’இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்திருப்பாரா?’ என வியக்கத்தக்க வாழ்க்கை வாழ்ந்தவரே பாரதியார். பாரதியாரின் கவிதைகள் எவ்வளவு உன்னதமானவைகளோ, அதைக் காட்டிலும் அவர் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் உன்னதமானது; ஆச்சரியங்கள் நிறைந்தது, வசீகரமானது, பின்பற்றத்தக்கது;
நினைவு நாள் என்பதற்காக பாரதியை எழுதவில்லை.
நாளும் அவரை நினைவு கூர்கிறேன். பாரதி கவிதைகளையோ, அவரைப் பற்றிய வரலாற்று செய்திகளையோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து புத்துணர்ச்சி பெற்று என்னை புதுப்பித்துக் கொள்வேன்.
ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை தோன்றும் அபூர்வக் கவிஞன் பாரதி!
எத்தனை முறை வாசித்தாலும், தெவிட்டாத தீந்தமிழ்த் தேனல்லவா, பாரதியின் கவிதைகள்!
சக மனிதர்களை மாத்திரமின்றி, சகல ஜீவராசிகளையும், ஏன் ஜடமாகத் தெரியும் இந்த பிரபஞ்சத்தையும் கூட எந்த பேதமும் இன்றி நேசித்தவன் பாரதி.
பாரதியால் மட்டுமே எல்லையில்லா பேரன்பை பொழியும் இந்த கவிதையை எழுத முடியும்;
காக்கை குருவி எங்கள் ஜாதி; நீள்
கடலும், மலையும் எங்கள் கூட்டம்.
நோக்குந் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை!
நோக்க, நோக்கக் களியாட்டம்!
என்பதாக கண்ணில் காணும் காக்கை,குருவி போன்ற ஜீவராசிகளை மாத்திரமின்றி, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையே தனக்குள்ளிருக்கும் அம்சமாக உணர்ந்தவன் பாரதி.
அப்பேற்பட்ட அற்புத பிறவியான பாரதியை அக்கிரஹாரத்தில் பிறந்தவன் என்ற காரணத்தால் அவதூறு செய்வோரை என்னென்பது?
அதுவும் பெரியாரிய பார்வையில் பார்ப்பதாகக் கூறி பாரதியை பழிப்பவர்களுக்கு நான் பதில் சொல்வதைக் காட்டிலும், பெரியாரை பெரிதும் நேசித்த பாரதிதாசனே பலமுறை பதில் சொல்லி உள்ளார்.
பாரதியாரை மட்டும் நான் பார்த்திராவிட்டால் கடவுளர் துதிபாடும் கவிஞனாகவே என் வாழ்க்கை சென்று முடிந்திருக்கும். நான் புரட்சிக் கவிதைகள் எழுதக் கற்றுக் கொண்டதே அவரிடம் தான். பாரதியாரிடத்தில் பார்ப்பனத் தன்மை எள்ளவும் கிடையாது. பெரியாருக்கும் முன்பே சாதிவேரை பொசுக்குங்கள் என்றவர் பாரதியாரே…என பாரதிதாசன் கூறி இருக்கிறார்.

பாரதியாரைப் பற்றி அவரோடு பத்தாண்டுகள் மிக நெருங்கி பழகிய பாரதிதாசனால் மட்டுமே இவ்வளவு துல்லியமாக படம் பிடித்துக் காட்ட முடியும் என்பதற்கு இன்னொரு கவிதை.
தமிழகம் தமிழுக்கு தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணி தவங்கிடக்கையில்
இலகு பாரதி புலவன் தோன்றினான்.
பைந்தமிழ் தேர்பாகன். அவனொரு
செந்தமிழ்த் தேனீ,சிந்துக்கு தந்தை!
திறம்பாட வந்த மறவன். புதிய
அறம்பாட வந்த அறிஞன். நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்;
அயலார் எதிர்ப்புக்கு அணையா நெருப்பவன்;
என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்.
புதுச்சேரியில் பாரதியை தன் தந்தை போல பாவித்து, அவரோடு நெருங்கி பழகிய பக்கத்து வீட்டு யதுகிரி என்ற தகவல்களைத் தருகிறார்.
