இது தனி நபர் குற்றம் மட்டுமல்ல, சமூகத்தின் குற்றமும் கூட!

-சாவித்திரி கண்ணன்

நூற்றுக்கணக்கான சிறுமிகளை கால் நூற்றாண்டாக பாலியல் வேட்டையாடிய தொழில் அதிபர் வீரமணி கடந்த காலத்தில் முதல்வர்களான இரு பெரும் தலைவர்களின் இல்லங்களுக்கு இடையே தான் இத்தனை சித்து விளையாட்டுகளையும் நடத்தி வலம் வந்துள்ளார். சமூகத்தில் பலதரப்பின் அனுசரணையில்லாமல்  தொடர் குற்றங்கள் ஒருபோதும் சாத்தியமில்லை;

அறக்கட்டளை என்ற பெயரில் ஏழைகளிடம் வேலை செய்பவர்களை தொடர் கண்காணிப்புக்கு உள்ளாக்க வேண்டும். ஒரு பெரிய பங்களா. அதன் வாசலில் நின்று கொண்டு பந்து விளையாட அழைப்பது போல பந்தை வீசி எறிந்து குழந்தைகளை எடுத்துவரச் செய்யும் விளையாட்டு. பிறகு வெளி நட்டு சாக்லேட்டுகள் தருவது, விலை உயர்ந்த உடைகள், செல்போன் தருவது..என ஆரம்பித்துள்ளார். இதில் அவர் தேர்ந்தெடுக்கும் சிறுமிகளை தயார்படுத்த வேண்டியது சாந்தியின் பொறுப்பாக இருந்துள்ளது. இந்த வகையில் காம விளையாட்டை நடத்தியுள்ளார்.

ஏழை சிறுமிகளை தானும் வேட்டையாடியதோடு, மற்ற சில தொழில் அதிபர்களுக்கும் அவர் அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அந்த சிறுமிகளை தன் சொகுசு காரில் வைத்துக் கொண்டு நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் விருந்துகளுக்கும் அழைத்துச் சென்றுள்ளார். இவரது கால் நூற்றாண்டு கால காம விளையாட்டுகளுக்கு அவரது குடும்பத்தின் வாரிசுகளும் வழி சமைத்து தந்துள்ளது பேரதிர்ச்சியைத் தருகிறது.

2003 ஆம் ஆண்டே ஒரு சிறுமி பாலியல் வன்முறையில் இவரால் இறந்தாள் என்பதை அவருக்கு சிறுமிகளை விநியோகம் செய்த சாந்தி, வீரமணிக்கு நினைவூட்டி அனுப்பிய மெசேஜ் சொல்கிறது!

2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே இவரது பாலியல் குற்றங்கள் வெளியான போதும் அமுக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்! சென்ற திமுக ஆட்சியாளர்களும் அமைதி காத்து வீரமணியை தப்பிக்கவிட்டுள்ளனர்.

ஆக, திமுக, அதிமுக இல்லாத ஆட்சி மாற்றம் நடந்திராவிட்டால் மிகப் பெரிய தொழில் அதிபர் ஜெம் கிரானைட் வீரமணி கைது என்பது ஒரு போதும் சாத்தியப்பட்டு இருக்காது என்பது மட்டுமல்ல, இந்த அக்கிரமமே வெளியில் வந்திருக்காது.

ஒரு பெரும் பாலியல் குற்றவாளி கால் நூற்றாண்டுக்கும் மேலாக மிக சுதந்திரமாக இந்த சமூகத்தில் வலம் வர முடிந்திருப்பதற்கு – இந்த சமூகத்தில் பலரது அனுசரணைகளும், கண்டும், காணாமல் போன அமைதியும் தான் துணை போயுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அக்கிரமங்களுக்கு எதிரான தார்மீகச் சீற்றங்கள் நாளுக்கு நாள் அரிதாகி வருவது அந்த சமூகத்தின் வீழ்ச்சிக்கு விரைவாக வித்திட்டுவிடும்.

கைது செய்யப்பட்டு 20 நாட்கள் கழித்து தற்போது தான் போலீசார் அவரை மூன்று நாட்கள் விசாரணைக்கு கஸ்டடி பெற முடிந்துள்ளது. ஆக, ஏதோ சில அரசியல் அழுத்தங்கள் இந்த அரசுக்கு இருந்திருக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் இது நாள் வரை இதை பேசாமல் தவிர்த்த முதல்வர் விஜய் இன்றைக்கு வீரமணி விவகாரத்தில் காவல்துறை உறுதியுடன் செயல்பட ஊக்கம் தரும் வகையில் பேசியிருப்பது ஒரு வகையில் நம்பிக்கை அளிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக வீரமணியின் பாலியல் வீடியோவை வைத்து அவரிடம் பேரம் நடத்தப்பட்டதில் அவருக்கு தரகு வேலை செய்த சாந்தி, மகேந்திர சின்ஹன் மற்றும் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

சிறுமிகளை வீரமணிக்கு விநியோகித்த சாந்தி, மகேந்திர சிம்ஹன்

எதைப் பேசுவது, எதைத் தவிர்ப்பது என்பதில் அரசியல் கட்சிகள் காட்டும் அணுகுமுறை நுணுக்கமானது!

சில அக்கிரமங்களை எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் பொங்கி எழுந்து கண்டிப்பார்கள்! சில அக்கிரமங்களை கண்டும் காணாதது போல அலட்சியம் காட்டுவார்கள்!

