத்தியாயம் வழங்குகிறது.

# பதிவு ரத்து செய்யப்படுவதன் மூலம் சொத்துக்களை பறிமுதல் செய்தல்.

# பதிவு புதுப்பிக்கப்படாமல் காலாவதியானால், சொத்துக்களை பறிமுதல் செய்தல்.

# ‘வெளிநாட்டு நிதி வேண்டாம்’ என்று தன்னார்வ அமைப்பு பதிவை ஒப்படைத்தால், அந்த அமைப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்தல்.

சொத்துக்கள் தானாகவே (Automatic) ஒன்றிய அரசின் கைக்கு மாறுதல் 

பதிவு ரத்து செய்யப்பட்டாலோ பதிவை புதுப்பிக்க தவறினாலோ அல்லது தன்னார்வ அமைப்புகளே பதிவை ஒப்படைத்தாலோ, அந்த அமைப்புகளின் சொத்துக்கள் தானாகவே ஒன்றிய அரசு நியமிக்கபட்ட அதிகாரியிடம் (Desiginated Authority) சென்று விடும்.

நன்றி; ஜனசக்தி

எந்த அறிவிப்பும், விசாரணையுமின்றி,  தன்னார்வ அமைப்பின் சொத்தை ஒன்றிய அரசு கையகப்படுத்தும். சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்ட ஆணை இந்த தன்னார்வ அமைப்புகளுக்கு  கிடைத்த பின்னரே, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவரம் இந்த அமைப்புகளுக்கு தெரிய வரும்.

ஒரு சொத்து இந்திய நிதி, வெளிநாட்டு நிதி இரன்டும் கலந்து வாங்கப்பட்டு இருந்தாலும், அந்த தன்னார்வ அமைப்பின் முழு சொத்தையும் ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளும்.

பறிமுதல் செய்யபட்ட சொத்தில் எந்த பகுதி இந்திய பணத்தில் வாங்கப்பட்டது என்பதை தொண்டு நிறுவனமே ஆதாரங்களுடன் நிருபிக்க வேண்டும். அப்போது தான் இந்திய பணத்தால் வாங்கப்பட்ட சொத்தின் பகுதி கிடைக்கும்.

பிரிக்க முடியாத சொத்துக்களில் சிக்கல்; 

கட்டடங்கள் போன்ற சொத்துக்களில் எந்த செங்கல் இந்திய பணத்தில் கட்டப்பட்டது என்பதை  நிரூபிப்பது சாத்தியமில்லை. இத் தருணங்களில் முழுச் சொத்தையும் ஒன்றிய அரசே எடுத்து கொள்ளும்.

எடுத்துக்காட்டு: 100 ஆண்டு பழைமையான ஒரு பள்ளி, எழுத்தர் செய்த தவறு காரணமாக பதிவை புதுப்பிக்கும் தேதியை தவற விட்டால் அதன் சொத்துக்கள் ஒன்றிய அரசால் பறிமுதல் செய்யப்படும். இந்திய நிதியால் உருவான சொத்துக்களை தனியாக நிருபிக்க முடியாவிட்டால் அந்த 100 ஆண்டுகால பழமையான பள்ளியின் சொத்துக்கள் முழுவதையும் அந்த தன்னார்வ அமைப்பு நிரந்தரமாக இழக்க நேரிடும். நியமிக்கப்பட்ட அதிகாரி (Desiginated Authority) அந்த சொத்தை ஏலம் விட்டு ஒன்றிய அரசின் கணக்கில் சேர்க்க முடியும். அல்லது ஒன்றிய அரசுக்கு சொத்தை கை மாற்றிவிடுவார்.

பொதுநலன் கருதி பதிவு ரத்து;

பொது நலன் கருதி அவசியம் எனக் கருதினால், ஒன்றிய அரசு ஒரு தொண்டு நிறுவனத்தின் பதிவை ரத்து செய்யலாம் என்று இந்த திருத்த மசோதா ஒன்றிய அரசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது.

ஆனால் பொதுநலன் என்ற சொல், பரந்த அதிகாரத்தையும் தன்னிச்சையாக செயல்படும் வாய்ப்பையும் தருகிறது.

