சிறப்பாக நடக்கின்ற அறம் இதழின் ஏழாம் ஆண்டு தொடக்க நிகழ்வு… இந்த நல்ல நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற, அத்தனை பேருக்கும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறம் இதழ் இன்னும் தொடர்ந்து தன்னுடைய சிறப்பான ஊடகப் பணியை மென்மேலும் செய்யும் என்று உள்ளார்ந்து நான் நம்புகிறேன், அதனை வாழ்த்துகிறேன்.
உங்களுக்கு சாவித்திரி கண்ணன் இந்த இதழினுடைய ஆசிரியர், அவர் அறிமுகமா? நல்ல நண்பரா? என்று கேட்கலாம்.
உலக இளைஞர்களின் கதாநாயகனாக விளங்கக்கூடிய ஒப்பற்ற புரட்சியாளர் சே குவேரா, மிக அழகாக குறிப்பிடுவார்: “இந்த பூமிப்பந்தின் எந்தத் திசையிலும், எந்த மக்கள் கூட்டத்திலும், அந்த மக்கள் கூட்டத்தினுடைய உரிமை… இந்த பூமிப்பந்தினுடைய எந்தப் பகுதியிலும் மானுடத்திற்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக யாரெல்லாம் களம் காண்கிறார்களோ, அவர்களெல்லாம் என்னுடைய தோழர்கள், என் அன்புக்குரிய நண்பர்கள்” என்று சொல்வார்.
அதைப் போல நம்முடைய தமிழ்நாட்டில், இந்தியாவில் அநீதிக்கு எதிராக யாரெல்லாம் அறத்தை ஏந்துகிறார்களோ, அவர்கள் அனைவரும் என்னுடைய தோழர்கள், என்னுடைய நண்பர்கள்தான். அந்த வகையில் என்னுடைய மிகச்சிறந்த தோழராக அன்பிற்குரிய சாவித்திரி கண்ணனை நான் கருதுகிறேன்.
இவர் எப்படி எனக்கு அறிமுகம்? நான் 2001-இல் நான் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிக் கொண்டிருந்த காலம். இரவு நேரத்தில் நான் உறங்காமல் பாலாற்றினுடைய அந்தப் படுகையிலே சட்டத்திற்கு புறம்பான மணல் கடத்தலைத் தடுப்பதற்காக இரவு முழுவதும் அதனுடைய ஓரத்திலே பயணித்து அத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்வேன்.
அந்த பாலாற்று தண்ணீரை சட்டத்திற்கு புறம்பாக அதிகமாக அபகரித்த நான் ஒரு உலகத்தினுடைய மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தை இழுத்து மூடினேன், அதனுடைய விற்பனையை தடுத்து நிறுத்தினேன்.
அந்த பாலாற்றினுடைய மணல் சட்டத்திற்குப் புறம்பாக கடத்தல் நடைபெற்ற போது, எம்முடைய அலுவலர்களை எல்லாம் இரவு முழுவதும் உறங்காமல் வைத்து அதைத் தடுத்து நிறுத்தினேன்.
அப்பொழுது நான் இறுதியாக அந்த பழையசீவரம் என்ற ஒரு இடத்திலே இரண்டு வாகனங்கள் மணல் சட்டத்திற்குப் புறம்பாக ஆற்றுப் படுகையிலே மணலை எடுத்து நிரப்பிக் கொண்டிருந்த, அந்த நேரத்தில் நாங்கள் சென்று அந்த வாகனங்களை கைப்பற்றுகிறோம்.
அந்த லாரியின் முகப்பிலே எழுதப்பட்டிருந்த பெயர், அன்றைக்கு 2001-னுடைய தொடக்கத்தில் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருந்தவருடைய பெயரைக் கொண்டிருந்தது. இரண்டாவது லாரியில் அவருடைய அருமை மகனுடைய பெயரை அன்றைக்கு எழுதியிருந்தார்.
