ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே…!

-சாவித்திரி கண்ணன்

பிரதமர் மோடியின் சுதந்திர உரை தான் கல்வித் துறையின் சுற்றறிக்கையாக தமிழ்நாட்டில் எதிரொளித்துள்ளது!

பிரதமர் மோடி சொன்னதைத் தான் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் சிரமேற்கொண்டு நடைமுறைப்படுத்திக் கொண்டுள்ளார்! முதல்வர் விஜய் மெளனமாக வேடிக்கை பார்க்கிறார்;

இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆயுதம் தாங்கிய நக்சலிசம் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால், அதனுடைய சித்தாந்த மற்றும் அறிவுசார் ஆதரவாளர்களான திமாகி நக்சல்(Dimagi Naxals / Intellectual Naxals – மூளை வழி நக்சல்கள்) சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். சிந்தனை மற்றும் சித்தாந்த ரீதியில் சமுதாயத்தைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயல்பவர்கள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அவர்களை இனம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும். சிவப்பு பயங்கரவாதம் எனப்படும் இந்த திமாகி நக்சல்களை அடையாளம் கண்டு சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியின் பேச்சு நிதானமற்றது. கொடூர  தேர்வு முறைக்கும், வினாத்தாள் கசிவு கோல்மால்களுக்கும், கல்வியை பெரு வணிகமாக்குவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள் போராடுவதை நக்சல் சிந்தனையாளர்கள் என முத்திரை குத்தி அழிக்கத் துடிப்பது ஏற்க முடியாததாகும்.

ஆனால் இதைத் தான் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் மு.சாய்குமார் தலைமை செயலகத்தில் இருந்து தன் சுற்றறிக்கை வாயிலாக இங்கே அமல்படுத்தி உள்ளார்.

அதுவும் மிகவும் உடனடியாக செய்ய வேண்டியது எனக் கவனப்படுத்தி உள்ளார். மாணவர்கள் போராட்டங்கள் ஓய்ந்து இயல்பு நிலை திரும்பி சில நாட்கள் கடந்த நிலையில், இப்படி ஒரு சர்குலர் பிரதமர் உரையை தயாரித்த பிரதமர் அலுவலகத்தில் இருந்து முன் கூட்டியே மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

டெல்லி தலைமைக்கு அடி பணிந்தே பழக்கப்பட்டவரான திரு. சாய்குமார் அதிரடி வேகம் காட்டி  இடதுசாரி மாணவர்கள், கரப்பான் ஜனதா கட்சி மாணவர்கள் ஆகியோரை காவல்துறை உள்ளிட்ட நிர்வாக அமைப்புகளின் ஆதரவை பெற்று அடக்குங்கள் என கட்டளையிட்டுள்ளார்.

இப்படி ஒரு சுற்றறிக்கையை 14 ஆம் தேதி அனுப்புவது குறித்து முதலமைச்சர் விஜய்யிடம் அவர் கலந்து பேசினாரா? என்பது தெரியவில்லை. அதே சமயம் இந்த சுற்றறிக்கையின் நகலை தலைமை செயலாளர் முதலமைச்சர் விஜய் கவனத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்லாமல் அனுப்ப முடியாது.

கல்வித் துறையின் இணைச் செயலாளர் சுற்றறிக்கை ஆகஸ்ட் 17 ந்தேதி அனுப்பட்டதாகும். சட்டசபையில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த சுற்றறிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றே தான் பேசுவதாக குறிப்பிட்டு கல்வித் துறை அதிகாரியின் சுற்றறிக்கையில் சில வாசகங்கள் தவறாக இடம் பெற்றதாகவும், அவர்கள் அதை உணர்ந்து பின்னர் அதை திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் ஒரு பொய்யான தகவலைக் கூறினார். இதை முதலமைச்சர் விஜய்யும்  தன் அமைதியின் மூலம் ஆமோதித்தார்.

ஆனால், முதலமைச்சர் விஜய்க்கு நன்கு தெரியும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கையைத் தான் இந்த கல்வி அதிகாரி உள்வாங்கி பல்கலைச் கழங்களுக்கு அனுப்பி உள்ளார் என்று!

