காவிரி பிரச்சினையில்  இனி நாம் செய்ய வேண்டியது என்ன?

-ம.வி.ராசதுரை

இது வரை கர்நாடக அரசு தான் காவேரி விவகாரத்தில் பொய் பேசி வந்தது. தற்போது மத்திய அரசும் அவர்களுடன் கைகோர்த்துள்ளது. காவிரி விவகாரத்தில் ஏற்கனவே நாம் அதிகம் இழந்துள்ளோம். இனியும் நாம் காவேரியில் கிடைக்கும் தண்ணீரை வீணாக்க கூடாது என்ற நோக்குடன், தமிழ்நாடு துறைசார் வல்லுநர்கள் தமிழ் நாட்டரசு செய்ய வேண்டிய கடமைகள் குறித்து கூறியதாவது;

தமிழ்நாடு துறைசார் வல்லுநர் கூட்டமைப்பினர்  ஆகஸ்ட் 27, 2026 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேட்டி அளித்தனர்.

ஒரு நதிநீரை பங்கிடுவதற்கு உலகளாவிய தார்மீக மரபு உள்ளது. மனிதநேயத்தோடு, பொதுமக்களின் நலன் கருதி, பாரபட்சமின்றி இதை அணுகத் தோதாக ஐக்கிய நா‌டுகள் மன்றமும் விதிகளை வகுத்துக் கொடுத்துள்ளது.

காவிரி விவகாரத்தில், தமிழக -கர்நாடக மாநில அரசுகள் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்ற  பேச்சு வார்த்தைகள் மற்றும் மத்திய அரசின் முயற்சியாலும்  தீர்வு எட்டப்படாத நிலையில்,  நடுவர் மன்றம்  அமைக்கப்பட்டு அதில் வெளியான தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டு தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டிய அளவு வரையறுக்கப்பட்ட பிறகும் சிக்கல் தொடர்கிறது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் பெங்களூருக்கும் தண்ணீர் தர வேண்டி நமக்கான பங்கில் 14 .75 டி.எம்.சி குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் பெங்களூர்ருக்கான தண்ணீரை  காரணமாக்கி கர்நாடக அரசு தற்போது மேகே தாட்டு அணை கட்டுவோம் என்று  பிடிவாதம் காட்டுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காவிரி ஆறு இங்குள்ள மக்களின் உயிரோடு கலந்த ஒன்றாகும். காவிரி டெல்டா மாவட்ட விவசாயத்திற்கு மட்டும்  இது வாழ்வாதாரம் அல்ல. வழிநெடுகிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்னை, திருச்சி, ஈரோடு  உள்ளிட்ட மாநகரங்களுக்கும் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இடையே இந்த விவகாரத்தில் ஒற்றுமை இல்லாத நிலைமை தொடர்ந்து உள்ளது.

பிரச்சினையின் தீரத்தை உணராமல் அல்லது புரிந்து கொள்ளாமலேயே பலர் உள்ளனர்.

காவிரி விவகாரத்தில் ஆரம்பம் முதல் தற்போது வரை உள்ள பிரச்சினைகளை முழுவதும் அறிந்தவரான தமிழக அரசின் முன்னாள் சிறப்பு தலைமைப் பொறியாளர் (பொதுப்பணித்துறை) முனைவர் அ.வீரப்பன் மற்றும் மூத்த நீரியல் வல்லுநர் ஜனகராஜன், பொறியாளர் காந்தி ஆகியோர் இணைந்து, ’’அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன?’’  என்ற விவரத்தை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

மேகேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் கர்நாடகத்திற்கு திருப்பி  அனுப்பிய நிலையில், மேகே தாட்டு அணை கட்டுவதற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று  பாராளுமன்றத்தில் மத்திய துணை அமைச்சர் தெரிவித்ததானது தமிழ்நாட்டில் பெருங் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.மத்திய அரசின் இந்தக் கருத்துப் பற்றி?

பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய துணை அமைச்சர் தெரிவித்த இந்தக் கருத்து பொறுப்பற்ற பதிலாகும்.

பெங்களூரு குடிநீருக்காக இந்த அணையை கட்டப் போவதாக கர்நாடகா சொல்வதில் எந்த உண்மையும் இல்லை.

குடிநீருக்காக நடுவர் மன்ற தீர்ப்பில் 10.60 TMC யும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் 14.75 TMC யும் ஒதுக்கப்பட்டுள்ளது. கள ஆய்வில் பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

1990 -2007 இடைப்பட்ட காலத்தில் கர்நாடகா தன் பாசனப்பரப்பை

11.20 லட்சம் ஏக்கரில் இருந்து 21.71 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தி உள்ளது.

