நீதிமன்றங்கள் கட்டப் பஞ்சாயத்தாக மாறலாமா?

-ச.அருணாச்சலம்

தமிழ் நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க வேண்டுமா? கூடாதா? என்ற ஒரு முடிவை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாதா?  மாநிலம் சார்ந்த ஆரம்ப நிலை பள்ளிக் கல்வியை கற்பிக்கும் உரிமை முழுக்க, முழுக்க மாநில அரசுக்கானதில்லையா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை நீதிமன்றங்கள் நிர்பந்திக்கலாமா? 

தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி  பி. வி நாகரத்தினா,நீதிபதி மசி ( தமிழகத்தை சார்ந்த தீதிபதி. மகாதேவன் இந்த அமர்வில் அமர சம்மதிக்காத்தால் அவருக்கு பதிலாக அங்கு அமர்ந்துள்ள நீதிபதி .மசி) ஆகியோரை கொண்ட அமர்வு நவோதயா பள்ளிகளுக்கான இடங்களை மாவட்ட வாரியாக அடையாளம் கண்டு அறியுமாறும், மோதல் போக்கை விடுத்து மத்திய மாநில அரசுகள் பேசி முடிவெடுக்கலாம் என்றும் கூறி வழக்கை டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

மத்திய அரசு தன்னிச்சையாக அல்லது மாநில அரசின் சம்மதமின்றி ஒரு அகில இந்திய கொள்கையை அறிவிக்க முடியுமா? அவ்வாறு அறிவிக்கப்பட்ட கொள்கையை மாநில அரசு சட்டபூர்வமாக எதிர்க்க அல்லது நடைமுறை படுத்தாமலிருக்க முடியுமா ? சர்ச்சைக்கு உள்ளான ஒரு கொள்கை அறிவிப்பை நிதி பங்கீட்டுடன் தொடர்பு படுத்தி, மாநில அரசை மத்திய அரசு வற்புறுத்த முடியுமா? என்ற கேள்விகள் இந்திய அரசியல் பொதுவெளியில் சமீப காலமாக எழுந்துள்ளன.

இத்துடன் காலங்காலமாக உள்ள பிரச்சினையான , தனித்தனி அதிகார வரையறைகளை

உடைய அமைப்புக்கள் – நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் ஆளுகின்ற அதிகார அமைப்புகள் (Judiciary,Legislature and Executive) – அவ்வதிகார வரம்பிலிருந்து மீறுவது தொடர்பான சிக்கலும் இங்கு எழுந்துள்ளது. கொள்கை விடயங்களில் (policy matters) நீதி மன்றங்கள் தலையிட முடியுமா என்ற கேள்வியும் அவ்வாறு தலையிட்டு கட்டுபடுத்தும் உத்திரவை (mandamus) மாநில/மத்திய அரசுக்கு பிறப்பிக்க முடியுமா? என்ற கேள்வியும் இப்பொழுது எழுகிறது.

இதனுடன் கடந்த பத்து பதினோரு ஆண்டுகளாக நீதிமன்ற உத்திரவுகளின் மூலம் சர்ச்சைக்குரிய அல்லது ஒருதலை பட்சமான கொள்கை முடிவுகளை நடைமுறை படுத்தும் போக்கு மிக அதிகமாக ஓங்கியுள்ளது.

# நீட் தேர்வு (NEET) குறித்த முடிவு,

# வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தங்கள் (SIR) குறித்த முடிவு

# மத்திய மாநில நிதி பங்கீட்டு ஏற்பாடு பற்றிய முடிவு ஆகியவை நீதிமன்றங்களின் மூலம் நடத்தப்படும் குளறுபடிகளுக்கு உதாரணங்களாகும்.

நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பின் மத்திய அரசு ஒளிந்து கொண்டு காய்களை நகர்த்துவது இன்று ஒரு கலையாக மாறியுள்ளது.

