இன்று சென்னை டே வாம்!
மாநகரின் சில பகுதிகளில் கொண்டாடிக் களிக்கிறார்கள்.!
யாருக்காக இந்தக் கொண்டாட்டங்கள்…?
இந்த மாநகரத்தின் பெயரிலும் தமிழ் இல்லை. பேச்சு வழக்கிலும் தமிழ் இல்லை, கற்கும் கல்வியிலும் தமிழ் இல்லை, காணும் நிர்வாகங்களிலும் தமிழ் இல்லை. நீதிமன்றங்களிலும் தமிழ் இல்லை!
இங்கே தமிழ் என்பது அரசியல் கட்சிகளுக்கு உணர்ச்சிகளை தூண்டி, ஆதாயங்களை அறுவடை செய்யும் பிழைப்புக்கான ஆயுதம் மட்டுமே.
அதைக் கடந்து நடைமுறையில் ஆட்சி நிர்வாகத்தில், அடுத்தடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்துச் செல்வதில் சரியான திட்டமிடலோ, வழிகாட்டலோ இவர்களிடம் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
இன்றைய சென்னை நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இந்த சென்னை பெருநகர உருவாக்கம் தொடர்பான அரிய கண்காட்சியை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கண்காட்சியை பார்வையிட்ட தமிழ் மக்கள், ’நாம் லண்டனில் உள்ளோமா? அல்லது நியூயார்க்கில் உள்ளோமோ?’ என திகைக்கும் அளவுக்கு முழுக்க, முழுக்க ஆங்கில விளக்கங்களுடன் கண்காட்சி உள்ளது. திரும்பிய திசையெங்கும் ஆங்கிலத்திலேயே அனைத்து விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
தமிழை சுத்தமாக துடைதெறிந்துவிட்டு, தமிழ் பூர்வகுடிகளின் மாநகரம் குறித்த கண்காட்சியை யாருக்காக இவர்கள் நடத்துகிறார்கள் எனத் தெரியவில்லை.

இவர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி களிக்கும் ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியில் தான் பழந்தமிழ் இலக்கியங்களுக்கு புத்துயிர்ப்பு கிடைத்தது. உண்மையிலேயே தமிழை அந்த ஆங்கிலேயர்கள் உயிருக்குயிராய் நேசித்து ஆய்வுகள் செய்தனர்.
ஆனால், ஆங்கில கற்ற நம்மவர்களோ, தமிழை பேச்சு வழக்கிலும் பயன்பாட்டு வடிவங்களிலும் எப்படியெல்லாம் தவிர்த்து வருகின்றனர் என்பதை விளக்கவே இந்தப் பதிவு.
1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி, கிழக்கிந்திய கம்பெனியினர், அன்று மீன்பிடி கிராமமாக இருந்த தொண்டை மண்டலத்தின் நிலப்பரப்பை வேங்கடபதி நாயுடு என்ற பாளையக்காரரிடம் இருந்து வாங்கினர். அந்தப் பாளையக்காரரின் தந்தை பெயர் சென்னப்ப நாயுடு. அந்தப் பெயரே அவரின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த நிலப்பகுதிக்கு சென்னப் பட்டிணம் என்ற பெயரை கிழக்கிந்திய கம்பெனியார் சூட்டினார்கள். ஆன போதிலும் இந்தப் பகுதியை பிரிட்டிஷார் மெட்ராஸ் என்றே அழைத்தனர். இங்கு வாழ்ந்த மக்களும் மதராஸப் பட்டிணம் என்றே அழைத்தனர். நான் சிறுவனாக இருந்த போது மெட்ராஸ் என்று மட்டுமே இந்த மாநகரத்தை அறிந்திருந்தேன்.
நாயக்கர் காலத்தில் இங்கு வந்து குடியேறிய தெலுங்கர்கள் இந்த சென்னையை சுதந்திரத்திற்குப் பிறகு நிரந்தரமாக தங்களுடையதாக்கி ஆந்திரப் பகுதியோடு இணைக்க முயன்றனர். கிட்டதட்ட அந்த முயற்சி வெற்றிக் கொள்ளும் சூழ்நிலையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் இயக்கமான தமிழரசுக் கழகம் சென்னையை தமிழ் நாட்டில் சேர்க்க பெரும் போராட்டங்களை நடத்தியது. சிலம்புச் செல்வர் ம.பொ.சியார் சென்னை முதல்வரான ராஜாஜிக்கு சென்னையை தமிழ்நாட்டோடு சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை, நியாயத்தை விளக்கி சொல்லவும் ராஜாஜி அவர்கள் பிரதமர் நேருவுக்கு கடிதம் எழுதி விளக்கி புரிய வைத்து மதராஸ் பட்டிணத்தை தமிழ்நாட்டுடன் இணைத்தார்.
பல்லவ மன்னர்கள் வட தமிழகத்தை ஆண்ட போது இந்த நிலப்பரப்பு தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பல்லவபுரத்தின் ஒரு பகுதியான இந்த பெரும் நிலப்பரப்பு மயிலாப்பூர், திருவல்லிக்கேணி… உள்ளிட்ட இன்றைய பகுதிகள் அனைத்தும் கிராமங்களாகத் தான் இருந்துள்ளன. இந்த மொத்தப் பகுதியையும் புலியூர் கோட்டம் என பல்லவர் காலத்தில் அழைத்துள்ளனர்.
ஆக, சென்னப் பட்டிணம், மதராஸப் பட்டிணம் என்றழைப்படும் இந்த நிலப்பரப்பின் உண்மையான தமிழ்ப் பெயர் புலியூர் கோட்டம் என்பதே தமிழர்கள் பலருக்கு தெரியாது.

