1,500 வருட மரபின் தொடர்ச்சியாக வளர்ந்த உன்னத கலைகளும், அதன் கலைஞர்களும் நிர்கதியாக கைவிடப்பட்டனர். கலை, பண்பாட்டு தொடர்ச்சி அறுபட்டுப் போனது. அதே சமயம் பெண்கள் மீது பல நிகழ்த்தப்பட்ட பாலியல் சுரண்டலுக்கு ஒரு முடிவை காண முயன்றோம். இந்த வரலாற்றை ஆராயும் போது எதையெல்லாம் நாம் இழந்தோம் , அதில் ஒரு குறிப்பிட்ட சமூகம் எப்படியெல்லாம் ஆதாயம் அடைந்தது என்பதையும் பார்க்க வேண்டும்;
தேவதாசி கலாச்சாரம் அழிக்கப்பட்டதால் அந்த கலைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. அந்த உன்னதக் கலையின் தொடர்ச்சி அவர்களிடம் இருந்து அறுபட்டது.
நாட்டியம் மற்றும் இசைக் கலையை உயிர் மூச்சாகக் கொண்டு அதற்கான தீவிரமான கடுமையான பயிற்சிகள், விரதங்கள், ஒழுக்க கட்டுப்பாடுகளோடு பல வருடப் பயிற்சி தரப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டனர் இவர்கள்! இப்படி பன்னெடுங்காலமாக பல தலைமுறைகளாக பெற்ற கலை அறிவும், நுணுக்கமும் அடுத்தடுத்த தலைமுறைக்கு தர முடியாமல் போனது.
இந்த தேவதாசி ஒழிப்பு சட்டத்தை பற்றி இருந்தே 1930 களில் இருந்தே முன்னெடுப்புகள் நடந்து வந்தது. எப்போதும் தொலை நோக்குப் பார்வையோடு சிந்தித்து பழகிய பிராமணச் சமூகத்தினர் உடனே சுதாரித்துக் கொண்டு, இந்தக் கலையை நாம் கற்றால் என்ன? என கற்கத் தொடங்கினர். அப்போது புதிதாக மேலேழுந்து வந்த சினிமாவில் முக்கியத்துவம் பெற இந்தக் கலை தங்களுக்கு உதவும் என பிராமணப் பெண்கள் கருதினர்.டி.பி.ராஜலஷ்மி, வசுந்திரா, வைஜெயந்தி மாலா, வி.என்.ஜானகி, குமாரி ருக்மணி போன்ற பிராமணப் பெண்கள் தங்கள் சமூகத்திற்கு சம்பந்தமில்லாத நடன கலையை கற்று சினிமாவில் பிரவேசித்தனர்.

தமிழ்நாட்டில் நாட்டிய மரபு மூன்று வகைப்பட்டது. தஞ்சைமரபு, பந்தனநல்லூர் மரபு, வழுவூர் மரபு என்ற இந்த பிரிவுகளில் தஞ்சை மரபுக்கு இலக்கண வடிவம் தந்து உருவாக்கியவர்கள் பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு எனும் நால்வர். இவர்கள் யாரும் அந்தணர்கள் அல்ல. இசை வேளாளர் மரபினரே இதில் கோலோச்சினர்.
இந்த சமூகத்தாரிடம் இருந்து தான் பிராமணர்கள் இந்தக் கலையைக் கற்றனர். கலாஷேத்திராவை உருவாக்கிய ருக்குமணி அருண்டேல் கெளரி அம்மாள், பந்தனநல்லூர் மீனாட்சி சுந்தரம், கணபதி முதலியார் ஆகியோரிடமும் பிற்காலத்தில் உருவான பத்மாசுப்ரமணியம் வழுவூர் ராமையா பிள்ளை போன்றவர்களிடம் தான் நடனம் கற்றனர்.
அப்படி கற்ற இந்தக் கலையை சனாதன மயமாகவும், சமஸ்கிருதமயமாகவும் மாற்றி இந்த சதிராட்டத்திற்கு பரத நாட்டியம் என்ற பெயரும் வைத்துவிட்டனர். பத்மா சுப்பிரமணியம் ஒருபடி மேலே போய் இந்தக் கலையை உருவாக்கியதே பரத முனிவர் என்பவர் என கதையளந்தார். தமிழ் நாட்டுக்கேயான இந்தக் கலைக்கு தேசிய சாயத்தையும் தந்தார்.
இன்றைய தினம் இந்த பரத நாட்டியக் கலையை கற்பிப்பதில் பெரும்பாலோர் இந்த பிராமண சமூகத்து பெண்களே என்ற நிலை தோன்றிவிட்டது.
ருக்குமணி அருண்டேல் பார்ப்பன லாபி செய்து மத்திய அரசிடம் சென்னை திருவான்மியூரில் கலாஷேத்திரா என்ற பிரம்மாண்ட நிலப்பரப்பை நாட்டியக் கலை வளர்ப்பதற்கு என்றே கட்டணமில்லாமல் பெற்று இந்தக் கலையை வளர்த்தெடுத்தார்.

