ஆந்த்ரோபிக் உள்ளிட்ட ஏஐ நிறுவனங்கள் பழைய, அரிய புத்தகங்களை லட்சக்கணக்கில் வாங்கி ஸ்கேன் செய்துவிட்டு அவற்றை மொத்தமாக அழித்து விடுவதன் பின்னே இருக்கும் கோர உண்மை வெளிவரத் துவங்கியுள்ளது. கடந்த கால கருவூலங்களான அரிய நூல்கள் வருங்கால தலைமுறையின் பார்வையில் இருந்தே மறைவதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன?;
ஏஐ நிறுவனங்கள் பழைய புத்தகங்களை ஏன் வாங்க வேண்டும்? அதன் பின் ஏன் அந்த புத்தகங்களை அழிக்க வேண்டும்? இந்த கேள்விகள் மூலம் தெரிய வரும் உண்மை திடுக்கிட வைக்கிறது.
செயற்கை நுண்ணறிவு என கொண்டாடப்பட்டாலும், உண்மையில் ஏஐ சேவைகளுக்கு பயிற்சி அளிக்க மனித உதவி தேவை. அதிலும் குறிப்பாக சாட்பாட்களை மையமாக கொண்ட ஜெனரேட்டிவ் ஏஐ செயல்பாட்டிற்கு மனித ஆக்கங்கள் தேவை.
விக்கிபீடியா கட்டுரைகள் துவங்கி, இணைய தரவுகள், புத்தகங்கள் உள்ளிட்டவை எல்லாம் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டே சாட்பாட்கள் பின்னே இருக்கும் மொழி மாதிரிகள் ( எல்.எல்.எம்) உருவாக்கப்பட்டுள்ளன.
புத்தகங்கள் கொண்டு ஏஐ சேவைகளுக்கு பயிற்சி அளிப்பதில், காப்புரிமை தொடர்பான விவாதம் முக்கியமாக அமைகிறது. ஏஐ பயிற்சிக்காக அனுமதி பெறாமல் நாவல்கள், புத்தகங்களை பயன்படுத்துவது காப்புரிமை மீறல் என எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் கொந்தளித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
ஏஐ பயிற்சிக்காக புத்தகங்களை பயன்படுத்துவது காப்புரிமை மீறாலாகாது, ’பேர் யூஸ்’ எனப்படும் நியாயமான பயன்பாட்டின் கீழ் வரும் என்பது ஏஐ நிறுவனங்களின் வாதம்.
காசு கொடுத்து புத்தகங்களை வாங்கி, டிஜிட்டல்மயமாக்கி ஏஐ சேவைகள் பயிற்சிக்காக பயன்படுத்துவது காப்புரிமை மீறலா? இல்லையா? எனும் கேள்விக்கு இன்னமும் தீர்மானமான பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஏஐ நிறுவனங்கள் கையை கட்டிக் கொண்டு சும்மாயிக்க விரும்பவில்லை. ஏஐ மாதிரிகளை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்க அவற்றுக்கு பயிற்சி அளிக்க தொடர்ந்து தகவல்கள்/ தரவுகள் தேவை. இணையத்தில் இருப்பவற்றை எல்லாம் பெரும்பாலும் உருவி எடுத்து விட்டதால், புதிய தரவுகள் தேவையை தீர்க்க பழைய, அரிய புத்தகங்கள் மீது ஏஐ நிறுவனங்கள் பார்வையை திருப்பியுள்ளன.

பழைய புத்தகங்கள் தகவல் பொக்கிஷங்கள். அதிலும் குறிப்பாக அரிய புத்தகங்கள் இன்னும் பொக்கிஷமானவை. எனவே ஏஐ நிறுவனங்கள் பழைய புத்தகங்களை டன் கணக்கில் கொள்முதல் செய்து ஏஐ பயிற்சிக்காக பயன்படுத்துகின்றன.
இந்த போக்கின் காரணமாக, உலகம் முழுவதும் பழைய அரிய புத்தகங்களுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது என்கின்றனர். பழைய புத்தக விற்பனை நிறுவனங்களுக்கு அண்மை மாதங்களில், திடிரென பெரிய அளவில் கொள்முதல் ஆர்டர்கள் குவிவதாகவும் தெரிய வந்துள்ளது.
இப்படி பழைய அரிய புத்தகங்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படுவது ஒருவிதத்தில் நல்ல செய்தியாக தோன்றலாம். ஆனால், இந்த புத்தகங்களுக்கு நேரும் கதி தான் திகைக்க வைக்கிறது. ஏனெனில் ஏஐ நிறுவனங்கள் இந்த புத்தகங்களை எல்லாம் டிஜிட்டல்யமமாக்கிய பின் அழித்துவிடுகின்றன.