இந்த வகையில் நவோதயா பள்ளி திட்டம் 1986-ல் நாட்டு முழுமைக்கும், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கும் தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,மத்திய அரசால் அறிமுகபடுத்தப்பட்டாலும், இத்திட்டம் கட்டாயத் திட்டமல்ல, தன்னிச்சையாக ஏற்கவோ, நிராகரிக்கவோ  முடிந்த  திட்டமாகும்.

இத்திட்டம் கட்டாயமான திட்டமாக இல்லாததால் தமிழக அரசு இத்திட்டத்தை அமல்படுத்த முன்வரவில்லை. தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை எதிர்த்த போதிலும், இரு மொழி கொள்கைதான மாநிலத்தின் மொழிக் கொள்கை என்ற தீர்மானித்திருந்தாலும், இந்தி மொழியை கற்று கொடுக்க கூடாது என்ற எண்ணத்தில் நவோதயா பள்ளிகளுக்கு வழிவிடவில்லை என்று கூறுவது அபத்தமான வாதமாகும் . ஏனெனில், தமிழகத்தில் இந்தியை பயிற்றுவிக்கும் ஏராளமான கேந்திரிய பள்ளிகள் இயங்கி வருகின்றன, அவை காலங்காலமாக சிபி எஸ் இ பாட திட்டத்தையும் மும்மொழி திட்டத்தையும் பயிற்றுவிக்கின்றனர்.

இரண்டாவதாக நவோதயா பள்ளிகளை அனுமதித்தால் அது கல்வியில் சமத்துவம் மறுக்கப்படுவதற்கு ஒப்பானது என்று கூறுவதும் கூட முக்கியத்துவம் கொண்ட வாதமல்ல.

நமது பார்வையில், பள்ளிக் கல்வி என்பது அந்தந்த மாநிலம் மட்டுமே தீர்மானிக்க வேண்டிய ஒன்றாகும். மண்ணையும், மரபையும், மாநிலம் சார்ந்த பூகோள, சரித்திர வரலாற்று பாடங்களையும் கற்பிக்கும் ஆரம்பக் கல்வி உரிமை மாநில அரசுக்கு மட்டுமே உரியதாகும்.

தற்போது குமரி மகா சபா என்ற அமைப்பு நவோதயா பள்ளிகளை திறக்காமலிருப்பது கிராமப்புற மாணவர் மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் செயல் என என்று பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற உத்திரவை எதிர்த்த மாநில அரசின் மேல்முறையீட்டில் நீதிபதி நாகரத்தினா தமிழக அரசு மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம். நீதிமன்ற உத்திரவு (பள்ளி அமைக்க தகுந்த இடங்களை தமிழக அரசு குறிப்பிட்ட கால கெடுவிற்குள் அடையாளம் காணவேண்டும் என்ற உத்திரவு) தற்காலிகமானது தான், அதை திருப்ப பெற இயலாது. ஆகவே, மாநில அரசு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முடிவை எட்டலாம். விரைவில் பள்ளிக்கான நிலங்களை கையகப்படுத்துங்கள் என நீதிமன்றம் உத்திரவிடவில்லை, அவற்றை இனம் காண மட்டுமே அறிவுறுத்தி உள்ளோம் என்றெல்லாம் நிர்பந்தித்தும், நயந்தும் கூறி வழக்கை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.

தி மு க ஆட்சியில் இருந்த போது தொடரப்பட்ட இந்த வழக்கில் , புதிதாக பொறுப்பேற்று உள்ள த வெ க அரசும் முந்தைய திமுக அரசு எடுத்து வைத்த வாதங்களையே , இத்திட்டம் மாநில அரசின் இரு மொழிக் கொள்கையை நிராகரிக்கும் மும்மொழி திட்டத்தை கொண்டுள்ளது, நீதிமன்றங்கள் கொள்கை விடயங்களில் மாநில அரசை கட்டுபடுத்தும் mandamus உத்திரவுகளை பிறப்பிக்க முடியாது என்ற வாதங்களையே – மீண்டும் முன் வைத்தது. இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாமல், மேற்கூறிய அவதானிப்புகளுடன் வழக்கை தள்ளி வைத்துள்ளது.

