எதிர்கட்சியினரை தாஜா செய்யும் தன்னல சபாநாயகர்!

-சாவித்திரி கண்ணன்

சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரன் ரொம்ப உருக்கமாகத் தான் பேசுகிறார்!

ஒரே கூச்சல், குழப்பம்..! ஆபாச அர்சனைகள்..என்று கதிகலங்குகிறது சட்டமன்றம்…! ஆகவே, சட்டசபையின் கண்ணியத்தை உறுப்பினர்கள் காப்பாற்ற வேண்டும் என மன்றாடுகிறார்..!

ஆனால், சட்ட சபை சண்டை சபையாக மாறியதற்கு உண்மையில் சபாநாயகர் தான் பிரதான காரணமாகும்.

சபாநாயகர் பதவி என்பது வானாளவிய அதிகாரம் கொண்டது. ஆளுமைத் திறனுள்ள சபாநாயகர் என்பவர் ஒரு இராணுவத் தளபதிக்கு ஒப்பானவராகத் திகழ்ந்து, சபையை பேச்சால் மட்டுமல்ல, அமைதியாக இருங்கள் என சைகை காட்டினாலே எழுந்தவர்கள் அமர்ந்துவிடக் கூடிய ஆளுமையாக இருக்க வேண்டும்.

இவர் ஏன் கெஞ்சுகிறார்…கதறுகிறார்?

ஆம், சட்ட சபை என்பதும் ஒரு கருத்து சொற்போர் நிகழ்த்தும் களம் தான்! ஆனால், யார் பேச எழுந்தாலும் சபாநாயகர் பதற்றப்படுகிறார்! ஏன் இந்தப் பதற்றம் ..? அதுவும், திமுக மீது குற்றச்சாட்டு வைத்தால் அதிகம் பதறுகிறார்!

யாராக இருந்தாலும் பேச்சில் உண்மை இருந்தால் அனுமதிப்பதும், பேசிச் செல்வது பொய் என்றால், உடனே தடுத்து முற்றுப் புள்ளி வைப்பதும் தான் சபாநாயகருக்கான சரியான ஆளுமை பண்பாகும்.

இவருடைய பிரச்சினையே இவர் எல்லோரும் தன்னை நல்லவன் என்று சொல்ல வேண்டும் என்ற ஒற்றை இலக்கை கொண்டிருப்பது தான். இந்த ஒற்றை நோக்கத்திற்காக சதா சர்வகாலமும் சமரசவாதியாக தன்னை நிலை நிறுத்தத் தான் அவர் தவிக்கிறாரேயன்றி, சட்ட சபையில் சத்தியத்தை நிலை நாட்ட ஒத்துழைக்க மறுக்கிறார்.

சென்ற ஆட்சி மக்களை சுரண்டிக் கொழுத்த ஊழல் தழைத்தோங்கிய ஆட்சி. தேவைப்படும் நேரத்தில் அவர்களின் ஊழல்களை, அராஜகங்களை பேசாமல் ஒரு விவாதத்தில்  பதில் சொல்ல இயலாது. அப்படிப் பேசும் போது ஒட்டுமொத்த திமுகவினரும் எழுந்து கத்தினால், மிரட்டினால் பணிந்து சரண்டராவதே இவரது வாடிக்கையாக உள்ளது.

அதே சமயம் ஆளும்கட்சி உறுப்பினர்கள் மிகவும் பட்டவர்த்தனமாக – டேராக – திமுகவின் உண்மை சொருபத்தை சொல்வதை தவிர்த்து, நாசுக்காகவும், சூசகமாகவும் சொல்லிக் கடக்கலாம். ஆனால், அதையும் கூட லேசில் அனுமதிக்கமாட்டார்கள் திமுகவினர். இந்த இடத்தில் புதிய இளம் ஆளும் கட்சி உறுப்பினர் தடையில்லாமல் பேசும் உரிமையை உறுதிபடுத்துவதில் தான் சபாநாயகர் ஆளுமைத் திறனுள்ளது.

தவெக உறுப்பினர்களுக்கு நாம் ஒன்று சொல்வோம். நீங்களாவது தனி நபர் புகழ்பாடாத ஒரு தனித்துவ அரசியலை முன்னெடுங்கள். தலைவர் துதிபாடல் என்ற கீழ்மை கலாச்சாரத்தை விட்டொழியுங்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் பசுமை பூத்துக் குலுங்கும் தங்கள் நிலத்தை பறிக்காதே என்று போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாயக் காரணமானவர் எ.வ.வேலு!