இரண்டு லாரிகளையும் கைப்பற்றிக் கொண்டு வந்து பழையசீவரத்து காவல் நிலையத்திலே கொண்டு போய் ஒப்படைத்தோடு அபராதத் தொகையை வசூலித்தோம். சும்மா இருப்பார்களா? நான் மாவட்ட வருவாய் அலுவலர் பதவியிலிருந்து உடனடியாக நான் தூக்கி எறியப்பட்டேன். அதிகாரம் இல்லாத திருச்சிக்கு, அந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒரு முதன்மை மேலாளராக நான் மாற்றப்பட்டேன்.
அன்றைக்கு நான் மாற்றப்பட்ட மறுநாள், என்னாலே நம்ப முடியவில்லை, 5,000 பேர் திரண்டு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எதிராக அந்த சாலையிலே பெரும் போராட்டத்தை 5 மணி நேரம் நடத்தினார்கள். அதற்குப் பிறகு தொடர்ந்து நடத்துகிறார்கள் 5 நாட்கள் நடத்தினார்கள். அன்றைக்கு நடந்த நிகழ்வினுடைய அந்தப் பின்னணியில் ஒரு மனிதர் துக்ளக் பத்திரிகையிலிருந்து வந்து ஒரு கட்டுரையை எழுதினார். “மணல் விழுங்கி மகாதேவன்கள்” என்ற அன்றைக்கு பலராலும் பாராட்டப்பட்ட கட்டுரையை எழுதிய பெருமகனார் தான் அன்பிற்குரிய சாவித்திரி கண்ணன் அவர்கள்.
ஊழலுக்கு எதிரான மனநிலை மட்டுமல்ல, இயற்கை வளச் சூறையாடல் என் தாயகத்திலே நடக்கிறதே, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்கின்ற ஆதங்கத்திலும், ஆத்திரத்திலும் தொடர்ந்து இன்றைக்கு வரைக்கும் அவர் எழுதி வருகிறார். உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி. அவருடைய நிகழ்வில் உணர்வுப்பூர்வமாக கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பிற்கு நான் அன்பிற்குரிய நண்பர் சாவித்திரி கண்ணன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு மூன்று பேருக்கு விருதுகள் வழங்கி இருக்கிறார். மூன்று பேருக்கு விருதுகள் வழங்கி இருக்கிறார். தாயம்மாள் அறவாணன்…. அம்மா என்றால் அன்பு, தாய் என்றால் தியாகம். இந்த அன்பும் தியாகமும் கலந்த கலவை தான் எங்கள் தாயம்மாள் அறவாணன் அவர்கள். உண்மையிலேயே சொல்லுகிறேன், 80 வயதைத் தாண்டியவர். இந்த நிலையிலும் கடந்த ஆண்டிலே நான் எழுதிய புத்தகம் ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’. அதில் நெசவாளர்களுடைய மிக மோசமான வறுமையான வெறுமையான சூழலை நான் விவரித்து எழுதி,. அப்பொழுது இந்த ஊழல் அராஜகவாதிகளை நான் எதிர்கொண்ட விதத்தையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறேன்.

அப்பொழுது அம்மாவிடம், “அம்மா, நீங்கள் தமிழ்ப் பேராசிரியர், இதிலே தமிழ் எழுத்துப் பிழை இருக்கிறது, திருத்திக் கொடுக்க முடியுமா?” என்று சொன்ன பொழுது, 24 மணி நேரத்தில் இரவு முழுவதும் தூங்காமல் இருந்து என் கண்டாங்கிச் சேலையை மெருகூட்டிய தாய் தான் தாயம்மாள்.
அவருடைய கணவர் பேராசிரியர் அறவாணன். அவர் லயோலா கல்லூரியினுடைய தமிழ்த் துறைத் தலைவர் 80-களினுடைய மத்தியில். அந்தப் பெருமகனார் எனக்குப் பேராசிரியர். நான் அங்கே முதுகலை சமூகப்பணி படித்த காலம். அந்த காலத்தில் அருட்தந்தை மச்சோடா அடிகளார் கட்டுரைப் போட்டிக்கு 1980-களிலேயே 500 ரூபாய் பரிசு பெற்றேன். நானோ ஒரு எளிய விவசாயியினுடைய மகன். கட்டணம் கட்டுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், முதல் பரிசு 500 ரூபாய் எனக்கு பெரிதும் உதவியது.
