சாதாரண மக்களுக்கு மின்சாரக் கட்டணங்களை பார்க்கும் போது ஷாக் அடிக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகளும், தெருக்கோவில் திருவிழாக்களை நடத்துவோர்களும் இஷ்டத்திற்கு மின்சாரத்தை கொக்கி போட்டு தூக்குகின்றனர்..! இன்னும் என்னென்னவோ விதங்களில் எல்லாம் மின் திருட்டு நடக்கின்றன..! இதனால் மின் வாரியம் பெரும் நிதி இழப்பை சந்திக்கிறது. இவை ஒழுங்குபடுத்தப்படுமா?
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு அப்பாற்பட்டு மின்சாரத்தை தவறாகப் பயன்படுத்தும் அனைத்து முறைகளும் மின் திருட்டாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது.
மின் திருட்டு வகையறாக்கள்;
# டிரான்ஸ்பார்மர், தெருவோர மின் இணைப்புப் பெட்டி, மின் கம்பம் ஆகியவற்றில் கொக்கி போட்டு மின்சாரம் திருடுவது.
# ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீடு அல்லது வணிகத்துக்கு மின்சாரம் தருவது,
# வீட்டு பயன்பாட்டுக்கெனப் பெற்று வணிகப் பயன்பாடுக்கு பயன்படுத்துவது,
# மீட்டரை ஓடவிடாமல் காந்தம் போன்ற பொருளை வைப்பது,
# மீட்டரை குறிப்பிட்ட நாட்களுக்கு துண்டித்து மின்சாரம் பயன்படுத்துவது, கட்டுமானத்துக்கு தற்காலிக இணைப்பு பெறாமல் ஏற்கனவே உள்ள இணைப்பில் இருந்து மின்சாரம் பெறுவது…
போன்றவை மின் திருட்டாகும்.
வேறு வகை மின் திருட்டுகள்;
மீட்டரைத் திருத்துதல், மீட்டருக்கு செல்லாமல் மின்சாரத்தை மாற்றுவது, நேரடியாக கொக்கி போடுதல், மீட்டரில் போலி முத்திரை பதித்தல், வேறு கட்டண வீதத்துக்கு மின்சாரத்தை பயன்படுத்துதல், மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டால், மின் துறை ஊழியர்கள் அனுமதியின்றி, தானாகவே மின் இணைப்பை வயர் மூலம் மீட்டெடுத்தல் ஆகியவை மின் திருட்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மின் திருட்டுக்கு தண்டனை என்ன?
மின் திருட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு காப்புத் தொகை என்ற பெயரில், ஒரு ஆண்டுக்கு கணக்கிடப்பட்டு, இரண்டு மடங்கு பயன்பாட்டுத் தொகை அபராதம் விதிக்கப்படும். இந்த தொகையை கட்டிய பிறகு, சமரசத் தொகை என்று ஒரு கட்டணம் வசூலிக்கப்படும். கிரிமினல் வழக்கு தொடராமல் இருக்க, இந்த சமரசத் தொகையை நுகர்வோர் செலுத்த வேண்டும்.
மின் இணைப்பு துண்டிக்கப்படுமா?
மின் திருட்டைக் கண்டுபிடித்தவுடன், சம்பந்தப்பட்ட மின் இணைப்பை உடனடியாகத் துண்டித்து விடுவர். பின்னர் அபராதம் மற்றும் சமரசத் தொகைக் கட்டியவுடன் மறு இணைப்புக் கட்டணத்துடன், மறு இணைப்பு வழங்கப்படும்.
மின் திருட்டு குறித்து யாரிடம் புகார் அளிக்கலாம்?
தமிழகம் முழுவதும் மின் வாரிய சேர்மன் கட்டுப்பாட்டில் 18 பறக்கும் படைகளும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களைக் கொண்ட படைகளும் கூடுதலாக உள்ளன. சென்னை 94458 57591, 044-2841 2906, மதுரை, 94430 37508, 0452-2537508, கோவை 94430 49456, 0422-2499560, திருச்சி 9443329851, 0431- 2422166 ஆகிய எண்களில் புகார் தரலாம். மற்ற பகுதியினர் சென்னை அலுவலகத்துக்கோ, அந்தந்த மண்டல தலைமைப் பொறியாளருக்கோ புகார் அளிக்கலாம்.
ஆடிமாத அம்மன் கோவில் திருவிழாக்கள்:

ஆடி மாத அம்மன் கோவில் விழாவின்போது அலங்கார சீரியல் பல்புகள் ஹைவேயில் இருபது அடி உயர விளக்கால் அலங்காரம் செய்யபட்ட சாமி உருவ கட்அவுட்கள் எல்லாம் வெள்ளி மாலை முதல் திங்கள் அதிகாலை வரை தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். நம்மில் பலர் அதை பார்த்து கொண்டே கடந்து சென்று கொண்டிருப்போம். இது வருடந்தோறும் நடைபெறுகிற ஒரு மாமூல் விசயம். எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள் இடையறாது ஒலித்துக் கொண்டே இருக்கும்.
கோவிலின் நுழைவாயில் மற்றும் தெருக்களின் சந்திப்புகளில் பிரம்மாண்டமான ஆர்ச்சுகள் அமைக்கப்படுகின்றன. இதில் அம்மனின் பல்வேறு வடிவங்கள் (மகிஷாசூரமர்த்தினி, காளியம்மன், மாரியம்மன்), விநாயகர், முருகன் போன்ற தெய்வங்களின் உருவங்கள் எல்.இ.டி (LED) விளக்குகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு ஒளிரவிடப்படுகின்றன.
இந்த ஒலி ஒளி அமைப்பிற்கு மின்சாரம் எங்கிருந்து கனக்ஸன் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை சற்று கூர்ந்து பார்த்தால் ஒரு உண்மை தெரியவரும். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விநியோகிக்கப்படுகிற மின்சார டிரான்ஸ்பாரத்திலிருந்து கம்பி போட்டு கள்ளத்தனமாய் கனக்ஸன் கொடுக்கப்பட்டிருப்பதை காணலாம். இது அம்மன் கோவில் திருவிழாவில் மட்டுமல்ல. ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் அரசியல் கூட்டங்களிலும் இதே தில்லுமுல்லுகள் பின்பற்றபட்டு வருவதை காணலாம்.

அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள்;
கட்சிகளின் சின்னங்களும், தலைவர்களின் பிரம்மாண்ட சீரியல் பல்பு ஓவியமும் இரவு தொடங்கி அதிகாலை வரை ஒளிர்கின்றன. அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு கடைகளில் மிரட்டி, அடாவடி வசூல் செய்யும் அரசியல்வாதிகள் மின் தேவைக்கு ஜெனரேட்டரை பயன்படுத்தலாமே!
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சார அலங்கார விளக்குகள் இரவை பகலாக்கும் போகஸ் விளக்குகள் இரவு முழுக்க எரிந்து கொண்டே இருக்கும். இதற்கான மின்சார செலவிற்கு யார் பொறுப்பு ஏற்பது இத்தகைய மின்சார பயன்பாட்டிற்கு எதனை யூனிட் ஆகும் என்றெல்லாம் நாம் எண்ணி பார்ப்பதே இல்லை.
அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு மின் விளக்குகள், கட்-அவுட்கள் மற்றும் ஒலிபெருக்கிகளுக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுகிற நிலையில் அனுமதியின்றி மின்சாரத்தை நேரடியாக கொக்கி போட்டு எடுக்கும் போது, அந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகளின் மின்னழுத்தம் குறைந்து (Low Voltage), மின் சாதனங்கள் பழுதடைகின்றன. இந்த நஷ்டங்களுக்கு யார் பொறுப்பு?
இப்படி திருடப்படுகிற மின்சாரம் குறித்து சம்பந்தபட்ட வட்டார மின்சார துறை அதிகாரிக்கு தெரியாதா? அவர் ஏன் அரசியல் கட்சிகளுக்கு சகாயம் செய்கிறார்? இத்தனை ஆண்டுகாலமாய் இந்த ஒரு பகிரங்க திருட்டு அரங்கேறி வருகிறதே இதற்கு மின்வாரியம் எடுத்த நடவடிக்கை என்ன? என்கின்ற கேள்வி நம்முள் எழுகிறது.

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி அதிரடியாக மின் கம்பிகளில் கொக்கி போடுவதால், மின்கசிவு ஏற்பட்டு பொதுமக்கள் அல்லது அந்தக் கட்சியின் தொண்டர்களே மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நிகழ்வுகளும் அரங்கேற வாய்ப்புள்ளது மேலும் சட்டவிரோத இணைப்புகளால் மின்மாற்றிகள் (Transformers) ஓவர்லோடு ஆகி வெடிக்கவோ, ஃபியூஸ் (Fuse) போகவோ ஏதுவாகிறது.
கிராம புறங்களில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுத்தாலும் அங்கேயும் விதிமீறல்கள் இல்லாமல் இல்லை.
பறக்கும் படையினர் ஜூன் 15 முதல் 30 வரை, கோவை மண்டலத்துக்குட்பட்ட விவசாய தோட்டங்கள், சிறு குறு தொழிற்சாலைகள், விசைத்தறிக் கூடங்களில் சோதனையிட்டனர்.
அதில், 15 மின் திருட்டுகளும், 21 மின் விதிமீறல்களும் கண்டறியப்பட்டன. சம்மந்தப்பட்ட மின் இணைப்பு உரிமையாளர்களிடமிருந்து, 22,33,550 ரூபாயும், விதிமீறியதற்காக 13,73,317 ரூபாயும், மின் திருட்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க சமரச தொகை 1,40,000 ரூபாய் என்று 37,46,867 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இது பற்றி மின்துறை அமலாக்கப்பிரிவு கண்காணிப்பு பொறியாளர் ஒருவர் பேட்டியின் போது கூறுகையில், ‘‘ விலையின்றி வழங்கும் விவசாயம் மற்றும் விசைத்தறிக்கான மின்சாரத்தை சிலர் வர்த்தக ரீதியாக பயன்படுத்துகின்றனர். அதை தடுக்கவே இந்த அபராதம், ’’ என்றார்
மாநிலம் முழுதும் மின் திருட்டை தடுக்கும் பணியில், வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகளும், முன்னாள் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில், கடந்த 25ம் தேதி வரை, 82 இடங்களில் மின் திருட்டை கண்டுபிடித்து உள்ளனர்.அவர்களிடம் இருந்து, 1.01 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது
ஏதோ கிராமத்தில் மற்றும் புறநகர் பகுதியில் தான் இந்த மின் திருட்டு நடைபெறுகிறது என்று அவசர முடிவுக்கு வந்து விட வேண்டாம். சென்னையின் பல பகுதிகளில் ஆண்டு தோறும் ஆடி மாத திருவிழாவில் இந்த அவலம் நடைபெற்று வருவதை கண்கூடாக காணலாம். பறக்கும் படை மற்றும் வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள் இருந்தும் அப்பட்டமாக இந்த விதி மீறல் அரங்கேறி வருகிறது இதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியாமல் போனது எப்படி என்று தெரியவில்லை. இது சாமி விவகாரம் இருந்து விட்டு போகட்டும் என்று விலகி செல்கிறார்களோ என்று தெரியவில்லை.