பொதுநலன் என்பது பற்றி ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. பொது நலன் என்பது விளக்கப்படாத நிலையில், இந்த திருத்த மசோதா  சட்டமானால் இது தவறாக பயன்படுத்தவே வாய்ப்புகள் அதிகமாகும். பொதுநலன் என்பதன் பெயரால் ஒன்றிய அரசு தன்னார்வ அமைப்புகளின் சொத்தை அபகரிக்கும்.

நிர்வாக செலவு 50 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக குறைப்பு

2026 ஆம் ஆண்டு திருத்த மசோதா, தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து பெரும் நிதியில் நிர்வாக செலவுக்காக இனி 20 விழக்காடு தான் செலவு செய்ய வேண்டும் என்ற வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே இருந்த 50 விழுக்காடு என்பது 20 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 20 விழுக்காட்டிற்கு மேல் செலவு இருக்குமானால், பதிவு ரத்தாகும். சொத்து பறிபோகும்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானம்.

எனவே தான், இந்த திருத்த மசோதா கடுமையாக அனைத்து தரப்பாலும் எதிர்க்கப்படுகிறது. இச்சமயத்தில் 11. 08. 2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாசக தவிர்த்து அனைத்து கட்சிகளால் இந்த திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளாலும், தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றிய நிலையிலும், இந்தியா முழுவதும் இந்த திருத்த மசோதாவிற்கு ஏற்பட்ட எதிர்ப்பாலும், இந்த மசோதாவானது கூட்டு பாராளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு 12.08.2026 அன்று அனுப்பப்பட்டுள்ளது.

எனவே இந்த மசோதா20-07-2026 முதல் 13-08-2026 வரை நடைபெற்ற   மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சட்டமாக நிறைவேறாமல் தற்காலிகமான நிம்மதியை அளித்துள்ளது.

பாராளுமன்ற குழுவின் பரிசீலனைக்குப் பின்னர் அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் இந்த திருத்த மசோதாவில் சில திருத்தங்களைச் செய்து பாசக அரசு சட்டம் இயற்றிவிடும். ஏனெனில், சட்டம் இயற்றுவதற்கான எண்ணிக்கை பாசக அரசிடம் உள்ளது.

விளிம்பு நிலை மக்கள் பாதிப்பு 

இந்த மசோதா சட்டமானால், வெளிநாட்டு நிதி மற்றும் ஆதரவைச் சார்ந்திருக்கும் அமைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படும்.  குறிப்பாக சிறிய  மற்றும் நடுத்தர அளவிலான தொண்டு நிறுவனங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.

2026ஆம் ஆண்டு  திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி சென்னயில் மாநாடு

இந்த சூழலில் பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்ட அரசமைப்பு சட்ட பாதுகாப்பு இயக்கம், 21-08-2026 அன்று சென்னையில் YMCA மைதானத்தில் மாலை 4 முதல் 8 மணி வரை அரசமைப்பு சட்ட மாநாடு நடத்துகிறது.

2026ஆம் ஆண்டு  திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோருவது இந்த மாநாட்டின் மைய நோக்கங்களில் ஒன்று.

உச்சநீதிமன்றம் சுயேச்சை அமைப்பாக செயல்பட வேண்டும் என்று பணிக் காலத்திலேயே உரக்க குரல் கொடுத்த  ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், தொடர்ந்து அனைத்து மக்கள் பிரச்சனைகளை  THE WIRE  -இணைய ஊடகத்தில் பேசும் இணைய ஊடகத்தின் நிறுவனர் ஆசிரியர்  சித்தார்த் வரதராசன், நாடறிந்த நடிகர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் பிரகாஷ் ராஜ் அவர்களும், அரசமைப்பு சட்ட பாதுகாப்பு இயக்க நிர்வாகிகளும் மற்றும் பல முக்கிய ஆளுமைகளும் இந்த மாநாட்டில் பேச உள்ளனர்.

2026 ஆம் ஆண்டு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெரும் வகையில் இந்த மாநாடு வெற்றி பெற அனைத்து மக்களும் ஆதரவு தர கேட்டுக் கொள்கிறோம்.

ஹரிபரந்தாமன்

மேனாள் நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றம்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time