வீரமணி விவகாரத்தில் இத்தனை ஏழைச் சிறுமிகள் பாதிக்கப்பட்ட நிலையில் – அதிலும் தலித் சிறுமிகளையே சாந்தி குறி வைத்து தூக்கியுள்ள விவகாரத்தில் – நெஞ்சை பதறச் செய்யும் உண்மைகள் ஒன்றையடுத்து ஒன்றென வெளியாகும் தருவாயில் கம்யூனிஸ்ட்கள், விசிக, பாமக, பாஜக, அதிமுக உள்ளிட்ட இன்னும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

நியாயப்படி சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போதே இவர் விவகாரம் சட்ட சபையில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த வீரமணி ஒரு சாதாரணத் தொழில் அதிபர் அல்ல.

பெடரேசன் ஆப் இந்தியன் கிரானைட் மற்றும் ஸ்டோன் தொழிற்சாலைகள் அமைப்பின் நிறுவனர் தலைவர்.

இந்தோ-அமெரிக்க வர்த்தக சபையின் தேசிய தலைவர்.

இந்தோ-ஜப்பான் வர்த்தக சபையின் தலைவர்..என பல பொறுப்புகளில் இருந்தவர். தேசிய, சர்வதேசிய அளவில் வலுவான செல்வாக்கு பெற்றவர்.

இப்படி மிக செல்வாக்கான ஒருவரை காப்பாற்ற சென்ற ஆட்சி காலத்தில் காவல்துறை இந்த வழக்கில் உண்மையை கண்டறிய வாய்ப்பில்லை. கைவிட்டுவிடலாம் என பரிந்துரைத்ததை ஏற்க மறுத்த போக்சோ நீதிமன்றத்தின் நீதிபதி பத்மா வணக்கத்திற்கு உரியவராவார். இன்றைக்கு இந்த ஆட்சியில் இந்த விவகாரம் உயிர்பெற்றதற்கு இவரே காரணமாவார்.

அமைச்சர் ராஜ்மோகன் சுட்டிக் காட்டிய பிறகு சி.பி.எம்.சண்முகம் வாய் திறந்து பேசுகிறார். வழக்கம் போல கம்யூனிஸ்ட்களை விட இந்த மாதிரி விவகாரத்தில் கேள்வி கேட்டவர்கள் போரடியவர்கள் யார்? என்ற வசனத்தையும் அவர் பேசத் தவறவில்லை. வாஸ்தவம் தான். ஆனால், இத்தனை நாட்களாக தோழர்கள் பெ.சண்முகமும், மு.வீரபாண்டியனும் இதை பேசாமல் தவிர்த்தற்கு விளக்கமில்லையே!

பொதுவாக சிறுமிகள், பெண்களுக்கு பாலியல் பாதிப்பு நேரும் போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் பெண்கள் அமைப்புகளான இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை உடனே குரல் கொடுப்பதே வழக்கம். ஆனால், இந்த விவகாரத்திலோ சென்ற ஆட்சியில் குற்றவாளிக்கு துணை போனவர்களைக் கண்டித்தும், இந்த ஆட்சியில் மெத்தனம் காட்டாமல் தொழில் அதிபர் வீரமணி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்க கோரியும் ஏழைக் குழந்தைகளுக்கு ஆதரவாக ஒர் ஆர்பாட்டம் கூட 20 நாட்களை கடந்தும் நடத்தவில்லையே என்பது ஆழ்ந்த வேதனை தருகிறது.

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரத்தில் சென்ற வருடம் அக்டோபர் 6 ஆம் தேதி தரப்பட்ட கொடூரமான ஒரு பாலியல் புகாருக்கு இந்த வருடம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தான் ஒரு போக்சோ குற்றவாளி கைது செய்யப்படுகிறார்..என்பது சென்ற திமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் வீரமணியின் குற்றச் செயல்களில் காட்டிய அலட்சியப் போக்கை காட்டுகிறது.

வீரமணிக்கு உதவிய சாந்தி, மகேந்திர சிம்ஹன், குற்றத்திற்கு காரணமான வீடியோவை எடுத்தவர், அதை பென் டிரைவில் தந்து சென்றவர், அதை காவல் துறையில் ஒப்படைத்தவர், விபச்சார தடுப்பு பிரிவில் இருந்த அதிகாரிகள், சென்னை மாநகர கமிஷனர் அருண், உதவி ஆய்வாளர்கள் யாஸ்மின், ராதிகா அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோடு,  தண்டிக்கப்பட வேண்டும்.

மிகப் பெரிய தொழில் அதிபர் என்ற வகையில் இவர் பழகாத ஆட்சியாளர்களே கிடையாது. எல்லா கட்சித் தலைவர்களுக்கும் தாராளமாக தேர்தல் நிதியை அள்ளிக் கொடுத்தவர் – இதில் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை. இந்தப் பின்னணியில் இது சுமார், கால் நூற்றாண்டுக்கும் மேலாக தங்கு தடையின்றி நடந்து கொண்டிருந்த குற்றம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே சமயம் சமூகத்தில் இப்படியான ஒரு கொடூர அக்கிரமத்திற்கு காரணமானவர் எனத் தெரிய வந்த பிறகு அவர் தப்பிக்காமல் தண்டிக்கப்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து தார்மீக குரலை வெளிப்படுத்த வேண்டும். அதுவே ஆட்சியாளர்கள் இந்த விவகாரத்தில் உறுதியுடன் செயல்பட ஊக்கம் தரும்.

தவெக புதிய கட்சி என்பதாலும், இது புதிய அதிகார மையம் என்பதாலும் வீரமணியால் இன்புளுயன்ஸ் பண்ண முடியாமல் போயிருக்கலாம்.

நீண்ட நெடுங்கால அயோக்கியன் சிக்கியுள்ளார். இந்த குற்ற வலைப் பின்னணியில் இருக்கும் காவல் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என யாரையும் விடாமல் தண்டிப்பதே எதிர்காலத்தில் குற்றம் செய்வோருக்கு அச்சத்தை தரும்.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time