எளியோருக்கு ஏற்றம் தரும் நவோதயா பள்ளிகளை எதிர்க்கலாமா?

-பேராசிரியர் க.யோகராஜன்

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் வந்து விட்டன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தொடர்ந்து எதிர்க்கிறீர்கள்? என நீதிமன்றத்தின் மூலம் நெருக்கடி வழங்கப்படுகிறது. இந்தி கற்பிப்பதற்காக மட்டுமல்ல, நாம் நவோதயாவை எதிர்ப்பது! அதையும் கடந்து, இதை எதிர்க்க பல நியாயங்கள் உள்ளன என்கிறார், பேராசிரியர் யோகராஜன்;

நவோதயா எதிர்ப்பை புரிந்து கொள்ள கொஞ்சம் வரலாற்றை பின் நோக்கி பார்க்க வேண்டும். மிசா சட்டம் 1971 -ல் பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த பஞ்சங்களும், மக்கள் போராட்டங்களும்  1975 -ல் அவசர நிலை பிரகடனத்திற்கு காரணமாக இருந்தது. இந்தச் சூழலில் அது வரை மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி 1976 -ல் பொதுப் பட்டியலுக்கு மாறிற்று.

இந்தியாவின் பெரிய நிறுவனங்களில் வேலை செய்ய இந்திய மக்கள் கல்வி பெறுவது  அவசியம். கல்வி இல்லாமல் உற்பத்தி திறனை பெருக்க இயலாது. ஆனால், உற்பத்தி திறனை பெருக்குவதற்கான கல்வியை அளிக்க வேண்டுமே ஒழிய, மெய்யான சிந்தனைத் திறனை கல்வி தந்து விடலாகாது. பெரிய நிறுவனங்களை பொறுத்த வரை தொழிலாளிகளை நிரந்தரமாக அடிமைத் தளையில் வைத்திருக்கும் நோக்கத்திற்கு சாதகமான கல்வியே தரப்பட வேண்டும்.

1986 கல்விக் கொள்கை:  நவோதயா பள்ளிகள்;

இந்தப் பின்னணியில் தான் 1986 -ல் அன்றைய புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்திய ஆளும் வர்க்கத்தால் எழுதப்பட்ட கொள்கையாகும். இன்றைய கல்விச் சீரழிவுகள் அனைத்திற்கும் விதை இதில் தான் போடப்பட்டது. கல்வியை வணிகமாக்கும் போக்கு இதிலிருந்தே துவங்குகியது.

இதில் முன் மொழியப்பட்டதே நவோதயா பள்ளிகள் திட்டமாகும். நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidyalaya Samiti – NVS) என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின்  கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். தேசியக் கல்விக் கொள்கையின் (NPE 1986) முக்கியப் பரிந்துரைகளில் ஒன்றாக, கிராமப்புறங்களில் உள்ள ‘திறமையான’ மாணவர்களுக்கு உயர்தர உறைவிடக் கல்வி வழங்கும் நோக்கில் ஜவஹர் நவோதயா வித்யாலயா (JNV) பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவ்வாறாக தமிழகத்தைத் தவிர அனைத்து இந்திய மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் தோன்றின.  கேரளம், மேற்குவங்கம் உட்பட 650 நவோதயா பள்ளிகள் இன்றும் செயல்பட்டாலும், அவற்றில் 620  தற்போது பி.எம்.ஸ்ரீ பள்ளிகளாகப்பட்டுவிட்டன.

1980 களில் சோவியத் ஒன்றியம் வீழத் துவங்குகிறது. உலக வங்கி, DFID போன்ற நிதி நிறுவனங்கள் வளரும் நாடுகளை நசுக்கத் துவங்குகின்றன. WTO வின் மூலம் GATT , GATS போன்ற ஒப்பந்த திட்டங்கள் உலக நாடுகள் மீது திணிக்கப்படுகின்றன. இந்த சர்வதேச சூழலில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் DPEP  எனப்படும் மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம். இந்திய சந்தைப் பொருளாதார சக்திகளின் தேவைகளுக்காக இந்தியா WTOவின் ஒப்பந்தங்களை ஏற்கிறது.

உலக வங்கி, SAP மற்றும் DPEP: அரசுப் பள்ளிகள் மீதான தாக்குதல்:

உலக முதலாளிகளுக்கான உழைக்கும் சக்திகளாக மாணவர்களை உருவாக்கும் இந்த முயற்சியால் இந்தியக் கல்விக் கொள்கையே மாற்றம் காண்கிறது. இது அரசின் பொதுக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு, திட்டமிடல் மற்றும் கல்வி வழங்கும் முறையையே மாற்றி அமைத்தது. சுருக்கமாக இதன் பொருள் என்னனெனில் திறமையானவர்களுக்கு நவோதயா, ஏனையோருக்கு DPEP  எனப்படும் மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம்.

