எத்தனை நாட்கள் போராடினாலும் ஏறெடுத்தும் பார்க்காத அணுகுமுறை மாறியுள்ளது. காவல்துறை அடக்குமுறை தவிர்த்து, அமைச்சர்கள் தேடி வந்து கனிவாக உரையாற்றியது மக்களாட்சியின் மாண்புக்கு சிறப்பு சேர்பதாகும். அதே சமயம் ஒப்பந்த முறை ஒழிப்பிலும், கண்ணியமான ஊதியத்தை உறுதிபடுத்தி பணி நிரந்தரம் செய்வதிலும் தயக்கமா? தடுமாற்றமா? அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்மையா..?
மகிழ்ச்சி, இதைத் தான் எளிய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்!
ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கடந்த 16 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடையே அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல்குமார்.. ஆகியோர் நேரடியாக சென்று சந்தித்தது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறையாகும்.
எளிய மக்களின் கோரிக்கைகளுக்கு முதலில் செவி கொடுக்க வேண்டும். கனிவோடு அணுக வேண்டும். நம்பிக்கை அளிக்க வேண்டும்..இது மூன்றும் இந்த சந்திப்பில் நடந்தேறியுள்ளது.
தோழர்கள் பாரதி, எஸ்.குமாரசாமி ஆகியோரின் உறுதி குலையாத தலைமையில் தூய்மை பணியாளர்கள் முதல்கட்ட வெற்றியை பெற்றுள்ளனர். அமைச்சர்கள் தேடி வந்து தொழிலாளர்கள் தலைவர்களுடன் இரண்டு மணி நேரம் அமர்ந்து விலாவாரியாக பேசி சிலவற்றுக்கு தீர்வும் கண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உழைப்போர் உரிமை இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதி,

# உணவு படியாக தினசரி ரூ.50 ஒத்துக்கொள்ளப்பட்டது.
# 197 வார்டுகளில் உடனே கழிப்பறை வசதி, மீதம் உள்ள வார்டுகளில் இடம் கண்டறிந்து அமைக்க ஒப்புதல்
மழை காலத்துக்கு ரெயின் கோர்ட் தரவும், வாரம் ஒரு கையுறை தரவும், தினசரி இரண்டு முகக்கவசம் தரவும் ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது…” என தெரிவித்துள்ளார்.
இவையாவும் அடிப்படைத் தேவைகளாகும். சொல்லப்போனால் இதைக் கூட தராமலா இவர்கள் இத்தனை ஆண்டுகள் வேலை வாங்கப்பட்டுள்ளனர் என ஆச்சரியம் தான் ஏற்படுகிறது.
அதிகாலையிலேயே வீட்டைவிட்டு வந்து வீதிகளில் தூய்மை பணி செய்வோருக்கு உணவுப்படி இன்றியமையாதது. சென்ற ஆட்சியில் சாப்பிட முடியாத உணவை ஒரு ஒரு காண்டிராக்டர் மூலம் வழங்கினர். அது அவர்களால் உண்ண முடியாமல் வீணாணது. ஆகவே, பணமாக தந்துவிடுவதே உத்தமம்.
மழையென்றும்,வெள்ளமென்றும் பாராமல் பணியாற்றுவோருக்கு ரெயின்கோர்டும், குப்பைகளில் உழல்வோருக்கு கையுறையும், முகக்கவசமும் இன்றியமையாதவையே.
சென்ற திமுக ஆட்சியில் 100 நாட்களுக்கு மேலாகப் போராடிய போது இந்த உத்திரவாதங்கள் கூடவா தரவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த கால வழக்குகளை திரும்ப பெற ஒப்புதல் கொடுத்ததும், தினசரி ஊதியம் 832 என உயர்த்தப்பட்டிருப்பதும் நியாயமானது.
4,7,8 ஆகிய மண்டலங்களில் பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதிதாக 300 வாகனங்கள் வழங்குவது நிர்வாகம் சார்ந்த ஒரு தேவையான நடவடிக்கை தான்.
பணியின் போது இறந்தவர்கள் 7 பேருக்கு இழப்பீடு தொகை கேட்டுள்ளோம். நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். இதுவும் கேட்டுத்தர வேண்டிய ஒன்றல்ல, எப்படியோ இந்த அளவுக்கான முன்னேற்றமே ஒரு அதிசியம் தான்!
மற்றபடி ’’மகபேறு விடுப்பு, மாதவிடாய் விடுப்பு போன்றவற்றை அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பேசப்படும். அக்டோபர் 3-ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமைச்சர்கள் முதல்வரை நிச்சயம் சந்திக்க வைக்கிறோம் என்று உறுதியளித்துள்ளனர். அக்டோபர் 3 ந் தேதி நல்ல செய்தி வரும் என்று அமைச்சர்கள் சொன்னார்கள்” என பாரதி தெரிவித்துள்ளார்.
எல்லாம் சரி, பணி நிரந்தரம் என்ற முக்கிய கோரிக்கைக்கு, ”கஜானா காலியாக இருக்கிறது. அரசு கடனில் இருக்கிறது. முயற்சிக்கிறோம்…” என அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

