இதற்கெல்லாம் கூட நீதிமன்றத்தை நாட முடியுமா?
இதையெல்லாம் கூட வழக்காக எடுத்து நீதிமன்றங்கள் விசாரிக்கலாமா..?
ஏழைச் சிறுமிகள் செல்வாக்கான தொழில் அதிபரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் ஆதாரங்கள் தரப்பட்டும் நடவடிக்கை இல்லாமல் ஒரு அரசாங்கம் இருந்த கொடுமையை மக்கள் யாரும் பேசக் கூடாது என்று நீதிமன்றத்தின் உதவியை ஒரு அரசியல் கட்சி நாடுவதே அவலமல்லவா….?
இதில் இவர்களுக்கு நேர்மை துணிவிருந்தால் மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். நீதிமன்றத்தின் பின்னாள் ஒளிந்து கொண்டு நீதிமன்றத்தை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது.
மக்கள் மன்றத்திலும், அரசியல் களத்திலும் எதிர்கொள்ள வேண்டியவற்றை அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்வது நீதிமன்றத்தை தங்கள் அரசியலுக்கு மிஸ்யூஸ் செய்யும் கோழைத்தனமான முயற்சியாகும்..
பொதுவாக செல்வாக்குள்ள அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடி சமூக வளர்ச்சியையே ஸ்தம்பிக்க வைக்கிறார்கள்.

நீதிமன்றங்களின் உதவியோடு தான் கட்சிக்குள் செல்வாக்கே இல்லாத ஒ.பி.எஸ் அதிமுக சின்னத்தை ஒரு சில வருடங்கள் நிறுத்தி வைத்தார். கட்சி பொதுக் குழுவில் தெளிவாக எடப்பாடி பழனிச்சாமியின் பலம் நிருபிக்கப்பட்டதோடு, ஒ.பி.எஸ் விவகாரம் முடிந்திருக்க வேண்டும். சுமார் மூன்றாண்டுகள் நீதிமன்றங்களின் தேவையற்ற தலையீடு காரணமாக ஓரு அரசியல் கட்சி முடக்கப்பட்டு, இறுதியில் பாஜகவுடன் கூட்டணிக்கு ஒத்துக் கொண்டதால் விடுவிக்கப்பட்ட சூழலை நாடு பார்த்தது.
இது போல எப்போது தவறு செய்தாலும் அதிலிருந்து தன்னை தற்காக்க திமுக தொடர்ந்து நீதிமன்றங்களை நாடுகிறது.
இப்படித்தான் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்திலும் அன்றைக்கு ஒரு நீதிபதி வலிந்து தலையிட்டு சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்திரவிட்டு உச்சநீதிமன்றத்திடம் குட்டு வாங்கினார்.
# கரூர் நெரிசல் சம்பவத்தின் வழக்கு உயர்நீதிமன்ற மதுரையின் விசாரணை வரம்பிற்கு உட்பட்ட நிலையில் மதுரை அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த பிறகு அதை சென்னை உயர்நீதிமன்றத் தனி நீதிபதி வலிந்து விசாரித்ததை உச்ச நீதிமன்றமே கேள்விக்கு உட்படுத்தியது.
# ”அரசியல் கூட்டங்களை முறைப்படுத்துவது தொடர்பாக ஒரு வழக்கை வலிந்து கிரிமினல் வழக்காக மாற்றி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததோடு எப்படி சிறப்பு விசாரணை குழுவின் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தார்?” என்று உச்ச நீதிமன்றம் கேட்டது.
# சென்ற ஆட்சியாளர்கள் வரைமுறையில்லாமல் பொதுச் சொத்தை சூறையாடி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் மக்கள் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, செந்தில் பாலாஜி, கே.என். நேரு ஆகியோர் இடங்களில் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றி புதிய அரசு நடவடிக்கை எடுக்க முனைந்தால் ”பழி வாங்கும் நடவடிக்கை” என்ற பல்லவியைப் பாடி, மிகப் பெரிய வழக்கறிஞர்களை வைத்து நீதிமன்றங்களை நாடுகிறார்கள். அதற்கு மேல் விசாரணை தொடர முடியாமல் தடைபட்டுவிடுகிறது.
# முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்குகள் 20 வருடங்கள் நீதிமன்றங்களில் நடந்து நூற்றுக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டு, பல ஆயிரம் பக்கங்கள் ஆவணப்படுத்தப்பட்டு கடைசியில் குற்றச்சாட்டும் நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அவரது வயது மூப்பை காரணம் காட்டி நீதிமன்றம் விடுதலை அளித்தது. ( பொன்முடியின் மகனும் , அமித்ஷாவின் மகனும் கிரிகெட் அசோசியேசனில் கூட்டாளிகளாம்!)
# இப்படி கடைந்தெடுத்த ஊழல் பெருச்சாளிகளுக்கு புகலிடம் தருவதற்கா.. நீதிமன்றங்கள் உள்ளன..?
மிகச் சமீபத்தில் ஆபாசமாக பேசிய விவகாரத்தில் உதயநிதி தஞ்சை காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் அன்றே அவசர வழக்காக எடுத்து, ”இன்று மாலையே உதயநிதியை விடுவிக்க வேண்டும்” என்று கட்டளை இடுகிறது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் தஞ்சை போய் சேரும் முன்பே அவர் விடுவிக்கப்பட வேண்டும் என கோர்ட் உத்திரவிடுகிறது. அடேங்கப்பா என்னா ஒரு வேகம்?
பல வழக்குகளில் நேர்மையானவர்கள் பலர் பொய் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைபட்டு சித்திரவதைக்கு ஆளாகி வருவதை நாம் பார்க்கிறோம். அவர்களுக்கெல்லாம் கிடைக்காத நீதி இந்த அரசியல்வாதிகளுக்கு இஸ்டண்ட் காபி போல இமிடியேட்டாக கிடைக்கிறது.
‘தங்களின் கேவலமான அரசியலுக்கு அரசியல்வாதிகள் நீதிமன்றங்களை நாடி தொடர்ந்து தப்பித்துக் கொண்டே போவார்கள் எனில், சாமனிய மக்கள் இதையெல்லாம் பேசக் கூட அனுமதி இல்லை’ என நீதிமன்றங்கள் தலையிடும் எனில், எளிய மக்களின் மனதில், ‘நீதிமன்றங்கள் என்ன அயோக்கியர்களின் புகலிடமா?’ என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாது.
சாவித்திரி கண்ணன்
























மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டுப் போவதைத் தடுத்திட நீதிமன்றங்களை நாடும் கபட நாடகக்காரர்கள்
நமது நீதிமான்கள் – நீதிமன்றங்கள் அயோக்கியர்களின் புகலிடம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அதனால்தான் ஒரு படைப்பாளி, பகலில் நடமாடும் வெளவால்கள், என்று இவர்களை விளித்தார்.