சிறிய கட்சிகள் இன்றைய தினம் உயிர்பித்திருப்பதே ஆபூர்வம் என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டுள்ளன! வலியதே வாழும் என்பது தான் காலங்காலமாக நிகழும் உண்மை!
பத்து தொகுதிகள் எதிர்பார்த்த விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு தொகுதிகள் என்று சொல்லி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து ஆரம்பித்த செய்திகள் எல்லாம் திகில் ரகமாக உள்ளது! இஸ்லாமிய கட்சிகள் எல்லாம் தங்கள் சுய அடையாளத்தை இழந்து கூட்டணியின் அங்கமாக வேண்டிய நிலை!
பெரிய அரசியல் கட்சி என்பது திமிங்கலத்தைப் போல! அது பலவீனமான சிறிய மீன்களை சாப்பிடுவதன் மூலமே தன் உயிர்ப்பை உறுதிபடுத்திக் கொள்கிறது.
இன்றைக்கு பலத்தில் சிறிய கட்சிகளை தமிழகத்தின் பெரிய கட்சிகளான இரு திராவிட இயக்கங்கள் எவ்வாறு நடத்துகின்றன.. என்பதைப் பார்க்கும் போது காலப் போக்கில் ஜனநாயக நாட்டில் சிறிய கட்சிகள் உயிர்பித்திருப்பதே அரிது என்று தான் தோன்றுகிறது.
1980 ஆண்டு காங்கிரஸ், திமுகவுக்கு சரிக்குச் சரியாக தொகுதி வாங்கிய கட்சி! அப்போது தன்னை முதல்வராக அறிவிக்கும்படி கலைஞர் காங்கிரசிடம் வேண்டுகோள் வைத்ததும் நடந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு கூட 63 தொகுதிகள் பெற்ற காங்கிரஸ் இன்று அதில் பாதியைக் கூட பெற முடியாத நிலை உருவாகிவிட்டது. காங்கிரஸின் ஓட்டு வங்கி 2011 ல் 9.3% இருந்தது. 2016 ல் அது 6.47% சதவிகிதமானது. பரவலாக ஓட்டுகள் இருந்தும் எந்த ஒரு தொகுதியிலும் தனித்து வெற்றி பெறுவது சந்தேகம் என்ற நிலையே காங்கிரசுக்கு உள்ளது. கன்னியாகுமரியில் ஒரளவு பலமான கட்சி. திருநெல்வேலி, தூத்துகுடி, கோவை ஆகிய மாவடங்களில் அதற்கு கணிசமான வாக்கு வங்கி உண்டு. ஆனால், வட மாவட்டங்களிலும், குறிப்பாக சென்னையிலும் பலம் குன்றி உள்ளது.
இதே போல கம்யூனிஸ்டுகள் நிலையும் ஒற்றை இலக்கத்தில் திமுகவில் கொடுக்கும் தொகுதிகளை பெற்று திருப்தியடைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம் 2016 சட்டமன்ற தேர்தலில் இரு கம்யூனிஸ்டுகளும் தங்களுக்கு பலம் என்பதாக கருதி தலா இருபத்தி ஐந்து தொகுதிகளை தேர்ந்தெடுத்து நின்று ஒரு சதவிகித வாக்குகளைக் கூட பெற முடியவில்லை என்பதே நிதர்சனம்! இரு கம்யூனிஸ்டுகளுமே சேர்ந்து சுமார் ஒன்றரை சதவிகித ஓட்டுகளைத் தான் பெற முடிந்தது. இந்தக் கட்சிகளை பொருத்தவரை மிகப் பெரிய தியாக சீலர்களை ஒரு காலத்தில் கொண்டிருந்த கட்சிகள், இன்றும் சில பொதுநலவாதிகள் உயிர்பித்திருக்கும் கட்சிகள்! ஆனால், அவர்களின் மக்கள் தொடர் மிகவும் குறைந்துவிட்டது. மக்கள் சார்ந்த பல விவகாரங்களில் போதுமான முனைப்போ, செயல்பாடுகளோ இன்றி முடங்கி போய்விட்டனர். குறைந்த பட்சம் தாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதிகளிலாவது மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்கும் வண்ணம் உழைத்து தக்க வைத்திருந்தார்கள் என்றால் கூட, இன்றைய அவல நிலையை தவிர்த்திருக்கலாம் கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும்! ஒரு எம்.எல்.ஏ வாகவோ, எம்.பியாகவோ வந்த பிறகும் மக்கள் நம்பிக்கையை பல மடங்கி திகரிக்கும் வண்ணம் உழைக்காமல் கோட்டைவிட்டு,விட்டு ஒவ்வொரு தேர்தலிலும் திமுக, அதிமுகவிடம் மாறி,மாறி கையேந்த வேண்டிய நிலைக்கு அவர்களே காரணம்!
பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளுமே எளிய மக்களிடமிருந்து அன்னியப்பட்டு போய்விட்டார்கள்! ஆனால், ஆட்சி அதிகாரத்திற்கு, பதவிகளுக்கு வர வாய்ப்புள்ள கட்சிகள் அவ்வப்போது சிற்சில எலும்புத் துண்டுகளை அடி நிலை தொண்டர்களுக்கு விட்டெறிவதன் மூலமும், அந்த தொண்டர்களும் அவரவர் நிலைகளில் அடித்துபிடித்து ஆங்காங்கே சம்பாதித்துக் கொள்ள அனுமதிப்பதன் மூலமும் தொடர்ந்து தங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க முடிகிறது.
ஒரு காலத்தில் திமுகவை வீழ்த்தி, அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுவிடுமோ என்று பிரமிப்புடன் பலராலும் பார்க்கப்பட்ட மதிமுக இன்று அறிவாலயத்தில் ஒற்றை இலக்கத்தில் தான் சீட் தரமுடியும், அதுவும் நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற கண்டிஷன்களை பார்க்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர். வெளிப்படைத் தன்மையற்றவரும், அதிரடி அரசியல்வாதியுமான வைகோ ஓவ்வொரு தேர்தலிலும் தவறான முடிவுகளை எடுத்து தன் கட்சியை கடும் சேதாரத்திற்கு உட்படுத்திவிட்டார்! எந்த வாரிசு அரசியலை எதிர்த்து திமுகவில் இருந்து அன்று வைகோ வெளியேறினாரோ.., அந்த வாரீசிடமே மடிப்பிச்சை ஏந்தி நின்றதோடு, தன் கட்சியிலும் அதே வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கிறார்.
பதினைந்தே ஆண்டுகளில் தேமுதிக உச்சத்தை நோக்கி நகர்ந்து சென்று, இன்று பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது..! 2011 ஆம் ஆண்டு பத்து சதவிகித வாக்கு வங்கியைக் கொண்டிருந்த தேமுதிகவுடன் கூட்டணி காண இலவு காத்த கிளியாய் கலைஞர் ஏங்கினார். ஆனால், அந்தக் கட்சி திமுக கூட்டணியை ஏற்று இருந்தால் திமுக,தேமுதிக,காங்கீரஸ் கூட்டணி மந்திரி சபை கூட ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அது அழிவில் இருந்த அதிமுகவை தூக்கிவிட்டதோடு, தன்னைத் தானே அழித்துக் கொண்டது! தனக்கான எந்த அரசியல் கொள்கைகளோ, தொலை நோக்குத் திட்டங்களோவற்ற அக் கட்சி சந்தர்ப்பவாத அரசியலில் பாஜகவின் கைப்பிள்ளையாகி சரிந்து போனதால், அதிமுகவில் இருபது தொகுதிகளைக் கூட வாங்க முடியாத நிலை!
இன்றைய தேமுதிகவின் நலிவுக்கு முழுக்க,முழுக்க அதிமுக தான் காரணம். தே.மி.தி.க கட்சி எம்.ஏல்.ஏ.க்கள் எட்டு பேரை தன் கட்சிக்கு அதிமுக இழுத்தது. பல வழக்குகளை போட்டு அலை கழித்தது. அந்த அதிமுகவிடம் தான் இன்று சீட் கேட்டு மடிப்பிச்சை ஏந்துகிறது தே.மு.தி.க! விஜயகாந்த் உடல் நிலையோ எதுவும் செயல்பட இயலாதாவாறு நலிவுற்ற நிலையில் இருக்க, அவரை ஒரு ஷோகேஸ் பொம்மையாக்கி அவரது மனைவி பிரேமலதா செய்யும் அரசியலை தமிழக மக்கள் ரசிக்கவில்லை. ஒரு வேளை அதிமுக இவர்களை கைவிட்டால், எந்த ஒரு தொகுதியிலும் இந்த கட்சியால் டெபாசிட் கூட வாங்க முடியாது.
திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தலித் மக்களின் உண்மையான விடிவெள்ளியாக தன்னை கட்டமைக்கத் தவறி, தனி மனித துதிபாடி கட்சியாகிவிட்டதோடு, கட்சி கட்டமைப்பையும் வலுப்படுத்த தவறிவிட்டது. 2011 தேர்தலில் திமுகவிடம் பெற்ற 10 இடங்களிலுமே தோல்வி அடைந்தது!2016 ல் 25 தொகுதிகளில் நின்றும் ஒரு சதவிகித வாக்குகளைக் கூட பெறமுடியவில்லை. இத்தனை ஆண்டு கால வளர்ச்சியில் தமிழகத்தில் இரண்டு தொகுதிகளிலாவது முழுமையான அக்கரை எடுத்து பணியாற்றி மக்கள் நம்பிக்கையை,விசுவாசத்தை வென்றெடுக்க பாடுபட்டிருந்தால் திமுக என்ன எங்களுக்கு தொகுதி தருவது..? என்று தனித்து களம் காணலாம்!
ஜி.கே.வாசனின் தாமக, 2016 தேர்தலில் 26 தொகுதிகளில் நின்று அரை சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்ற கட்சியாகும். தற்போது, அதிமுக சீட் தரவில்லையென்றால், இந்த கட்சி அடுத்த தேர்தல் வரை உயிர்பித்திருக்கவே முடியாது.
பாஜக சென்ற தேர்தலில் 234 தொகுதிகளின் நின்று ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல் வெறும் 2.86% சதவிகித ஓட்டு வாங்கிய கட்சியாகும். விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில இடங்களில் தான் டெபாசிட்டையே தக்கவைக்க முடிந்தது. இன்றோ.., அதிமுக ஆதரவின்றி தனித்துவிடப்பட்டால் தமிழகத்தில் எந்த தொகுதியிலும் அதற்கு டெபாசிட் கிடைக்காது. கடந்த ஐந்தாண்டுகளில் தங்கள் கட்சியில் பல நடிகர், நடிகைகளை சேர்த்தனர் என்பதைத் தவிர, அந்தக் கட்சி பெரிதாக வளரவில்லை. மத்திய அரசின் எல்லா வேலைவாய்ப்புகளையும், தமிழகத்தில் யாருமே பெறமுடியாதவாறு அந்த கட்சி செய்த சூழ்ச்சிக்கு இந்த தேர்தலில் அவர்கள் பெரிய விலையை தர வேண்டியிருக்கும். சாதி அமைப்புகள் வழியாக தன் வாக்கு வங்கியை வளர்க்க அந்த கட்சி செய்த முயற்சிகள் எந்த அளவு பலனளிக்கும் எனத் தெரியவில்லை.
தினகரன், கமலஹாசன் மற்றும் சீமான் பற்றியெல்லாம் நான் இங்கே எழுத ஒன்றுமில்லை. இவர்கள் மிகவும் நம்பகத் தன்மையற்றவர்கள் என்பதை மட்டும் தமிழக வாக்காளர்களுக்கு சொல்லி வைக்கிறேன். அடுத்த தேர்தல் வரையாவது இவர்களின் கட்சிகள் ஜீவித்திருந்தால் எழுதுகிறேன்.
ஊழல் மலிந்த ஆட்சியை தந்து, இலவச திட்டங்கள் மற்றும் அரசு பணத்தை எடுத்து ஊதாரித்தனமாக அள்ளி இறைப்பதன் மூலமும், பணப் பட்டுவாடா மூலமும், வெற்றி பெற நினைக்கிறது அதிமுக. இத்துடன் தொண்டர் படைக்கு, கட்சி அடிமட்ட தொண்டர்கள் வரை ஊழல்பணத்தை பாய்ச்சிய வகையில் எப்படியாவது வெற்றிபெறலாம் என நினைக்கிறது ஆளும் அதிமுக! திமுக எதிர்ப்பு ஓட்டுகளை முடிந்த அளவு ஒன்றிணைத்துள்ள போதிலும், இந்த கட்சி ஆளும் கட்சியாக மீண்டும் வருவது சந்தேகமே! ஆனால், திமுகவிற்கு பலமான போட்டியை தரக் கூடிய அளவில் தான் அதிமுக உள்ளது.
