ரிங்ஸ்பேஸ்.நெட் எனும் பெயரில் புதிதாக ஒரு இணைய சேவை அறிமுகம் ஆகியிருக்கிறது. இன்ஸ்டாவும், சாட்ஜிபிடியும், ஏ.ஐயும் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் 30 வருடத்திற்கு முந்திய வெப்ரிங்ஸ் எனப்படும் வலைமாலை குறித்து பலருக்கும் தெரியாது; அதை மீட்டுருவாக்கம் செய்வது மனிதத்தை மீட்பதைப் போன்றதே;
1990 களின் பிற்பகுதியில் இணையத்தில் பழக்கத்தில் இருந்த ’வெப்ரிங்ஸ்’ எனப்படும் ’வலை மாலை’ கருத்தாக்கத்தை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் இந்த சேவை அமைந்துள்ளதால் கவனத்தை ஈர்க்கிறது.
இது பழைய வலை மாலை கருத்தாக்கத்திற்கு மறு வடிவம் கொடுத்துள்ளதோடு, இந்த வளையத்தில் பங்கேற்கும் உறுப்பினர் இணையதளங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டையும் இந்த சேவை கூடுதலாகக் கொண்டுள்ளது.
ரிங்ஸ்பேஸ் சேவை எந்த அளவு வரவேற்பை பெறும் என்பது தெரியவில்லை என்பதை மீறி, இந்த சேவையை தமிழ்ச் சூழலில் குறிப்பிடுவதற்கான முக்கிய தேவை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த சேவை அறிமுகம் ஆகும் இணைய சூழலும், இது மீட்டுருவாக்கம் செய்யும் தொழில்நுட்ப கருத்தாக்கமும் தான்.
அது மட்டும் அல்ல, நன்கறியப்பட்ட சமூக ஊடக சேவைகள் பிரிவில் நாம் அறியாத முன்னோடி சேவையாக திகழ்வதாலும், வலை மாலைகள் மறு வருகையை நாம் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.
வர்த்தக ஆதிக்கம்
1993 ல் பொதுமக்களுக்கு வலை வடிவில் அறிமுகமான இணையம் இடைப்பட்ட காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவு வளர்ச்சி கண்டிருக்கிறது. யாஹுவும், ஜியோசிட்டிசும், அல்டாவிஸ்டாவும் முக்கிய இணைய சேவைகளாக இருந்த காலம் மாறி, பேஸ்புக், இன்ஸ்டா, டிக்டாக் ஆதிக்கம் செலுத்தும் நிலை உண்டாகி, இப்போது சாட்ஜிபிடி, கிளாடு உள்ளிட்ட சாட்பாட்களில் இருந்து முன்னேறி ஏஜெண்டிக் ஏஐ பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.

