தேனி, மேகமலை புலிகள் சரணாலயத்தை ஒட்டியுள்ள மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 98 கிராமங்களின் மக்கள் தற்போது அச்சத்தில் உறைந்துள்ளனர். வனப் பாதுகாப்பு, விலங்குகள் பாதுகாப்பு என்பதற்காக இங்குள்ள மக்கள் வாழ்விடங்களை அப்புறப்படுத்தி, அவர்களை வெளியேற்றும் முயற்சிகளின் பின்னணியில் உறைந்திருக்கும் உண்மைகள்;
விவசாயம், தோட்டத் தொழில், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இந்த பழங்குடி மக்களை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி வனத்தையும், வன விலங்குகளையும் காப்பாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் பதட்ட நிலை நிலவுகிறது.
மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எக்காரணம் கொண்டும் யாருக்கும் பட்டா வழங்கக் கூடாது. மேகமலை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இலவம்பஞ்சு தோட்டங்களை முழுமையாக அகற்ற வேண்டும். மின்சாரம்,குடிநீர் ஆகியவற்றை நிறுத்த வேண்டும். எந்த சலுகையும் இந்த மக்களுக்கு வழங்கக் கூடாது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், துணை ராணுவப் படையை அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும்’’ என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மேகமலை பகுதியில் 5,072 ஹெக்டேர் பரப்பை 4,601 பேர் ஆக்கிரமித்துள்ளதாக நீதிமன்றப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் 1,595 பேர் சொந்த வீடுள்ளவர்கள். அதற்கு பட்ட உள்ளிட்ட அங்கீகாரத்தை தமிழக அரசு தந்துள்ளது. இவர்கள் காட்டைச் சார்ந்த விவசாய வாழ்வாதாரமும் கொண்டவர்கள், 233 பேர் வாடகை வீடுள்ள விவசாயத் தொழிலாளர்கள், 2,773 பேர் காட்டில் விவசாயத்தை மட்டுமே சார்ந்தவர்கள் என தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது.
வனத்துறை தயாரித்த இந்த ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில் 118 பேர் அரசு ஊழியர்கள். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 47 பேர் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் (சி.ஆர்.பி.எப்.) பணியாற்றுபவர்கள்! போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 19 பேர், மின்வாரியத்தில் பணியாற்றுவோர் 11 பேர், அங்கன்வாடி, சத்துணவு திட்ட ஊழியர்கள்13 பேர், அரசு பள்ளிக் கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள்-7, வனத்துறை ,வருவாய்த்துறை, உள்ளாட்சிகளில் தலா-5, தபால்துறை, மருத்துவத் துறை- 8, முன்னாள் ராணுவ ஊழியர்கள் -3, என கண்டறியப்பட்டுள்ளது.
மேகமலை-வருசநாடு வனப்பகுதி கடந்த 2012ஆம் ஆண்டு மேகமலை வன உயிரின சரணாலயமாகவும், கடந்த 2021 பிப்ரவரி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டன!

வருசநாடு மலைப்பகுதிகளில் பிரிட்டிஷார் ஆட்சியில் இரயத்துவாரி முறையில் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களில் விவசாயம் செழித்து இருந்தது. கடந்த 1974ஆம் ஆண்டு சிறார், உடங்கலார், மூலவைகை ஆற்றுப் படுகை மற்றும் சிற்றாறுகளின் கரையோரங்களில் இருந்த மக்கள் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த வன நிலங்களை சீர்படுத்தி விளைநிலங்களை உண்டாக்கி பயிர் செய்யத் தொடங்கி ஐம்பது வருடங்கள் உருண்டோடி விட்டன
இதற்கும் முன்பாக 1964ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் நிலவிய கடும் வறட்சியை சமாளிக்கவும், வயிற்றுப்பசியை தீர்க்கவும் தும்மக்குண்டு, உப்புத்துறை, வெட்டுக்காடு, காந்திகிராமம், கோடாரி யூத்து, கட்சிக்காடு, கோரையூத்து, மஞ்சள் ஊத்து, இந்திராநகர் அரசரடி பூசாரி புதுக்கோட்டை, அரண்மனை புதூர் , பொம்மு ராஜபுரம், வாலிபரை, தண்டிகுலம், கொடிக்குளம் குடிசை காமராஜபுரம் ஆகிய மலை கிராமங்களில் பொது மக்கள் குடியேறினர்.
இவர்களுக்கு இடைப்படு காடுகள் திட்டத்தின் விளை நிலங்களை சீர்திருத்தி மரங்களை நடவும் ஊடு பயிரிட்டு கொள்ளவும் காமராஜர் ஆட்சியில் வனத்துறை அனுமதி அளித்தது. தற்போது மேகமலையின் மலை கிராமங்களில் 6,000 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 60,925 ஏக்கர் வன நிலங்களில் விவசாயம் செய்து மூன்று தலைமுறைக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர்.!

இவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி பல போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இதே நிலைபாட்டில் மக்களுக்கு ஆதரவாக உள்ளது.
”உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்பது மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.
இந்த மக்களுக்கு ஆதரவான கருத்தை தவெகவின் சட்ட அமைச்சர் நிர்மல்குமார் சட்டசபையில் தெரிவித்துள்ளதாவது;
மேகமலை வன நிலம், 2009ம் ஆண்டு காப்பு காடாக அறிவிக்கப்பட்டது. அப்போதே இந்த பிரச்னையை முறையாக கையாண்டிருக்க வேண்டும். 2021ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்துார் – மேகமலை புலிகள் காப்பகம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டது. புலிகள் காப்பக எல்லையில் இருந்து, அப்பகுதிகளுக்கு விலக்கு அளித்திருக்க வேண்டும்.
தி.மு.க., – அ.தி.மு.க., என, இரண்டு ஆட்சியிலும், தகுதியானவர்களுக்கு விலக்கு அளிக்காததால், பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த வழக்கை, தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் சரியாக கையாளவில்லை.
கடந்த 2025ம் ஆண்டு மத்திய குழு இப்பகுதி முழுதும் ஆய்வு செய்தது. அப்போது, தமிழக அரசு தேவையான ஆதாரங்களை கொடுத்திருந்தால், பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும்.
தற்போது, தமிழக அரசால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம். அதன் மீதான விசாரணை முடிந்த பின், விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்.” என்றார்.

வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் என்ன தெரிவிக்கப் போகிறது என்பது தெரிய வரும்.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை தீவிரமாக செயல்படுத்தும் விதமாக, ஆக்கிரமிப்பாளர்களாக கண்டறியப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது துறை வாரியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதற்கான அறிக்கையை நீதிமன்றத்திற்கு தர வேண்டும் என்பதால், அவற்றை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என அந்தந்த துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் தற்போது உத்தரவிட்டுள்ளது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வனப் பகுதிகளை வணிக ரீதியாக பயன்படுத்தும் பெரும் பணக்காரர்களிடம் உள்ள நிலத்தை மட்டும் அரசு கைப்பற்றினாலே கூட ஒரு தீர்வாகும். குறிப்பாக பழைய ஜமீன்களிடம் இருக்கும் நிலம், புதிதாக உருவாகியுள்ள பெரும் நிலப் பிரபுக்கள், 12 சட்ட விரோத சொகுசு ரிசார்ட்டுகள், சில வணிக மற்றும் தொழில் கேந்திரங்கள் ஆகியவற்றை கறாராக இங்கிருந்து அப்புறப்படுத்துவதோடு, இது தற்போது ஒரு பெரிய சுற்றுலா தளமாக உள்ளமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சமீபகாலமாக சுமார் 25 ஆண்டுகளுக்குள் இங்கு குடியேறிவர்களை மாத்திரம் வெளியேற்றலாம். இந்த காலக்கட்டத்தில் கட்டப்பட்டவை அனைத்தையும் இடித்துவிடலாம்.காட்டை சார்ந்து வாழ்வோரை மட்டும் அங்கு தொடர்ந்து வாழ அனுமதிக்கலாம். இனி இங்கு யாரும் புதிதாக குடியேறாமல் பார்த்துக் கொள்ளலாம்.
காடுகள், வனங்கள் மிக முக்கியமே. அதைப் போல அதனுடன் இயைந்து வாழும் பழங்குடிகளும் காட்டின் ஒரு அங்கமே!
சாவித்திரி கண்ணன்






















எளிதில் தீர்க்கக் கூடிய பிரச்சனைகளையும் வளர்த்து மக்களை துயரப்படுத்துவதே அரசுகளுக்கு வாடிக்கை ஆகிவிட்டது
Yes