சுமார் மூன்றாண்டுகளாக காத்திருப்பு போராட்டம் நடத்திய அவர்களை சந்திக்கவே மறுத்து சர்வாதிகார ஆட்டம் ஆடியவர் எ.வ.வேலு.  பணம் கொடுத்து வெளிமாவட்டங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து ’’சிப்காட் வேண்டும்’’ போராட்டத்தை நடத்தியவர் எ.வ.வேலு. உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம் மேல்மா விவசாயிகளுக்காக போராடினால், தர்மபுரிகாரருக்கு இங்கு என்ன வேலை? என்கிறார் எ.வ.வேலு. அதாவது குறுநில மன்னராக தன்னைக் கருதி என் ராஜ்ஜியத்திற்குள் நீ யாரடா? என்கிறார். தமிழ் நாட்டில் எங்கு உழவர் பாதிக்கப்பட்டாலும் அங்கே போராடும் உரிமை ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது.

ஏற்கனவே  மாவட்டத்தில் உள்ள இரண்டு சிப்காட்டின் பெருபகுதி நிலங்களே பயன்படுத்தப்படாமல் இருக்க இந்த நிலப்பறிப்பு எதற்கு? எந்தெந்த தொழிற்சாலை வருகிறது எனக் கேட்ட விவசாயிகளுக்கு கடைசி வரை பதில் சொல்ல மறுத்து போலீஸ் ராஜ்ஜியத்தை பயன்படுத்தி ஒடுக்கியவர் எ.வ.வேலு. ஊரையடித்து உலையில் போட்டு, மலைகளை உடைத்து இயற்கையை சூறையாடி கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் என வாழும் எ.வ.வேலு தினம்,தினம் பொய்களை பேசுகிறார்.

இதை சட்டசபையில் தடுத்துச் சொல்ல வழியுண்டா? ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரான அருள் ஆறுமுகம் தன் வேலையைத் துறந்து விவசாய பாதுகாப்பிற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து அனுதினமும் பணியாற்றும் இளைஞர். சபையில் இல்லாத ஒருவரை பற்றி இப்படி இல்லாததும் பொல்லாததையும் இஷ்டத்திற்கு சொல்ல சபாநாயகர் எப்படி அனுமதிக்கிறார்?

உதயநிதி உதார்விடுவதையும், எத்தருக்கும் எத்தரான எ.வ.வேலு பொய்,பொய்யாக வண்டை, வண்டையாய் பேசிச் செல்வதையும், செந்தில் பாலாஜி தன்னை நியாயவானாக சித்தரித்துக் கொள்வதையும் அனுமதித்து, தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஜேசிடி பிரபாகரன் அவர்களின் சுயநலத்திற்காக, லட்சோப லட்சம்  தமிழக மக்கள் இந்த இம்சைகளை அனுபவிக்க வேண்டுமா?

திமுகவினர் தங்கள் ஆட்சியில் அப்பாவு போன்ற அடாவடி சபா நாயகரைக் கொண்டு எதிர்கருத்தாளர்களை சிறிதளவேனும் மாற்றுக் கருத்து கூட வைக்கவிடாமல் ஒடுக்குவார்களாம். ஆனால், அவர்கள் எதிர்கட்சியாக இருந்தால் அவர்களுக்கே அதிக வாய்ப்பளிக்கும் – அவர்களின் அராஜகத்தை அனுசரித்துப் போகும் – சபாநாயகர் வேண்டுமாம்! இதனால் தான் பிரபாகரனை கொண்டாடுகிறார்கள்!

அதிமுக ஆட்சியில் சபாநாயகர் தனபாலை வம்பாக இழுத்து வெளியேற்றி அவரது ஆசனத்தில் உட்கார்ந்தவர்களே திமுகவினர். அது போல தனக்கும் நடந்துவிடக் கூடாது என அஞ்சுகிறார் போலும் பிராபகரன். ஏற்கனவே தன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தவெக உறுப்பினர்களுக்கு கோடிக் கணக்கில் பேரம் பேசியவர்கள் என்பதால் எப்போது வேண்டுமானாலும் தன்னை திமுகவினர் கீழே இறக்க வாய்ப்புள்ளது என சபாநாயகரே நம்புகிறார் போலத் தெரிகிறது.

திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன் வரம்பு மீறி தன் எல்லை கோட்டைக் கடந்து சபாநாயகர் அருகே வந்து ஆவேசமாக எச்சரித்து செல்கிறார். சபாநாயகரை சுற்றியுள்ள அந்த வளையத்திற்குள் முதலமைச்சரே கூட சபாநாயகர் அனுமதியின்றி பிரவேசிக்க முடியாது. கூடாது. சபாநாயகர்  இந்த அத்துமீறலையும் அமைதியாக ஏற்கிறார். வரம்பை மீறும் உறுப்பினர்களை காவலர்களை அழைத்து வெளியேற்றும் அதிகாரம் அவருக்குண்டு தானே!

எந்த ஒரு விமர்சனத்தையும் முதல் வார்த்தை உதிர்க்கப்பட்ட அந்த நொடியிலேயே ஒட்டுமொத்தமாக எழுந்து மேற்கொண்டு பேசவிடாமல் வெற்றிகரமாக அமுக்கிவிடுகின்றனர் திமுகவினர்.

# தங்களின் கடந்த கால ஊழல்கள் அம்பலப்படக் கூடாது.

# இந்த ஆட்சி மீது மக்களுக்கு கெட்ட இமேஜை உருவாக்க வேண்டும்.

# தங்களை விமர்சிக்கும் ஒற்றை வார்த்தையானாலும் அல்லது தங்களை விமர்சிப்பதாக அவர்கள் கருதும் சம்பவங்களானாலும் கூட அத்தனை திமுகவினரும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று சம்பந்தப்பட்ட  அமைச்சரை அடுத்தவொரு வார்த்தை கூட பேசவிடாமல் தடுத்துவிடுகின்றனர். இந்தச் சூழலை கையாளுவதில் சபாநாயகர் படுதோல்வி அடைகிறார்.

#  திமுகவினர் தாக்குதல்களில் இருந்து தப்பித்து தங்களை தற்காத்துக் கொள்வதிலேயே ஆட்சியாளர்களின் முழு முயற்சி எடுப்பதிலேயே இவர்களை முழு ஆட்சி காலமும் விரையமாக வேண்டும் என திமுகவினர் கங்கணம் கட்டி செயல்படுகின்றனர்.

இதற்கு தோதாக அவர்களுக்கு தன்னை அறிந்தோ, அறியாமோ துணை போய்க் கொண்டுள்ளார், ஜே.சி.டி.பிரபாகரன்! இதனால் தான் சட்ட சபை நிகழ்ச்சிகளை அப்படியே லைவ் செய்யாமல் சற்றே எடிட் செய்து 15 நிமிடம் கழித்து ஒலிப்ரப்ப வேண்டும் என்ற திமுகவின் சதிக்கு ஆதரவாக தற்போது காய் நகர்த்துகிறார், ஜே.சி.டி.பிரபாகரன்.

சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுபவை எல்லாம் நேரலையில் மக்கள் பார்த்துவிடுகிறார்களே என உதயநிதி கவலை தெரிவித்ததும், அது சபாநாயகரின் கவலையாகிவிட்டது.  திமுகவின் புனித பிம்பத்தை நிலை நிறுத்துவதே தன் சபாநாயகர் பொறுப்பின் தலையாய கடமை என கொண்டிருப்பவரல்லவா, இந்த சபாநாயகர்?

ஜனநாயகத்தில் மக்களுக்கு எதையும் மறைக்கக் கூடாது. சட்ட சபை நிகழ்ச்சிகள் நேரலையாக  போய்க் கொண்டிருப்பதால் பொறுப்பாக பேச வேண்டியது உறுப்பினர்களின் கடமை. இல்லையென்றால், அவர்களின் உண்மை சொரூபம் மக்களுக்கு தெரியட்டும். எச்சரிக்கை, சட்ட சபை நிகழ்ச்சிகளை வெட்டியும், ஒட்டியும் ஒளிபரப்புவது  மக்களை முட்டாள்களாக்கும் முயற்சியாகும்.