இணைய வளர்ச்சியின் மறுபக்கமாக, இந்த வலைப்பின்னல்களின் வலைப்பின்னல் ( இணையத்தின் உண்மையான வரையறை), முழவதும் வர்த்தகமயமாகி, பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தில் சிக்கியிருக்கிறது. மையமில்லா தன்மை, பயனர் பங்கேற்பு, கருத்து பரிமாற்ற சுதந்திரம், அனாமதேய தன்மை உள்ளிட்ட இணையத்தின் ஆதார அம்சங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அல்காரிதம்கள் கோலோச்சுகின்றன.
ஏற்கனவே வர்த்தக மயம் மற்றும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தால் அதன் ஆதார தன்மையை இழந்து தவிக்கும் இணையம், இப்போது ஜென் ஏஐ தாக்கத்தால் பெருங் குப்பைகளின் வலைப்பின்னலாக மாறியிருக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், இணையம் எனும் வலைப்பின்னல், மனித தன்மையை இழந்து வர்த்தக பெருங்குப்பையாகி இருக்கிறது. அந்தக் கால இணையத்தோடு ஒப்பிட்டால் இது எத்தனை பெரிய வீழ்ச்சி என்பது புரியும்.
ஆரம்ப கால இணையத்தின் அருமையை உணர்த்தும் சேவைகளில் ஒன்றாக ஜியோசிட்டீஸ் (GeoCities) சேவையை குறிப்பிடலாம். இலவச வெப் ஹோஸ்டிங் சேவைகளில் ஒன்று என வர்ணிக்கப்பட்ட ஜியோசிட்டீஸ், இணையவாசிகள் தங்களுக்கு என தனி இணையதளம் உருவாக்கி பராமரிக்க வழி செய்தது. கோடிங்கும் தெரியாமல், கட்டணமும் செலுத்தும் தேவை இல்லாமல், இணையவாசிகள் தாங்களுக்கான சொந்த இணையதளத்தை உருவாக்கி கொள்ள முடிந்தது.
ஜியோசிட்டிஸ் தளங்களின் கற்கால வடிவமைப்பு போன்ற குறைகளை மீறி, இணையவாசிகள் தங்களுக்கென சொந்த இணையதளம் அமைத்து கருத்துக்களை பகிர வழி செய்ததில், பிலாக் எனப்படும் வலைப்பதிவுகளின் தன்மையை கொண்டிருப்பதை உணரலாம். பயனாளிகளின் தகவல் தொடர்புக்கு வழி வகுத்த ஆதார அம்சத்தால், ஆரம்ப கால சமூக ஊடக சேவைகளில் ஒன்றாக ஜியோசிட்டீஸ் கருதப்படுகிறது.
ஜியோசிட்டீஸ் போலவே 1990 களின் பிற்பகுதியில் பயன்பாட்டில் இருந்த மற்றொரு முன்னோடி சேவை தான் வெப்ரிங்ஸ் எனப்படும் வலை மாலை அல்லது வலை வளையங்கள்.

வலை மாலை எனும் அற்புதம்
ஜியோசிட்டீஸ் போலவே, வலை மாலையும் ஆரம்ப கால சமூக ஊடக சேவைகளில் ஒன்றாக அமைகிறது. சரியான ஒப்பீடு இல்லை என்றாலும், எளிதான புரிதலுக்காக அந்த கால பேஸ்புக் என்றும் வலை மாலை சேவையை குறிப்பிடலாம். பேஸ்புக் நட்பு வலைக்கான சேவை என்றால், வலை மாலையை, புதிய இணையதளங்களை கண்டறிவதற்கான சேவை என வர்ணிக்கலாம்.
இங்கே மீண்டும் இன்னொரு பழைய சேவையை தான் உதாரணம் காட்ட வேண்டியிருக்கிறது. கூகுள் எல்லாம் தேடியந்திரமாக அறிமுகமாவதற்கு முன், புதிய பயனுள்ள இணையதளங்களை கண்டறிவதற்கான வழியாக, யாஹு இருந்தது. இணையத்தின் நுழைவு வாயில் என வர்ணிக்கப்பட்ட யாஹு, இணையதளங்களை பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தி வந்தது. யாஹு டைரக்டரி என குறிப்பிடப்பட்ட இந்த இணைய கையேடு இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருந்தது.
யாஹுவின் இணைய கையேடு முக்கிய சேவை என்றாலும், மையமான தன்மையை கொண்டிருந்தது. அதில் பட்டியலிடப்பட யாஹுவின் அங்கீகாரம் தேவை. சிறிய மற்றும் சுயேட்சையான தளங்களுக்கு யாஹுவில் அத்தனை எளிதில் இடம் கிடைத்துவிடாது.
இந்த பின்னணியில் தான், வெப்ரிங்ஸ் எனப்படும் வலை மாலை சேவை அறிமுகமானது.

