‘பலே’ பேர்வழிகளின் கைகளில் பச்சையப்பன் அறக்கட்டளையா?

-சாவித்திரி கண்ணன்

சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பேர் போனது பச்சையப்பன் கல்லூரி மட்டுமல்ல, அதன் அறக்கட்டளையுமாகும். ஆறு கல்லூரிகளை உள்ளடக்கி பல ஆயிரம் கோடி சொத்துக்கள் கொண்ட பச்சையப்பன் அறக்கட்டளைக்கு மீண்டும் அதே ஊழல்  அரசியல்வாதிகள் சிலர் தேர்தலில் வெற்றி பெற்று நுழைந்ததில் ஏகப்பட்ட களேபரங்கள் நடந்து கொண்டுள்ளது தொடர்பாக ஒரு அலசல்;

பிரிட்டிஷார் காலத்தில் பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த வள்ளல் பச்சையப்ப முதலியார்  தர்ம  சிந்தனையோடு தமிழ் சமூகத்திற்கு தந்த கொடை இந்த அறக்கட்டளை. ஆனால், இன்றைக்கு அரசியல்வாதிகள் கையில் இந்த அறக்கடளை சிக்கிக் கொண்டு, குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக சின்னாபின்னப்பட்டுக் கொண்டுள்ளது.

பேரறிஞர் அண்ணா, பேராசிரியர் அண்ணாவும் சம்பந்தபட்ட இந்தக் கல்லூரி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களை தந்து திராவிட இயக்கம் காலூன்ற காரணமான ஒரு கல்லூரி என்ற பாரம்பரியம் கொண்டது. ஆனால், திமுக, அதிமுக அரசியல்வாதிகள் தான் இந்த பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளை (பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி, செல்லம்மாள் கல்லூரி..ஊள்ளிட்ட ஆறு கல்லூரிகள்) ஒரு பணம் காய்க்கும் மரமாகப் பார்த்து பிரித்து மேய்கின்றனர் என்பது தான் வேதனையிலும் வேதனையாகும்.

கடும் முறைகேடுகளைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தால் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகியாக டி.என். சேஷன் பொறுப்பு ஏற்றார். அவர் கறாராக அறக்கட்டளை  தேர்தலை நடத்தி விட்டு விலகினார். அதில் வெற்றி பெற்ற அறங்காவலர்கள்  காலகட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. அறங்காவலர்கள் வாடகைதாரர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அறக்கட்டளைக்கு இழப்பை ஏற்படுத்தினர். பினாமிகளை வைத்து சுய ஆதாயங்கள் அடைந்தனர்.  இதைவிடக் கொடுமை பேராசிரியர்கள் நியமனங்களில் லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் பெற்றுக் கொண்டு 252  பேராசிரியர்களை  நியமித்தனர்!

இந்த முறைகேட்டால் தகுதியற்றவர்கள் 40 முதல் 50 லட்சங்கள் தந்து பேராசிரியர் பணி பெற்ற காரணத்தால் மாணவர்களின் கல்வி கேள்விக்குள்ளானது. இதை நீதிமன்றம் கண்டித்தது. இதையடுத்து பச்சையப்பன் அறக்கட்டளைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய தேர்தல்  2018 க்குப் பிறகு  நடைபெறவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் எஸ்.ராஜு, பார்த்தீபன்  ஆகியோர் அடுத்தடுத்து  பொறுப்பேற்றும்,  செயலர் பொறுப்பில் சி. துரைக்கண்ணுவை கொண்டும் ஏறத்தாழ ஆறாண்டுகள் மிக நேர்மையாக நிர்வாகம் நடந்தது. இந்த காலகட்டத்தில் 134 பேராசிரியர் பணியிடங்கள்  கிஞ்சித்தும் லஞ்சம் வாங்காமல் மிக நேர்மையாக தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட்டது.  அப்படி நேர்மையாக பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இடையூறாக திமுக ஆட்சியில் கல்வி அமைச்சர்களாக இருந்த பொன்முடியும்,  ராஜகண்ணப்பனும் கடும் நெருக்கடிகள் தந்தனர். அவற்றை நீதிமன்றத்தின் துணையோடு தகர்த்து  நேர்மையான நிர்வாகத்தை சாத்தியப்படுத்தினார், செயலர் துரைக்கண்ணு.

நீதிபதி பார்த்தீபன், செயலர் துரைக்கண்ணு

இத்தகைய சூழலில் அரசியல்வாதிகள் தரப்பில் இருந்து  உருவான நெருக்கடிகளைத் தொடர்ந்து பச்சையப்பன் அறக்கட்டளை அறங்காவலர்கள் குழுவை தேர்ந்தெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது!

இதையடுத்து சமீபத்தில் செப்டம்பர் 6 ஆம் தேதி அறங்காவலர்களுக்கான தேர்தலும் காசிவிஸ்வநாதன் (ஜஏஎஸ், ஓய்வு) தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று நடந்தது.

இதில் தேர்தலில் நான்கு தொகுதிகளில் இருந்து  மொத்தம் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செனட்டர்- தொகுதியில் இருந்து இரண்டு அறங்காவலர்களாக தவெகவை சேர்ந்த  சினோரா பி.எஸ். அசோக் மற்றும் சரவணன் தேர்வாகியுள்ளனர். கல்லூரி கவுன்சில் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் பிரபாகரன் ஆகிய அதிமுகவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செனட்டர் தொகுதியில் இருந்து சினோரா அசோக் குமார் மற்றும் சரவணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் தமிழக வெற்றிக்கழக கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள்.

