தமிழ் வளர்ச்சி, தமிழ் பாதுகாப்பு குறித்த திட்டவட்டமான செயல்திட்டங்களின்றி, வெறும் இந்தி எதிர்ப்பு அரசியல் பலன் தருமா..? படு வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்திக்காரர்களின் ஊடுருவலைத் தவிர்க்கஹ் தவறி , தமிழ் இளைஞர்களின் வேலை வாய்ப்பு தமிழ் நாட்டிலேயே பறிபோவதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு.. இங்கு நடப்பது என்ன மாதிரியான இந்தி எதிர்ப்பு அரசியல் ?
இந்தி எதிர்ப்புஇந்தியை எதிர்த்துவிட்டால், தமிழ்ப் பாதுகாவலர்களா?
மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை போர்டில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியும் சேர்த்து எழுதப்பட்டதற்கு திமுக தரப்பில் எழுந்த உருட்டல், மிரட்டல்களுக்கு அஞ்சி, இந்தி எழுத்துக்களை அழித்துள்ளது, விஜய்யின் தவெக அரசு!
எப்படிப்பட்ட எதிர்ப்பையும் விவேகத்துடன் அணுக வேண்டும்.
இன்றைய சூழலில் இந்தி எதிர்ப்பு என்பதே ஒருவிதப் பாசாங்குத்தனம் தான்!
தமிழ் நாட்டில் ஏறத்தாழ ஒரு கோடி இந்தி பேசுவோர் இருக்க வாய்ப்புள்ளது.
கடந்த கால் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் பெரும் நிலப்பகுதிகளை குஜராத்தி, மற்றும் ராஜஸ்தானி மார்வாடிகள் வாங்கு குவித்துள்ளனர். சின்ன குக்கிராமங்கள் வரை அவர்களின் வட்டிக் கடை தொடங்கி பல பிசினஸ் கொடி கட்டிப் பறக்கிறது. இதையெல்லாம் ஓரளவேனும் தடுக்க முனைப்பு காட்டியதுண்டா திமுக?
இந்தி தொழிலாளர்கள் இல்லையென்றால் தமிழ் நாடே அனைத்து நிலைகளிலும் ஸ்தம்பித்து விடும். சிறிய, பெரிய நிறுவனங்களில் மட்டுமல்ல, விவசாய வேலைகளுக்கு கூட இந்திக்காரத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். மிகப் பெரிய உணவகங்கள் மட்டுமின்றி தேனீர் கடைகளில் கூட இந்திக்கார இளைஞனின் உழைப்பை தமிழ் நாடு சார்ந்துள்ளது. இந்தச் சூழல்களுக்கு என்ன காரணம்? தமிழ் நாட்டின் பெரும்பாலான இளைஞர்களை டாஸ்மாக் மது போதைக்குத் தள்ளி, உழைக்கத் திரானியற்றவர்களாக்கியுள்ளனர், கடந்த கால ஆட்சியாளர்கள்!
இந்த இந்திக்கார இளைஞர்கள் தமிழ் நாட்டின் குறுக்கும், நெடுக்குமாக பயணித்து தங்கள் உழைப்பை இங்கு தந்து கொண்டிருக்கும் நிலையில் சாலை பலகைகளில் இந்தியும் இடம் பெறுவது குற்றமாகாது. அதை மறுப்பது மனிதாபிமானமற்றதாகத் தான் பார்க்கப்படும்.
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாவுக்கு லட்சக்கணக்கான இந்திய மக்கள் வருகிறார்கள். அவர்களுக்கும், அவர்களை அழைத்து வரும் பஸ், கார் டிரைவர்களுக்கும் நெடுஞ்சாலைகளில் இந்தி எழுத்து இருப்பது மிகவும் ஆறுதலாக இருக்கும். தமிழகம் தவிர்த்த பிற இந்திய மாநிலத்தாருக்கு இந்தி ஓரளவேனும் தெரிந்திருக்கிறது என்ற வகையில் இந்தி தவிர்க்க முடியாது. இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து தினசரி தமிழகத்திற்கு சரக்கு எடுத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான லாரிகள் வருகின்றன. அந்த ஓட்டுநர்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும். இந்தியாவின் மற்ற மாநில நெடுஞ்சாலைகள் அனைத்திலும் இந்தி இடம் பெற்றுவிட்ட நிலையில், தமிழகம் மட்டும் அதற்கு எப்படி விதி விலக்காக இருக்க முடியும்?
