அருந்தொண்டாற்றும் மூவருக்கு அறம் விருதுகள்!

-சாவித்திரி கண்ணன்

ஒவ்வொரு ஆண்டும் விவாதிப்போம்.

ஆனாலும், செயல்படுத்த முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது!

அறம் ஆண்டு விழாவில் தமிழ்ச் சமூகத்திற்கு தொண்டு செய்வோர் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து கெளவரவப்படுத்த வேண்டும் என்பது! இந்த ஆண்டு தான் இது சாத்தியமாயிற்று.

வழக்கறிஞர் பொ.ரத்தினம்; ஒரு அபூர்வ மனிதர். வழக்கறிஞர் தொழிலை பெரும் வருமானத்திற்கானதாகவும், சமூக செல்வாக்கு பெறுவதற்கானதாகவும் கருதாமல் இந்தத் தொழிலை ஏழை, எளியோர், தலித்துகள்,பழங்குடிகள்..இவர்களுக்கான பாதுகாப்பு அரணாக்கியவர்.

அந்த வகையில் ஏகப்பட்ட வழக்குகளை நடத்தியவர். குறிப்பாக சாதி ஆதிக்கவாதிகளால் நிகழ்த்தப்பட்ட மேலவளவுப் படுகொலை, சென்னகரம் பட்டிப் படுகொலை, திண்ணியம் வன்கொடுமை, கண்ணகி முருகேசன் படுகொலை.. என்பனவற்றில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவும் அரும்பாடுபட்டவர்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக சமுகப் பணியாற்றும் வழக்கறிஞர் ரத்தினம் தன்னைப் போலவே சமூகத் தொண்டில் ஆர்வமுள்ள வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள்  அடையாளம் கண்டு அவர்களையும் இத் தொண்டில் இணைத்துக் கொண்டவர். அந்த வகையில்  கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை கொலை வழக்கை 17 ஆண்டுகளாக நடத்தி 12 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு மரண தண்டனையும், இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும்  கிடைக்க காரணமானவர்.

தாயம்மாள் அறவாணன்; பேராசிரியர் , தமிழ் ஆய்வாளர், சொற்பொழிவாளர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.  காலஞ்சென்ற தமிழ் அறிஞர் க.ப. அறவாணன் அவர்களின் இணையர்.  ஒளவையார் என்ற பெயர் ஒருவருக்கானதல்ல, பல பெண்பாற் புலவர்கள், பல்வேறு காலட்கட்டங்களில் எழுதியவை ஒளவை என ஒரே பெயருக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை தமிழ் சமூகத்திற்கு  முதன்முதலாக தன் ஆய்வின் மூலமாக வெளிப்படுத்தியவர் தாயம்மாள்.  ‘ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை’ உள்ள பெண்பாற் புலவர்கள் பற்றி ஆய்வுசெய்து அவர்களின் வரலாற்றையும் கவிதைகளையும் அரும்பாடுபட்டு தேடி கண்டடைந்து தொகுத்து  புத்தகமாக  வெளியிட்டவர்.

’திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு’ பெண் இன்று நேற்று அன்று, கண்ணகி மண்ணில், தமிழ் சமூகவியல் கருத்தாடல், ஒளவையார் அன்று முதல் இன்று வரை, பெண்ணின் பெருந்தக்கது இல் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியவர். தாயம்மாள் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தமிழ் சமூகத்தில் பெண்களுக்கான முக்கியத்துவத்தை, அவர்களின் ஆற்றலை தொடர்ந்து கவனப்படுத்தி வருபவர்.

கம்பூர் செல்வராஜ்;  இவரது பிரதான அடையாளம் சுற்றுச் சூழல் போராளி என்பதாகும்.  மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தைச் சேர்ந்த  பண்பாட்டு வரலாறு , சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த அரிட்டாபட்டி மலையை டங்ஸ்டன் கனிம சுரங்க பயன்பாட்டில் இருந்து காப்பாற்ற பல்வேறு மக்கள் இயக்கங்களோடு இணைந்து சுமார் ஒரு லட்சம் மக்கள் திரள் பேரணி போன்றவை நடத்திய முன்னணி படை வீரர்களுள் முக்கியமானவர் கம்பூர் செல்வராஜ். மேலும் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் கனிமச் சுரங்கம் மற்றும்  கிரானைட் கல் குவாரிகளுக்கு எதிரான சூழலியல் மற்றும் மக்கள்  திரள் போராட்டங்களை முன்னெடுத்துவரும் களச் செயற்பாட்டாளர் ஆவார்.

இத்துடன் கள்ளச் சாராயம், டாஸ்மாக் மதுக்கடை ஆகியவற்றை எதிர்த்து பெண்களை ஒருங்கிணைத்து போராட்டங்கள் நடத்தி உள்ளார். உள்ளாட்சி அமைப்புகளான கிராம சபைகள் சுயாட்சி அதிகாரத்துடனும், ஊழல் தவிர்த்து இயங்கவுமான தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

குடிநீர் பிரச்சினைக்காக கொட்டாம்பட்டி பாசன கால்வாய்  இயக்கத்தை நண்பர்களுடன் இணைந்து தொடங்கி 100 கீ.மீ நடைபயணம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தியவர். தற்போது மதுரை மாவட்டத்தில் கல்லாங்காடு பகுதியில் சிப்காட்டை எதிர்த்து போராடும் அம் மக்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகிறார். இது போன்ற மக்கள் பிரச்சினைகளுக்காக போராடியதில் சுமார் 20 வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்.

இந்த மூவருக்கும் சென்னை செல்லம்மாள் கல்லூரி அரங்கில் வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ள அறம் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவில் மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன், உ.சகாயம், ( இந்திய ஆட்சிப் பணி ஓய்வு) சமூக செயற்பாட்டாளர் துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொள்ளும் விழாவில் வழங்கி கெளரவிக்க உள்ளோம். அனைவரும் வருக.

சாவித்திரி கண்ணன்

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time