ஆகஸ்டு 20 அன்று ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தொழிற்சாலைகள் குறித்த இரு வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இது தொழிலாளர்கள் உரிமைகள் நீர்த்துப் போகவும், முதலாளிகள் கை ஓங்கவும் எப்படியெல்லாம் துணை போகின்றது? அதற்கு என்னென்ன சமாதானங்கள் எல்லாம் தரப்படுகிறது; ஓர் அலசல்;
இதில் மெஜாரிட்டி தீர்ப்பாக – தலைமை நீதிபதி சூர்யகாந்த், சந்தீஷ் சந்திர சர்மா, திரு. அலோக் ஆராதே, திரு.விபுல் எம். பஞ்சோலி ஆகிய நான்கு நீதிபதிகள் ஒருவகையான தீர்ப்பையும், நீதிபதி. நாகரத்னா அவர்கள் இந்த பெரும்பான்மை தீர்ப்பிற்கெதிராக வேறுபட்ட தீர்ப்பையும் வழங்கி உள்ளார். மற்றுமுள்ள நீதிபதிகள், பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜாய்மாலா பக்சி தனித்தனியாக பெரும்பான்மை தீர்ப்பிற்கு தங்கள் ஆதரவை நல்கியுள்ளனர்.
வழக்கின் சாராம்சம் தான் என்ன ?
தொழிற்சாலை ( Industry) என்றால் என்ன?
எவையெல்லாம் தொழிற்சாலை என்ற வரையறைக்குள் வரும்?
என்பதற்கான ஒரு முக்கியம் வாய்ந்த தீர்ப்பை 1978-ம் ஆண்டு நீதியரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மற்றும் இராஜப்பாசம்பந்தப்பட்ட வழக்கில் கூறியது.
இந்த வரையறையை தீர்மானிக்க மூன்று சோதனைகளையும் அத் தீர்ப்பு கூறியது.
இந்திய தொழிற் தகராறு சட்டம் 1947 பிரிவு 2 (j) ன் படி (Industrial Disputes Act 1947, Sec. 2(j)).
# செயல்பாட்டில் தொடர்ந்து ஒரு நிறுவனம் இருக்குமானால்,
# ஒரு நிறுவனத்தில் பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இடையே கூட்டுறவு இருக்குமேயானால்,
# ஒரு நிறுவனம் பொருட்களை தயாரிப்பது மற்றும் அவற்றை வினியோகம் செய்வதில் ஈடுபடுமேயானால்..
இப்படிப்பட்ட நிறுவனங்கள் யாவும் தொழிற்சாலை என்று தீர்மானிக்கப்படும் என தீர்ப்பு வழங்கி இருந்தது.
மருத்துவமனைகள் முதல் அரசு அலுவலகங்கள் வரை அனைத்துமே இந்த விளக்கத்திற்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வரையறுத்ததால் இங்கு பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பணி பாதுகாப்பு மற்றும் அவர்களது சம்பளம் கேட்கும் உரிமைகள் ஆகியவற்றை இத்தீர்ப்பு உறுதி செய்தது எனலாம்.
இத்தகைய விளக்கத்தையும் இதனால் பணியாளர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பையும் கண்டு பலர் மகிழ்ந்தனர் ஆனால், முதலாளிகளின் கண்களை இத்தீர்ப்பு உறுத்தியது. 1991 -ற்கு பிறகு தனியார்மய, தாராளமய காலகட்டத்தில் இந்த விளக்கம் தொழிலாளர்களுக்கு மட்டுமே நன்மை செய்வதாக தொழிலதிபர்கள் குரலெழுப்ப தொடங்கினர். அன்றைய மத்திய அரசின் (காங்கிரஸ்) தலைமையும் இதனை மாற்ற சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
2017-ல் இவ்வழக்கை மீண்டும் உச்சநீதிமன்றம் கையிலெடுத்து ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு விசாரிக்க வேண்டும் எனக் கூறியது. அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச்-17 முதல், இவ்வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரித்து தற்பொழுது தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
இந்திய தொழிற் தகராறு சட்டம் 1947 என்பது , தொழில் உற்பத்தியை, உற்பத்தி திறனை பாதிக்காவண்ணம் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சட்டமாகும்.