பாரதியாருக்கு கர்நாடக சங்கீத கச்சேரிகளைக் காட்டிலும் பாம்பாட்டி, வண்ணான், நெல்குத்தும் பெண்கள், மீனவர்கள், உழவர் இவர்களுடைய நாடோடி பாட்டுக்கள் என்றால் மிகவும் இஷ்டம். ஒரு நாள் எங்கள் குடும்பமும், பாரதியார் குடும்பமுமாக எட்டு பேர் புதுச்சேரி கடற்கரைக்கு சென்றோம். அப்போது மீனவர்கள் சந்தோஷமாக பாடியபடி தோணியை கரையேற்றிக் கொண்டிருந்தைப் பார்த்த பாரதியார் சபாஷ் சொல்ல ஆரம்பித்தார்.
”அந்த மீனவர்கள் பாடியது எங்கள் யாருக்குமே புரியவில்லை. நீங்க என்ன இவ்வளவு மெச்சுகிறீர்களே அவர்களை” என்றேன் நான்.
அப்போது பாரதியார் மனைவி செல்லம்மாள், ”யதுகிரி பாரதியார் சுபாவம் உனக்கு தெரியாதா? வீதியில் மாரியம்மனை எடுத்துக் கொண்டு குடியானவர்கள் உடுக்கை அடித்துக் கொண்டு வந்தால் இவர் கூத்தாடுகிறார். தன் நினைவே இருக்காது. இப்ப கடற்கரையில் மாலை நேரம். தாளம் போடும் அர்த்தமில்லாத பாட்டு. கேட்கவும் வேண்டுமா?” எனச் சொல்லி சிரிக்கிறார்.
உடனே பாரதி எழுந்தார். ஒரு பென்சில், காகிதம் எடுத்துக் கொண்டு அந்த மீனவர்களிடம் சென்றார். அவர்கள் பாடுவதை அடியடியாக சொல்லச் சொல்லி கேட்டு எழுதி , அதில் இருக்கும் பிழைகளை திருத்திக் கொண்டு எங்களிடம் வந்தார். ”நீங்க எல்லோரும் என்னை கேலி செய்தீர்களே… இந்த பிரபஞ்சத்தில் அடிப்படையை அந்த மீனவன் எனக்கு உபதேசம் செய்தான்” என்றார்.
அதற்கு அவரது மனைவி செல்லம்மாள் சிரித்தபடி, ”நீங்கள் பறையன் முதல் மீனவன் வரையில் எல்லோருக்கும் சிஷ்யர் தான். ஆனால், முதல் தெய்வமாகிற மடத்து குருவுக்கு மாத்திரம் சிஷ்யர் அல்ல’’ என்கிறார். (இந்த காலகட்டத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியாரைத் தான் தென் இந்திய பிராமணர்கள் அனைவரும் தெய்வமாக வணங்கி போற்றினார்கள்)

”இதோ பார் செல்லம்மள், அர்த்தமில்லாத மூட வழக்கத்தை எனக்கு சொல்லாதே. இந்த சாரமில்லாத, உண்மையில்லாத விஷயத்தை என் உயிர் போனாலும் நம்ப மாட்டேன். மீனவன் அவன் தொழில் செய்தாலும், அவன் உயிரும் என் உயிரும் ஒன்றே…! இந்த ஏலேலோ பாட்டில் பாரதம், புராணம், தத்துவம் எல்லாம் புதைந்து கிடக்கு. உங்களுக்கு அனுபவிக்கத் தெரியவில்லை” என்றாராம்.
இந்த சம்பவம் ஒன்றே போதும், பாரதியின் உண்மையான இயல்பைச் சொல்ல!
பாரதியார் வாழ்ந்த காலத்தில் பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்டவர்களை தூரத்தில் நிறுத்தியே பேசுவார்கள். ஆனால், பாரதியார் அவர்களை தன் இல்லத்திற்கு அழைத்து விருந்துண்ண வைத்து மகிழ்வதும், அவர்களின் இல்லங்களுக்கு சென்று கஞ்சி வாங்கி குடித்து மகிழ்வதுமாக வாழ்ந்துள்ளார் என்பதற்கு அவருடன் பழகிய பலர் பதிவு செய்துள்ளனர்.
மேலும் பாரதியார் அந்த காலத்தில் வாழ்ந்த மற்ற பிராமணர்களை போல பூணூல் போட்டுக் கொள்ளவில்லை. குடுமி வைத்துக் கொள்ளவில்லை. பிராமணச் சடங்குகளான அக்னிஹோத்திரம், ஜபம், ஹவிர்பாகம், ஒளபாஸனம் போன்ற எதையும் செய்யாமல் தவிர்த்தார். இதனால் உறவினர்களால் பழிக்கப்பட்டார்.