மேகேத்தாட்டு அணையைப் புதிதாக கட்டி இந்த பரப்பை 30 லட்சம் ஏக்கருக்கு அதிகப்படுத்த அந்த அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்த அணைகட்ட தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்று மத்தியத் துணை அமைச்சர் சொன்னது அபத்தமானது, விஷமத்தனமானது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில், பத்தி 127 மற்றும் 129 இல் தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவை என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிலேயே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு 2007 பத்தி Clause XVlll CWDT Award-காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட காவிரி நதி கீழ் மாநிலங்களான தமிழ்நாடு,புதுவை மற்றும் கேரளா இவற்றின் ஒப்புதல் அவசியம் தேவை என்னும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது இதுவும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் தான், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் அனுமதியை பெறாமல் கர்நாடக அரசு அனுப்பிய திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் ஏற்க முடியாமல் திருப்பி அனுப்பி வைத்தது.

கர்நாடக அரசு தன் மாநிலப் பாசனப் பரப்பை இரு மடங்காக ஆக்கிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் காவிரி பாசன நில அளவு கணிசமாக குறைந்துவிட்டது. சில விவசாய சங்கத்தினரும் சமூக ஆர்வலர்களும் இராசி மணலிலும் ஒகனேக்கல்லிலும் அணைகட்டி கூடுதல் நீரைத்தேக்கலாம் என்று சொல்கிறார்களே

இவை உடனடி சாத்தியமில்லாதவை. ஏற்கனவே குறிப்பிட்டது போல, காவிரியின் குறுக்கே புதிய அணைக்கட்ட மத்திய நீர் ஆணையம் மற்றும் கர்நாடக அரசின் ஒப்புதல் வேண்டும். இன்றைய சூழலில் இதற்கு வாய்ப்பில்லை.

காவிரியில் எப்போதாவது (சுமார் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை) வரும் வெள்ள நீரை கீழ்க்கண்ட வழியில் சேமிக்கலாம். இதற்கு மத்திய நீர் ஆணையம் மற்றும் கர்நாடகாவின் ஒப்புதல் தேவை இல்லை .

மேட்டூர் அணை கட்டுமான வடிவமைப்பு (Er WM Ellis) மேலும் 10 அடி உயர்த்தும் வகையில், அதன் அடித்தளம் மற்றும் அணைச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தும் பட்சத்தில் கூடுதலாக 17 டி எம் சி தண்ணீரைத் தேக்க முடியும். இப்பணியை செய்து முடிக்க, இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பிடிக்கும். கட்டுமானச் செலவும் குறைவாக இருக்கும்.

காவிரியில் (கல்லணை வரை) 50 கிலோ மீட்டருக்கு ஒன்றாக ஐந்து தடுப்பணைகள் கட்டி, 5 டிஎம்சி வரை தண்ணீர் தேக்கலாம். இப்பணியை ஓராண்டுக்குள் முடிக்க முடியும். செலவும்  ரூபாய் 25 கோடியில் இருந்து 50 வரைதான் ஆகும்.

கொள்ளிடத்தில் 5 தடுப்பணைகள் கட்டி மூன்று டிஎம்சி தேக்கலாம் இதையும் ஓராண்டில் முடிக்க முடியும் செலவு ரூபாய் 20 கோடி முதல் 30 கோடி வரை ஆகும்.

(தமிழக அரசின் நீர்வளத்துறை திட்டமிடுவதைப் போல கதவணைகள் (Baarrages-  மாயனூர் போல) கட்டுவதற்கு 5 ஆண்டுகளாகும். செலவும் பத்து மடங்கு பிடிக்கும்).

இவற்றைத் தவிர காவிரி படுகையின் இரு புறமுள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஏரிகள்- கண்மாய்களில் நீரேற்றம் மூலம் நிரப்பி  (Thru NP3 Class Concrete Pipes by Pumping) 30 TMC வெள்ள மிகை நீரை சேமிக்கலாம். செலவு  ரூபாய் 36,500 கோடி ஆகலாம்.

இது கோதாவரி- காவிரி இணைப்பு கனவுத் திட்டத்தை விட விரைவில் கிடைப்பது. செலவும் ஐந்து மடங்கு குறைவாகவே ஆகும். இவ்வாறு மூத்த நீரியல் வல்லினர்கள் மேற்கண்டவாறு தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர்களை சந்திக்க வந்திருந்த தமிழ்நாடு துறைசார் வல்லுநர் கூட்டமைப்பினர் விவரம் வருமாறு:

முனைவர் அ. வீரப்பன் ( தமிழக அரசின் முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளர் (பொபது), முனைவர் எஸ். ஜனகராஜன் (நீரியல் வல்லுநர்), கல்வியாளர் பு‌.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு (பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை),  வழக்குரைஞர் எம். வெற்றிச் செல்வன் (பூவுலகின் நண்பர்கள்), பொறியாளர் சா. காந்தி (ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மின் துறை பொறியாளர்கள் அமைப்பு).

நேர்காணல் : ம.வி.ராசதுரை

மூத்த பத்திரிகையாளர்.

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time