இடைத் தேர்தலில் எந்தக் கட்சியை ஆதரிப்பது..?

-சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழின் நிலைப்பாடு என்ன சொல்லுங்க! ”இடைத் தேர்தலில்  எந்தக் கட்சியை ஆதரிக்கிறீர்கள்..? அதைக் கண்டிப்பாக வெளிப்படுத்துங்கள்…” என்கிறார்கள், வாசக நண்பர்கள்! இன்றைய அரசியல் கள யதார்த்தங்களை முழுமையாக உள்வாங்கித் தான் இதற்கு நாம் பதில் தேட வேண்டியுள்ளது;

ஹானஸ்டா சொல்கிறேன், குழப்பமாக இருக்கிறது!

அப்ப நீங்க தவெகவை ஆதரிக்கவில்லையா?

ஆம், ஆதரிக்க முடியவில்லை! ஒரு வேளை ஒரிரு வேட்பாளர்கள் இறந்துவிட்ட சூழலில் இந்த இடைத் தேர்தல் வந்திருப்பின் நான் தவெக ஆதரவு நிலைப்பாடு எடுப்பதில் தயக்கம் காட்டியிருக்க மாட்டேன்.

ஆனால், ஒரு கட்சியின் சார்பில் வெற்றி பெற்று 15 நாட்களில் அந்தக் கட்சியில் இருந்து விலகி இன்னொரு கட்சியில் சேர்ந்ததால் இந்த தேர்தல் மக்களுக்கு நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது.. என்பது  தனிப்பட்ட வகையில் உள்ளபடியே உறுத்தலாகத் தான் உள்ளது.

அதே சமயம் ஐந்தாறு பேர் அதிமுகவில் இருந்து விலகி பெரும்பான்மையில்லாமையால் தடுமாறும் ஒரு ஆட்சிக்கு ஆதரவு தர முன்வந்தது குற்றம் என்றால் ஒரு ஒட்டுமொத்த  அதிமுகவே  தன் பரம எதிரியான திமுகவின் தயவில் ஆட்சி சுகத்தை அனுபவிக்க கைகோர்க்க துடித்தது அதைவிடப் பெரிய குற்றமாகும்.  அப்படி நினைத்த அந்த நொடியிலேயே எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஆன்மாவைக் கொன்றுவிட்டார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தங்கள் வாழ்நாள் முழுமையும் எந்த தீய சக்தியை எதிர்த்து சமரசமற்று சமர் புரிந்தனரோ, அந்த தீயசக்தியோடு ரகசிய உடன்பாடு கொள்வது என்பது அதிமுக தொண்டனை பொறுத்த அளவில் மன்னிக்க முடியாத குற்றமாகும். இதனால் தான் அந்தக் கட்சி இன்று கலகலத்துக் கிடக்கிறது.

அதிமுக எம்.எல்.ஏக்களை விஜய் குதிரை பேரம் பேசி வாங்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டை வைப்பதற்கு திமுகவுக்கு எந்தத் தார்மீகத் தகுதியும் இல்லை. காரணம், இன்று திமுகவின் உயர்மட்டத்தில் கோலோச்சும் சரிபாதியினர் அதிமுகவில் இருந்து தூக்கப்பட்ட முன்னணி தலைவர்களே.  வந்தேறிகளான அதிமுகவின் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பிரதான தளபதிகள் தான் இன்று திமுகவையே வாழ வைத்துக் கொண்டுள்ளனர்.

ஈடு இணையற்ற உலகமகா திருடன் செந்தில் பாலாஜி என்று திமுக பிரச்சாரக் கூட்டத்திலேயே பேசிவிட்டு, இன்று அந்த செந்தில் பாலாஜியைத் தான் மலை போல நம்பி கட்சி நடத்துகிறார், ஸ்டாலின். மூன்று முறை அதிமுக சார்பில் முதலமைச்சராக இருந்து, ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துவிட்டு, பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக அதிமுகவை அழிக்க துணை போன ஒ.பி.எஸ் இன்று திமுக எம்.எல்.ஏவாகியுள்ளார்.

ஆக, இப்படிப்பட்ட திமுகவுக்கு தவெகவை குற்றம் சொல்லும் தகுதி அறவே இல்லை.

பொதுமக்களுக்கு  மட்டும் தான் தவெகவை தார்மீக ரீதியாக கேள்வி கேட்கும் அருகதையுள்ளது.

சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க தவெகவிற்கு காங்கிரஸ், முஸ்லீம் லீக், விசிக, இரு கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளில் 13 வாக்குகள் கிடைத்த நிலையில், ஏன் அதிமுகவில் இருந்து வருபவர்களை தவெக ஊக்குவிக்க வேண்டும்? என்று தார்மீக ரீதியில் நானும் இரு கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

ஆனால் போகப் போக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும்  நிச்சயமற்றவர்களாக உள்ளதையும், விசிக தலைவர் திருமாவும் முன்னுக்கு பின் முரணாக பேசித் தடுமாறுவதையும் நாம் பார்க்கிறோம். ஆக, இன்னும் ஒரு ஆறு எண்ணிக்கை உறுதியானால் ஐந்தாண்டு ஆட்சியை பதற்றமின்றி நடத்திச் செல்லலாம் என்ற தவிப்பில் தவெக இருக்கிறது.

இந்த அரசு ஆறுமாதம் கூட தாங்காது என ஸ்டாலினும், திமுகவினரும் அடித்துப் பேசி வருகின்றனர். அப்படி என்ன அவர்கள் மனதில் சதி திட்டம் உள்ளது எனத் தெரியவில்லை…! செந்தில்பாலாஜியின் தவெக எம்.எல்.ஏக்களை பேரம் பேசித் தூக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது. அதே சமயம் இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட  யாரையுமே தண்டிக்க முடியாதபடிக்கு நீதிமன்றம் வாயிலாக அரசின் கைகளை கட்டிவிட்டனர்.

அடுத்தகட்டமாக  ஆட்சியின் ஆரம்ப கட்டத்திலேயே கம்யூனிஸ்ட் தலைவர்கள் நாளும், பொழுதுமாக  தவெக ஆட்சிக்கு எதிரான வலுவான பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். ஒரு பக்கம் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களின் ஆதரவில் நடைபெறும் ஒரு சிறுபான்மை ஆட்சி தன்னை தக்க வைத்துக் கொள்ள வாழ்வா? சாவா? என்ற நிலையில் இடைத் தேர்தலை எதிர்கொள்ளும்  சூழலில், நான்குமாத ஆட்சியில் நாலாயிரம் குறைகளை பட்டியலிட்டதோடு, அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை தவெகவில்  சேர்த்ததால்,  தவெகவை வீழ்த்தியே தீருவோம் என களம் கண்டுள்ளனர்.

2026 சட்டமன்றத் தேர்தலில் சமூக நீதி கொள்கைக் கூட்டணி என்று சொல்லப்பட்ட திமுக கூட்டணியில்  அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பான கே.கே.செல்வகுமாரின் தமிழர் தேசம் இணைந்ததே? பாஜகவின் பாதம் தாங்கியான ஒ.பி.எஸ்சுக்கும், அவரது ஆதரவாளர்கள்  நால்வருக்கும் சீட்டு கொடுக்கப்பட்டதே, இதற்கும் மேலாக காணாமல் போன கட்சியும், பாஜகவின் ஒட்டுண்ணியுமான தேமுதிகவுக்கு 10 சீட்டுகள் தூக்கித் தரப்பட்டதே.. அதனால் கம்யூனிஸ்ட்களுக்கு தரும் தொகுதிகள் குறைக்கப்பட்டதே …அப்போது அதை தவறு என்று சொல்லும் தார்மீகக் கோபம் கூட கம்யூனிஸ்ட்களுக்கு இல்லையே..?

ஆகவே, திமுகவின் தூண்டுதலிலேயே கம்யூனிஸ்ட்கள் இன்று தவெகவுக்கு எதிராக களம் கண்டுள்ளனர் என பொதுமக்கள் சந்தேகிப்பதை அலட்சியப்படுத்த வழியில்லை.

தவெக ஆட்சியில் பல குறைகள் இருந்தாலும், இந்த ஆட்சி உடனே வீழ்த்தப்பட வேண்டும் என்பதை நான் நிராகரிக்கிறேன். ஊழல் பெருசாளிகளான திமுக, அதிமுகவினர் பலம் பெறுவது தற்போதைய சூழலில் நாட்டுக்கு நல்லதல்ல, மற்றபடி மக்கள் தங்கள் மனசாட்சிப்படி அளிக்கும் தீர்ப்புக்கு தலை வணங்குவோம்.

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time