பாஜக நிர்பந்தம் – அதிமுக, அமமுக கூட்டணி சாத்தியமா?

-சாவித்திரி கண்ணன்

அதிமுகவிற்குள் நுழைவதற்கு பாஜகவின் மூலம் பல்வேறு அழுத்தங்களை செய்து பார்த்து அது தோல்வி அடைந்த நிலையில் அமமுகவை கூட்டணியாகவாவது அதிமுக கூட்டணியில் அங்கீகரிக்க வேண்டும் என சசிகலாவும், டி.டி,வி.தினகரனும் பாஜகவிடம் மன்றாடியுள்ளார்கள். இதைத் தொடர்ந்து சசிகலாவை அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அழுத்தம் தந்து வருகிறது பாஜக தலைமை. அமித்ஷா மீண்டும்,மீண்டும் எடப்பாடிக்கும்,பன்னீருக்கும் இந்த அழுத்தத்தை தொடர்ந்து தந்து வருவது அதிமுக வட்டாரத்தில் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசிய போது,  ”பாஜகவின் அதீத தலையீடு காரணமாக கட்சியின் மேல் மட்டம் தொடங்கி அடிமட்டம் வரை கடும் அதிருப்தி நிலவுகிறது. கூட்டணியில் பாஜகவை சேர்ப்பதே அதிமுக கூட்டணிக்கு ஒரு பின்னடைவாக உள்ளது. வேறு வழியில்லாமல் பணிந்து அதை ஏற்றால், இன்றைக்கு அதிமுகவையே ’ஸ்வாகா’ செய்ய துடிக்கும் ஒரு குடும்பத்தை உள்ளே நுழைக்கத் துடிக்கிறார்கள்! பாஜக மேலிடத்திற்கு இதற்காக சசிகலா எவ்வளவு கப்பம் கட்டினாரோ தெரியவில்லை. நாமும் தான் நிறைய கொடுத்தோமே. ஆயினும் சுப்பிரமணிய சுவாமியை கரெக்ட் செய்து வைத்துக் கொண்ட அமமுக, தொடர்ந்து பாஜகவில் செல்வாக்குள்ள தமிழக பிராமணர்களை, குறிப்பாக ஊடக அறிவுஜீவிகளை கரெக்ட் செய்து அழுத்தம் தந்த வண்ணம் உள்ளது. இதை நாங்கள் சமாளித்து மேல் எழாவிட்டால், எங்கள் எதிர்காலமே கேள்விக்குறி தான்” என்கிறார்கள்.

”அமமுகவினரிடம் நான்கு சதவிகித வாக்குகள் உள்ளன. அவர்கள் இல்லையென்றால் குறைந்தது ஐம்பது தொகுதிகளில் அதிமுக தோற்க நேரிடும். இது திமுகவிற்கு சாதகமானதாகிவிடும்” என அமித்ஷா சில புள்ளி விபரங்களைக் கூறி பேசினாராம். ஆனால், அதை எடப்பாடி திட்டவட்டமாக மறுத்து தமிழக உளவுத் துறை தந்த மற்றொரு புள்ளிவிபரத்தை அமித்ஷாவிடம் தந்தாராம். ”தமிழகத்தில் திமுகவிற்கு எப்படி ஒரு எதிர்ப்பு ஓட்டு வங்கி உள்ளதோ.., அதே போல அக்கிரமாக சொத்து சேர்த்து அதிகாரம் செய்து அதிமுகவிற்கே கடந்த காலங்களில் கெட்ட பெயர் ஏற்படுத்திய சசிகலாவின் மன்னார்குடி வகையறாவிற்கும் ஒரு பலமான எதிர்ப்பு ஓட்டுவங்கி உள்ளது. அது அதிமுகவின் வெற்றியை கண்டிப்பாக பாதிக்கும். ஆகவே, சசிகலா கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திப்பது தான் அதிமுக கூட்டணிக்கு நல்லது” என தெளிவுபடுத்தியுள்ளாராம்.

