அத்துமீறிய தினகரன்….! அனுசரிக்க முடியாத சசிகலா!

-சாவித்திரி கண்ணன்

சசிகலா விலகல் – தினகரனுக்கான எச்சரிக்கையே!

ஊடக அறிவு ஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், மாற்று கட்சி அரசியல்வாதிகள், சீமான்,பாரதிராஜா, அமீர், சரத்குமார் உள்ளிட்ட அரசியல், சினிமா பிரபலங்கள்..ஆகியோருக்கெல்லாம் மிக முக்கியத்துவமானவராக தெரிந்த சசிகலா தினகரனுக்கு மட்டும் முக்கியத்துவம் உள்ளவராகத் தெரியவில்லை. எப்படி ஜெயலலிதா சசிகலாவை தனக்கு பணி செய்வதற்கென்றே வைத்திருந்தாரோ..அவ்வாறே தனக்கு கட்டுப்பட்டவராக சசிகலா இருக்க வேண்டும் என்ற தினகரனின் அணுகுமுறைகளை பட்டவர்த்தனமாக உணர்ந்த பிறகு தான் சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிய வருகிறது.

சசிகலாவின் செல்வாக்கு தனக்கு பயன்பட வேண்டும். அதே சமயம் சசிகலா தன்னைவிட செல்வாக்கானவர் என்ற பிம்பம் உருவாதை ஏற்க முடியாது என்ற ரீதியிலேயே தினகரன் நடவடிக்கைகள் இருந்துள்ளன! இதை சிறையில் இருந்த போது பலரும் சசிகலாவின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும், அப்போது வளர்த்த பிள்ளை என்ற பாச உணர்வால் அலட்சியம் காட்டினார் சசிகலா!

தன்னை மீறி சசிகலா செயல்பட்டுவிடக் கூடாது என சகலதரப்பிலும் தினகரன் செக் வைத்திருந்தார். ஏற்கனவே அதிமுகவில் இடமில்லை என்று உறுதிபட்டுவிட்ட நிலையில்,அமமுகவின் தலைமையை ஏற்க தன்னை தினகரன் அழைப்பார் என நம்பிக்கையோடு இருந்த சசிகலாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக தினகரன் நடவடிக்கைகள் அமைந்துவிட்டன.சிறையில் இருந்து வருவதற்கு முன்பு உங்களை சந்திக்க நான்கைந்து அமைச்சர்கள் பத்து,பதினைந்து எம்.எல்.ஏக்கள் காத்திருக்கிறார்கள் என்னிடம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என சசிகலாவிடம் கூறியுள்ளார் தினகரன். ஆனால்,அவ்வாறு வரவில்லையே என்னவாயிற்று என சசிகலா விசாரிக்கும் போது தான் தெரிய வந்தது..வாஸ்த்தவம் தான் ஒரு சிலர் தன்னை சந்திக்க விரும்பினாலும்.., தினகரன் காரணமாகவே தன்னை தவிர்க்கிறார்கள்..என்பது சசிகலாவிற்கு புரிய வந்தது.

அப்புறம் தான் விலாவாரியாக பல தரப்பிலும் பேசி பல அதிர்ச்சிகரமான உண்மைகளை உணர்ந்து கொண்டார் சசிகலா! பாஜக தலையீடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகிய பன்னீர் கூட பிறகு அதிமுகவிற்குள் வர முடிந்துள்ளது. ஆனால், தான் விட்டுச் சென்ற அதிமுக தினகரனின் அத்துமீறிய அதிகார தோரணை நடவடிக்கைகளால் தான் பிளவுபட்டுள்ளது. அதிமுகவின் நிழல்முதல்வராக தன்னை நினைத்துக் கொண்டு போனில் முதலமைச்சரையும்,அமைச்சர்களையும் ஒருமையில் அழைத்து ஆர்டர் கொடுத்துள்ளார். ஏதோ தனக்கு கப்பம் கட்டுவதற்காகவே அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தொனி தினகரனிடம் இருந்துள்ளது. கட்சி பிளவுபட இதுவே காரணம் என சசிகலாவிற்கு புரிய வந்துள்ளது.

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது அவர் நிழலில் இருந்து கொண்டு அமைச்சர்களை மிரட்டும் போது அது எடுபடும். ஆனால், பாஜகவின் தாசானுதாசர்களாக ஆட்சியாளர்கள் மாறியுள்ள நிலைமையில் தினகரன் தினசரி டார்ச்சர் கொடுத்தால் அவர்கள் என்ன செய்வார்கள்..? அது தான் எடப்பாடி உள்ளிட்டவர்கள் எதிர்த்து பேசி பிரிய வேண்டிய சூழல் உருவானது என திவாகரன் உள்ளிட்ட சசிகலாவின் சொந்தபந்தங்கள் எடுத்துக் கூறியுள்ளனர். அப்படி பிரிந்த பிறகாவது தன்னை நம்பி வந்தவர்களை மதித்தாரா தினகரன்? அவரது அட்ராசிட்டி காரணமாக செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன், நாஞ்சில் சம்பத் ஆகியோரை திமுகவிற்கு பலி கொடுத்துவிட்டார். பெங்களூர் புகழேந்தி போன்றவர்கள் அதிமுகவிற்கே சென்றுவிட்டனர். இப்போதும் உன்னை ஒதுக்கிவைத்துவிட்டு தானே எல்லாம் என அவன் செயல்படுகிறான்..என புரிய வைத்துள்ளனர்.

