பரந்தூர் விமான திட்டம் ரத்தால் பொருளாதாரத்திற்கு பின்னடைவா?

-சாவித்திரி கண்ணன்

பொருளாதாரம் பின்னடைவா ? 90 சதவிகித நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதா? சுற்றுச் சூழல் அனுமதி கிடைத்ததா..? என்ற கேள்விகள் இருக்கட்டும், மச்சேந்திரநாதன் குழுவின் சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கையை  ஏன் பொது வெளியில் வைக்காமல் மறைத்தீர்கள்? பரந்தூர் சர்வதேச விமான நிலைய திட்டம் ரத்தான பின்னணியில் உள்ள உண்மை நிலை என்ன?;

தேர்தல் பிரச்சாரத்தில் தரும் வாக்குறுதி எதையும் பொருட்படுத்தாமல் அதிகாரத்தில் அமர்ந்ததும் கொடுத்த வாக்குறுதிகளுக்கு எதிராகவே செயல்பட்டு பழக்கப்பட்ட திமுகவினருக்கு, தவெக அரசு சொன்னப்படியே பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்து அறிவித்ததானது ஆத்திரத்தை, ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, திமுகவினர் பொய், பொய்யாக அவிழ்த்துவிட்டு மக்களை குழப்புகிறார்கள்!

முதலாவதாக, பரந்தூர் விமான நிலைய ரத்தால் தமிழ்நாட்டின் பொருளாதாரமே பின்னுக்கு தள்ளப்படும் என்கிறார்கள்!

இதில் சிறிதளவேனும் உண்மை உள்ளதா? செழித்தோங்கும் வேளாண்மையைக் காட்டிலும் பெரும் செல்வம் வேறு உண்டா?  இயற்கையின் கொடையான நீராதாரங்களை பேணுவதைக் காட்டிலும் அரசு கஜானாவுக்கு வலிமை வேறென்ன?. அழிக்கக் கூடாத இயற்கையை அழிப்பதைக் காட்டிலும் வெளிநாட்டில் இருந்து இங்கு வரும் முதலீடு பெரிதாகுமா?

’பரந்தூர் விமான நிலைய திட்டத்தை  மேற்கொண்டால், ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகளை தவிர்க்க முடியுமா?’ என்பதை ஆய்வு செய்து சொல்லும்படி மச்சேந்திரநாதன் குழு ஒன்றை அன்றைய திமுக அரசு அறிவித்தது. ஆகஸ்ட், 2022 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கமிட்டி மிகுந்த அக்கறையுடன் கள ஆய்வு செய்து தயாரித்து தந்த அறிக்கையை கண்டு அதிர்ந்த திமுக அரசு, அதை அப்படியே ரகசியமாக மறைத்து, ஒளித்து வைத்தது.

 

பூவலகின் நண்பர்கள் உள்ளிட்ட சுற்று சூழல் ஆர்வலர்கள் இதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தரக் கேட்ட போதும் தரமறுத்தது திமுக அரசு. ஆக, வில்லங்கம் செய்கிறோம் என்பதால் அதை வெளியிட பயப்படுகிறது திமுக அரசு என்று விவசாயிகள் கொந்தளித்தனர்.

தற்போது மச்சேந்திரன் குழு அறிக்கையை பொதுவெளியில் தவெக அரசு வெளியிட வேண்டும். நீர் நிலைகளை அழிக்கும் போது அங்கே சென்று தேங்கும் மழை நீரை சேமிக்க மாற்று வழியேதும் கிடையாது என்பதால் விமான நிலையமும், சென்னை மாநகரமும் ஒரு சேர நீரில் மூழ்கும் என்ற யதார்த்தத்தை மக்கள் மன்றத்தில் மறைத்து, திட்டத்தை செயல்படத் துணிந்தது ஏன் ? அந்த அளவுக்கு பொதுநல நோக்கமின்றி, இவர்களுக்கு சுயநலம் ஓங்கியுள்ளது என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டியதாகும்.

என்னே ஒரு தைரியம்!

அப்பட்டமான பொய்களை அடித்துப் பேசுவது, அம்பலப்பட்டாலும், அவமானப்படாமல் மீண்டும் உளையிடுவது..என்பதில்  திமுகவினரை மிஞ்ச உலகத்திலேயே ஆளில்லை!

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக 90 சதவிகித நிலங்களை வாங்கிவிட்டார்களாம்! இந்த நிலையில் திட்டத்தை ரத்து செய்தால் எப்படி? என எப்படித் தான் துணிந்து பொய் பேச மனம் வருகிறதோ..?

இன்றைக்கு சட்ட சபையில் அமைச்சர் நிர்மல்குமார் துல்லியமான விவரங்களை தெரிவித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு தேவைப்படுவதாக கூறப்படும் 5,846 ஏக்கர் நிலத்தில் 1,802 ஏக்கர் நிலங்கள் மட்டும் தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது! ( நியாயப்படி இவ்வளவு அதிக நிலங்கள் மிக அதிகம். இந்த அளவே மிகப் பெரிய மோசடியாகும்)

அதுவும் ஏகனாபுரம், காரை,தண்டலம், சிறுகூடல் போன்ற பகுதிகளில் ஒரு செண்ட் நிலத்தை தரக் கூட மக்கள் முன்வரவில்லை.

