பரந்தூரை காப்பாற்றிவிட்டு, தமிழகத்தையே தாரை வார்ப்பதா?

-சாவித்திரி கண்ணன்

நகர்ப்புற வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என்பதாக விவசாய நிலங்களையும், நீர் ஆதாரங்ளையும் எந்தக் கேள்வியுமின்றி தூக்குவதற்கு புதிய, புதிய சட்டங்களை ஒவ்வொரு ஆட்சியும் கொண்டு வருகின்றன. பரந்தூரில் விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த தவெக அரசு, தற்போது பரந்துபட்ட தமிழகத்தையே பாலைவனமாக்க ஒரு சட்டமசோதா கொண்டு வரலாமா?

தமிழக சட்டப்பேரவையில் செப்டம்பர் 1, 2026 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பி. ராஜ்குமார், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்ட திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

இந்த மசோதா,  ‘நன்செய் நிலங்கள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமோ, அந்த மாவட்ட ஆட்சியரிடமோ கேட்க வேண்டியதில்லை.  அது தொழிற்சாலைத் தேவைக்கு பயன்படும்’ என்ற பட்சத்தில் அப்படியே தொழில் அதிபர்களுக்கு தூக்கி கொடுக்கும் பேரதிகார மிக்க ஒரு புதிய அமைப்பை உருவாக்கி, அதன் தலைவரான நகர ஊரமைப்பு திட்ட இயக்குநர் என்ற பதவிக்கு கட்டற்ற அதிகாரம் வழங்கப் போகிறார்களாம்.

ஏற்கனவே நகர்ப்​புற வளர்ச்​சிக் குழு​மங்​கள் என்ற அமைப்பு இருக்கிறது. நகரத் திட்​ட​மிடல், உள்​கட்​டமைப்பு மேம்​பாடு, வளர்ச்​சித் திட்​டங்​களைச் செயல்​படுத்​துதல், ஒழுங்​குபடுத்​துதல் போன்ற பல்​வேறு பணி​களை மேற்​கொண்டு வரு​கின்​ற நிலையில் புதிய நிர்வாக அமைப்பு என்பது மிகப் பெரும் வெட்டிச் செலவு.

ஆன போதிலும் பெரு முதலாளிகள் கேட்ட மாத்திரத்தில் விவசாய நிலங்களை நீர் ஆதாரப் பகுதிகளையும் நகர்புற மேம்பாடு என்ற பெயரில் அதிரடியாக காவல் துறையை களத்தில் இறக்கி, விவசாயிகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் நிலத்தை எடுத்துக் கொடுத்து சேவை செய்வதற்கு தவெக அரசு இந்த அமைப்பை உருவாக்குகிறது.

இந்த அமைப்பிற்கு ஒரு முழுநேரத் தலை​வரை​யும், உறுப்​பினர் செயலரை​யும் நியமிக்க உள்ளார்களாம். அதில் மாவட்ட ஆட்​சி​யரையும் ஒரு டம்மி உறுப்பினராக வைத்துக் கொள்வார்களாம்.

‘தொழிற்சாலைக்கு சம்பந்தமில்லாத – முழுமையான விவசாயப் பகுதிகளை – நில மேம்​பாட்​டுக்​காக எடுக்கிறோம்’ எனச் சொல்கிறது இந்த மசோதா. விவசாயப் பகுதிகளில் தொழிசாலை நிறுவுவது என்பது நில அழிப்பாகும். அதை மூடி மறைக்க தேன் தடவிய வார்த்தையாக நிலமேம்பாட்டிற்கு எடுப்பதாக அப்பட்டமாக பொய்யுரைக்கிறது, இந்த மசோதா.

‘உள்​ளாட்சிகளிடம் அனுமதி பெற்றே எந்த ஒரு தொழிற்சாலையும் அந்தப் பகுதிக்கு வேண்டுமா? வேண்டாமா? என முடிவெடுக்க வேண்டும்’ என்ற முந்தைய சட்டத்தை காலி செய்கிறது, இந்த புதிய சட்டம். ஆனால், அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இப்போதும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி இல்லாமல் அமெரிக்க அதிபரே நினைத்தாலும் எதையும் செய்ய இயலாது என அங்கு ஜனநாயக கட்டமைப்பு வலுவாக உள்ளது. இந்தப் புதிய சட்டம் உள்ளாட்சிகளின் அதிகாரத்தை சுத்தமாக காலி செய்கிறது.

