பிரதமராவதற்கு விஜய்க்கு ஆசை வந்துவிட்டதா..?

-சாவித்திரி கண்ணன்

ஏழட்டு அமைச்சர்கள் கூறிவிட்டனர், விஜய் தான் எதிர்காலப் பிரதமர் என்று! ஏகத்தும் வட மாநிலங்களில் ரீல்ஸ் போடுவதென்ன? கருத்துக் கணிப்பு நடத்துவதென்ன..?  காங்கிரஸை கூட வைத்துக் கொண்டே கழுத்தறுப்பதென்ன…? முதல்வராக உட்கார்ந்தவுடனேயே  பிரதமர் ஆசை துளிர்விட்டதன் பின்னணி என்ன? இந்த சூழ்ச்சியின் பின்னணியில் யார் உள்ளனர்?

”சும்மா தமாஷ் பண்றாங்க” அப்படின்னு கடந்து போகத் தான் நினைத்தேன்.

ஆனால், ஒருவரையடுத்து ஒருவர் என அடுத்தடுத்து பல அமைச்சர்கள் பேசி வருகின்றனர்…!

தமிழகச் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, ​​மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார், “விஜய் இந்தியாவின் அடுத்த பிரதமர்” என்றார்.

“இன்றைய முதல்வர், நாளைய பிரதமர்” – அமைச்சர் ராஜேஸ்வரி.

ஆதவ் அர்ஜுனாவும் இதை வழி மொழிகிறார்.

சரி, இவங்க தான் சின்னப் பசங்க விபரமில்லாமல் பேசுகிறார்கள் என்றால்,

மூத்த அமைச்சர் செங்கோட்டையன் “வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் எங்கள் தலைவர் விஜயை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்; ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆளும் ஆற்றல் கொண்டவர் அவரே,”என்றார்.

அடுத்த இந்தியப் பிரதமர் தென்னிந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வர வேண்டும் என்றும், அதற்குத் தகுதியானவர் விஜய் தவெகவினர் பொதுமேடைகளில் பேசி வருகின்றனர்.

இதற்காக காசுக்கு வேலை செய்யும் கருத்து கணிப்பு நிறுவனங்களான இந்தியா டுடே – சி வோட்டர் இணைந்து  ‘மூட் ஆஃப் தி நேஷன்’ என்ற தலைப்பில்

2029 மக்களவைத் தேர்தலில் நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்வியை வைத்து,

பிரதமர் நரேந்திர மோடி (48.7%) வாக்குகள்,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (27.1%) வாக்குகள்

தவெக தலைவர் விஜய்க்கு 9.2% வாக்குகள்

என கருத்து கணிப்பு நடத்தி, 3-வது பிரதமர் வேட்பாளராக விஜய் உருவெடுத்துள்ளதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது.

இதைத் தவிர வட மாநிலங்களான மகாராஷ்டிரம், உத்திரபிரதேசம், ஹரியானா, பீகார் போன்றவற்றில் தளபதி விஜய் புகழ்பாடி தொழில் ரீதியாக யூ டியூப் நடத்தும் இளம் பெண்கள் பலர் ரீல்ஸ் போடுகிறார்கள்..!

இவங்க எல்லோருமே கிட்டத்தட்ட ஒரே கண்டெண்டை பேசுவதன் மூலம் இவர்கள் சுயசிந்தனையில் பேசவில்லை, பணத்திற்கு பேசுகிறார்கள் என பட்டவர்த்தனமாகத் தெரிகிறது…!

நமக்கு இப்ப ஒரு பழமொழி தான் நினைவுக்கு வந்தது அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பானாம்!

வெயிலுக்கு குடை பிடிக்கலாம், மழைக்கு குடை பிடிக்கலாம். இருட்டுக்கு குடை பிடிப்பவனை முரட்டு முட்டாள் என்று தான் அழைப்பார்கள்!

பிரதமருக்கு தகுதியும் இல்லை, வாய்ப்பும் இல்லை! ஆக, அப்படியாக ஆசைப்படும்  விஜய்க்கும் மேற்படி விவகாரம் பொருந்தும்.

தமிழ்நாட்டில் திமுகவின் வரைமுறையற்ற ஊழலும், இயற்கை வளச் சூறையாடலும், குடும்ப ஆதிக்க அரசியலும் மக்களிடையே ஏற்படுத்திய பெரு வெறுப்பே விஜய்க்கு முதலமைச்சராகும் பெரு வாய்ப்பானது. திமுகவுக்கு எதிராக அரசியல் பேசியதைப் போல பாஜகவுக்கு எதிராகப் பேசும் துணிச்சல் உண்டா விஜய்க்கு?  மோடி என்ற இமாலய சக்தி படைத்தவரை எதிர்க்கும் துணிச்சல் விஜய்க்கு இருக்கிறதா?

