இரண்டுங்கெட்டானாக உழலும் இடதுசாரிகள்!

பெரிதும் வியக்கிறேன்! – இடதுசாரிகளின் நிலைபாட்டை பார்த்து!

திமுக ஆட்சியின் ஊழல்களை தவெக அரசு அம்பலப்படுத்தினால் இடதுசாரிகளுக்கு ஏன் கோபம் வருகிறது…? எனப் புரியவில்லை.

இப்போதும் திமுகவின் மீதான அதீத விசுவாசத்தால் தங்கள் சுயத்தை இழந்து கொண்டுள்ளன, இரு இடதுசாரி கட்சிகளும்!

விஜய்யின் தவறுகளை தொடர்ந்து விமர்சிகட்டும் இடதுசாரிகள்! ஆனால், இந்த விமர்சனங்களை தங்கள் சுயமான புரிதலில் செய்ய வேண்டுமேயன்றி திமுகவின் கோணத்தில் செய்தால் எப்படி?  உதயநிதி ஸ்டாலினிடம் வெளிப்படும் மிதமிஞ்சிய வெறுப்புணர்வையும், கடும் சொற்களையும், திமுகவினர் சட்ட சபையில் செய்யும் அராஜகங்களையும் விமர்சிப்பதில்லை.

தவெகவை ஆதரிக்கிறார்களா? எதிர்க்கிறார்களா? தெரியவில்லை. ஆனால், கம்யூனிஸ்டுகள் தற்போது இரண்டுங்கெட்டானாக இருக்கிறார்கள் என்பதே  உண்மை!

நான் மிகவும் நேசித்த இடதுசாரிகள் தற்போது நியாய உணர்வுகளின்றி, நேர்மை தடுமாறி, கொடியோர்களுக்கு குடை பிடிக்கிறார்களே.. என மனம் வருந்துகிறேன்.

தமிழ்நாட்டில் 2021-26 காலகட்டத்தில் பல ஆபத்தான செயல்பாடுகள் நடந்தன. மட்டுமீறிய ஊழல்கள், இயற்கை வள அழிப்பு, விவசாய நிலங்கள் அபகரிப்பு, சுற்றுச் சூழலுக்கு கேடு தரும் தொழிற்சாலைகள் அதிகரிப்பு, நீராதாரங்கள் அழிப்பு, நில வளம் பாதிப்பு, விவசாயிகளின் தற்சார்பு தகர்ப்பு..என பல அதிர்ச்சிகள் அரங்கேறி நாளும், பொழுதும் போரட்டங்கள் நடந்த போது எங்கே போனார்கள் இடதுசாரிகள்?

”எங்களைவிட இங்கு ஊழலை எதிர்த்து போராடிய வேறு கட்சியை சொல்லுங்கள் பார்க்கலாம்…?”என்கிறார், பெ.சண்முகம்.

2021- 2026 காலகட்டம் தான் சுதந்திர இந்தியாவிற்கு பிறகான தமிழக ஆட்சி காலகட்டத்தில் அதிகமாக ஊழல் நடந்த காலகட்டம்! இந்த காலக்கட்டம் முழுமையும் திமுக அரசுக்கு ஆதரவாக இங்கு நடைபெற்ற ஏராளமான முறைகேடுகளில் அமைதி காத்தவர்கள் தான் இரு இடதுசாரி கட்சிகளும்!

2021-26 காலகட்டத்தில் திமுக அமைச்சர்கள் அனைத்து வரையறைகளையும் கடந்து பொதுச் சொத்துக்களை சூறையாடினார்கள்! இவை தொடர்பாக அறம் இணையத்தில் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

டாஸ்மாக் கடைகளில் கரூர் கேங்க் நிர்பந்தம் தந்து ஊழியர்களை மது பாட்டில்களுக்கு ரூ 10 முதல் 30 வரை கூடுதலாக வாங்கச் சொல்லி ஊழியர்களை நிர்பந்தித்து கமிஷன் கேட்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என சி.ஐ.டி.யூ. யூனியன் சார்பில் அன்றைய முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சி.பி.எம் தலைவர்கள் மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லையே…அதைத் தானே சட்டமன்றத்தில் இன்றைய முதல்வர் கரூர் கேங்க் டாஸ்மாக்கில் செய்த முறைகேடுகள் எனச் சொன்னார்.