இது குறித்து பாரதியார் மனைவி செல்லம்மாள் வருத்தமாகக் கூறுகையில், பதிலுக்கு பாரதியார், ”நான் சூத்திரன், இந்த வீட்டின் எஜமானன் சூத்திரன், ஆனால், எஜமானி நீயோ பிராமணத்தி. எங்காவது இது உண்டோ…? நீயும் மாறலாமே” என மனைவியிடம் வாதம் செய்வாராம்!
”மகளுக்கு திருமண வயதாகிவிட்டது. வரன் தேடாமல் கவிதை பாடிக் கொண்டே இருக்கிறீர்களே” என செல்லம்மாள் பாரதியிடம் கேட்ட போது, தன் மகள் தங்கம்மாவையும் பக்கத்தில் வைத்துக் கொண்டே பாரதியார் இவ்விதம் கூறியுள்ளார்; ”காதல் மணம் தான் சிறந்தது. நான் என் பெண்ணை இன்னாரைத் தான் நீ கல்யாணம் செய்து கொள் என வலியுறுத்தமாட்டேன். அவளே வரன் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதைப் பற்றி பாரதிதாசனிடம் பேசிய பாரதியார், ”என் பெண் ( தங்கம்மாள்) வேறொரு தாழ்த்தப்பட்ட இளைஞனோடு ரங்கோனுக்கு ஓடிப் போய் அங்கிருந்து எனக்கு அப்பா நான் இன்னாரோடு இங்கு சுகமாக இருக்கிறேன். அவரை நான் விரும்புகிறேன். மனம் செய்து கொள்ளப் போகிறேன் எனக் கடிதம் எழுத வேண்டும். அதைக் கண்டு நான் ஆனந்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளதை பாரதிதாசனும் பதிவு செய்துள்ளார்.
ஆக, ஒவ்வொரு நிமிடமும் பாரதியார் தன்னை ஒரு பொது மனிதனாக உணர்ந்ததோடு, போலித்தனமின்றி உண்மையான பகுத்தறிவாளராக இருந்துள்ளார் என்பதற்கு இந்தக் கவிதையே சாட்சியாகும்.
உண்மையின் பேர் தெய்வமென்போம். –அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்.
உண்மைகள் வேதங்கள் என்போம்- பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.
பாரதியாருக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனால், அதைவிட அதிகமாக சக மனிதனையே தெய்வத்தின் அம்சமாக பார்க்கும் குணமும் இருந்தது!
வாழ்க பாரதியார் புகழ்!
வளர்க, அவர் காட்டிய வாழ்க்கை நெறிகள்!
சாவித்திரி கண்ணன்






















பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வாழ்ந்து காட்டியவன் பாரதி! அவன் புகழ் ஓங்குக
பாரதி அவர்களை பற்றிய புரிதல் இங்கு எல்லோருக்கும் உண்டு. ஆனால் பாரதி அளவிற்கு பாரதி தாசனை இங்கு அனைவராலும் கொண்டாட படுகின்றரா?
பாரதியின் வாழ்க்கையை கேட்டு அவர் வாழ்ந்த காலத்தில் வாழ முடியாமல் போனதே என நினைத்து இருக்கிறேன். அவர் கவிதைகளை மேடைகளில் பாடியும் அவர் பற்றி பேச்சு போட்டிகளில் பேசியும் வளர்ந்தவள் நான். இந்த கட்டுரையை வாசிக்கும் போது என்னை அறியாமல் கண் கலங்கி இருந்தேன்… யதுகிரி பாத்திரம் ஏற்று பள்ளியில் போட்ட நாடகம் நினைவுக்கு வந்து விட்டது.. மகா கவிஞன் பாரதி புகழ் வாழ்க…
பாரதியார் குறித்து சில விமர்சனங்கள் உண்டு நீங்கள் கூறுவதை போல திராவிட இயக்கவாதிகள் தளத்தில்.. பொதுவாகவே ஒன்றை மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டும் பாரதியோ மகாத்மாவோ அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் புரட்சிவாதிகள். அவர்களை இன்றைய கண்கொண்டு பார்க்கமுடியாது அது மடமைத்தனமுமாகும்.. காந்தியின் பாரதியின் சமூக பின்னணி வேறாக இருந்தாலும் அவர்கள் இருவரும் ஒரு பொது நோக்கத்திற்காக போராடினார்கள்… வாழ்ந்தார்கள்… பாரதியாரின் பின்னணியை இன்னும் அழுத்தமாக தெளிவுப்படுத்தியுள்ளீர்கள்
பாரதியார் குறித்து சில விமர்சனங்கள் உண்டு நீங்கள் கூறுவதை போல திராவிட இயக்கவாதிகள் தளத்தில்.. பொதுவாகவே ஒன்றை மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டும் பாரதியோ மகாத்மாவோ அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் புரட்சிவாதிகள். அவர்களை இன்றைய கண்கொண்டு பார்க்கமுடியாது அது மடமைத்தனமுமாகும்.. காந்தியின் பாரதியின் சமூக பின்னணி வேறாக இருந்தாலும் அவர்கள் இருவரும் ஒரு பொது நோக்கத்திற்காக போராடினார்கள்… வாழ்ந்தார்கள்… பாரதியாரின் பின்னணியை இன்னும் அழுத்தமாக தெளிவுப்படுத்தியுள்ளீர்கள்
If someone identifies themselves except as a Brahmin, should be seen as a man with common sense & be respected for that. Wow what a revelation. Very unfortunate that a community which contributed significantly for the development of our country portrayed time and again in grey shades.