இதைவிடக் கொடுமை, இந்த சர்க்குலர் திரும்ப பெறப்பட்டுவிட்டது என உயர்கல்வி அமைச்சர் கூறும் அந்த நேரத்தில் அந்த சர்க்குலர் தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள் கைகளில் சேர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஆம், நேற்று இந்த சர்க்குலரை ஒரு பக்கம் தமிழக அரசு கல்லூரி முதல்வர்களுக்கு விநியோகித்துக் கொண்டே, மறுபக்கம் வெகு வினயமாக நாங்கள் மாணவர்கள் மாணவர்களின் நியாயமான உரிமைகளை மதிக்கிறோம் என வேஷம் போடுகிறார், தவெக அரசின் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்.

அதாவது மத்தியில் உள்ள பாஜக அரசின் அரசியல் உள் நோக்கத்திற்கு  உடன்பட்டு அதே அரசியல் நிலைபாட்டை அப்படியே  கல்வித் துறை சுற்றறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளதானதற்கு அதிகாரிகளை கண்டிக்கவில்லை, இந்த ஆட்சியாளர்கள். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த – ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கக் கூடிய – மேற்படி சம்பவத்தில் முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து வருத்தமோ, விளக்கமோ எதுவுமில்லை என்றால், அவர் அதிகாரிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மை என்பதாகவே பொதுவெளியில் புரிந்து கொள்ளப்படுவார்.

கடந்த திமுக ஆட்சியிலும் இது போல மத்திய அரசின் ஆதிக்கம் அதிகாரிகள் வழியே தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு கல்வித் துறையே காவிமயமானது. இது குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட முறை நான் கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளேன். தேசிய கல்வி கொள்கை அமலாக்கம், கல்வி தொலைகாட்சிக்கு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் முரளியை சி.இ.ஒவாக நியமித்தது. சுதா சேஷய்யனை அன்றைய ஆளுனர் ரவி எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அடங்கிப் போனது,முதலமைச்சர் தலவைராக இருக்கும் செம்மொழி ஆய்வு மையத்தில் துணைத் தலைவரான சுதா சேஷய்யன் கற்பனை புனைவான அகத்தியர் மாநாடு நடத்தி சனாதன கருத்துக்களுக்கு வலுவூட்டியது, பலகலைக் கழக துணைவேந்தர்களை அழைத்து கவர்னர் தன்னிச்சையாக மாநாடுகள் நடத்தி  முழு அதிகாரத்தையும் கையில் எடுத்து ஆட்டுவித்த போது  அமைதி காத்தது.. என சொல்லிக் கொண்டே போகலாம்.

அதிமுகவினர் மட்டும் தான் கொத்தடிமை என 2021 வரை அப்பாவியாக நம்பி, திமுக தலைவரை வியந்தோதிய அப்பாவிகளில் நானும் ஒருவன். ஆனால், அன்றைய முதல்வர் ஸ்டாலின் மத்திய பாஜக அரசை எதிர்ப்பது போல் பாவனை காட்டி, அதிமுகவை விஞ்சும் வகையில் அடிமையாக இருந்ததை அறிய வந்த போது, அதிர்ந்தது தமிழ்நாடு. ஸ்டாலினின் வீழ்ச்சிக்கு இதுவே காரணம்.

திண்டுக்கல் குஜிலியன்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி அவர்களின் சட்டவிரோத சர்வாதிகார தோரணையிலான சுற்றறிக்கையின் பின்புலத்திலும் மாவட்ட ஆட்சியர், மாநிலத் தலைமை செயலாளர் ஆகியோர் இருந்தே ஆக வேண்டும். அதிகாரிகளின் இத்தகைய செயல்பாடுகளுக்கு ஆட்சியாளர்களே பொறுப்பு.

அதிமுக, திமுக ஆட்சிகளின் வழியிலேயே பாஜகவோடு ஒத்திசைந்து செயல்படுவதாக விஜய் சென்று கொண்டிருக்கிறார் என்பது இந்த சம்பவத்தின் வழியே அறிய முடிகிறது. பாஜகவிற்கு பணிந்து செல்லும் அடிமைகளை தமிழகம் தாங்கி பிடிக்காது. வீழ்த்தும்.

இந்தச் சூழல்கள் தொடர்ந்தால் விஜய்யின் வீழ்ச்சி உறுதி.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time