இறுதியாக திமுகவை பற்றி சொல்ல வேண்டும் என்றால், பாஜகவிற்கான பலமான எதிர்ப்பலை வீசுவதைக் கொண்டு சுலபமாக கரை சேர்ந்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறது திமுக. திமுக வெற்றி பெறலாம். ஆனால், அந்த வெற்றி சுலபமாக இருக்க போவதில்லை. காரணம் பாஜகவின் மீதான வெறுப்பு காரணமாகவும், அதிமுகவின் அடிமை அரசியல் காரணமாகவும், திராவிட அடையாளத்தை தக்க வைக்க வேண்டும் என்பதன் காரணமாகவுமே திமுகவிற்கான பிரம்மாண்டமான ஒரு வாக்கு வங்கி உருவாகியுள்ளது. அந்த வாக்கு வங்கியின் நம்பகத் தன்மையை சிதைக்கும் வண்ணம் அந்தக் கட்சியின் குடும்ப அரசியல், ஊழல்கள், மற்றும் அராஜக அரசியல் ஆகிய அனைத்தும் அப்படியே இருக்கின்றன. அத்துடன் பிரசாந்த் கிஷோர் என்ற பிராமண கார்ப்பரேட் அதிபரின் கட்டளைப்படி தான் அந்தக் கட்சியின் சகல அசைவுகளும் தீர்மானிக்கப்படுகின்றன என்பதும் மிகப் பெரிய பின்னடைவே!
ஆக, தேர்தலிலேயே சுயேட்சையாக செயல்பட முடியாத திமுக, வெற்றி பெற்று வந்த பின்பு சுயேட்சையாக செயல்படுமா..? என்பதும் பாஜக எதிர்ப்பில் உறுதிபாட்டுடன் நிற்குமா என்பதும்…தெளிவற்ற, விடை காண முடியாத கேள்வியாக உள்ளது. ஏனெனில், அடுத்து வரும் ஆண்டுகளில் பாஜகவை எதிர்ப்பதற்கு சுய சிந்தனையுள்ள, அப்பழுக்கற்ற அரசியல் பின்னணி இருந்தால் மட்டுமே சாத்தியம் என்ற யதார்த்தை சொல்ல வேண்டியது நம் கடமையாகிறது.
Also read
கூட்டணி கட்சிகள் பலவீனமாக இருக்கின்றன என்றாலும், அவற்றை திமுக நடத்தும் விதம் தர்ம சங்கடமாகவே உள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இஸ்லாமியர்கள், தலித்துகள் ஆகியோர் பெரிய வாக்கு வங்கி இல்லாமல் இருக்கலாம்! ஆனால், திமுக கூட்டணி மீது மக்கள் நம்பகத் தன்மை கொள்வதற்கு மிகப் பெரிய ஆதாரங்களாக இந்த கட்சிகளே அமைகின்றனர். கண்ணுக்குத் தெரியாததும், அளந்து முடிவுக்கு வரமுடியாததுமான அந்த இமேஜ் தான் வெற்றியை உறுதிபடுத்தவல்லதாகும். ஆகவே, கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருவதால் திமுக குறைந்துவிடாது. அதன் இமேஜ் தான் உயரும்! மற்றவர்களுக்கு குறைத்து, அதிக தொகுதிகளில் தான் மட்டுமே நிற்க வேண்டும் என்ற முனைப்பே அதன் தன்நம்பிக்கை இன்மையை பறை சாற்றுவதாகிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாஜக என்ற மதவாத, சாதிய பாகுபாடுள்ள பிரித்தாளும் ஆதிக்க சக்தியை எதிர்க்க ஒற்றுமையே மிக அவசியமானது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளுமே மக்களை நம்பாமல் தேர்தல் செலவுக்குப் பணம் வரும் ஆதாரத்தை மட்டுமே நம்புகின்றன அதனால் தான் இந்தக் கூட்டணி இழுபறி
அருமையான கட்டுரை சார் ஆனால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் விலைபோக கூடியவர்கள் உம் புதுச்சேரி தமிழகத்தில் காங்கிரஸ் உழைக்கவே இல்லை !
சிறப்பு