ஏன் இப்படி என்றால், உள்ளாட்சி அமைப்புகளை கேட்க வேண்டும் என்றால், கிராம சபை கூடி மக்களிடம் கேட்டு முடிவெடுக்க வேண்டும். கிராம மக்கள் எப்படி தாங்கள் உயிருக்கு உயிராக கருதும் விவசாய நிலங்களை விட்டுக் கொடுப்பார்கள்…? இதனால் உள்ளாட்சி அமைப்புகள் நிச்சயம் தொழிற்சாலை நிறுவ தங்கள் இடத்தை தரமாட்டார்கள். ‘உங்களை கெஞ்சி கேட்டு, நஷ்ட ஈடெல்லாம் தந்து நிலத்தை தூக்க கால தாமதமாகிறதே. தொழில் அதிபர்கள் எவ்வளவு பெரிய மனுஷங்க. அவங்களை காக்க வைப்பது ஏற்புடையது அல்ல’ என்கிறது, இந்த புதிய சட்டம்!

ஆக, ‘கேட்க வேண்டியதில்லை என்று சட்டம் போட்டுவிட்டால், சட்டப்படி உங்களை விரட்டி அடித்து இந்த நிலங்களை தூக்கித் தர எங்கள் அரசுக்கு உரிமை உள்ளது’ என்கிறது இந்த புதிய சட்டம்.

இதே போன்ற ஒரு அக்கிரமான மசோதா திமுக ஆட்சியில், ‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்ட மசோதா 2023’  என்ற பெயரில் ஏப்ரல் 21, 2023 அன்று  கொண்டு வரப்பட்டது.

அப்போது இந்த சட்டத்தை எதிர்த்து ‘அறம் இணைய இதழ்’ சார்பாக சென்னையில் ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

திமுக அரசு கொண்டு வந்த மசோதா 100 ஹெக்டேருக்கும்  (247 ஏக்கர்)  அதிகமான  பெரிய நிலப்பரப்பை அதிரடியாக – உள்ளாட்சி அமைப்புகளை – கேட்காமல் தூக்கலாம் என்று சொன்னது. இதனை அன்று தமிழகத்தின் ஒட்டு மொத்த விவசாயிகளும் எதிர்த்தனர். ஆனால், இந்த புதிய சட்டம்,  ‘நிலப்பரப்பளவு என்ற கணக்கெல்லாம் வேண்டாம். எங்களுக்கு தேவை என்றால் உடனே தூக்குவோம். கலெக்டரே கூட தடுக்க முடியாது. அவரை விட ஒரு பெரிய பதவியை இந்த நில எடுப்புக்காகவே உருவாக்குகிறோம்’ என்கிறது.

ஆகவே, இந்த சட்டம் அந்த சட்டத்தை விடவும் அக்கிரமமானது.

விவசாயத்தையும், விவசாயிகளையும், உள்ளாட்சி அமைப்புகளையும் இந்த சட்டம் துச்சமாக மதிக்கிறது.

வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், உள் நாட்டு அதானி, அம்பானி போன்ற திமிங்கலங்களுக்கும் தடையின்றி சேவை  செய்வதையே புண்ணியமாக கருத்தும் மத்திய பாஜக ஆட்சியாளர்களின் ஏவலாளாக இங்கே வீற்றிருக்கும் தலைமை செயலாளர் சாய்குமாரின் திட்டமே இந்த சட்டமாக வடிவம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் யார் ஆட்சித் தலைமைக்கு வந்தாலும் அவர்கள் அதிகாரிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளே என்பது ஒ.பன்னீர் செல்வம் காலத்தில் தொடங்கியது. அது அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின், விஜய்..எனத் தொடர்கிறது.

உலக வங்கி கடன், வெளி நாட்டுக் கடன்களை வாங்கி குவித்துவிட்ட பிறகு அவர்களின் கட்டளைகளை மீற முடியுமா? அல்லது கண்ணீர் விடும் விவசாயிகளின் கதறலுக்காவது காது கொடுக்க இயலுமா?

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time