அடுத்த ஆண்டிலும் நான் தான் முதல் பரிசைப் பெற்றேன். அந்த இரண்டு விருதுகளையும் எனக்கு அளித்த பெருமகனார் பேராசிரியர் அறவாணன் அவர்கள், அவருடைய துணைவியாருக்கு நான் விருது அளிக்கக்கூடிய அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஏற்றமிகு பெருமகனார் சாவித்திரி கண்ணன் அவர்கள்.
வாழ்த்துகிறேன் தாயே, வாழ்த்துகிறேன் உங்களை!
இங்கே வந்திருக்கிறார், கம்பூர் செல்வராஜ் . ஒரு இளைஞர், கிராமத்து இளைஞர். விவசாயிகளுடைய உரிமைக்காக மதுரையிலே மகத்தான போராட்டங்களை நடத்தி வருகிறார். இயற்கை… எம்முடைய தாயகம், தமிழருடைய தாயகம், இந்த தமிழ் மண்ணில் இயற்கை வளங்கள் சூறையாடக் கூடாது என்பதிலே, அது எத்தனை அதிகாரம் வல்லமை வாய்ந்ததாக இருந்தாலும், அதற்கு எதிராக வலிமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்.

2012-லே அன்றைக்கு நான் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த பொழுது, நான் அன்றைக்கு 2012 மே மாதத்தில் 19-ஆம் தேதி. “இங்கே மேலூர் பகுதியில் நடக்கக் கூடிய இந்த கனிம வளக் கொள்ளையால் அரசுக்கு 16,000 கோடி இழப்பு” என்று அன்றைக்கு நான் அறிக்கை அளித்தேன்.
அறிக்கை அளித்து நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னேன். ஏனென்றால், நான் உரிமம் வழங்க முடியாது. 170 அந்த கிரானைட் சுரங்கங்கள் உண்டு, நான் நான்கைத்தான் பார்க்க முடியும், எனக்கு ஆட்கள் இல்லை. தொழில்நுட்ப வல்லுநர்கள் எனக்கு இல்லை. எனவே நான் அரசாங்கத்திற்கு எழுதினேன், “தொழில்நுட்ப வல்லுநர்களை அளிப்பதுடன் உரிமங்களை ரத்து செய்யுங்கள்” என்றெல்லாம் நடவடிக்கை எடுக்கக் கோரி நான் எழுதினேன்.
அன்றைய தமிழக அரசு 2012-இல் என்னுடைய அறிக்கையின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தது. நான் மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு..எவ்வளவு வேகமாக எம்முடைய அரசியல் வியாபாரிகள் செயல்படுகிறார்கள் என்று பார்க்க வேண்டியிருக்கிறது.
அன்பிற்குரியவர்களே, அன்றைக்கு நான் அந்தப் பதவியை இழந்தேன். 2015-இல் நான் சென்னை உயர்நீதிமன்றத்தால் “Legal Commissioner for the irregularities committed in Madurai District”… உயர்நீதிமன்றம் என்னை Legal Commissioner-ஆக நியமனம் செய்தது. உச்சநீதிமன்றம் அன்றைய தமிழக அரசினுடைய எதிர்ப்பையும் மீறி அதை அங்கீகரித்தது, ஏற்றுக் கொண்டது.
நான் 2012-யிலே இந்த கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்த காரணத்தினால், என்னுடைய மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியை மட்டும் இழக்கவில்லை. எனக்கு 7 ஆண்டு காலம்… 22, 23 ஆண்டுகளில் 22 முறை என்னை மாற்றியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு என்னை ஒரு அதிகாரமும் இல்லாத ஒரு பதவியில் 7 ஆண்டு வைத்திருந்தது தமிழக அரசு.