அப்படிப் பேசத் துணிந்தால் முதலமைச்சர் பதவியில் கூட அவர்கள் விஜய்யை விட்டு வைக்க மாட்டார்கள்! இப்படி ஆசைப்பட்டதால் தான் மிகச் சிறந்த நிர்வாகியான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலே அம்போவென ஆனார்.

ஆம் ஆத்மியின் வீழ்ச்சிக்கு அது அகில இந்திய அளவில் அகல கால் வைத்து கவனத்தை சிதறவிட்டதும்,, தேசிய அளவில் அதிக எதிரிகளை சம்பாதித்துக் அழிவைத் தேடிக் கொண்டதுமே காரணமாகும்.

இன்னொரு சாமார்த்திய அரசியல்வாதியான சந்திரசேகரராவ் தெலுங்கானா முதல்வரோடு நின்று இருந்தால், இப்போதும் அவரே முதலமைச்சராக தொடர்ந்திருப்பார்.

தன்னுடைய உயரம் தெரியாமல் தகுதியற்ற உயரத்திற்கு ஆசைப்படுவது இருக்கும் இடத்தையும் இழக்கச் செய்து தரைமட்டத்திற்கு சேர்த்துவிடும்.

இந்த அணுகுமுறை காங்கிரசாரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் என தவெக தலைவருக்கு தெரியாதா? அரசியலில் புத்தம் புதிதாக நுழைந்திருக்கும் தவெகவிற்கு காங்கிரஸ் இன்று ஒரு நட்பு அரணாக இருக்கிறது. தங்கள் பேராசையால் தவெகவினர் காங்கிரசையும் இழக்கத் தயாரானால் கஷ்டம் அவர்களுக்கு தான்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியிலும் ஒரு உண்மையான மானஸ்தர் இருக்கிறார் என்பதற்கு அமைச்சர் ராஜேஷ்குமார் எடுத்துக்காட்டாகும்.

“நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமராக வருவார். ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியினுடைய அமைச்சர்கள் பதவியில் நீடிக்க மாட்டார்கள். எல்லா இடங்களிலும் நாம் சொல்ல வேண்டிய கருத்து இதுதான். கட்சி இல்லாமல் இந்த ராஜேஷ்குமார் ஒன்றுமே கிடையாது; இந்த இயக்கம்தான் பெரிது. இந்த இயக்கம் என்ன நினைக்கிறதோ, நாளைக்கு அந்தப் பதவியை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று சொன்னால், அடுத்த நிமிடமே சென்று விடுவோம்” என ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.

சபாஷ், இது தான் அனைத்து காங்கிரஸ்காரர்களின் உணர்வாகவும் இருக்க முடியும்.

“இந்தியா’ கூட்டணிக்குத் தலைமை தாங்குவது காங்கிரஸ் கட்சி. அந்த அணியின் வேட்பாளராக ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட முடியும். இதற்கு வேறு எந்த மாற்று ஏற்பாட்டுக்கும் வாய்ப்பே இல்லை. என்று வைகோ அவர்களும் தெரிவித்துள்ளார்.

இதற்கும் மேலாக நாம் விஜய்க்கு தெரிவிக்க வேண்டியது என்ன்வென்றால்,

இன்னும் முதலமைச்சர் என்ற பொறுப்பின் நிர்வாக அரிச்சுவடியைக் கூட நீங்கள் அறியவில்லை. தட்டுத்தடுமாறி இப்போது தான் அரசியல் பழகி வருகிறீர்கள். நீங்கள் ஐந்து வருடம் தொடர்வீர்களா? என்பதையே இங்கு திமுகவும், அதிமுகவும் கேள்விக்குறியாக்கியுள்ளன? உங்கள் முழு ஆற்றலைப் பயன்படுத்தினால் கூட இந்த சவாலை சந்திப்பதே கஷ்டம் தான்.

இந்தியாவிற்கு தலைமை தாங்குவது என்பது அவ்வளவு சுலபமல்ல, கடந்த 14 ஆண்டுகளாக பாசிச பாஜக மோடி ஆட்சியை எதிர்த்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் போராட்டங்களிலும், அதில் அவர் சந்திக்கும் அவமானங்களிலும் நூற்றில் ஒரு பங்கேனும் நீங்கள் சந்தித்ததுண்டா? சேரிகளிலும், குக்கிராமங்களிலும், மலை வாழ் பழங்குடிகளின் இடத்திலும் தங்கி பழகி இந்தியாவின் பன்மைத்துவ கலாசாரத்தை அனுபவ ரீதியாக படித்தவர் ராகுல் காந்தி.

விஜய்யின் முதல்வர் நாற்காலி மீது ஆசைப்படுகின்ற தவெக தலைவர்களின் சூழ்ச்சியா இது என்றும் தெரியவில்லை.

ஊமைத்துரையின் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பது அவர் வாயைத் திறந்தால் தான் தெரியும்!

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time