செல்லம்மாள் கல்லூரியில், உள்ளம் நெகிழ்ந்தது!
வாசகர்கள் வருகையால், மனம் நிறைந்த நிகழ்வானது, நமது ஆண்டு விழா!
மாலை 5 மணி நிகழ்வுக்கு மாலை 4 மணியில் இருந்தே வாசகர்கள் வரத் தொடங்கிவிட்டனர்.
அரசியலை அதிகமாக விவாதிக்கும் ஒரு இதழுக்கு குடும்பம், குடும்பமாக மக்கள் வந்தது மகிழ்ச்சியளித்தது.
செப்டம்பர் – 6, ஞாயிற்றுக் கிழமை மறக்க முடியாத நாளாகிவிட்டது. நெஞ்சுக்கு நெருக்கமான நிறைய நண்பர்கள், குறிப்பாக சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், விவசாயிகள், தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள்..என பலதரப்பினர் சங்கமிக்கும் இடமானது அரங்கம்.
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டதும், நிகழ்ச்சி தொகுப்பாளர் இலங்கை வேந்தன், நண்பர் ராஜதுரையை வரவேற்புரையாற்ற அழைத்தார். மிக ரத்தினச் சுருக்கமாக இனிமையான வரவேற்புரையை நண்பர் ராஜதுரை நிகழ்த்தினார்.
இதனையடுத்து ச.அருணாச்சலம் அவர்கள் தன் உரையில் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்குகளை அம்பலப்படுத்துவதில் அறம் இதழின் பங்களிப்பை குறித்தும், சர்வதேச அரசியலில் அமெரிக்கா வெளிப்படுத்தும் மேலாதிக்கத்தையும் குறித்தும் பேசினார்.
திட்டமிட்டபடி எந்த பிசிறும் இல்லாமல் நிகழ்ச்சி சீராக நடந்தது. வெளியிடப்பட்ட நாளிலேயே நான்கு புத்தகங்களையும் கொண்ட தொகுப்பை 70 க்கு மேற்பட்ட வாசகர்கள் வாங்கியது மகிழ்ச்சியளித்தது.

நீதிபதி ஹரிபரந்தாமன் எழுதிய ‘நீதித் துறை சந்திக்கும் நெருக்கடிகள்‘ நூலை பெரியாரிஸ்ட் கந்தசாமி அவர்கள் வெளியிட, காந்திய செயற்பாட்டாளர் ஆசிரியர் மோகன் பெற்றுக் கொண்டார்.
ச.அருணாச்சலம் எழுதிய, ‘பாஜக ஆட்சி; இந்தியாவின் இருண்ட காலம்’ நூலை கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட, ஊடகவியளார் டி.எஸ்.எஸ் மணி பெற்றுக் கொண்டார்.

பொ.வேல்சாமி அவர்கள் எழுதிய, ‘வரலாற்றின் விசித்திரங்கள்‘ நூலை அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் முனைவர் ஹோசிமின் திலகர் வெளியிட, முது பெரும் எழுத்தாளர் நெய்வேலி பாலு பெற்றுக் கொண்டார்.

சாவித்திரி கண்ணன் எழுதிய, ‘2021-26 திமுக ஆட்சி ஒரு மதிப்பீடு‘ என்ற நூலை முதுபெரும் திராவிட இயக்கத் தலைவர் திருச்சி செளந்திரராஜன் வெளியிட பிரண்ட் லைன் இதழின் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் பெற்றுக் கொண்டார்.
நூல்கள் குறித்த அறிமுகத்தை மிகச் சுருக்கமாக நச்சென நண்பர் அமர்நாத் எடுத்துரைத்தார்.
அடுத்ததாக விருது வழங்கும் நிகழ்வில் விருதாளர்கள் பற்றிய சிறப்புகளை ரத்தின சுருக்கமாக தோழர் பீட்டர் துரைராஜ் எடுத்துரைத்தார்.

தமிழ் மொழிக்கும், அதன் பண்பாட்டு வளர்ச்சிக்கும், இலக்கியத்தில் பெண் ஆளுமைகளை உலகிற்கு எடுத்துரைத்தமைக்குமான நற் சாதனைகளுக்காக பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் அவர்களுக்கும், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும், மது ஒழிப்பிற்கும் போராடி வருகின்ற கம்பூர் செல்வராஜ் அவர்களுக்கும் திரு.உ.சாகயம் அவர்கள் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