ஆடி மாதத்தில் எங்கெங்கு எல்லாம் அம்மன் கோவில் விழா நடக்கிறதோ, அங்கெல்லாம் பெரும்பாலும் மின்சாரம் சட்டபூர்வ வழிகளில் பெறப்படுவதில்லை என்று கூறலாம்.
அரசாங்க சொத்தை திருடியாவது எனக்கு திருவிழா நடத்து என்று எந்த அம்மனும் கேட்பதில்லை. அம்மன் பெயரால் இவர்கள் அரசாங்க சொத்தை திருடிதான் திருவிழா நடத்துகிறார்கள் என்பதை அந்த அம்மனும் உணருமல்லவா. அப்படி இருக்கும்போது அது தெய்வகுற்றம் ஆகாதா?
பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் நிஜ ஆன்மீக வாதிகளுக்கே அந்த மூன்று நாள் உத்சவம் ஒரு இடையூறாகத்தான் இருந்து வருவதை மறுப்பதற்கில்லை. அந்த தெருவில் நோய் வாய் பட்ட முதியவர்கள் இருப்பார்கள். கிராம பகுதியில் உள்ள ஆள் உயர் ஸ்பீக்கரை தொடர்ந்து அலற விடுவது வீட்டு வாசலில் இரவு முழுக்க எரிந்து கொண்டிருக்கும் அலங்கார விளக்கால் தூக்கம் கெடுவது எல்லாமே சகித்து கொள்ள முடியாத விஷயங்களே.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) மாதாந்திர வரவு-செலவுத் தரவுகள், அந்நிறுவனத்தின் நிதி நெருக்கடியை எடுத்துரைக்கின்றன. மின்பகிர்மானக் கழகம் மாதந்தோறும் ₹2,500 கோடி கட்டமைப்பு ரீதியிலான ரொக்கப் பற்றாக்குறையை (Structural Cash Shortfall) எதிர்கொண்டு வருவதாக வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது.
மாநிலத்தின் மின்சாரத்துறை கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு மின்சார வாரியக் குழுமம் தொடர் நிதி இழப்பைச் சந்தித்து வருகிறது. 2021ல் நிலுவைக் கடன் 1.67 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2026-ல் 2,47,130 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே சமயம், மின் வாரியத்தின் ஒட்டுமொத்த நஷ்டம் 1,82,361 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மின்திருட்டு என்றால் அது மிகையாகாது.
முறையான நுகர்வோருக்கான உயர் கட்டணங்கள்- திருட்டினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்காக, மின்வாரியம் பெரும்பாலும் முறையான நுகர்வோருக்கான கட்டணங்களை அதிகரிக்கின்றன, இது அதிக மின் கட்டணங்களுக்கு வழிவகுக்கிறது. இது, குறிப்பாக ஏற்கனவே கட்டுப்படியாகக்கூடிய கட்டணச் சிக்கல்களுடன் போராடிக் கொண்டிருக்கும் குடும்பங்கள், வணிகங்கள் மற்றும் தொழில்துறைகள் மீது ஒரு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது.
இங்கே நாம் இறுதியாய் கூற வருவது ஒன்று தான் நாம் ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் அல்லர். பக்தியின் பெயரால் நடத்தப்படும் திருட்டை எந்த சாமியும் மன்னிக்காது.
கோவில் விழாக்கள், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் அல்லது விழாக்கள் நடத்தும் போது, மின்சார வாரியத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற்று, அதற்கான கட்டணத்தைச் செலுத்தி தற்காலிக மின் இணைப்பு பெற வேண்டும். இல்லாதபட்சத்தில், விளக்கு அலங்காரங்களுக்கு பிரத்தியேகமாக ஜெனரேட்டர்களை பயன்படுத்துவதே தார்மீகமாகும்.
வசந்த் பாரதி
























Leave a Reply