தமிழகம் கண்ட சபாநாயகர்களிலேயே ஜேசி.டி.பிரபாகரன் மிக,மிக பலவீனமானவர் மட்டுமல்ல, நம்பகத்தன்மையற்ற போலி நபராகும். கருணாநிதி பேசிய வாசகத்தை வாசித்துக் காட்டி நாம் அந்த வழியில் நடக்க வேண்டும் என சட்ட சபை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துகிறார் பிரபாகரன். பேரவலம்!

கருணாநிதிக்கு புனித பிம்மம் தர வேண்டிய தேவை என்ன இவருக்கு?

அதனால் தான் இவரை முரசொலியிலும் புகழ்ந்து எழுதுகிறார்கள், துக்ளக்கிலும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இவரை நல்லவர் என நம்பவைக்க எப்படிப்பட்டவர்களெல்லாம் முயற்சிக்கிறார்கள் என்பதே அவரது யோக்கியாம்சத்திற்கான அளவுகோளாகும்.

ஏழெட்டு மாதத்திற்கு முன்பு வரையிலும், பாஜகவின் பாதம் தாங்கியான ஒ.பி.எஸ்சின் தொண்டராக வலம் வந்தவர் தான் ஜேசிடிபிரபாகரன். பல கட்சிகளிலும் இருந்தவர் என்பதால் எல்லோருக்கும் தயவு காட்டுகிறார்.

சட்டசபையில் பேசக் கூடாத ஆபாசச் சொல்லை மைக்கை பொத்திக் கொண்டு ஜெயலலிதாவிடம் பேசியவர் கருணாநிதி. பெண் என்றும் பாராமல் எதிர்கட்சித் தலைவரை தாக்கியவர்கள் திமுகவினர்.

திமுகவின் முதல் தலித் அமைச்சர் சத்தியவாணி முத்து அவர்களே 1970 களில் கருணாநிதி அரசு “அரசாங்கம் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை காட்ட மறுக்கிறது” என்று பகிரங்கமாக சட்ட சபையில் சொல்லியதோடு, தலித் மக்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை மிகைப்படுத்திக் காட்டி, இதர சமூகத்தினரிடையே தலித்துகள் மீது வெறுப்பை வளர்க்கிறது திமுக’’ என்றதில் இன்று வரை மாற்றமில்லை.

1972 –ல் தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் இருக்கையில் மதியழகன் அமர்ந்து எதிர்க்கட்சியினரின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்த போதே, அவையின் மற்றொரு பகுதியில் போட்டி சபாநாயகரை வைத்து  சபாநாயகர் நீக்கத் தீர்மான வாக்கெடுப்பு நடத்தி சபாநாயருக்கான மாண்பைக் குலைத்தவர் கருணாநிதி.

இப்படியாக தன் கட்சி சபாநாயகர் கே.ஏ.மதியழகனையே சட்ட சபையில் தனக்கு ஜால்ரா போடவில்லை என்பதற்காக அவமதித்து வெளியேற்றியவர்கள் தான் கருணாநிதி. அவரது வகையறாக்களை எவ்வளவு தாஜா செய்தாலும் சந்தர்ப்பம் பார்த்து சபாநாயகரை அவர்கள் வைத்து செய்வதில் கருணை காட்டமாட்டார்கள், புரிந்து கொள்ளுங்கள், தற்போதைய சபாநாயகரே!

மொத்தத்தில் எதிர்கட்சியான திமுகவினர்,  ஆளும் கட்சி உறுப்பினர்களின் பேசும் உரிமையை – தங்கள் விளக்கத்தை வெளிப்படுத்தும் உரிமையை  – சட்டமன்றத்தில் அராஜகமாக முடக்குவதை தடுத்து நிறுத்தவும், சபையை ஒழுங்கமைத்து வழி நடத்தவும் முற்றிலும் திறனற்றவராக  சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரன் உள்ளார் என்பது வெள்ளிடைமலையாய் வெளிப்படுகிறது.

கம்பீரமாக சபையை நடத்துவது உங்களுக்கு கைவரவில்லை என்றால், கண்ணியமாக அதை ஒத்துக் கொண்டு ஒதுங்கி, தகுதியான ஒருவருக்கு வழிவிடுங்கள்!

சபாநாயகர் பொறுப்புக்கு சற்றும் பொருத்தமில்லாதவர் ஜே.சி.டி பிரபாகரன்.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time