அப்படியாக அறத்தை நம்புபவர்களுக்கு, நேர்மையாக நிமிர்ந்து நிற்பவர்களுக்கு கௌரவத்தை அளித்தது தமிழக அரசு. ஆனால் ஒன்று, நான் மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியை இழந்திருக்கலாம், நான் அந்த ஐ.ஏ.எஸ் பதவியை இழந்திருக்கலாம், ஆனால் இன்றைக்கு தமிழகம் முழுவதும் கிரானைட் மலைகள் அடித்துத் தகர்க்கப்படுகின்றன, மதுரை மாவட்டத்தில் மட்டும் அந்த மலைகள் ஓரளவு காக்கப்பட்டிருக்கின்றன. அது போதும்.

நான் காத்து வைத்திருக்கின்ற மலையைத் தொடர்ந்து காக்கின்ற அருமை இளைஞர் தான் கம்பூர் செல்வராஜ். வாழ்த்துகிறேன்.
மிகச்சிறந்த, மிகச் சரியான நபர்களை அடையாளம் காண்கிறார் நம்முடைய சாவித்திரி கண்ணன். இன்னொருவர் வழக்கறிஞர் ரத்தினம். அவர் உடல் நிலை சரியில்லாததால் இங்கே வரவில்லை, அருமையான பெருமகனார். அவர் ஆதிக்க சமூகப் பின்னணியில் இருந்து வந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களினுடைய உரிமைக்காக உள்ளார்ந்து போராடக் கூடிய உயர்ந்த மனிதர்.
புரட்சியாளரை ஒடுக்கப்பட்ட ஒரு குடிமகன் எப்படி நேசிப்பானோ, அப்படி என்னை நேசிக்கக்கூடிய பெருமகனாராக வழக்கறிஞர் ரத்தினம் திகழ்ந்தார். அவர் எனக்கு பாதுகாப்பு இல்லை என்று 2015-இல் எனக்கு மிரட்டல் வந்த போது, நூற்றுக்கணக்கான உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை எல்லாம் திரட்டி உயர்நீதிமன்ற வளாகத்தில் போராடிய பெருமகன் அவர்.
மிகச் சரியான நபர்களுக்கு நீங்கள் விருது வழங்கி இருக்கிறீர்கள், பாராட்டுகிறேன். அன்பிற்குரியவர்களே., அறத்தை நான் படித்துக் கொண்டு வருகிறேன், தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன். கடைசியாக நான் படித்தது அறத்திலே…நீங்கள் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள் சாவித்திரி கண்ணன்.

“இப்பொழுது பரந்தூர் விவசாயிகளைக் காப்பாற்றிவிட்டு, தமிழகம் முழுவதையும் தாரை வார்க்கப் போகிறீர்களா?” என்று கட்டுரையை கடுமையாக எழுதியிருக்கிறீர்கள். நான் அதை நேசித்து வாசித்தேன். ‘அறம்’ இதழினுடைய எழுத்து எல்லாம் மிகவும் நேசித்து வாசிக்கத்தக்கவை. அதிலே எழுதியிருக்கிறார்.
என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? “நகர் ஊரக திட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியதைப் பற்றி” இன்றைய தமிழக அரசு செப்டம்பர் 1-யிலே சட்டமன்றத்திலே அதை அறிமுகப்படுத்தியதைப் பற்றி எழுதியிருக்கிறார். அப்பொழுது அவர் குறிப்பிடுகிறார், ” ஒரு நன்செய் நிலத்தை தொழில் நோக்கத்திற்கோ அல்லது வேறு பயன்பாட்டிற்கோ எடுக்க வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியருடைய இசைவு அவசியம். ஆனால் அந்த மாவட்ட ஆட்சியர்களுடைய இசைவு தேவையில்லை, உள்ளாட்சி பிரதிநிதிகள் அமைப்புகளுடைய இசைவு எதுவுமே தேவையில்லை என்று இன்றைய தமிழக அரசு இன்றைக்கு சட்டத்தைக் கொண்டு வர எத்தனிக்கிறது. அதற்கு எதிராகக் கடுமையாகத் தன் எழுத்துக்களால் அவர் சாடுகிறார்.”