வலை மாலை என்பதை, வட்ட வடிவமாக இணைக்கப்பட்ட இணையதளங்களின் தொகுப்பு என புரிந்து கொள்ளலாம். இந்த தளங்கள் குறிப்பிட்ட தலைப்பு அல்லது பொருள் சார்ந்து அமைந்திருக்கும். இந்த பொதுத் தன்மை தான அவற்றை இணைப்பவை மற்றும் பயனாளிகளை ஈர்ப்பவை.
வலை மாலைகளில் இணைந்துள்ள உறுப்பினர்கள் தளங்களுக்கு ஒரு அடையாள பட்டை அளிக்கப்பட்டிருக்கும். அந்த அடையாள பட்டை இணையதளத்தின் கீழ் பகுதியில் இலட்சினை போல இடம் பெற்றிருக்கும். குறிப்பிட்ட வலை மாலையில் இடம்பெறும் எல்லா தளங்களிலும் இந்த பட்டை இருக்கும்.
ஒரு தளத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அதில் உள்ள வலை மாலை பட்டையை கிளிக் செய்வதன் மூலம், அந்த வளையத்தில் உள்ள மற்ற இணையதளங்களுக்கு செல்லலாம். அடுத்த அல்லது முந்தைய இணையதளம் என கிளிக் செய்து செல்லலாம். அல்லது உத்தேசமாக வளையத்தில் உள்ள ஏதேனும் ஒரு தளத்திற்கு செல்லலாம். எப்படி சென்றாலும், குறிப்பிட்ட அந்த பொருள் சார்ந்த இணையதளங்களை ஒரே இடத்தில் எளிதாக பயனாளிகள் அணுகலாம்.
பயனர் குரல்
வலை மாலை வசதி பங்கேற்கும் இணையதளங்களுக்கும் சரி, பார்வையாளர்களுக்கும் சரி பயனுள்ளதாக இருந்தது. பயனாளிகளை பொருத்தவரை, புதிய இணையதளங்களை கண்டறிவதற்கான எளிய வழி. அவர்கள் ஆர்வம் சார்ந்த தொடர்புடைய தளங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

அதே நேரத்தில், இணையதளங்களுக்கு பயனர்களை பெறுவதற்கான வழியாகவும் அமைந்தது. ஒரு வலை மாலையில், பெரிய தளங்களும் இருக்கலாம், அதே பொருள் சார்ந்த சிறிய தளங்களும் இருக்கலாம். மாலைக்குள் ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்திற்கு தாவிச்செல்லலாம் என்பதால், பெரிய தளத்தின் பயனாளிகள் சிறிய தளத்திற்கு வந்தடைவார்கள். சிறிய தளத்தில் இருந்தும் பெரிய தளத்திற்கு செல்லலாம்.
வலை மாலையை நிர்வகிப்பவர், குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்து வலையயத்தை உருவாக்குவதாள் பங்கேற்கும் தளங்களுக்குள் ஒரு சமத்துவம் இருக்கும். உதாரணமாக அறிவியல் மாலை என்றால், அறிவியல் சார்ந்த தளங்கள் மட்டும் தொகுக்கப்பட்டிருக்கும். இதே போல, கல்வி, இலக்கியம், நகைச்சுவை, திரைப்படம் என எண்ணற்ற பிரிவுகளில் ஆயிரக்கணக்கான வலை மாலைகள் செயல்பட்டு வந்தன.
இணையத்தில் எங்கே திரிவது எனும் திகைப்பு இல்லாமல், பயனாளிகள் தங்கள் ஆர்வம் சார்ந்த தளங்களை அணுகுவதற்கான வழியாக வலை மாலை விளங்கியது. வலை மாலை உரிய ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், இவற்றைச் சுற்றி ஒரு சமூக தன்மையும் உண்டானது.
இணைய சமுகத்தில் பங்கேற்கும் தன்மையும் சமூக ஊடக ஆதார அம்சங்களில் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது.