தூய்மைப் பணி என்பது தினசரி செய்ய வேண்டியதாகும். ஆகவே, இதற்கு எப்படி நிரந்தரப் பணியாளர்களை போடமாட்டோம் என சொல்ல முடியும்?
கடந்த பல வருடங்களாக இப்படியே இவர்களை ஏய்த்து வேலை வாங்கிவிட்ட அதிகாரிகள் இதற்கு முட்டுக்கட்டை போடத் தான் செய்வார்கள். ஆனால், இதை ஒரு கொள்கை முடிவாகவே அரசு எடுத்து தூய்மை பணியாளர்களை நிரந்தப்படுத்தி கண்ணியமான ஊதியத்தை உறுதிபடுத்த வேண்டும்.
”கஜானா எப்படி காலியானது” என்றால், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் வழங்கல், தெருவிளக்கு,சாலை போடுதல் உள்ளிட்ட பல பணிகளில் வரம்பு மீறி நடைபெற்ற ஊழல்களால் ஏற்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்புகள் தாம்.
‘கடந்த அதிமுக, திமுக அட்சி காலத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும், கே.என். நேருவும் என்னென்ன வழிமுறைகளில் பல ஆயிரம் கோடி இழப்புக்கு காரணமானார்கள் என்பதை கண்டறிந்து தவிர்த்தாலே, தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதெல்லாம் நிதிச்சுமை தரும் ஒன்றல்ல’ என்பது நன்கு விளங்கும்.
மழைநீர்க் கால்வாய், நடைபாதை அமைக்கும் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களில் சென்னை மாநகராட்சியில் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்று மணல் என கணக்கெழுதி, விலை குறைவான எம்-சாண்ட்டை பயன்படுத்திய வகையிலும் அதிலும் சந்தை விலையில் 30 சதவீதம் அதிகமாக குறிப்பிட்ட வகையிலும் சென்னை மாநகராட்சியில் பல்லாயிரம் கோடிகளில் ஊழல் நடந்ததுள்ளன.
942 கோடி ரூபாய் உபரி நிதி வைத்திருந்த சென்னை மாநகராட்சி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.என்.நேரு ஊழல் டெண்டர்களால் சூறையாடப்பட்டு, ரூபாய் 3434 கோடிகள் கடனில் வீழ்ந்துள்ளது.
சந்தையில் ஒரு எல்இடி பல்பு ரூ 600க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதை ரூ 4,500 க்கு வாங்கியதாக கணக்கு காட்டியதில் ரூ மட்டுமே 500 கோடி! பிளிச்சிங் பவுடர் விலையை ஐந்து மடங்கு அதிகமாக கணக்கெழுதி கொள்ளை அடித்தது..என பலவற்றை பட்டியலிடலாம்.
மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இல்லை. ஆட்சியாளர்களுக்கே உண்டு. அதிகாரிகளை அமைதிபடுத்திவிட்டு, நியாயமானவற்றை நிறைவேற்றுங்கள்.
இதில் மிக முக்கியமாக சொல்ல வேண்டியது. போராட்டம் நடத்திய சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மட்டுமே இந்த வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் தமிழ்நாடு முழுக்கவுள்ள அனைத்து தூய்மை பணியாளர்களும் – அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளிலும் நடைமுறைக்கு வந்து பலனடையும்படி செய்யுங்கள்!
அரசுப் பணிகளில் எளியோருக்கு வாழவியலாத ஊதியம் தரும் பண்ணையார்த்தன போக்குகள் பழைய ஆட்சிகளின் பழங்கதையாகட்டும். ஒப்பந்த முறை ஒழிப்பிலும், கண்ணியமான ஊதியத்தை உறுதிபடுத்தி பணி நிரந்தரம் செய்வதிலும் தவெக அரசு திட்ட்டவட்டமாக கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும்.
ஏழைகளுக்கு செய்யும் நியாயம், இறைவனுக்கு செய்யும் கணிக்கையிலும் உயர்ந்தது.
சாவித்திரி கண்ணன்
























Leave a Reply