இந்தச் சூழலில் தான் அமமுகவின் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்துக் கொண்டார் தினகரன். அதுவும் சசிகலா ஆசியுடன் என்பதான அந்த அறிவிப்பை தொலைகாட்சி மூலமாகத் தான் தெரிந்து கொண்டார் சசிகலா. அதிமுகவுடன் இணக்கமாக செல்வதற்கு மற்றொரு பக்கம் தான் சுப்பிரமணியசுவாமி உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் பேசி கூட்டணிக்கெல்லாம் முயற்சி செய்து வரும் போது தன்னை முதல்வர் வேட்பாளர் என தினகரன் சொல்வதும், தன் தலைமையிலான அணிக்கு அறைகூவல் விடுவதையும் அறிந்து ’’எல்லாவற்றையும் கத்துகுட்டித்தனமாக அணுகுகிறானே..’’ என புலம்பியுள்ளார். இதை தினகரனிடமே பேசியதில் வாக்குவாதம் தான் வளர்ந்தது. தீர்வு எட்டப்படுவதாக இல்லை.

இதனால் தான் தன்னை வந்து சந்தித்த சரத்குமாரிடம் அமமுகவுடன் கூட்டணி காண சசிகலா அறிவுறுத்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆக, தனக்கு அதிமுகவிலும் இடமில்லை, அமமுகவிலும் இடமில்லை. கணவர் நடராஜனும் இல்லை. அதிகார தோரணையோடு வலம் வருவதற்கு உத்திரவாதமளித்த அக்கா ஜெயலலிதாவுமில்லை. அப்படியிருக்க தன்னை அத்துமீறிச் சென்றுவிட்ட தினகரனை தன்னால் என்ன செய்யமுடியும் என்ற விரக்தி நிலைபாட்டில் தான் சசிகலா இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்பதே என் யூகமாகும்! இந்த நிலையில் தினகரனை புறக்கணித்து சசிகலா தன்னை முன்னெடுப்பதால் குடும்ப சண்டையை சந்திக்கு கொண்டு வந்ததாகிவிடும் என்பதால் சசிகலா இந்த நிலைபாட்டுக்கு வந்துள்ளார்.

தன் அக்காள் மகன் தினகரனை சிறுவயதில் இருந்து தூக்கி எடுத்து வளர்த்தவர் சசிகலா. அளவற்ற பாசமும், அன்பும் கொட்டி வளர்த்ததால் அவர் எப்போதுமே யார் பேச்சையும் கேட்டு பணிந்து நடக்கமாட்டார். அவரை என்ஞினியரிங் படிப்புக்கு பெங்களுரில் சேர்த்து இருந்த போது, ஒரே ஆண்டில் படிக்க மாட்டேன் என வந்துவிட்டார். ’’சரி, விடுங்க அவன் என்கிட்ட இருக்கட்டும்’’ என சசிகலா போயஸ் கார்டனிலேயே தினகரனை உதவிக்கு வைத்துக் கொண்டார். அப்போது கூட நிறைய பணத்தை கையாடல் செய்த புகார்கள் இவர் மீது உண்டு. கட்சிக்காரர்களை மிரட்டிய புகார்களும் உண்டு. திவாகரனை இவர் ஓரம் கட்டினார். நடராஜன் தம்பிகள் இருவரையும் போயஸ்கார்டன் பக்கமே வரவிடாமல் எல்லாம் செய்தார். நிறைய முறைகேடுகள் செய்து வெளி நாடுகளில் சொத்து வாங்கி குவித்தார்! ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவை மிஞ்சி தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டு தன்னை அடுத்த முதல்வர் என்பதாக காய் நகர்த்தினார். அதனால், ஜெயலலிதா தினகரனை சுமார் பத்தாண்டுகளாக முற்றிலும் விலக்கி வைத்தார். தான் உயிருடன் இருக்கும் வரை தினகரனை போயஸ் கார்டனில் அனுமதிக்கவில்லை.

ஆனால், தினகரன் என்ன செய்தாலும் கண்டிக்காமல், அவரை அனுசரித்தே பழக்கப்பட்டுவிட்டார் சசிகலா. அதனால், ஜெயலலிதா இறந்த பிறகு தினகரனுக்கு முக்கியத்துவம் தந்து சேர்த்துக் கொண்டார். இப்போது தினகரனை அவரால் வழிக்கு கொண்டு வரமுடியவில்லை என்பது மட்டுமல்ல, இன்று தனக்கான ஆபத்தாகவே தினகரன் மாறி நிற்பதை உணர்கிறார். இன்னும் தினகரனை தூக்கி சுமப்பது தன் தலையில் தானே கொள்ளிக் கட்டையை சொருகி கொண்டதாகிவிடும் என்பதால், ’சட்டி சுட்டதடா கைவிட்டதடா..’ என விலகிவிட்டார் சசிகலா. மற்றபடி அவர் அரசியல் துறவறம் எல்லாம் மேற்கொள்ளவில்லை. வளர்த்த கிடா மார்பில் பாய்கிறது! விலக்கி வைப்பதும், விலகி நிற்பதுமே இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ளும் புத்திசாலித்தனமாகும்! இல்லாவிட்டால் தினகரனுக்கு தொடர்ந்து படியளந்து கொண்டே இருப்பதோடு, அவரது நடத்தைகளால் பலரது விரோதங்களை வாங்க வேண்டியதாகிவிடும் என கணித்து தான் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவை அறிவித்துள்ளார். ஆனால், அவர் காலம் கனிந்தால் வர முயற்சிக்க கூடும்! அதே சமயம் இந்த அறிவிப்பானது அதிமுக வட்டாரத்தில் அவரது இமேஜை உயர்த்தியுள்ளது. தமிழக அரசியலில் சசிகலாவை மிக பிரம்மாண்டமாக முன்னிறுத்தி, பேசி வந்த ஊடக அறிவுஜிவிகளின் அலம்பல் முடிவுக்கு வந்துவிட்டது. தினகரனின் அரசியலுக்கு இனி எதிர்காலம் இல்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time