முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் இன்று பேசிய பேச்சு பெரிய வீச்சை பெற்றுள்ளது. திமுகவை எதிர்ப்போர் இதை கொண்டாடலாம். ஆனால், ஆட்சியில் உள்ளவர் இப்படி ஆவேசமாக உரக்கப் பேசுவது ஒரு வகையில் இயலாமையே..! திமுகவின் வலையில் விஜய் வீழ்ந்துவிட்டார்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் கோட்டை விடுகிறார், விஜய்;
அதிகாரத்தை இழந்த திமுகவினர் இயலாமையால் கோபம் மேலிடப் பேசி வருகிறார்கள் என்றால், சகல அதிகாரங்களுடன் பதவியில் வீற்றிருக்கும் முதலமைச்சர் பதிலுக்கு கோபப்பட வேண்டியதில்லை.இன்று முதலமைச்சர் விஜய் கடந்த பல நாட்களாக திமுகவினர் வெளிப்படுத்தி வந்த வன்ம பேச்சுகளுக்கும், சட்டமன்றத்தை நடத்தவிடாமல் செய்த அராஜகத்திற்கும் கோபமாக எதிர்வினையாற்றியுள்ளார்.
உண்மையில் முதலமைச்சர் விஜய்யின் இயல்பு மோதல் போக்கை விரும்புவதல்ல. அவரை அவரது இயல்பு நிலை பிறழ வைத்ததில் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர்.
இன்னும் கரூர் மரணங்களை அம்பலப்படுத்தும் வாய்ப்பை இந்த அரசால் சாத்தியப்படுத்த முடியவில்லை.
டாஸ்மாக் நடத்தியதில் திமுக அரசு மூன்றில் ஒரு பங்கு மது பானங்களை சட்ட விரோதமாக கணக்கில் காட்டாமல் விற்று சொந்தமாக ஆதாயம் அடைந்த விவகாரத்தில் முதலமைச்சர் இது நாள் விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை. கரூர் கேங்க் மீதும், செந்தில் பாலாஜி சகோதரர்கள் மீதும் எந்த வகையிலும் தவெக அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை தூக்கி விலை பேசியதில் செந்தில் பாலாஜி சகோதரர்களையும், அவரது சகாக்களையும் விசாரித்து சிறையில் தள்ள முடியவில்லை. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சென்றும் உயர் நீதிமன்றம் செல்லும் போது எளிதில் விடுவிக்கப்பட்டு விடுகின்றனர்.
அதே போல முன்னாள் அமைச்சர் ஊழல் மன்னர் எ.வ.வேலு சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு தான் நடத்த முடிந்தது. அவரும் உச்ச நீதிமன்றம் சென்று எளிதில் தன்னை விடுவித்துக் கொண்டார்.
அதே போல கே.என். நேரு சம்பந்தப்பட்ட இடங்களில் ஏற்கனவே அமலாக்கத்துறையே ரெய்டு நடத்தி சில ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்திய போதும் அதற்கு மேல் பாஜக அரசே அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
தன்னை கீழ்த்தரமாக பாலியல் ரீதியில் ஆபாசமாகப் பேசிய உதய நிதியை விசாரணைக்கு உட்படுத்துவதையே உயர் நீதிமன்றம் தலையிட்டு தடுக்கிறது. நியாயப்படி இந்த விவகாரத்தில் தஞ்சை மாவாட்ட எல்லைக்குட்பட்ட மாஜிஸ்திரேட் விசாரிக்க முடியும்,. ஆனால், தன் வரம்பை மீறி உயர் நீதிமன்றம் தலையிட்டு ஆர்டர் போடுகிறது.

அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய எல்லா பிரச்சினைகளையும் ஊழல் அரசியல்வாதிகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதும், அங்கு அவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைப்பதுமான நிலையில் ஒரு மாநில அரசால் சட்ட பூர்வமான கடமைகளைக் கூட செய்ய முடியவில்லை. தன் ஆட்சியை ஆறு மாதத்திற்குள் வீழ்த்தி விடுவோம் என்று சொல்லி எகத்தாளமாகப் பேசும் ஊழல் பெருச்சாளிகள் மீது முதலமைச்சர் விஜய்யால் ஒரு சிறு நடவடிக்கை கூட எடுக்க முடியவில்லை. இந்த இயலாமை அல்லது ஆற்றாமையின் வெளிப்பாடே விஜய்யிடம் இன்று ஆத்திரமாக வெளிப்பட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி பிரச்சினையில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதே இல்லை. இதைத் தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலில் ஒ.பி.எஸ் வழக்கு போட்டவுடன் ஒரு நீதிபதி சொன்னார். உடனே அவர் தன் வழக்கை விசாரிக்க கூடாது என அழுத்தம் தந்து அவரை விலக வைத்தார் ஒ.பி.எஸ். பாஜகவுக்கு ஒ.பி.எஸ்சிடம் இருந்த பரிவு காரணமாக நீதிமன்றத்தின் வாயிலாக அதிமுகவையே முடக்கியது பாஜக.
அந்த வகையில் இன்றைக்கு அதிகாரம் இழந்துள்ள நிலையில் பாஜகவிடம் அடைக்கலமாகி தன்னை தற்காத்துக் கொள்ள நீதிமன்ற லாபியை வலுவாக நம்புகிறது திமுக.
சர்காரிய கமிஷன் திமுக ஊழல் தொடர்பாக அம்பலப்படுத்திய ஊழல்களை சட்ட சபையில் எடுத்துரைத்த விஜய் அவர்கள், சர்காரிய விசாரணைக்கு பிறகு தன்னை தற்காத்துக் கொள்ள அன்றைய மத்திய ஆட்சி மையமான இந்திராகாந்தியின் உறவை புதுப்பித்து தப்பித்துக் கொண்டதை நினைவில் கொள்ள வேண்டும்.
தன்னை தற்காத்துக் கொள்ள மத்திய ஆட்சியாளர்களிடம் மண்டியிட தயார் இல்லாத நிலையால் தான் ஜெயலலிதா சிறை செல்ல நேரிட்டது.
இன்றைக்கு சட்ட சபையில் திமுகவுக்கும் தவெகவுக்கு மோதல் முற்றியுள்ள நிலையில் விஜய்யை தாக்கி நயினார் நாகேந்திரன் ஆவேச அறிக்கை வெளியிடுகிறார். இது நாள் வரை திமுக ஊழல் கட்சி என்று பேசிய பாஜக, தேர்தல் நேரத்தில் திமுக ஊழல்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்ட பாஜக தலைமை இன்று திமுகவுக்கு பக்கபலமாக ஓடி வருவது ஏன்? பாஜகவின் தொங்கு சதையான டி.டி.வி தினகரனும் தவெகவை தாக்குவதை கவனிக்க வேண்டும்.
திமுகவை பெரும் எதிரியாக காட்டி இங்கு கட்சியை வளர்த்த தமிழக பாஜக, இன்று திமுகவை காப்பாற்ற தன் அதிகாரத்தை மறைமுகமாக பயன்படுத்துவது கேவலத்திலும் கேவலமாகும்.
அதே போல தனது ஜென்ம எதிரியான திமுக இன்று சட்ட சபையில் விமர்சிக்கப்பட்ட போது தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தாங்கள் திமுகவுடன் கைகோர்க்க முயன்றது முஸ்லீம் லீக் உறுப்பினர்களால் அம்பலமான போது அதிமுக பதறுகிறதே.
இன்னும் எத்தனை காலம் இந்த கூத்துக்கள் தொடருமோ?

திமுக ஒரு தீய சக்தி என்பது புதிதல்ல, 50 வருடத்திற்கு முன்பே உறுதிபடுத்தப்பட்ட உண்மை.
அதே சமயம் தன்னைப் போலவே அதிமுகவையும் மாற்றி, ஒரு நாணயத்தின் இரு பக்கமென மெயிண்டைன் செய்து பலனடைந்தது திமுக. பேசிப் பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை என்ற தங்களின் வழக்கத்தை அதிமுகவிற்கும் தொற்றச் செய்தது தான் திமுகவின் வெற்றி.
தமிழக அரசியலில் அதிமுக இருந்த இடத்தில் தன்னை நிறுத்தி தக்க வைத்துக் கொள்ள பார்ப்பது தான் தவெக அரசியல் என்றால், மாற்றம் வேண்டி ஓட்டு போட்ட மக்களுக்கு ஏமாற்றம் தான்.
திமுக தன்னை தற்காத்துக் கொள்ள பின்னியுள்ள இரும்பு வலையை விலக்கவும், சட்டப்படி அவர்களை தண்டிக்கவும் சாதுரியமாக காய் நகர்த்தி சாதிப்பதில் தான் இருக்கிறது, விஜய் ஆட்சியின் சாதுரியம்.
ஆகையால், முதலமைச்சர் விஜய்யின் ஆவேச பேச்சை தவிர்த்து திமுகவின் ஊழல்கள் மீது என்ன ஆக்ஷன் என்பதை மக்களுக்கு செயலில் காட்டட்டும்.
இந்த இரு கட்சிகளின் மோதலை பார்த்தும், கேட்டும், அவை பற்றியே அணி பிரிந்து விவாதித்துக் கொண்டும் நாட்டு மக்களின் நேரம் வீணாகிறதே என்பது தான் நமது வருத்தம்.
சாவித்திரி கண்ணன்
























முதல்வர் விஜய் திமுகவை அம்பலப்படுத்தியது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மகிழ்ச்சி மட்டுமே போதுமானதல்ல. மக்கள் குறைகளைத் தீர்ப்பதில், ஆட்சியை செம்மையாகக் கொண்டு செல்வதில் விஜய் தன்னை நிரூபிக்க வேண்டும்.
எம்ஜிஆர் ஒன்றும் தெரியாத பாப்பா. திமுக தான் அவருக்கு கற்றுத் தர வேண்டும். திமுக மீதான வெறுப்பு மனநிலையும் துக்ளக் வாசமும் கலந்த கட்டுரை.
//அதே சமயம் தன்னைப் போலவே அதிமுகவையும் மாற்றி, ஒரு நாணயத்தின் இரு பக்கமென மெயிண்டைன் செய்து பலனடைந்தது திமுக. பேசிப் பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை என்ற தங்களின் வழக்கத்தை அதிமுகவிற்கும் தொற்றச் செய்தது தான் திமுகவின் வெற்றி.// எம்ஜிஆர் ஒன்றும் தெரியாத பாப்பா. திமுக தான் அவருக்கு கற்றுத் தர வேண்டும். திமுக மீதான வெறுப்பு மனநிலையும் துக்ளக் வாசமும் கலந்த கட்டுரை.