பழங்குடிகள், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஆகியோருக்கு தொண்டாற்றிய வழக்கறிஞர் ரத்தினம் வயது மூப்பு மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் சார்பில் வட மாவட்ட பழங்குடி இருளர் மக்களுக்காக பாடுபடும் பேராசியர் கல்யாணி அவர்களுக்கு சமூக செயற்பாட்டாளர் துரைக்கண்ணு வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு நூல்களை பரிசளிக்கும் நிகழ்வில் நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களுக்கு எழுத்தாளர் அமரந்தாவும், உ.சகாயம் அவர்களுக்கு மூத்த ஊடகவியலாளர் வீர பாண்டியன் அவர்களும், துரைக்கண்ணு அவர்களுக்கு மூத்த ஊடகவியளார் பவா சமத்துவன் அவர்களும் நூல்களை வழங்கினர்.
சமூக செயற்பாட்டாளர் துரைக்கண்ணு அவர்கள் ஒரு அற்புதமான வாழ்த்துரையை வழங்கிய போது, ’’பச்சையப்பன் அறக்கட்டளையில் பேராசியர் நியமனங்களுக்காக வாங்கப்படும் லஞ்சத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது குறித்தும், நேர்மையான வகையில் தகுதியான பேராசியர்கள் நியமனம் நடத்த அவர் சந்தித்த எதிர்ப்புகள், தடைகள் பற்றியும் இந்த தடைகளை தகர்க்க அறம் இதழ் கட்டுரைகள் பெரிதும் உதவியது குறித்தும் பேசினார்.
நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்கள் அறம் இணைய இதழ் கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தாலும், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் எந்த அரசியல் சார்புமற்று செயல்படுவதாக குறிப்பிட்டார். மேலும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையரை தேவையற்றது. அது தமிழகத்திற்கு எதிரானது’’ என எடுத்துரைத்தார்.
அறம் ஆசிரியர் சாவித்திரி கண்ணன் பேசும் போது, மற்ற வெகுஜன இதழ்களில் இருந்து அறம் மூன்று அம்சங்களில் வேறுபடுகிறது.
பொருளாதார பலாபலன்களை பற்றி சிந்திப்பதில்லை.
இதழியல் செல்வாக்கை அதிகார மையங்களுடனான நெருக்கத்திற்கானதாகப் பயன்படுத்துவதில்லை.
பரபரப்பு செய்தி கட்டுரை போட்டு அதிக வாசகர்களை ஈர்க்க வேண்டும் என மெனக்கிடுவதில்லை.
உண்மையே வலுவானது. உண்மைக்கு இருக்கும் ஈர்ப்பே போதுமானது.
இன்றைக்கு இந்த சமூகம் எப்படி சாதிகளலும், மதங்களாலும் பிரிந்து கிடக்கின்றதோ, அதே போல கட்சி அரசியலாலும் பிரிந்து கிடக்கிறது.
கட்சி சார்பைக் கடந்து, அநீதிகளை எதிர்க்க பொதுச் சமூகத்திற்கான குரலாக ஒவ்வொருவரும் வெளிப்பட வேண்டும். இதை சாத்தியப்படுத்துவதே இன்றைக்கு பெரும் சவாலாக உள்ளது. தன் கட்சித் தலைமை தவறு செய்யும் போது அதை தட்டிக் கேட்கும் ஜனநாயகப் பண்பாட்டை அந்தந்தக் கட்சித் தொண்டர்களிடம் வளர்த்தெடுக்க வேண்டும்..என்ற நோக்கத்திலும் நாம் செயல்படுகிறோம்.
தமிழகம் முழுமையிலும் உள்ள விவசாயப் போராளிகள், சுற்றுச் சூழல் போராளிகள், தொழிற்சங்க அமைப்பினர், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் தாங்கள் பாதிக்கப்படுகையில் நம்மை நம்பிக்கையோடு தொடர்பெடுத்து பேசுகிறார்கள். நாமும் நம்மால் முடிந்த அளவுக்கு அந்த பிரச்சினைகளின் தீர்வுக்கு குரல் கொடுத்து வருகிறோம். அரசு நிர்வாக அமைப்புகளில் உள்ள நேர்மையான அதிகாரிகள் பல சமயங்களில் அறத்தில் வெளிவரும் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்…! பல பெரிய ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் தங்களால் வெளிப்படுத்த முடியாத செய்திகளை நம் கவனத்திற்கு கொண்டு வந்து தருவதும் நடக்கிறது. அந்த வகையில் நமது செயல்பாடுகள் எதிர்காலத்திலும் தொடரும்” எனப் பேசினார்.

மேனாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உ.சகாயம் அவர்கள் உணர்ச்சி பூர்வமாகவும், ஆத்மார்த்தமான ஈடுபட்டோடும் பேசினார். காஞ்சிபுரம் மாவட்ட டி.ஆர்.ஓவாக, தான் இருந்த போது மணல் கடத்தல்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து கட்டுரை எழுதிய காலகட்டத்தில் இருந்து ஆசிரியர் சாவித்திரி கண்ணனுக்கும், தனக்குமான நட்பு குறித்து பேசினார். சமரசத்திற்கே இடமின்றி , நேர்மையோடும், அறச் சீற்றத்துடனும் சாவித்திரி கண்ணன் இதழியல் பணியாற்றி வருகிறார். அவரது கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசிக்கிறேன்.
சமீபத்தில் தவெக அரசு கொண்டு வந்துள்ள நகர் மற்றும் ஊரக சட்ட திருத்த மசோதா எப்படி விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறிக்கிறது, உள்ளாட்சி அதிகாரங்களை சிதைக்கிறது என சாவித்திரி கண்ணன் எழுதியதை படித்தேன். தூய்மை பணியாளர்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். இப்படி அவர் தொடர்ந்து பாதிக்கப்படும் எளியோருக்காக எழுதி வருகிறார். அவருக்கு நாம் துணை நிற்போம்’’ என்றார்.
இறுதியாக ஜா.செழியன் அவர்கள் எளிமையாகவும், அழகான வகையிலும் நன்றி நவின்றார்.
நிழற்படங்கள்; பவா சமத்துவன், ஜா.செழியன்
























Leave a Reply