இவ்வழக்கில் புதிய தமிழக அரசு என்ன மாதிரியான நிலைபாட்டை எடுக்க வேண்டும்?

தேவைப்படும் இடங்களை கண்டறிய இன்னும் அவகாசம் வேண்டும் என்று கூறுவதோ,

கண்டறிந்தபின் அதற்கான மாநில அனுமதிகளை தராமலிருப்பது போன்ற காலதாமதங்களோ

நேர்மையான அணுகுமுறை அல்ல. இதனால் நாம் எதிர்பார்க்கும் தீர்ப்பும் கிட்டாது.

நீதிமன்றங்களின் அதிகாரங்களை கேள்வி கேட்டு இத்தகைய கொள்கை விடயங்களில் நீதிமன்றங்களின் அதிகார வரம்பினை எடுத்தியம்பி , வழக்கின் முக்கியத்துவத்தை கருதி பெரிய அமர்வை கோரலாம், அரசியல் சாசன அமர்வை கூட கோரலாம்.

அல்லது இந்த அமர்வு நமக்கு உரிய தீர்ப்பை தராவிடில் , மறுஆய்வு மனுவோ அல்லது சீராய்வு மனுவோ கோரலாம்.

தமிழக சட்டமன்றம் கூடி, அனைத்து  கட்சிகளும் ஒருமனதாக இரு மொழிக்கொள்கையை வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றலாம். உச்சநீதி மன்ற தீர்ப்பை இத்தகைய சட்டமன்ற தீர்மானம் மறுதலிக்க முடியாவிட்டாலும் , ஜனநாயகத்தில் , மாநில சட்டசபையின் ஒரு மனதான தீர்மானத்தின் முக்கியத்துவத்தை நீதிமன்றம் கணக்கில் எடுக்க முடியும்.

ஆனால், பொது பட்டியலில் உள்ள கல்வித் துறையை பற்றிய கொள்கை முடிவில் சம்பந்தபட்ட மாநில அரசின் ஏகமனதான தீர்மானத்தை நீதி மன்றங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால், நீட் போன்ற விடயங்களில் நீதிமன்றங்கள் மாநிலங்களின் உரிமைகள் அல்லது தனித்தன்மை பற்றி கவலைப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

நீதிமன்றங்களை அணுகி கொள்கை விடயங்களில் தீர்வை எட்டுவதை விட , உச்சநீதிமன்றமே அடிக்கடி அறிவுறுத்துவதை ஏற்று மத்திய அரசுடன் மாநில அரசு பேசி ஏன் கல்வி கொள்கையில் ஒரு சமரச முடிவை எட்ட கூடாது என்ற கேள்வி எழுகிறது.

சாட்சிகாரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழலாம் என்ற அனுபவ மொழியும் இதைத்தானே கூறுகிறது.

கடந்த காலங்களில் மத்திய அரசில் பங்கேற்ற கட்சியான தி மு க இத்தகைய உருப்படியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு மாநில உரிமைகளை வலுப்படுத்தி இருக்க முடியும் .

திமுக வின் தயவால் மத்திய அரசுகள் இயங்கிய காலத்திலும் , மத்திய ஆட்சி பொறுப்பில் தி மு க இருந்த காலத்திலும் இத்தகைய பேச்சு வார்த்தைகளின் மூலம் மாநில உரிமைகளை திமுக செய்திருக்க முடியும், செய்திருக்க வேண்டும் .

நவோதய பள்ளிகளுக்கு ஒரு சில நிபந்தனைகளுடன் நிலம் வழங்க தமிழ்நாடு அரசு முன் வரலாம். மும்மொழி கொள்கையை சிறிது மாற்றங்களுடன் – தமிழும் ஆங்கிலமும் கற்றுத் தரும் திட்டமாக செயல்படுத்த மத்திய அரசும் , நவோதய வித்யாலய சமிதியும் முன் வந்தால் அவர்களுடன் சட்டப்படி செல்லும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை MOU ஏற்படுத்தி அதனடிப்படையில் நவோதயா பள்ளிகள் இயங்க தமிழக அரசு முன்வரலாம்.