மீட்டெடுப்பு
வேகமாக மாறி வந்த இணையத்தில் புத்தாயிரமாண்டுக்கு பிறகு வலை மாலை சேவைகள் செல்வாக்கு இழந்து பின்னுக்குத்தள்ளப்பட்டன. புதுயுக சமூக ஊடக சேவைகளின் எழுச்சிக்குப் பிற்கு வலை மாலை சேவைகள் அநேகமாக மறக்கப்பட்டு விட்டன.
எனினும் வலை மாலை சேவைகள் முற்றிலுமாக மறைந்து விடவில்லை. பழைய வலை மாலைகள் பல தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதோடு, ரெட்டிட் போன்ற விவாத தளங்களில் இந்த கருத்தாக்கம் பற்றி பலரும் விவாதித்து வந்துள்ளனர். மேலும், வலை மாலைகளை மீட்டெடுக்கும் வகையில் பல புதிய சேவைகளும் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தான் தற்போது ரிங்ஸ்பேஸ்.நெட் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன வலை மாலை சேவைகள், பொதுவாக சிறிய வலை என குறிப்பிடப்படும் சிறிய இணையதளங்கள் மற்றும் சுயேட்சை வலை ( இண்டி வெப்) என குறிப்பிடப்படும் வர்த்தக நோக்கம் இல்லாத சுயேட்சையான இணையதளங்களை முன்னிறுத்தவே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
லாப நோக்கம் மற்றும் அல்கோரிதம் ஆதிக்கத்திற்கு எதிராக பயனாளிகள் ஆர்வம் சார்ந்த தளங்களாக இவை கொண்டாடப்படுகின்றன.
இணையத்தில் ஸ்மால் வெப் அல்லது இண்டி வெப் என தேடிப்பார்த்தால் இந்த கருத்தாக்கம் பின்னே இருக்கும் துடிப்பான சமூகத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

நெட்பிளிக்ஸ், பேஸ்புக், ஸ்பாட்டிபை என பெரும்பாலான சேவைகளில் பயனாளிகள் விருப்பு வெறுப்புகளை அல்காரிதம்களே தீர்மானிக்கும் சூழலில், கட்டற்ற தன்மை கொண்ட கருத்து பரிமாற்றத்திற்கும் கண்டறிதலுக்குமான வழிகளில் ஒன்றாக வலை மாலை கருத்தாக்கம் அமைகிறது.
வர்த்தகமயமாக்கல் மற்றும் பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் இணையம் அதன் ஆதார தன்மையை இழந்து தவிப்பதை, கோரி டாக்டரோ (cory doctorow ) எனும் இணைய வல்லுனர், முன்னோடி வலைப்பதிவாளர், இதழாளர், ’என்ஷிட்டிபிகேஷன்’- Enshittification எனும் புத்தகத்தில் விரிவாக விளக்கியிருக்கிறார். தரம் குறைந்த, வர்த்தக நோக்கிலான, பெருங்குப்பை உள்ளடக்கத்தை உணர்த்தும் சொல்லாகவும் இது மாறியிருக்கிறது.
இந்த பின்னணியில் தான், சுயேட்சை தன்மை, சுதந்திரமான உரையாடல் உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தும் ரிங்ஸ்பேஸ்.நெட் முக்கியமாகிறது.
மைக்கேல் டாகர்ட் என்பவர், வலை மாலையை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் ரிங்ஸ்பேஸ்.நெட் (https://ringspace.net/) இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளார்.
ரிங்ஸ்பேசை பயன்படுத்துகிறோமோ இல்லையோ அதன் உருவாக்க நோக்கத்தை தெரிந்து கொள்வது நல்லது: https://taggart-tech.com/ringspace/
வால்: சமூக ஊடக சேவைகளின் தோற்றத்தையும் வளர்ச்சையையும் ’சமூக ஊடக வரலாறு’ புத்தகத்தில் வலை மாலைகள் பற்றிய தனி அத்தியாயம் இடம்பெற்றுள்ளது.
வலை மாலையை எளிதாக புரிந்து கொள்ள இந்த இணையதளம் உதவும்: https://cs.sjoy.lol/
இது பழைய வலை மாலைகளில் ஒன்று: https://geekring.net/
– சைபர்சிம்மன்





















Leave a Reply