இது சர்வ சிக்ஷா அபியான் (SSA) என்ற திட்டமாக உருப்பெற்று   1990-களின் முடிவில் 18 மாநிலங்களில் உள்ள 240-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு  விரிவுபடுத்தப்பட்டது. DPEP திட்டத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்கள் (சிக்ஷா கர்மி, வித்யா சகாயக், பாரா-டீச்சர்ஸ்) நியமிக்கப்பட்டனர். இது இதுவே ஒப்பந்தப் பணி கலாச்சாரத்திற்கு வித்திட்டது. முறையான பள்ளி அமைப்புகளுக்குப் பதிலாக மாற்றுக் கல்வி மையங்கள் (Alternative Schooling) மற்றும் கல்வி உறுதித் திட்ட (EGS) மையங்கள் தொடங்கப்பட்டன. மொத்தத்தில், கல்வி வழங்கும் முதன்மைப் பொறுப்பில் இருந்து அரசு பின்வாங்கிக் கொண்டது. சந்தைக்கேற்ற கல்வி என்ற சகதிக்குள் கல்விக் கொள்கை சிக்கியது.

பள்ளி மாணவர்களுக்குப் பாடங்களைத் தனித்தனியே பிரித்துக் கற்பிக்க வேண்டியதில்லையாம்.

கணிதம், சூழலியல், மொழி, வரலாறு மற்றும் அறிவியல் ஆகிய அனைத்தையும் ஒன்றிணைந்த வடிவிலேயே வழங்க வேண்டுமாம்; இதனால் எல்லாப் பாடங்களையும் ஒரே பாடப்புத்தகத்திற்குள்ளேயே அடக்கிவிட்டனர். அதாவது,  பாடம் சார்ந்த தனித்தனி ஆசிரியர்கள் தேவையில்லையாம். கல்விக்கான செலவை குறைப்பதே அரசின் நோக்கமானது. செலவினங்களைக் குறைப்பதற்காகவே ஒருங்கிணைந்த கற்பித்தல் மையங்கள் (multi-graded teaching centres) அல்லது ஓராசிரியர் பள்ளிகள் (ek adhyapak vidyalayas) நிறுவப்பட்டன.

அடிப்படையான கற்பித்தல் முறைகளையே சிதைத்து, ஆசிரியர்களே தேவைப்படாத சுயவழிக் கற்றலை அறிமுகப்படுத்தினர். குழந்தைகள் விளையாடிக் கொண்டே கற்கட்டும் என்றனர்.

‘கற்கக் கற்பது’ என்பதைப் புகுத்தினர்; அதாவது, ஆசிரியரின் வழிகாட்டல் இல்லாமலேயே எப்படிக் கற்றுக் கொள்வது என்பதே அதன் பொருள். படிப்படியாக, ஆசிரியரின் பங்கு வெறும் வழிகாட்டியாகவும், சும்மா பார்வையாளராகவும் சுருக்கப்பட்டது. ஆசிரியர்களின் கற்பித்தல் பணி தேவையற்றதாக்கப்பட்டது. வகுப்பறையில் ஓர் ஆசிரியர் ஆற்ற வேண்டிய மிக முக்கியமான, விழிப்புணர்வுடனான பங்களிப்பு முற்றிலுமாக மறுதலிக்கப்பட்டது.

நீதிமன்ற வழக்கு: மொழி அரசியலா? சமூக நீதியா?:

திறமையானவர்களை மட்டுமே கண்டறிந்து கற்பிப்பது என்பதே நவோதய பள்ளிகளின் அடிப்படைக் கோட்பாடு. தற்போது இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை முதலில் தொடர்ந்தது ‘குமரி மகா சபா’ (Kumari Maha Sabha) என்ற அமைப்பாகும்.நவோதயா பள்ளிகளைத் தொடங்கத் தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பதால், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் இலவசமான, தரமான மத்திய சிபிஎஸ்இ (CBSE) உறைவிடக் கல்வியைப் பெறுவது தடைபடுகிறது என்றும், இது இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு (RTE Act, 2009) எதிரானது என்றும் கூறி, இந்த பொதுநல மனு (PIL) தாக்கல் செய்யப்பட்டது.

உயர்நீதிமன்றத்  நீதிபதிகள் கே.கே. சசிதரன் மற்றும் ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு,  குமரி மகா சபாவின் மனுவை ஏற்றுக்கொண்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதற்குத் தேவையான நிலங்களை அடையாளம் கண்டு வழங்குமாறு செப்டம்பர் 2017 அன்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. பின்பு வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. முந்தைய உத்தரவுகளைத் திரும்பப் பெறக்கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளுக்கான நிலங்களை அடையாளம் காணுமாறு அரசுக்கு அறிவுறுத்தியது.

 

விசாரணையின் போது, “தமிழ் மண்ணில் இந்தி கற்பிக்கப்படவே கூடாது என்று பிடிவாதம் கூடாது” என்றும், கூடுதலாக ஒரு பள்ளி அமைப்பு வருவதால் தமிழகக் கல்வியின் தரம் குறைந்துவிடாது என்றும் அமர்வு கருத்துத் தெரிவித்தது. கல்வி என்பது அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தில்  மாநிலமும், ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். “ஒன்றிய அரசின் ஒரு திட்டத்தை ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று நிராகரித்துக் கொண்டே போனால் நாட்டின் கூட்டாட்சி நிர்வாகக் கட்டமைப்பு என்னவாகும்?” என்று நீதிபதி பி.வி. நாகரத்னா கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு விவாதங்களில் சமூக சமத்துவம் குறித்த கேள்வியே எழவில்லை. மாணவர்களில் திறமையானோர் – ஏனையோர் என்று பேதம் கற்பிப்பது இயற்கை நீதிக்கு முற்றிலும் புறம்பானதல்லவா?