தற்போது முதலமைச்சர் விஜய் கரூர் கேங்கை அம்பலப்படுத்தி பேசினால்,  ‘’சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுகிறார். நாங்கள் இதையெல்லாம் ஏற்க முடியாது’’ என்றால் எப்படி?

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி ஆவணங்களை பரிசோதித்ததில் மொத்த மதுபானங்களில் 40 சதவிகித மாதுபானங்கள் ஆயத் தீர்வை வசூலிக்கப்படாமல் கள்ளத்தனமாக சந்தையில் விற்கப்பட்டுள்ளன ( ஆண்டுக்கு சுமார் 50,000 கோடிகள்) எனஅமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதிபடுத்திய போது எங்கே போனது இடதுசாரிகளின் குரல்?

நெடுஞ்சாலைத் துறையில் அமைச்சர் எ.வ.வேலு அடித்த கொள்ளைகள் கொஞ்சமா? நஞ்சமா?

ஐந்தே ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையில்  ஆண்டுக்கு 4,000 கோடிகள் வீதம் 20,000 கோடிகளை சுருட்டிய எ.வ.வேலுவை அம்பலப்படுத்தி பதவி விலகக் கோரிக்கை வைத்ததுண்டா?

கரூர் மாவட்டத்தில் சாலை போடாமலே பல கோடிகளை காண்டிராக்டர்களுக்கு தந்ததை அம்பலப்படுத்தி அறப்போர் இயக்கம் போராடிய போது எங்கே போனது உங்கள் குரல்?

உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ஊரையடித்து உலையில் போட்ட போது எங்கே போனீர்கள்?

தமிழ்நாடு உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் முறைகேடான டெண்டர்களால் ரூ. 1,020 கோடி லஞ்சமாகப் பெற்றதையும், உள்ளாட்சித் துறையில் பொறியாளர்கள், நகரத் திட்டமிடல் அதிகாரிகள் பதவிகளுக்கு தலா ரூ. 35 லட்சம் லஞ்சமென, 884 கோடிகள் கே.என்.நேரு வசூலித்ததை  அமலாக்கத்துறை அம்பலப்படுத்திய போது எங்கே போனது இடதுசாரிகளின் குரல்?

பத்திரப்பதிவுத் துறையில் அதி மோசமான முறைகேடுகளைச் செய்ததோடு, மதுரை மாவட்டத்தில்  இயற்கை வளங்களை சூறையாடி குவாரிகள் கொள்ளையில் கொடிகட்டிப் பறந்த அமைச்சர் மூர்த்தி விவகாரத்தில் இடதுசாரிகள் அமைதி காத்ததன் ரகசியம் என்ன?

திமுக அரசில் நீர்வளத்துறையும், குவாரிகளுக்கான பொறுப்பும் வகித்த அமைச்சர் துரைமுருகன் அதிமுக ஆட்சியைக் காட்டிலும் கூடுதல் குவாரிகள் செயல்படவும், அளவுக்கதிகமாக மணல் அள்ளவும் வகை செய்து,  சட்டவிரோத குவாரிகள் செயல்படவும் வழிவகுத்து மணல் கடத்தலை ஜரூராக ஊக்குவித்தாரே…!

# தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மூலம் ரூ.4.700 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.

# ஒரு யூனிட் மணலுக்கு அரசுக்கான வருமானம் ரூ.1900 தான்! ஆனால், ரூ.20 ஆயிரம் வரை லாபம் தனியாருக்கு செல்கிறது.

# மணல் அள்ள தமிழக அரசு அனுமதித்ததோ 490 ஏக்கர். ஆனால் அள்ளப்பட்டு வருவதோ 2,500 ஏக்கர்களில்.. என அமலாக்கத்துறை அறிவித்ததே!

அமலாக்கத்துறை ரெய்டு செய்த அடுத்த நாளே துரைமுருகன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து  பேசி தப்பித்துக் கொண்டாரே, அம்பலப்படுத்தியதுண்டா இடதுசாரிகள்?