தொழிலாளர் ஊதியம்,அவர்களின் வேலை நேரம், தகராறுகளை தீர்க்கும் விதம், சங்கம் அமைப்பதால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் ஏற்படும் விளைவுகளிலிருந்து பாதுகாப்பு
வேலையினின்று நீக்குதல் அல்லது மேனேஜ்மெண்ட்டார் அளிக்கும் தொல்லை ஆகியவற்றை எதிர்தோக்குதல் ஆகிய விடயங்களில் தொழிலாளர்களுக்கு சட்ட்படியான உரிமைகளை வரையறுப்பதே இச்சட்டத்தின் அடிப்படைக் கூறாகும்.
தொழிலகங்களுக்கு மட்டுமே தொழிற் தகராறு சட்டம் பொருந்துமாதலால் தொழிலகங்கள் என்றால் என்ன? அவற்றின் பொருளும் , வரையறையும் யாவை என தீர்மானிப்பது அவசியமாகிறது.
இதில் 1978-ம் ஆண்டு தீர்ப்பு 3 அம்சங்களை கருத்தில் கொண்டு தொழிலகங்களை வரையரை செய்தது என்றாலும் ஒரு நிறுவனத்தின் லாப நோக்கத்தை குறிப்பிடாவிட்டாலும் , இந்த அம்சத்தை வலியுறுத்தி அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களை தொழிற்கூடங்களாக கிருஷ்ணய்யர் தீர்ப்பு கருதவில்லை, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்திய தொழிற் தகராறு சட்டம் பாதுகாப்பளிக்காது என்ற நிலை உள்ளதை பலர் சுட்டி காட்டுகின்றனர்.
அது போன்றே அரசின் இறையாண்மை பணிகளும் விதிவிலக்கு பெறுவதை முன்னாள் தலைமை நீதிபதி ஒய்வி. சந்திர சூட் கேள்வி கேட்டுள்ளார். மற்றொரு நீதிபதியான எம் எச் பெக் அரசின் இறையாண்மை பணிகளுக்கு கட்டாயம் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.
தொழிற் தகராறு சட்டம் தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்குவதாக சில நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். இதே வழக்கில் 2005 ம் ஆண்டு பரிசீலனையில் நீதிபதி தர்மாதிகரி தொழில் தகராறு சட்டத்தை , தொழிலதிபர்களின் நலனை காப்பாற்றும் வகையிலும் விளக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
எனவே நீதிபதிகளின் மத்தியில் தொழில் தகராறு சட்டத்தை பற்றிய விளக்கத்தை கூறுவதில் ஒருமித்த கருத்துக்கள் இல்லை என்பது உண்மை. அதற்கும் மேலாக, மக்கள் நலன் சார்ந்த சட்டங்கள் பற்றியும் மக்கள் நலனை பற்றியும் நீதிமன்றங்களின் அணுகுமுறை எதிர்மறையாகி உள்ளதை நாம் காண்கிறோம்.

நீதிபதிகளின் இடையில் இத்தகைய கருத்து முரண்கள் இருப்பதும், பெரும்பாலான நீதிபதிகள் இன்றைய சூழலில் தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பை உறுதி செய்ய தயங்குவதையும் நாம் காணுகிறோம்.
சட்டங்கள் இயற்றும் பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகளோ, உயர் அதிகாரிகளோ சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் களையவோ, தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்வதையோ முயற்சிக்காமல் காலங்கடத்தி வந்தனர்.
ஆனால் கோவிட் பெருந்தொற்று காலத்தில் – பொது முடக்கத்தின் போது மோடி அரசு தொழில் சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் தொழில் தகராறு குறித்த சட்ட வரையறைகளையே முற்றிலும் மாற்றி அமைத்தது.