புத்தகங்களை ஏன் அழிக்க வேண்டும் என கேட்கலாம். எல்லாம் காப்புரிமை தொடர்பான சட்ட சிக்கலை தவிர்ப்பதற்காக தான். ஆந்த்ரோபிக் நிறுவனம் மீதான காப்புரிமை வழக்கில், ஏஐ சேவைகள் பின்னே உள்ள எல்.எல்.எம் எனப்படும் மொழி மாதிரிகளுக்கு பயிற்சி அளிக்க புத்தகங்களை டிஜிட்டல் வடிவமாக்கி பயன்படுத்துவது காப்புரிமை மீறலின் கீழ வராது என தெரிவிக்கப்பட்டது. எனினும், இது சட்டப்பூர்வமாக பெறப்பட்ட புத்தகங்களுக்கே பொருந்தும். ஏஐ பயிற்சிக்காக ஆந்த்ரோபிக் நிறுவனம் இணையத்தில் இருந்து அனுமதி இல்லாமல் சேகரித்த லட்சக்கணக்கான புத்தகங்கள் தொடர்பான வழக்கு பகுதி தனியே விசாரிக்கப்பட்டது. இதில் நிறுவனம் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்து கொண்டு நஷ்ட ஈடு வழங்க ஒப்புக் கொண்டது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களில் தான் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின், பனாமா திட்டம் எனும் ரகசிய புக் ஸ்கேனிங் திட்டம் பற்றியும் அதற்காக பின்பற்றப்படும் அழி ஸ்கேனிங் (destructive scanning ) முறை பற்றியும் தெரிய வந்துள்ளது.
அழி ஸ்கேனிங் முறையில், ஏஐ பயிற்சிக்காக புத்தகங்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு கையாளப்படுகின்றன. அதே நேரத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட மூல புத்தகம் அழிக்கப்பட்டு விடுகிறது. அமெரிக்க காப்புரிமை சட்டத்தின் படி, புத்தகத்தை முறைப்படி வாங்கியவருக்கு அதை அழிக்கவும் உரிமை இருக்கிறது. எனவே புத்தகத்தை அழிப்பது என்பது சட்ட விரோதம் அல்ல.
புத்தகங்கள் கொண்டு ஏஐ மாதிரிகளுக்கு பயிற்சி அளிப்பது, ஸ்கேன் செய்யப்பட்ட வடிவத்தை மீண்டும் பகிரப்படாமல் அல்லது காட்சிப்படுத்தப்படாமல் இருப்பதால் அனுமதி பெறத் தேவையில்லாத நியாயமான பயன்பாட்டின் கீழ் வருகிறது என்பது நீதிமன்ற தீர்ப்பின் சாரம்சம்.
எனவே, புத்தகங்களை அழித்து விடுவதால், அதன் நகலை வைத்திருக்கும் கேள்வியோ, அதனால் காப்புரிமை மீறல் கேள்வியோ எழுவில்லை. அந்த்ரோபிக் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த முறையில் தான், பழைய அச்சில் இல்லாத அரிய புத்தகங்களை பயிற்சிக்கு பயன்படுத்தி அழித்து விடுகின்றன.
இந்த புத்தகங்களில் பெரும்பாலானவை, ஏஐ ஆக்கத்திறன் வசதி அறிமுகமான 2022 ம் ஆண்டுக்கு முந்தையவை. எனவே இவற்றை கொண்டு பயிற்சி அளிப்பது ஏஐ தரவு மாசு இல்லாத புதிய தகவல்களை கொண்டிருக்கும். ஆனால், காப்புரிமை சிக்கலில் இருந்து விடுபடவும், புத்தகங்களை வேகமாக ஸ்கேன் செய்யவும் அழி ஸ்கேனிங் முறையை பின்பற்றுகின்றன.
இதனால் அரிய புத்தகங்களின் மூல வடிவம் காணாமலே போகும் அபாயம் உள்ளது. மேலும், ஏஐ நிறுவனங்கள் அரிய புத்தகங்களுக்கான டிஜிட்டல் நூலகத்தை எல்லாம் உருவாக்கப்போவதில்லை. புத்தக தரவுகளை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள உள்ளன.
புத்தகங்களை அழிப்பது என்பதே பொறுத்துக் கொள்ள முடியாத விஷயம் என்பது ஒரு பக்கம் இருக்க, அரிய புத்தகங்கள் என வரும் போது, அவற்றின் மூல வடிவம் முழுவதுமாக மறைந்து போய்விடும் ஆபத்தும் இருக்கிறது. எனவே தான், புத்தக ஆர்வலர்களும், மனித அறிவின் வடிவமாக புத்தகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நினைப்பவர்களும் இந்த போக்கால் ஆவேசம் கொண்டுள்ளனர்.