தமிழ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணி இடங்களை மட்டும் நிரப்பாமல் தவிர்த்தவர்கள் தான் இந்த திராவிட ஆட்சியாளர்கள்!. தனியார் பள்ளிகள் தமிழைத் தவிர்த்து இந்தியை கற்பிக்கும் இழிவை தடுக்க வக்கற்றவர்கள். தமிழ்நாட்டில் தற்போது ஒரு தலைமுறைக்கே தமிழ் எழுதவும், வாசிக்கவும் தெரியாத அவல நிலைக்கு காரணமானவர்கள், எந்தக் குற்றவுணர்வுமின்றி வெறும் இந்தி எதிர்ப்பு அரசியல் மட்டுமே தமிழை வாழ வைத்து விடும் என்று பம்மாத்து அரசியல் செய்கிறார்கள்!

முக்கால் நூற்றாண்டுக்கு முன்னாள் இந்தி எதிர்ப்புக்கான தேவை இந்த சமூகத்தில் இருந்தது. அந்தச் சூழலை தங்கள் அரசியல் சுய ஆதாயத்திற்கு பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான தமிழ் வாலிபர்களை களபலி கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழை வாழ வைக்க தங்கள் ஆட்சி காலங்களில் செய்தது என்ன?
கல்விக் கூடங்களில் தமிழ் இல்லை, வியாபாரத் தளங்களில் தமிழ் இல்லை, அரசின் நிர்வாக நடைமுறைகளில் தமிழ் இல்லை. இப்படியாக தமிழ்த் தழைத்தோங்க எந்த உருப்படியான காரியங்களையும் தங்கள் ஆட்சி காலங்களில் செய்யத் தவறியவர்கள் எந்தவிதக் குற்றவுணர்வுமின்றி, ஏதோ தமிழுக்கே இவர்கள் தான் பாதுகாவலர்கள் போல பாவ்லா காட்டுகிறார்கள்!
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் பல சிற்றூர்களில் கூட சாலை மற்றும் தெருப் பெயர்களில் இந்தி எழுதப்பட்டு வந்ததை கடந்த திமுக ஆட்சியில் கவனப்படுத்திய போதெல்லாம் அலட்சியப்படுத்திய உத்தமர்கள் தான் இவர்கள்! தற்போது எதிர்கட்சியாக இருக்கும் போது மட்டும் இத்துப் போன இந்தி எதிர்ப்பை பேசுகிறார்கள்;!
மாநில நெடுஞ்சாலைப் பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இனி இந்தியும் இடம் பெற வேண்டியது தவிர்க்க முடியாத காலத்தின் கட்டாயமாகிவிட்டது என்றே தோன்றுகிறது.
இன்றைய மாறிய தமிழகச் சூழலின் யதார்த்தங்களை உணராமல் இதை மறுப்பதும், எதிர்ப்பதும் மடமையேயன்றித் தமிழ்ப் பற்றாகாது.
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இந்தி எதிர்ப்பு பாசங்கு அரசியல் இங்கு செல்லுபடியாகுமோ?
தமிழகத்தின் தபால் நிலையங்களில், வங்கிகளில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நெய்வேலி லிக்னைட் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் தமிழர்களை திட்டமிட்டு தவிர்த்துவிட்டு இந்தி அதிகாரிகளையும், இந்தி ஊழியர்களையும் திணித்து வருகிறது மத்திய பாஜக அரசு. இது போன்றவற்றை இங்குள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்து தடுத்த முடிந்தால் கோடி புண்ணியமாகும்.
தமிழையும், தமிழ்ச் சமூகத்தையும் காக்க எதிர்க்க வேண்டியதற்கெல்லாம் மெளனம் சாதிப்பது, செய்ய வேண்டியதையெல்லாம் செய்ய மறுப்பது..என்ற ஒரு துரோக அரசியலை செய்பவர்கள் ஒரு போதும் தமிழ் பாதுகாவலர்களாக முடியாது.
சாவித்திரி கண்ணன்
























இங்கு இந்தி எதிர்ப்பு தன்னல பூச்சாண்டி அரசியல் . 1920ல் துவங்கப்பட்ட இந்தி பிரச்சாரசபா மூலம் தமிழகத்தில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பயின்று வருகின்றனர். 1980 – க்கு பிறகு மத்திய அரசின் கல்விதிட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தனியார் பள்ளி மூலம் கோடிக்கு மேலானோர் இந்தி பயின்று பிறமாநிலங்களில் பணியாற்றியும் வருவதும் நமது பேரப்பிள்ளகளில் அநேகர் இந்தி பயில்வது ஒரு பாடமாகவே உருவாகி பயின்று வருகின்றனர்., மேலும் இவர்கள் நடத்தும் இந்த இந்தி பூச்சாண்டியை தங்கள் பள்ளிகளில் பயிற்றுவித்து பணம் கொழித்து செழித்து வெள்ளைப் பன்றிகளாக கொழுப்பெடுத்து திரிகின்றனர் என்பதே நிதர்சனம்.