அங்கிகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொகுதியில் இருந்து ஹேமந்த் மற்றும் இராமநாதன் ஆகியோரும், கல்லூரி கவுன்சில் தொகுதியில் எஸ். ஜெயச்சந்திரன், ஆர். பிரபாகரன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும் அஇஅதிமுகவினராகும்.

பழைய மாணவர்கள் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் திமுகவில் இருந்து அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களான மூவர் எஸ்.பரமசிவம், காப்பூர் ஜி.சம்பத் மற்றும் எஸ்.சுரேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். திமுக சார்பில் போட்டியிட்ட வர்கள் மூவரும் வாக்களிக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள், பெண் வாக்காளர்களுக்கு புடவை என்பதாக லட்சக்கணக்கில் செலவழித்தே வென்றனர்.

சமீபத்திய தேர்தலில், பச்சையப்பா அறக்கட்டளை வாரியத்தின் தலைவராக எஸ். ஜெயச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  எஸ். பரமசிவம் நிதி அறங்காவலராகவும், ஆர். பிரபாகரன் வாரியத்தின் உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழு தான் தற்போது தன் கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளது.

ஜெயச்சந்திரன் குழுவினர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 234 தகுதி இல்லாத நபர்களை தலா 40, 50 லட்சங்கள் பெற்று பணி நியமனம் செய்த பேர்வழிகளே! அன்றைய தினம் இந்த முறைகேடுகள் அனைத்தும் அப்போது ஆளும் அதிமுக அரசின் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் ஆதவோடு நடந்தது.

இந்த பணி நியமன ஊழலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையில் 234 தகுதி இல்லாத நபர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் நீதிமன்றத்தை அணுகி  தற்காலிக  தடை உத்தரவை பெற்று பணியில் தொடர்கின்றனர்!

இவர்கள் அனைவரும் அறக்கட்டளை தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டதால் தான் கடந்த முறை 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்த அதே ஊழல் பேர்வழிகள் எளிதாக வெற்றி பெற முடிந்தது .

இந்த 234 பேரும் பணியில் உள்ளவரை இந்த ஜெயச்சந்திரன் குழுவினர் தவிர வேறு யாரும் வெற்றி பெற முடியாது. ’தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை காப்பாற்றுவேன்’ என்று சொல்லியதால் தான் ஜெயச்சந்திரன் அறக்கட்டளை தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். உறுப்பினர் செயலாளராக பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி ஏற்ற அன்றே  ஊழல் பேர்வழியான சேகர் என்பவர் அறக்கட்டளை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கல்லூரி பணத்தை முதல்வர்களின் கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்டதால் முறையான விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  மீண்டும் அதே போன்ற ஊழல் மோசடிகளை அரங்கேற்றவே இரண்டாண்டுகளுக்கு பிறகு வெளியேற்றப்பட்டவரை ஊழல் செய்யத் தோதாக ஆலோசகராக  நியமித்துள்ளனர்.

புதிய அறங்காவலர்கள் பதவி ஏற்ற முதல் நாளே அவசர அவசரமாக  சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் கல்லூரிகளின் முதல்வர்களை பணி இறக்கம் செய்து ஆணை வழங்கியுள்ளனர்.  இந்த இருவரும் உடனே நீதிமன்றம் சென்று தடையாணை பெற்று திரும்பும் போது, அவர்கள் இருவரும் மீண்டும் பணிக்கு திரும்ப கூடாது என்று தகுதி இல்லாமல் பணம் கொடுத்து வந்த  ஆசிரியர்களை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளனர் ஜெயச்சந்திரன் குழுவினர்!  காரணம், இரண்டு முதல்வர் பணி இடங்கள் காலியானால் புது முதல்வர்களை நியமிக்க கையூட்டு வாங்கி பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்…என்ற நோக்கமே!

ஆனால் இரண்டு பெண் முதல்வர்களும்  தவெகவின் சினோரா அசோக்குமார் மற்றும் சரவணன் ஆகியோர் முயற்சியால் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டுள்ளது ஒரு ஆறுதல் தரும் செய்தியாகும்.

மேலும்  இந்த அதிமுக அரசியல்வாதிகள் ஆறு கடைநிலை ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். அதில் ஒருவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாவார்.

தற்போது  தேர்ந்தெடுக்கப்பட்ட  நிர்வாகிகள் அறக்கட்டளை சொத்துக்களின் பக்கம் கவனத்தை செலுத்தி எந்தெந்த வகைகளில் சுய ஆதாயம் அடையலாம் என்றே திட்டமிடுவதாகத் தெரிகிறது. ஏனென்றால், கடந்த காலங்களில் அறக்கட்டளை மண்டபங்களை “முகூர்த்தம் ஈவன்ட்ஸ்” என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கி, அதில் ஜெயச்சந்திரன், பிரபாகரன் மற்றும் குழுவினர் தங்கள் மனைவிமார்களை அறங்காவலர்களாக நியமித்து மோசடிகளை அரங்கேற்றி பல கோடி ரூபாய்  சம்பாதித்துள்ளனர். மீண்டும் அந்த மாதிரி கோல்மால் செய்து அறக்கட்டளையை ஏமாற்றி சுய ஆதாயம் அடையத் திட்டமிட்டுனர்  எனத் தெரிய வருகிறது.

கல்வி அறக்கட்டளை என்பது கண்ணியத்தோடு கையாளப்பட்ட வேண்டியது. சுமார் 30,000 ஏழை, எளிய மாணவர்கள் படிக்கும்  பச்சையப்பன் அறக்கட்டளையை பாதுகாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அரசாங்கத்திற்கு அதிகமாகவே பொறுப்புள்ளது.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time