சட்டச் சிக்கல் தவிர, ஏஐ நிறுவனங்கள் புத்தகங்களை அழிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, புத்தகம் பாதிக்கப்படாமல் ஸ்கேன் செய்வதை விட, அவற்றை பிரித்து ஸ்கேன் செய்வது செலவு குறைந்தது. மற்றொன்று, மூல புத்தகம் அழிக்கப்படும் போது அப்புத்தகம் போட்டி ஏஐ நிறுவனங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.
போட்டி நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல, மற்ற மனிதர்களுக்கும் இந்த புத்தகங்கள் கிடைக்காமல் போய்விடும். பழைய புத்தகங்களை எல்லாம் டிஜிட்டல்மயமாக்கி அவற்றை ஏஐ மூளைக்குள் சேமித்து வைப்பதால், மனித குல அறிவின் ஒரு பகுதி பொதுமக்களுக்கு கிடைக்காமல் லாப நோக்கிலான நிறுவனங்களின் ஏகபோக சொத்தாகிவிடும் அபாயமும் இதில் இருக்கிறது.
இப்போது உங்களுக்கும் ஏஐ நிறுவனங்கள் மீது கோபம் வரும். மனித குல அறிவை ஏஐ பயிற்சி எனும் பெயரில் தனியார் நிறுவனங்களின் கைகளில் முடக்கும் இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தோன்றலாம்.
வரும் மாதங்களில் இந்த பிரச்சனை மேலும் தீவிரமாகலாம்.
இந்த பின்னணியில் தான் இணைய நிழல் உலக நூலகமான அன்னாஸ் ஆர்கைவ் விடுத்துள்ள அழைப்பு முக்கியமாகிறது.
அன்னாஸ் ஆர்கைவ் கொஞ்சம் பிரச்சனைக்குரிய சேவை தான். மனித அறிவை தடையின்றி அனைவருக்கும் சாத்தியமாக்க வேண்டும் எனும் நோக்கம் கொண்ட அந்த நூலகம் காப்புரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் இலக்காகி வருகிறது.
ஆனால் காலத்தின் முரண், காப்புரிமை மீறல் விமர்சனத்திற்கு உள்ளான அன்னாஸ் ஆர்கைவ் இப்போது வருங்காலத்திற்கான மனித அறிவை பாதுகாப்பதற்கான பெரும் முயற்சியை முன்னெடுத்துள்ளது. ( புத்தகங்கள் டிஜிட்டல் வடிவில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் செயல்படும் இணையதளங்கள் நிழல் நூலகங்கள் என குறிப்பிடப்படுகின்றன. இவற்றின் நோக்கம் உயர்வானது என்றாலும், காப்புரிமை தொடர்பான சட்ட சிக்கல் கேள்விகள் இருக்கின்றன. இவற்றில் அன்னாஸ் ஆர்கைவ் (annas-archive) ஒன்று.
ஏஐ நிறுவனங்கள் பயிற்சிக்காக பழைய அரிய புத்தகங்களை மொத்தமாக கபளீகரம் செய்வதற்கு முன், அவற்றின் டிஜிட்டல் பிரதியை சேமித்து பாதுகாப்போம் என அன்னாஸ் ஆர்கைப் அறைகூவல் விடுத்துள்ளது. இதற்காக டிஜிட்டல்மயமாக்கப்பட பழைய புத்தகங்களை சமரிப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புத்தகங்களை டிஜிட்டல்மயமாக்குவது என்பது வேறு, டிஜிட்டல்மயமாக்கி அனைவரும் அணுக கூடிய வகையில் பாதுகாப்பது என்பது வேறு. ஏஐ நிறுவனங்களிடம் இருந்து பழைய புத்தகங்களை பாதுகாக்க அன்னாஸ் ஆர்கைவ் முற்படுத்துவது தான் நோக்குமும் இது தான்.
இந்த பழைய புத்தக சர்ச்சை ஏஐ நிறுவனங்களின் லாப நோக்கை வெளிப்படுத்துவதோடு, சர்ச்சைக்குரியதாக கருதப்படும் அன்னாஸ் ஆர்கைவ் போன்ற நிழல் நூலகங்களையும் புரிந்து கொள்ள உதவுகிறது.
அன்னாஸ் ஆர்கைவ் அழைப்பு: https://annas-archive.pk/blog/physical-destruction.html
– சைபர்சிம்மன்























Leave a Reply