பாரதியாரை எப்படி மறக்க இயலும்?
அவரது எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வரிகளில் சில:–
“புத்தம் புதிய கலைகள்_பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே _ அந்த
மேன்மை கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவ தில்லை_,அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக்
கில்லை!
மெல்லத் தமிழினிச் சாகும்_அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்”.
__பாரதி தமிழ்மீது கொண்ட பற்று.
“ஆதி சிவன் பெற்று விட்டான் _என்னை
ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே _ நிறை
மேவும் இலக்கணஞ்
செய்துகொடுத்தான்”.
__தமிழரின் மொழிப் பெருமை!
“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா_
நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா”
“ஈனப் பறையர்க ளேனும் _ அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவ ரன்றோ?”
__அனைத்து உயிர்களையும் பாரதி சமமாக மதித்தது.
“முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடைவில்?_எங்கள்
அன்னை மயங்கி பாரத் தேவிநல்
ஆரிய ராணியின் வில்”.
“ஆரியர்தம் தருமநிலை ஆதரிப்பான்”
“ஆரியர் பாழாகா திருமறையின்
உண்மைதந்த”
“ஆரியர் பலையருக் கடிமைக ளாயினர்”.
“வெஞ்செய சர்க்கரை வீட்டிடு வோனே,
வீர சிகாமணி ஆரியர் கோனே!”
__ஆரிய இன உணர்வு.
பாரதியார் பற்றி இந்த கட்டுரை அருமை
ஆனால் பாரதியை சங்கி என்று நிறுவ ஒரு கூட்டம் எதையெதையோ எழுதுகிறது
உண்மை பொய் இரண்டையும் எப்படி பிரித்துப் பார்ப்பது
பாரதியார் வாழ்க
பாழ் நெற்றி பாரதியாரா? Shame!
தங்கள் மீது அன்பு உண்டு.
ஆனால் பாரதியார் மீது பரிதாபம்தான் உண்டு. செல்லம்மாள், தங்கம்மாள் இருவரின் நிலைமையை மிகவும் பரிதாபமாக்கியவர் பாரதியார்.
சுடர் மிகு அறிவுடன் இருந்தும், நடைமுறை அறிவு தெரியா விட்டால் என்ன பயன் ?
மனைவி கடன் வாங்கி கொண்டு வந்த அரிசியை வாரி இறைத்து காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடுவதா ?
நடைமுறை அறிவை தங்கம்மாள் திருமணம் பாடம் புகட்டியது.
அத்வைதம் நடைமுறை படுத்திய அக்னி குஞ்சை அக்ரஹாரம் ஏற்கவில்லை.
சேரிக்கு வசிக்க சென்றவரை சேரி ஆச்சாரம் ஏற்கவில்லை.
வானத்து அமரன் வந்தான் காண் , போனான் காண் என்று கண்ணீர் கவிதை சிந்திய புதுமைப் பித்தனைப் போல வறுமையில் விடை பெற்றார்.
வறுமைக்கு சொல்லப்படும் காரணம் ?
யாரும் உதவவில்லை.
வே.மதிமாறன் எழுதியவற்றை வாசித்து இருப்பீர்கள்.
சமூகத்தின் இருட்டு காட்டை தழல் வீரத்துடன் எரிக்க வந்த அக்னி குஞ்சை கஞ்சா புகை வெந்து தணித்து சாம்பலாக்கி விட்டது.
பாரதி இருவேறு நிலைகளில் இருவகையாகப்பாடிய பாவலர் என்பது தெளிவான உண்மையாகும்! – தமிழநம்பி, ஆசிரியர், ‘நற்றமிழ்’ தூயதமிழ் மாத இதழ், புதுச்சேரி.