முன்னதாக, ‘’விமான நிலையமா? விவசாயிகளின் கண்ணீரா?’’ என்றால், முதல்வர் விஜய் விவசாயிகள் பக்கம் தான் நிற்பார் என அமைச்சர் தெளிவுபடுத்திய ஆதவ் அர்ஜுனா, சம்பந்தப்பட்ட பகுதியில் 381 ஏரி, குளங்கள்..என நீர் நிலைகள் இருக்கின்றன” என்றார்.

சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததாக பொய்யை கூறி உள்ளனர். சுற்றுச் சூழல் தொடர்பான மதிப்பீடே செய்யவில்லை. காரணம் செய்தால் அம்பலப்பட்டுவிடுவார்கள்!

சர்வதேச சுற்றுச் சூழல் விதிகளின்படி வனம், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட மொத்த நிலப்பரப்பில்

#  1,425 ஏக்கர் (26.5  சதவிகிதம்) நீர்நிலைகளை அழித்து..,

# இந்தப் பகுதியில் தழைத்தோங்கி வளர்ந்துள்ள 36,635 எண்ணிக்கையிலான மரங்களை வெட்டிச் சாய்த்து..,

#  63.86 சதவிகிதம் விவசாய நிலங்கள்!  அதில் 3 போகம் விளையக் கூடிய விவசாய நிலங்கள் 2,681 ஏக்கரை துவம்சம் செய்து,

# கரிக்கிலி பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆகியவற்றை சீர் குலைத்து..,

இங்கே விமான நிலையத்தை உருவாக்க எப்படி சுற்றுச் சூழல் அனுமதி கிடைக்கும்…?

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விவசாயிகள்.

ஆனால், மத்தியில் அதிகாரத்தில் இருப்பவர்கள் மாநிலத்தில் உள்ள தங்கள் அடிவருடியாயிருந்த திமுக ஆட்சியாளர்களை பயன்படுத்தி, அவர்களின் ரியல் எஸ்டேட் பேராசைகளுக்கு தீனி போட்டு, சூழலியல், இயற்கை பேரழிவு போன்ற அத்துமீறல்களுக்கு கூட சட்ட அங்கீகாரம் தந்து திட்டத்தை நிறைவேற்றத் துடித்தார்கள் என்பது உண்மை!

இதற்காக, ”இரண்டு  விமான நிலையங்களுக்கு இடையே,  குறைந்தபட்சம் 150 கி.மீ   இடைவெளி இருக்க வேண்டும்”  என்கிற நிபந்தனையையும் மீறத் துடித்தனர்.

”ஒரு வேளை இது நிகழ்ந்திருந்தால் நீர் நிலைகள் அழிப்பின் விளைவாய் பெருமழை காலத்தில் அந்த விமான நிலையமும், சென்னை பெருநகரமும் வெள்ளத்தில் மூழ்கி பேரழிவைச் சந்திப்பது திண்ணம்” என்கிறார்கள் சுற்றுச் சூழலியல் நிபுணர்கள்!

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையமே குறை திறனோடு தான் இயக்கப்பட்டு வருகிறது. அதை முழுத் திறனுக்கு மாற்றி,  சற்றே விரிவாக்கம் செய்தாலே கூடுதல் சேவைகளை தாரளமாக தர முடியும் எனும் போது, அதை செய்ய முயற்சிக்கலாம் என பல அறிஞர்கள் கூறியதை இந்த அரசு கவனத்தில் கொண்டதை நாம் வரவேற்போம்.

அந்த வகையில் தற்போதைய விமான சென்னை விமான நிலையத்தையே தற்போது 30 மில்லியன் மக்களை கையாளும் திறனைக் கடந்து 55 மில்லியன் மக்களை கையாளும் வகையில் தெர்மல் பிளாண்ட் 3ம், 5ம் ரெடியானதும், தகுதிபடுத்திவிடுவோம் என இந்த ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் திருச்சி,  மதுரை, கோவை  எனும்  மூன்று சர்வதேச விமான நிலையங்களையும் கூடுதல் விரிவாக்கம் செய்யலாம். UDAAN – RCS திட்டத்தை அடிப்படையாக கொண்டு  செயல்படும் சேலம், தூத்துக்குடி, புதுச்சேரி என இந்த மூன்று உள்நாட்டு விமான நிலையங்களையும் இன்னும் சற்று விரிவாக்கி, இதில் ஏதேனும் ஒன்றை சர்வதேச விமான நிலைய அந்தஸ்த்துக்கு உயர்த்தலாம்.

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு உண்மை சென்னை மக்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்வதில்லை. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவரும் சென்னைக்கு மட்டுமே வருவதில்லை.

பொய்களே மூலதனமாக்கி, புரட்டுகளே தொழிலாக்கி, பைகளை நிரப்புவதே ஆட்சியென்றாக்கி, பாவம் செய்தலையே தர்மமென்றோர் இன்று தலை கவிழ்ந்தார்.

பறிக்கப்பட்ட நிலங்களில் பாதுகாக்கப்பட வேண்டும் வேளாண்மை என்பதே வேளாண்குடிகளின் வேண்டுகோளாகும்.அங்கு தமிழக அரசே ஒரு விவசாய கூட்டுப் பண்ணையை உருவாக்கி, பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள் ஆகியவற்றை இயற்கை முறையில் விளைவிக்கலாமே!

இங்கே பெரும் அளவில் ஆடு, மாடுகளை வளர்த்து .36000 மரங்களில் கிடைக்கும் இழை, தழைகளை பயன்படுத்தி இயற்கை உரத் தயாரிப்பிலும் ஈடுபடலாமே!

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time