ஆனால், அதை ஏற்காமல் அமித்ஷா, ”அவர்களிடம் முக்குலத்து சாதி ஓட்டுகள் கன்பார்மாக உள்ளதே’’ …எனக் கூறியுள்ளார். ”சாதி ஓட்டு என்பதெல்லாம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தான் விழும். இதோ எங்களிடம் ஒ.பி.எஸ் உள்ளிட்ட அதே சாதியை சேர்ந்த பல அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் உள்ளனர். அந்த சாதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பார்வர்ட் பிளாக் போன்றவை உண்டு. தேவேந்திரகுல வேளாளர் ஓட்டுகளும் இந்த முறை நமது கூட்டணிக்கே கிடைக்கும். ஆகவே, வெற்றியைப் பற்றி கவலை வேண்டாம்” என உறுதிபடக் கூறியுள்ளார் எடப்பாடி. ஆனால், பாஜகவின் முடிவு தெரியவில்லை. சசிகலா-தினகரனை பாஜக ஆதரிப்பதே ஒரு வகையில் அதிமுகவை எதிர்காலத்தில் பலவீனப்படுத்த தானாக இருக்கும் என்ற சந்தேகமும் நிலவுகிறது.

 

இதற்கிடையே அதிமுக அலுவலகத்தில் நடந்த உரையாடல்களில் ஓ.பி.எஸ், வைத்தியலிங்கம் போன்றவர்கள் எடப்பாடியிடம், ”நீங்க கொங்கு மண்டலத்தை மனதில் வைத்து தைரியமாக பேசுகிறீர்கள். வடமாவட்டங்களில் வன்னியர் ஆதரவு கிடைத்துவிடும். தென் மண்டலத்தில் கொஞ்சம் ரிஸ்க் தான். ஆகவே, கொஞ்சம் மறுபரிசீலனை செய்வதும் தவறில்லை…’’ எனக் கூறியுள்ளனர்.

கூட்டணியோ, இணைப்போ நிர்பந்தப்படுத்தி நடந்தால் நன்றாக இருக்காது, அவர்கள் நமக்கு குழிபறிக்கவே செய்வார்கள். சிறு வாய்ப்பு தந்தாலும் சசிகலாவும், தினகரனும் நமக்கு குடைச்சல் செய்வதோடு, நம்மை காலி செய்துவிடுவார்கள். நாம் நான்காண்டுகளாக நல்ல சுதந்திரமாக, ஒரளவு நல்லாட்சியை தான் மக்களுக்கு தந்துள்ளோம்! இப்படியே இந்த மாதிரியான ஒரு நிலைமை ஆட்சிலும்,கட்சியிலும் சுமூகமாகத் தொடர வேண்டும் என்பது தான் பெரும்பாலோர் விருப்பம். சசிகலா குடும்பத்தினர் இருந்திருந்தால் நாம் இன்றைக்கு மக்களை சந்திப்பது போல தைரியமாக சென்று ஓட்டு கேட்டிருக்க முடியாது. அடிக்கடி மந்திரி சபை மாற்றம், நிர்வாகிகள் மாற்றம் என பந்து விளையாடியிருப்பார்கள் எனக் கூறியுள்ளார். ஆனால், ஒ.பி.எஸ் தரப்பில் இதற்கு பதில் வரவில்லையாம்!

அதிமுக வெற்றிபெற வேண்டும் என நினைப்பவர்கள் அதிமுகவிற்கு தான் ஓட்டு போடுவார்கள். ஓட்டை பிரிக்க மாட்டார்கள். கடந்த நான்காண்டுகளாக தினகரன் திமுக எதிர்ப்பைக் காட்டிலும் அதிமுக எதிர்ப்பு அரசியலை தான் நடத்தி வந்தார். ஆகவே, அதிமுக எதிர்ப்பு ஓட்டுகளை தான் அமமுக பிரிக்கும். ஆகவே, இரட்டை இலையும்,ஆட்சியும் இருப்பவர்களுக்கே அதிமுக ஓட்டுகள் சிதறாமல் கிடைக்கும். சசிகலா,தினகரனை தவிர்ப்பது அதிமுகவிற்கு பலம் தானேயன்றி பலவீனமல்ல என்கிறார், திராவிட இயக்க ஆய்வாளரும், பத்திரிகையாளருமான துரைகருணா.

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time