இந்த கிராமங்களை ஒருங்கிணைத்து இந்த நிலப்பகுதியில் பெரும் துறைமுகத்தை ஏற்படுத்தி, ஒரு மாநகரமாக இந்த நிலப்பரப்பை மாற்றிய ஆங்கிலேயர்கள் தான் தமிழின் தொன்மையையும் தொல் தமிழ் நாகரீகத்தையும், திருக்குறள் முதலான பொக்கிஷ நூல்களையும் மீட்டெடுத்து தந்தனர். மராட்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள் காலத்தில் பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழுக்கு புத்துயிர் தந்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சி கால தமிழ் ஆய்வாளர்கள்.
ஜி.யு.போப் அவர்கள் திருக்குறள், திருவாசகம் மற்றும் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்தார்.
இராபர்ட் கால்டுவெல் அவர்களோ “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற மகத்தான ஆய்வு நூல் எழுதி நமது மொழியின் தொன்மையை உலகத்திற்கே பறைசாற்றி தமிழ் ஒரு செம்மொழி என்றார்.
எல்லீஸ் பிரபுவோ மற்ற இந்திய மொழிகள் போல சஸ்கிருத கலப்பு கொண்டதல்ல. தமிழ்மொழி சமஸ்கிருத தொடர்பின்றி தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற ஒப்பற்ற மொழி என நிறுவி நமக்கு பெருமை சேர்த்தார்.
பெர்சிவால் பிரபுவோ தமிழ் நூற்றுக்கும் மேற்பட்ட அகராதிகளை தேடிக் கண்டடைந்து தொகுத்து தமிழுக்கு பெருமை சேர்த்தார்.
இந்த ஆங்கிலேயப் பேரறிஞர்களால் தான் தமிழ் இன்று அழியா கீர்த்தி நிலையை எய்தி நிற்கிறது.
ஆனால், மெத்தப்படித்த சில தமிழர்களோ தாங்கள் ஆங்கிலேயர்களின் வம்சா வழியாகத் தங்களைக் கருதி, எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம் என கல்வி, நிர்வாகம் அனைத்திலும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் கோலோச்ச செய்கின்றனர். தனியார் கல்வி நிறுவனங்கள் தமிழை கற்றுத் தர மறுக்கின்றன.

அரசு, மற்றும் தனியார் அலுவலங்களில் ஆங்கிலத்தில் தான் தகவல் பரிமாற்றங்கள் செய்கின்றனர். தமிழே அறியாத தலைமுறைகள் உருவாகி வருகின்றனர். தமிழ் இல்லாமல் வெறும் ஆங்கிலத்தால் எழுதப்படும் நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகைகள் நம் அடையாளங்கள் துடைத்தழிக்கப்பட்டு வருவதை காட்டுகின்றன. என் தாய் மொழி தமிழே உனக்கு இந்த நிலத்தில் இடம் இல்லையா? நெஞ்சம் பதைக்கிறது. மெல்லத் தமிழ் இனி சாகுமோ…?
அமைச்சர் ராஜ்மோகன் இந்த சென்னை நாள் புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொண்ட வகையில், தமிழ்ப் பற்றாளரான அவர் எப்படி இது போன்ற நிகழ்வுகளை அங்கீகரிக்கிறார் எனப் புரியவில்லை.
தமிழை மீட்டெடுக்க வேண்டும். பயன்பாட்டு மொழியாக்க வேண்டும். நமது தொன்மை இலக்கியங்களை, நவீன இலக்கியங்களை வாசித்து தன்னை நெறிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை அடுத்தடுத்த தலைமுறைகளும் பெற வேண்டும்.
சாவித்திரி கண்ணன்


























அருமையான பதிவு.சாவித்திரி கண்ணன் அவர்களுக்கு நன்றி.
இப்போது தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது பார்த்தாலே நடுக்கம் வருது தமிழின் இன்றய நிலைமைக்கு எல்லோரும் காரணம் எழுத்தாளர்கள் ஆசிரியர்கள் அரசியல்வாதிகள் எல்லோரும். சரியான செயல் திட்டம் மட்டுமே இதற்க்கு தீர்வு தமிழ் இனி மெல்ல அல்ல சீக்கிரம் சாகும்
இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஆங்கிலத்தை அரியணை ஏற்றி விட்டனர். 1960 களில் என்எச் 7 என்எச் 45 சந்திக்கும் திண்டுக்கல் தொலைவு காட்டும் பலகையில் மெட்ராஸ் 259 மைல் என்று தான் இருந்தது. தமிழ்த்தாயின் மூத்தகுடிகள் மெட்ராஸ் ஹைகோர்ட் என்பதை தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என ஏன் மாற்ற முடியவில்லை? திருத்தணியும் சென்னையும் தமிழகத்துடன் இருக்க, ஐயா மபொசியும். ராஜாஜியும் தான் காரணம் என்று பாடநூல்களில் ஏன் எழுதவில்லை?
a valid argument