“மாவட்ட ஆட்சித் தலைவர்களை ‘டம்மி’யாக்கியிருக்கிறார்கள்” என்று அவர் போடுகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஏற்கனவே ‘டம்மி’யாக்கியிருக்கின்றன, நம்முடைய அரசுகள்.வரலாற்றை உற்று நோக்கினால் தெரியும், 1772-ஆம் ஆண்டு கிழக்கு இந்தியக் கம்பெனியால் உருவாக்கப்பட்ட பதவிதான் இந்த கலெக்டர் பதவி.
நீங்கள் லார்ட் வேவல்… இந்த நாட்டினுடைய விடுதலைக்கு முன்பாக கடைசியாக இருந்த வைஸ்ராய், அவருக்கு முன்பாக இருந்தவர் லார்ட் வேவல். அவர் சொல்லுகிறார், அவர் என்ன சொல்லுகிறார் தெரியுமா?
என்ன சொல்லுகிறார் தெரியுமா? “இந்த பிரித்தானியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிச் சென்றதற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகும் நாம் நினைக்கப்படுவோம், இதற்காக அதற்காக அல்ல, இந்த கலெக்டர் பதவி என்ற ஒரு அருமையான அமைப்பை உருவாக்கியதற்காக நாம் நினைக்கப்படுவோம்” என்று லார்ட் வேவல், வேவல் பிரபு குறிப்பிடுகிறார்.
அவர் மட்டுமல்ல, ‘The Service of Billion Plus’ என்ற ஒரு புத்தகத்தில்… ‘The Service of Billion Plus’ என்ற புத்தகத்திலே… அந்தப் புத்தகத்தில் மிக,மிக அழகாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார். என்ன குறிப்பிட்டிருக்கிறார் தெரியுமா?
“உலகத்திலேயே 200 சட்டங்களுக்கு மேலாக அதிகாரம் கொடுக்கப்பட்ட ஒரு அதிகாரம் மிகுந்த பதவி கலெக்டர் பதவி” என்று அவர் குறிப்பிடுகிறார். அந்த அதிகாரம் மிகுந்த கலெக்டர்களை இங்கே ‘டம்மி’யாக்கியிருக்கிறார், என்று குறிப்பிடுகிறார்.
நான் எந்தக் காலத்திலும் ஒரு விவசாயி நிலத்தை… நான் ஒருக்காலும் வேறு பயன்பாட்டிற்காக மாற்ற உத்தரவிட்டதில்லை.

நான் எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்று சொன்னால், விவசாயிகள் மீது சாவித்திரி கண்ணன் கருணை கொண்டவர். கிராம மேம்பாட்டிலே இவர் அக்கறை கொண்டவர். ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைக் களத்தில் இயங்குவதிலே இன்பம் காண்பவர். ஊழலுக்கு எதிராக உரத்த குரலெழுப்புபவர். இயற்கை வளங்களைச் சூறையாடுவதிலே… எவருக்கும் நிகராக, எவரைக் காட்டிலும் அதற்கு எதிராக முழக்கமிடுபவர். பாசிச சக்திகள், மதவாத சக்திகள் எவ்வளவு வல்லமையாக இருந்தாலும் அதற்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுப்பவர் தான் சாவித்திரி கண்ணன். அத்தனை துணிச்சலையும் நான் அவருடைய கட்டுரைகளிலே பார்க்கிறேன்.
எனவே சாவித்திரி கண்ணனுக்கு அறிமுகம் என்ன தெரியுமா? ‘அறமுகம் தான் இவருக்கு அறிமுகம்’ என்று சொல்ல நான் ஆசைப்படுகிறேன். அறத்தினுடைய அடையாளம்!