இதன் மூலம் கிராமத்து ஏழைஏளிய மாணவர்களும் தரமான கல்வியை பெறலாம்.

இத்தகைய நவோதய பள்ளிகளில் மாணவர்களின் இடமாற்றத்தை –புலம் பெயர்ந்து வட மாநிலங்கள் செல்லும் முறையை- அனுமதிக்கும் பிரிவு 9 ஐ விலக்கி கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் இந்தியை கற்க வேண்டிய கட்டாயத்திலிருந்து மாணவர்களுக்கு விலக்கு கிடைக்கும். இது இரு அரசுகளின் – மத்திய ,மாநில அரசுகளின்-நற்பெயருக்கும் களங்கமில்லாமல் நடைமுறைக்கு வரலாம்.

அல்லது தமிழ்நாட்டிற்கு மாநில அரசின் கொள்கைப்படி நவோதயா போன்ற சிறப்பு பள்ளிகளை நடத்த சிறப்பு விலக்கு /சிறப்பு தகுதி (special status or special case ) கொடுத்து மும்மொழி பயிற்றுவிப்பதில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்கலாம்.

வளையாத கம்பு மேல் இதுகாறும் நிமிர்ந்து நின்ற மத்திய அரசு அவசியமேற்படில் கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதானை கழட்டி விட வில்லையா? ஆனால் அந்த அவசியத்தை எவ்வாறு ஏற்படுத்துவது என்று தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும்.

கல்வி என்பது மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலில் மாற்றப்பட்டதையும், தமிழ்நாட்டின் உரிமைகள், அம்மாநிலத்தின் தனித் தகுதி ஆகியவற்றை கணக்கில் கொண்டு மத்திய அரசு இப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும்.

2020 ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் புதிய அவதாரம் எடுத்துள்ள மும்மொழிக் கொள்கை, மாணவர்களிடையே பன்மொழி அறிவையும், தேசத்தின் ஒற்றுமையையும் பேணும் அதே நேரத்தில், மாநிலங்களின், பிரிந்து விரிந்துள்ள மாணவர்களின் மொழி தேவையை அறிந்து, அவற்றில் நீக்குபோக்குடன் மொழிகளை கற்றுத்தர முயல்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் மகராஷ்டிர மாநிலத்தில் தொடங்கி பல மாநிலங்களில் இந்தியை ஆறாம் வகுப்பிலிருந்து கட்டாயமாக்குவதை எதிர்த்து மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். மாநில பாஜக அரசு அத்திட்டத்தை திரும்ப பெற்றுள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில் மும்பொழிக் கொள்கை என்பது பெயரளவிற்கே உள்ளது.

தென்னிந்திய மொழிகளை கற்பிக்க கூட போதிய ஆசிரியர்கள் அங்கில்லை என்ற நிலையில் மும்மொழிக் கொள்கையின் நோக்கம் தேச ஒற்றுமையை தாண்டி, ஒரு பொழி ஆதிக்கத்தை நிலை நாட்ட துடிக்கும் அரசியலே தெரிகிறது. இந்த அரசியலில் – இந்தி மொழிக்கு தேவைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதில் முன்னணியில் உள்ளனர்.

மக்களின் நலன்களை முன்னிறுத்தினால் மாநில அரசும் மத்திய அரசும் இம்முயற்சியில் வெற்றி பெறலாம், அத்தகைய முயற்சிக்கு உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரமும் கிடைக்கும்.

ஆனால் அரசியல் லாபத்தை முன்னிறுத்தினால் ஆணவத்தை முன்னிறுத்தினால் பிரச்சினைகள் வேறுதிசையில் பயணிக்கும் அபாயம் உள்ளது.

மோதல் போக்கை – mindset- மாற்றவேண்டும் என்ற நீதிபதியின் அறிவுறுத்தல் மாநில அரசிற்கு மட்டுந்தான் பொருந்துமா ?.

ச.அருணாச்சலம்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time