அதே சமயம் தேவதாசி மரபில் வந்த நாட்டிய மேதையான பாலசரஸ்வதி அம்மாளை ஆதரிக்க தமிழக அரசு முன் வரவில்லை. பாலசரஸ்வதிக்கும் இப்படி ஒரு களம் அமைத்து தந்து, தேவதாசி மரபில் வந்தவர்களை ஆதரித்து இந்தக் கலையை நிகழ்த்தவும், கற்பிக்கவும் நாம் செய்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியது ஒரு வரலாற்றுப் பிழை.
அதே சமயம் தேவதாசி மரபை மீட்டெடுப்பது தான் இந்தக் கலையை வளர்ப்பதற்கான வழிமுறை அல்ல. தேவதாசி மரபு என்பதே ஆய்வறிஞர்கள் பலரின் கூற்றுப்படி பக்தி இயக்கத்தின் கிளையாக கி.பிஆறாம் நூற்றாண்டில் தான் ஆரம்பம் ஆனது. ஆனால், அதற்கும் 1000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு நமது நாட்டியக் கலையும், இசைக் கலையும் விறலியர்,பாணர், கூத்தர், வயிறியர் போன்றவர்களால் இந்தக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

தேவதாசி மரபு தோன்றுவதற்கு முன்பே நமது சிலப்பதிகாரத்தில் நாட்டியக் கலை பற்றிய விரிவான பார்வை நமக்கு கிடைக்கிறது. சிலப்பதிகார காவியத்தில் கண்ணகிக்கு இணையான மரியாதை மாதவிக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கும் முந்திய தொல்காப்பியர் காலத்திலேயே அபிநயர் எனப்படும் கூத்தரால் ‘அவிநயம்’ என்ற நாட்டிய இலக்கணத்திற்கான நூல் எழுதப்பட்டு உள்ளது.
சாத்தனார் எழுதிய கூத்தநூல்,
அறிவாணர் எழுதிய பஞ்சமரபு,
மதிவாணர் எழுதிய நாடகத்தமிழ்
போன்றவை நாட்டிய இலக்கணத்திற்கான ஆதி நூல்களாகும்.
இந்த காலகட்டத்தில் தேவதாசி மரபு தோன்றவில்லை. பக்தி இலக்கியம் பரவிய காலத்தில் அரசர்களின் அந்தரங்க அபிலாசைகளை நிறைவேற்ற அந்தணர்கள் கோவில்களில் இறைவனுக்கு பெண்களை நேர்த்திக் கடனாகத் தரும் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கின்றனர். இதன் மூலம் இந்தக் கலைகள் அபாரமாக வளர்த்தெடுக்கப்பட்டது என்பது உண்மையே. இந்த நடன மாதர்களுக்கு உரிய மரியாதைகளும், நிலபுலன்களும் வழங்கப்பட்டன என்பதும் உண்மையே.
இவர்களில் பேராளுமைமிக்க பெண்கள் இருந்துள்ளனர் என்பதும் மறுக்க முடியாததே. ஆனால், இந்த ரகத்தினர் மிகக் குறைவான பெண்களே!
பெருமளவிலான பெண்கள் அந்தந்த கோவில்களை சார்ந்த அதிகாரமிக்கவர்களின் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானார்கள். வறுமையின் பிடியில் இருந்துவிடுபடவும் சில பெண்களை கோவிலுக்கு தாரை வார்த்தனர் என்பதையும் வரலாறு சொல்கிறது. தேவதாசி மரபு தழைத்தோங்கிய காலகட்டத்தில் கலைகள் அபார வளர்ச்சி அடைந்தன என்ற நன்மை ஒரு புறம் இருந்தாலும், அதில் பெரும்பாலான பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளானார்கள் என்ற யதார்த்ததை புறம் தள்ள முடியாது.
ஆகவே, நவீன ஜனநாயக யுகத்தில் பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். அனைத்து பெண்களுக்கும் குடும்பம் என்ற பாதுகாப்பு வாழ்க்கை முறை சாத்தியப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை முத்து லட்சுமி அம்மையாரும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும் முன்னெடுத்து சாத்தியப்படுத்தினர் என நாம் புரிந்து கொள்வதே சரியானதாக இருக்கும்.
சாவித்திரி கண்ணன்
























சரியான பார்வை. இன்றுவரை நாட்டியக் கலை பிராமணர் அல்லாத முன்னேறிய வகுப்பாடும் பயின்று வருவது கண்கூடு.