29 தொழிலாளர் சட்டங்களை நான்கு குறியீடுகளாக,
ஊதியங்கள் பற்றிய குறியீடு 2019,
தொழில் உறவுகள் குறியீடு 2020,
தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலைமைகள் குறியீடு 2020
சமூக பாதுகாப்பு குறியீடு 2020
ஆகியவற்றை மோடி அரசு சட்டமாக்கியது.
நாடாளுமன்றங்களில் இவை நிறைவேற்றப்பட்டாலும் இவற்றில் சில எதிர்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் உள்ள அரசுகளின் எதிர்ப்பால் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளன .
இச்சட்டங்களை எதிர்த்து அனைத்து தொழிலாளர் சங்கங்களும் – ஏறத்தாழ 30 கோடி தொழிலாளர்களை உள்ளடக்கிய சங்கங்களும் இணைந்து- இந்த ஆண்டு பிப்ரவரியில் பொது வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினர், அது மாபெரும் வெற்றியடைந்ததை நாமறிவோம்.

இதையொட்டி, வீட்டு வேலையாட்களுக்கு குறைந்தபட்ச ஊதியத் தொகையை நிர்ணயிக்க சட்ட வழிமுறைகளை அரசு இயற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு PIL தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், இந்நாட்டில் தொழில் முன்னேற்றம் ஏற்படாது இருப்பதற்கு காரணமே தொழிற்சங்கங்களின் செயல்களால் தான் என்று
கருத்து தெரிவித்தார் . வேலையில்லா இளைஞர்களை கரப்பான் பூச்சி என்று ஏளனம் செய்த அதே நீதிபதியான சூர்யகாந்த் தான் இந்த வழக்கிலும் முதலாளிகளுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கி உள்ளார்.
1978-ல் கூறப்பட்ட தீர்ப்பு (தொழிற்சாலைகள் யாவை என்பது குறித்த விளக்கம்) புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில் உறவுகள் குறியீடு 2020 க்கு பொருந்தாது எனவும், பழைய தீர்ப்புகளுக்கு காலத்திற்கேற்றபடி திருத்தங்கள் கொடுக்க வேண்டியுள்ளதால், இனி மேல் அந்த தீர்ப்பு முன்மாதிரியாக இருக்காது எனத் தீர்ப்பில் நீதிபதி சூர்யகாந்த் கூறியுள்ளார்.
ஆனால் ஏற்கனவே நிலவையிலுள்ள வழக்குகளுக்கு பழைய வியாக்கியானமே (தீர்ப்பே) பொருந்தும் என்பதை ‘சலுகையாகவும்’ நீதிபதி அறிவித்துள்ளார்.

ஆனால் இதை எதிர்த்த நீதிபதி நாகரத்னா , 1978ம் ஆண்டு தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், முன்னெப்போதையும் விட இந்த காலகட்டத்தில் தான் , தொழிற்சாலைகள் பற்றிய அனைத்தையும் உள்ளடக்கிய விளக்கம் தேவைப்படுகிறது என்றார். தனியார் மயம் என்பது அனைத்து துறைகளிலும் இன்று கோலோச்சுவதாலும், பெரும்பாலான பொதுத் துறைகள் தொடர்ந்து தனியாருக்கு கையளிக்கப்படுவதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க
தொழிற்சாலைகள் என்றால் எவை என்ற விளக்கத்தை மாற்றுவதை ஏற்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளார்.
சுமார் ஐம்பதாண்டுகளாக தொழிலாளர்களுக்கு அரண்போல விளங்கிய கிருஷணய்யர் தீர்ப்பு திருத்தப்பட்டால், இப்பொழுது நடைமுறை படுத்தப்படும் தொழில் உறவுகள் சட்டம் 2020 -ன் வெளிச்சத்தில் தொழிலாளர் நலன்கள் மேலும் பலவீனப்படும் என்று கூறியுள்ளார்.