ஒரே நாட்டில் வெறும் 1% க்கும் குறைவான மாணவர்களுக்கு கோடிக்கணக்கான நிதியில் சகல வசதிகளும் உள்ள, சிறந்த குளிரூட்டப்பட்ட அழகான வகுப்பறை கொண்ட உயர்தரமான உறைவிடப் பள்ளிகள்! மீதமுள்ள 99% சாதாரண ஏழை எளிய மாணவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத மோசமான கல்விச் சூழலை அப்படியே தொடர்வீர்களா?

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமையை இது அப்பட்டமாக மீறுவதாகாதா? நம் கண் முன்னே நடக்கும் இவை அனைத்தையும் நாம் வேடிக்கை பார்க்க வேண்டுமா?

இந்த லட்சணத்தில் தான் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒன்றிய அரசு ரூ 85 கோடி செலவு செய்கிறது. நவோதயாவில் படிக்கும் 500-600 மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கிறது; ஆனால், நாட்டில் மற்ற பள்ளிகளுக்கு அக்கறை காட்டமாட்டார்களாம்.

இன்று நவோதயா பள்ளிகள் பெரும்பாலும் PMshri பள்ளிகளாக மாறிவிட்டன. PM SHRI பள்ளி என்பது இந்திய அரசால் 2022 ல் தொடங்கப்பட்ட  மத்திய அரசின்  திட்டமாகும். தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020-ன் அம்சங்களை முழுமையாகச் செயல்படுத்தும் மாதிரிப் பள்ளிகள் இவை. அது மட்டுமல்ல, அப்பகுதியில் உள்ள மற்ற அனைத்துப் பள்ளிகளையும் அந்த பாடத் திட்டத்திற்கு மாற்றுவது அதன் இலக்காகும். இந்த பி.எம்.ஸ்ரீ பள்ளிகளைத் தான் சென்ற திமுக ஆட்சியில்  ’தமிழக அரசின் மாடல் பள்ளிகள்’ என்ற பெயரில் தமிழ் நாட்டில் 36 இடங்களில் நடத்துகிறார்கள். இது மிகவும் தவறாகும்.

மனித நாகரிகமும், கல்வியின் தோற்றமும்:

இன்று நாம் காணும் மனிதன் தோன்றி இரண்டு  லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இயற்கையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் போராட்டம் அன்றிலிருந்து  புதிய பரிமாணம் பெற்றுவிட்டது. இந்த நெடிய போராட்டத்தின் மூலமாகவே அறிவு திரள்கிறது. கல்வியின் அடித்தளம் கடும் போராட்டங்கள் மூலம் தோன்றிய கூட்டு அறிவு தான்.

வேளாண்மை மனித சமூகத்தின் தன்மையை அடியோடு மாற்றுகிறது.  ஆள்பவர்களாகவும் அடிமைககளாகவும் மனித இனம் பிரிந்து விடுகிறது.  இதை என்றென்றும் தொடர்வற்குரிய அரசும் சட்டங்களும், நியமங்களும் தோன்றுகின்றன. இவைகளை என்றைக்கும் நீடிக்கும் வகையிலான கல்வி முறையும் தோன்றுகிறது. இதன்பிறகு எத்தனையோ நூறாண்டுகள் கழிந்து விட்டன. அன்று இருந்த அடிமை சமூகம் இன்று இல்லை. நிலவுடமை, காலனி ஆட்சி போன்ற அமைப்புகள் தோன்றி மறைந்து இன்று நவீன சந்தைப்பொருளாதார சக்திகள் பூமியை ஆள்கின்றன. பெயரளவில் ஜனநாயகம் என்ற அரசியல் அமைப்பு இன்று இருக்கிறது. ஆனால் ஆளும் சக்திகளின் பிடியில் கல்வி இருப்பது இன்றும் மாறவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை அரசே தனது பொதுப் பள்ளிகள் மூலம் தருவது தான் இயற்கை நீதி. அதை விடுத்து, மிகச் சிலருக்கு மட்டும்  சகல வசதி கொண்ட  பள்ளிகளை உருவாக்கிவிட்டு, மீதமுள்ள அரசுப் பள்ளி அமைப்பைப் பட்டினி போடுவது தான் கூட்டாட்சியா? கல்வி என்பது  வணிகச் சந்தைகானதல்ல; அது மானுடத்தின் பொதுச் சொத்து. அதைச் சந்தைச் சக்திகளுக்கும், ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கும் பலியிட அனுமதிக்க முடியாது. கல்வியில் பேதம் வேண்டாம்.

பேராசிரியர் க.யோகராஜன்

மாநிலச் செயலாளர்,

அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி. (AISEC)

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time