இது எங்கிருந்து வந்தது? என்று யோசிக்கிறேன். தமிழ் மொழியே ஒரு அறத்தினுடைய மொழி தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்பிற்குரியவர்களே, இந்த மண்ணை, இந்த மக்களை, இந்த மக்களினுடைய மகத்தான மரபு மொழியை இவர் பிரதிபலிக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே ஒரு நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக என்னிடத்திலே சாவித்திரி கண்ணன் பேசினார். “என்ன சார். என்ன தமிழ் இயக்கமெல்லாம் தொடங்கியிருக்கிறீர்கள்?” என்று விசாரித்தார். 110 ஆண்டுகளுக்கு முன்பாக, 1916-யிலே வடமொழியினுடைய ஆதிக்கத்தில் நிலைகுலைந்து போன தமிழை மீட்பதற்காக எம்முடைய பெரிய ஆளுமைகள் அன்றைக்கு முனைந்தார்கள்.
உங்களுக்கெல்லாம் தெரியும் மணிப்பிரவாள நடை. சமஸ்கிருதத்தினுடைய தாக்குதலில் எம் தமிழ் நிலைகுலைந்திருந்த நேரத்தில் மறைமலையடிகள் போன்ற மகத்தான ஆளுமைகள் எழுந்து நின்று எம் மொழியைக் காப்பதற்காக அன்றைக்கு பாடுபட்டார்கள், பங்களித்தார்கள்.
இன்றைக்கு அது சமஸ்கிருதம், வட மொழி ஆதிக்கங்களை காட்டிலும் பல மடங்கு ஆங்கில மொழியினுடைய ஆதிக்கத்தால் என் தமிழ்த் தாய் நிலைகுலைந்து போயிருக்கிறாள்,.
இந்த நிலையில் எம்முடைய இளைஞர்களை அழைத்து, ”நாம் இந்தத் தமிழ் மொழியைக் காப்பதற்காக நாம் முதலிலே இயக்கம் தொடங்க வேண்டும்” என்று சொன்னேன்.
நான் இன்றைக்கும் சொல்லுகிறேன், தமிழ் அடையாளத்திற்குள் செல்லுபவன் தமிழன்; தமிழ் ஆழத்திற்குள் செல்லுபவன் சித்தனாவான், புத்தனாவான் என்பதுதான் உண்மை. இது அறமொழி! எனவே, இந்த மொழியைக் காப்பதற்காக அன்றைக்கு தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கியதைப் போல, இன்றைக்கு இந்த ஆங்கில ஆதிக்கத்திலிருந்து நம் தமிழை மீட்பதற்காக ‘இனிதமிழ் இயக்கத்தை’ நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.
110 ஆண்டுகளுக்குப் பின்பாக இந்த இயக்கத்தைத் தொடங்கி, இன்றைக்கு எம்முடைய இளைஞர்களுக்கு நாங்கள் அறிவுறுத்தி வருகின்றோம்: தமிழ் கையெழுத்திடுங்கள், தமிழிலே பெயரிடுங்கள், உங்களுடைய உரையாடலில் ஆங்கிலத்தைக் கலவாமல் நீங்கள் பேசுங்கள், மம்மி, டாடி எல்லாம் மாறிப்போய் அப்பா, அம்மாக்களாக ஆகுங்கள், இந்த அங்கிள் எல்லாம் ஒழிந்து சித்தப்பா, பெரியப்பா என்று உறவுமுறைகளை அழையுங்கள், தமிழிலேயே சிந்தியுங்கள், தமிழிலேயே வாழுங்கள்” என்று சொல்லி இந்தத் தமிழைக் காக்கும் பணியையும் நாங்கள் முன்னெடுத்து வருகிறோம்.
எனவே, அறத்தின் வழியில் நின்று நேர்மையோடும் துணிச்சலோடும் பணியாற்றி வரும் ‘அறம்’ இதழ் மென்மேலும் சிறப்படையவும், நண்பர் சாவித்திரி கண்ணனின் ஊடகப்பணி மேலோங்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து, வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
உ.சகாயம்
இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (ஓய்வு)























அறவழி வாழும் மறத்தமிழனின் வாழ்த்துகள்