திமுக அட்சியில் போதை கலாச்சாரம் போஷித்து வளர்க்கப்பட்ட நிலையிலும் சட்டம், ஒழுங்கு சிதைந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் அதிகரித்த போதிலும் அமைதி காத்தீர்கள். அதன் தொடர்ச்சியாக இந்த ஆட்சியில் அவை நடக்கும் போது மட்டும் கடும் விமர்சனம் செய்கிறீர்கள். எப்படியோ நீங்க விமர்சிக்க முன் வந்ததே ஒரு முன்னேற்றம் தான்.

ஆனால், இந்த ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாய்ந்ததும் அவர்கள்  மத்திய பாஜக அதிகார மையத்தின் கருணையினால் நீதிமன்ற லாபி செய்து ஒரு துரும்பு கூட சட்டையில்படாமல் தப்பித்துவிடுகிறார்களே..தெரியவில்லையா?

மேலும், தற்போதைய தவெக ஆட்சி உழலுக்கு எதிராக நேர்மையான நிர்வாகத்தை சாத்தியப்படுத்த எடுக்கும் தொடக்க முயற்சிகளையும், அதனால் சமூகத்தின் பல தளங்களில் ஊழல் ஓரளவேனும் கட்டுப்படுத்தப்பட்டதை வரவேற்கவும், இதை வளர்த்தெடுத்து நிலைபெற செய்யவும் ஆர்வம் காட்ட மறுப்பதை எப்படி புரிந்து கொள்வது? இது தான் இடதுசாரிகளுக்கு அழகா?

கடந்த ஐந்தாண்டுகளில் திமுக தலைவர் ஸ்டாலின் மனம் கோணாமல் சாம்சன் பிரச்சினையிலும், தொழிலாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதும் அமைதி காத்தீர்களே..?

அதுவும் குறிப்பாக விவசாய நிலப்பரப்பில் திமுக அரசு வியத்தகு சாதனை படைத்ததே!

பரந்தூரில் தொடங்கி பழவேற்காடு, கடலூர், கிருஷ்ணகிரியின் உத்தனப்பள்ளி, நாகமங்களம், அயர்னப்பள்ளி, செய்யாறு மேல்மா, வாசுதேவ நல்லூர், கடைய நல்லூர்  கெலமங்களம், ஒட்டன் சத்திரம், மதுரை மேலூர் கல்லங்காடு, தஞ்சை உப்பளம்சேரிப் பண்ணை, சேலம் ஜாகீர் அம்மாபாளையம், நாமக்கல் மோகனூர், கோவை கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், தர்மபுரி, சிவகங்கை திருமாஞ்சோலை இலுப்பக்குடி…  என பல இடங்களில்  விவசாய நிலப் பறிப்பு அரங்கேறிய போதெல்லாம் அமைதி காத்து திமுக விசுவாசத்தை திடமாக வெளிப்படுத்தினீர்களே?

இதையெல்லாம் கேட்டால் திமுகவை எதிர்ப்பது பாஜகவுக்கு சாதகமாகிவிடும் என்று காரணம் சொன்னீர்கள். ஆனால், திமுக அரசே இங்கு பாஜகவின் பினமியாக செயல்பட்டு தேசியக் கல்வி கொள்கை அமலாக்கம், விவசாய, தொழிலாளர் விரோத கொள்கைகளை செயல்படுத்தியதைக் கண்டும், காணாமல் தானே இருந்தீர்கள்?

தேர்தலில் இடதுசாரிகளுக்கு சீட்டுகளை குறைத்து அலைக்கழித்து அவமானப்படுத்தியதோடு, பாஜக ஆதரவு கட்சியான தேமுதிகவை கூட்டணியில் சேர்த்து 10 சீட்டுகள் வழங்கிய போது எதிர்க்காமல் பம்மி கிடந்தீர்களே. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கவர்னர் மூலமான மறைமுக பாஜக ஆட்சியை தவிர்ப்பதற்காக தவெகவை ஆதரிக்கும் கட்டாயம் உருவானது என நீங்கள் கூறிய பிறகும் இடதுசாரிகளை கடுமையாக இழிவுபடுத்தியதே திமுக…!

இத்தனை இழிவுகளையும் ஜீரணித்துக் கொண்டு, திமுகவை தூக்கி சுமக்க ஆசைப்படும் இடதுசாரிகளை என்னென்பது?

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time