ராகுல் காந்தியின் சத்தியாகிரகா – சாத்தியங்களும், சவால்களும்!

-சாவித்திரி கண்ணன்

இப்பத் தான் காங்கிரஸ் சரியாக மக்களை நோக்கி வந்திருக்கிறது. ஏற்கனவே ராகுல் காந்தி நடத்திய தேசம் தழுவிய யாத்திரையை போன்றதல்ல, ‘சத்தியாகிரகா’. இது மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் அதன் கீழ் அமைப்புகளிலும் உள்ள நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு செயல்பட வேண்டியதாகும். மக்கள் பிரச்சினைகளில் களத்தில் கைகோர்க்க ஆர்வம் காட்டுகிறது. இதில் காங்கிரஸ் சாதிக்குமா…?

சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி சத்தியாகிரகப் போராட்டங்கள் மூலம் மக்கள் கவனத்தை ஈர்த்தார். தற்போது சத்தியாகிரகா என்ற இணைய தளத்தை காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி ஆரம்பித்துள்ளார்…! இதன் மூலம், ”மக்கள் பிரச்சினைகளில் காங்கிரஸ் களத்தில் நிற்கத் தயாராகிவிட்டது” எனக் கூறியுள்ளார்.

இந்த இணைய தளம் போராடும் இந்திய மக்களை இணைக்கும் ஒரு இணைய தளமாக செயல்படும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்கள் எனவுள்ள இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக ஆங்காங்கே போராடிக் கொண்டுள்ளார்கள்!

”மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுச் சூழல் பாதுகாவலர்கள், பெண்கள், ஊழல் எதிர்ப்பாளர்கள், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவர்கள்..என பலதரப்பட்டவர்கள் போராடி வருகிறார்கள். அவர்கள் தங்கள் போராட்டம் குறித்து இரண்டு நிமிட வாசிப்புக்கு உகந்த வகையில் தங்கள் இயக்கத்தின் பெயர்  முகவரி ஆகியவற்றோடு பிரச்சினை குறித்த தகவல்களை கூறி, என்ன தீர்வை  எதிர்பார்க்கிறீர்கள்” என்பதனைத்தையும் பதிவிட வேண்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

”நான் ஒரு எதிர்கட்சித் தலைவர் என்ற வகையில் எங்கள் கட்சி சார்பில் பாராளுமன்றத்திலேயோ, வீதிகளில் இறங்கியோ, கடிதங்கள் மூலம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் எழுதியோ, பேசியோ உங்கள் பிரச்சினைகளை நாங்கள் தேசம் முழுமையும் கவனப்படுத்துவோம். நாங்கள் உங்களுடன் அந்த பிரச்சினைகளுக்காக நிற்போம். இது என் கடமை” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது மிக நல்ல முன்னெடுப்பு. இதை முன்பே செய்திருக்கலாம். காலம் கடந்த பிறகேனும் காங்கிரஸ் மக்களுடன் களத்தில் நிற்கத் தயாராகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். பலதரப்பட்ட மக்கள் இயக்கங்கள் இதை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது இன்று மாலை 7.15 மணியளவில் இந்த இணைய தளத்தில் பதிவாகியுள்ள பிரச்சினைகளில் இருந்து தெரிய வருகிறது.

கல்வி தொடர்பான பிரச்சினைகள் -228

ஊழல் தொடர்பான புகார்கள் – 163

விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் 113

சாதி பாகுபாட்டு பிரச்சினைகள் – 90

மருத்துவ, சுகாதாரப் பிரச்சினைகள் -76

தொழிலாளர் பிரச்சினைகள்  – 75

நிலப் பறிப்பு புகார்கள் – 54

பெண்கள் பாதுகாப்பின்மை புகார்கள்  -46

சுற்றுச் சூழல் பிரச்சினைகள் – 22

மற்ற பல பிரச்சினைகள் – 284

என்பதாக 1151 பிரச்சினைகள்  சத்யாகிரகா இணைய தளத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

முதல் நாள் இணைய தளத்தை ஆரம்பித்து வைத்த சில மணி நேரங்களிலேயே இவ்வளவு பிரச்சினைகள் கவனப்படுத்தப்பட்டுள்ளன…என்பது காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதையே காட்டுகிறது. ராகுல் காந்தி சொன்னது போல சிறிய பிரச்சினைகள் கூட இதில் சொல்லப்பட்டிருக்க கூடும். எனவே, இந்த பிரச்சினைகளை ராகுல் காந்தி என்ற ஒரு தனி நபர் மட்டுமே கவனப்படுத்த முடியாது.

மாநில அளவிலான பிரச்சினைகளை அந்தந்த மாநிலத் தலைமையும், மாவட்ட அளவிலான பிரச்சினைகள் மாவட்டத் தலைவர்களும், சிற்றூர்கள், கிராமங்கள் அளவிலான பிரச்சினைகளை அந்த பகுதியில் உள்ள கிளை அமைப்பின் நிர்வாகிகளும் உடனுக்குடன் கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட  போராடும் இயக்கத்தாரை தொடர்பு கொண்டு விரிவாக பேசியறிந்து அந்த பிரச்சினைகளுக்கு வினையாற்ற வேண்டும்.  முதலில் மத்திய,  மாநில அல்லது உள்ளாட்ச்சி அமைப்புகளின் கவனத்திற்கு அந்தந்த பிரச்சினைகள் சார்ந்து கொண்டு போக வேண்டும். அதில் தீர்வில்லையென்றால், தெருவில் இறங்கி போராடி கவனப்படுத்தவும் வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்ய ஒரு மிகப் பெரிய கூட்டு நடவடிக்கை குழுவை  உருவாக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் தேசியத் தலைமை  மாநிலத் தலைமையிடம்  என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற அறிக்கை பெற வேண்டும். மாநிலத் தலைமை அதற்குள் மாவட்ட தலைமையிடம் அறிக்கை பெற வேண்டும். மாவட்டமோ தங்களுக்கு கீழுள்ள கிளை அமைப்புகளிடம் அறிக்கை பெற வேண்டும்.

காலப் போக்கில் இந்த செயல் திட்டமானது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனையும் மக்கள் போராளியாக மாற்றிவிடும். இதன் மூலம் காங்கிரசுக்கும், மக்களுக்கும் உள்ள தொடர்பு பலப்படும். அதே சமயம் மக்கள் கவனப்படுத்தியும் காங்கிரசார் அதை கவனிக்காமல் அலட்சியம் செய்தால், மக்களின் நம்பிக்கையை பெற இயலாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளன. ஆகவே, மிகப்  பொறுப்புணர்வுடன், சகிப்புத் தன்மையுடன், மக்களுக்கு அதிக நேரம் கொடுத்து செயல்பட வேண்டிய கடமை ஒவ்வொரு காங்கிரஸ் நிர்வாகிக்கும் உள்ளது.

இது காங்கிரசை உயிர்ப்போடு இயங்க செய்வதற்கான அற்புத ஏற்பாடாகவே தோன்றுகிறது. இதன் மூலம் காங்கிரசார் மக்களை புரிந்து கொள்ளவும் அவர்களின் நம்பிக்கையை பெறவும் இது மிகப் பெரிய வாய்ப்பாகும். ஆக, காங்கிரஸ் மக்களை நோக்கிச் செல்லத் தயார் ஆகிவிட்டது என்பது வரவேற்கத்தக்கதே!

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time