அரசு நிறுவனங்களுக்கு இறையாண்மை பணிகள் என்ற கோதாவில் தொழிலகங்கள் என்ற வரையறையிலிருந்து விலக்களிப்பது தொழிலாளர் நலன்களுக்கு எதிர்மறையானது என்று நீதிபதி . நாகரத்தினா கூறியுள்ளார்.
மோடியின் ராச்சியத்தில் தொழில் முனைவோருக்கு சலுகைகள் கொடுப்பதை ஒரு கொள்கையாக அறிவித்து, பல லட்சம் கோடி வரிச் சலுகைகளை மோடி கொடுத்துள்ளார். பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் முதலீடுகளுக்கும் (capital) முதலீட்டாளர்களுக்கும் சலுகைகள் , மான்யங்கள் மோடி ஆட்சியில் வழங்கப்படுகின்றன.
இதற்கு Ease of Doing Business என்று மோடி அரசு பெருமைப்படுகிறது. ஆனால், தொழிலாளர்களின், பாதுகாப்பையும் உரிமைகளையும் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டியதும் அரசின் கடமை என்பதை மோடி அரசு ஒத்துக் கொள்ள மறுப்பது மட்டுமல்ல, அவர்களின் உரிமைகளை காவு கொடுக்கவும் தயங்கவில்லை.
தொழிலுறவுகளில் நீக்கு போக்கு இல்லாததால், தொழிற் தகராறு சட்டங்கள் தொழிலதிபர்களின் நலன்களை புறக்கணிக்கும் வகையில் இருப்பதாகவும் தொழில் முனைவோர் இந்தியாவில் தொழில்துவங்கி நடத்த தடையாக உள்ள காரணிகள் என வலதுசாரிகள் வேதாந்தம் பேசுகின்றனர்.

நீக்கு போக்காக (flexible) இருப்பதென்றால் தொழிலாளர்கள் மட்டுமே தங்களது உரிமைகளை விட்டு கொடுக்க வேண்டும் என்பதுதொழிலாளர் மத்தியில் பாதுகாப்பின்மையை மட்டுமே ஏற்படுத்தும் . இதில் சமநிலையை பேண வேண்டிய அரசு தொழிலாளர்களின் கூட்டு பேர உரிமைகளை பறிக்க முற்படுவது ஏன்?
தொழிலகங்கள் என்ற வரையறையில் இருந்து மருத்துவமனைகள் , கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை நீக்கினால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்களையும், உரிமைகளையும் யார் பாதுகாப்பது? இது அவர்களுக்கு அடிமாட்டுச் சம்பளம் தந்து ஏய்க்கவே நடைமுறையில் உதவுகிறது.
எனவே இன்றைய தீர்ப்பு தொழிலாளர் நலன்களை பாதுகாக்கவில்லை. நீதிமன்றங்களின் அணுகுமுறை ஆளுவோருக்கும் மூலதனத்திற்கும் அரணாக செயல்படுகிறது என்பதே உண்மை.
சாமான்யனின் ஜனநாயக உரிமைகளை காப்பாற்ற அரசியல் சாசன அங்கீகாரம் இருந்தாலும் நீதிமன்றங்கள், அரசின் அத்துமீறல்களுக்கு துணை போகின்றன . இந்த நிலையில் 2020 ல் மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தொழிலாளர் குறியீடுகளும் ,தொழில் உறவு குறியீடும் தொழிலாளர் நலன்களுக்கு ஏற்கனவே இருந்த சட்ட அங்கீகாரங்களை பறித்து விட்ட நேரத்தில்
மக்கள் நலன்களை விட முதலாளிகளின் பாதுகாப்பும், அவர்களின் நலன்களுமே முக்கியம் என்று நீதிமன்றங்கள் கருதுவதை இத்தீர்ப்பு காட்டுகிறது.
அனைவரும் இணைந்து போராடினால் தான் இந்த நிலையை மாற்ற இயலும்.
ச.அருணாச்சலம்
























Leave a Reply