கவியரசு கண்ணதாசன் ஏன் கொண்டாடப்படுகிறார்..?

-சாவித்திரி கண்ணன்

வாசகர்களை மட்டுமே பெற்ற எழுத்தாளரில்லை, கவிஞர் கண்ணதாசன்! தீவிர நேசர்களை, எண்ணிலடங்கா தாசர்களை, கவிதைப் பித்தர்களை, ஏன், கசிந்துருகும் பக்தர்களையும் தன் எழுத்தாற்றலுக்கு பெற்றவர் தான் கவிஞர் கண்ணதாசன். இப்படிப்பட்ட கண்ணதாசனின் பன்முக ஆளுமைகளை பார்க்கும் போது, ‘இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்திருப்பாரா?’ என வியப்பே மேலிடுகிறது;

கண்ணதாசன் நூற்றாண்டு விழாக்கள் தமிழ் நாடெங்கும் நடந்து கொண்டுள்ளன..என்பதை விடவும், தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலெல்லாம் கூட நடந்து கொண்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகளில் கூட கண்ணதாசன் தொடர்பான பேச்சு போட்டிகள், கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஒரு திரைப்படக் கவிஞனுக்கு இறந்த பின்னும் இவ்வளவு செல்வாக்கா..?

கண்ணதாசனை ஒரு திரைப்பட பாடலாசிரியன் என்பதைக் கடந்து தங்கள் வாழ்க்கைக்கான ஞானகுருவாக பார்க்கிறார்கள், பல தமிழர்கள்! அவன் தன் திரைப்பாடல்கள் வழியே வாழ்க்கைக்கான பாடங்களை போதித்தவன். காதல் என்றால் என்ன? உண்மையான இல்லறம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும்? பக்தி என்றால் என்ன? உண்மையான ஆன்மீகம் என்பது என்ன? பெண்களை ரசிப்பதா?  பெண்மையை மதிப்பதா? புதிரான பெண்மையை புரிந்து கொள்வது எவ்வாறு..? மக்கள் தலவனுக்கான இலக்கணம் என்ன..? அனைத்தையும் கண்ணதாசன் பாடல்களின் வழி அறிந்து கொண்டது, தமிழ்ச் சமூகம்.

‘ஒளிவுமறைவின்றி உண்மையைப் பேசுவோர் மக்கள் உள்ளங்களை ஆட்சி செய்வர்’ என்பதற்கேற்ப வாழ்ந்தவர் கவிஞர் கண்ணதாசன்.

ஒரே பிறவியில் பல அவதாரங்களை எடுத்தவர் கண்ணதாசன்!

திரைப்பாடலாசிரியர், கவிஞர், நாவலாசிரியர், கட்டுரைகள் எழுதும் உரை நடை ஆசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், சொற்பொழிவாளர், ஆன்மீகத் தத்துவ ஞானி, நாவலாசிரியர், திரைப்பட கதை, வசனகர்த்தா, திரைப்படத் தயாரிப்பாளர், அரசியல்வாதி..என ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்தார்.

ஐயாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்களில் பற்பல புதுமைகளை புகுத்தி, தன் பாடல் வரிகளை மக்கள் நெஞ்சங்களில் பசுமரத்தாணி போலப் பதிய வைத்தவர், கண்ணதாசன்! இதனால் தான் பெருந்தலைவர் காமராஜர், ”காட்டுக்கு ராஜா சிங்கம்  என்றால், பாட்டுக்கு ராஜா கண்ணதாசன்’’ என்றார்.

சந்தப் பாடல்களில் சாதனை படைத்த திரைக் கவிஞர் முத்துலிங்கம் சொல்கிறார், ”கண்ணதாசனுக்குப் பிறகு எத்தனையோ கவிஞர்கள் திரைத்துறைக்கு வந்ததுண்டு; எனினும், கண்ணதாசனைப் போல் தந்ததுண்டா என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இன்று துட்டுக்குப் பாட்டுரைப்போர் தொகை பெருகியிருந்தாலும், மெட்டுக்குப் பாட்டெழுதும் மேலோரில் கண்ணதாசன் தொட்ட இடத்தை இதுவரை யாரும் தொட்டதில்லை. சூரிய விட்டத்தைத் விட்டில்களால் ஆகுமா? என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்’’ என்கிறார், முத்துலிங்கம்.

கவிதைகளைப் போலவே அவரது திரைப்பட வசனங்களும் கேட்க,கேட்கத் திகட்டாதவை! திரைப்பட வசனங்களைக் கூட வசனக் கவிதையைப் போல சுவையாக எழுதுவார் கண்ணதாசன் என்பதற்கு மதுரை வீரன், மகாதேவி, மாலையிட்ட மங்கை, இல்லற ஜோதி, சிவகங்கை சீமை..போன்ற இருபது திரைப்படங்களே சாட்சியாகும்.

பல்லாயிரக்கணக்கில் கவிதைகளை எழுதிக் குவித்தவர்!

ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, இயேசு காவியம், பாண்டிமாதேவி போன்ற காவிய படைப்புகள் பத்தும் தமிழன்னைக்கு அவர் தந்துள்ள சொத்தாகும்.

ஆன்மீக இலக்கியத்திற்கும் கண்ணதாசன் அளப்பரிய பங்களிப்புகளை நல்கியுள்ளார். பகவத் கீதை உரை, அபிராமி அந்தாதி, கிருஷ்ண கானம், கிருஷ்ண மணி மாலை, ஸ்ரீ கிருஷ்ண கவசம், பஜ கோவிந்தம், அம்பிகை அழகு தரிசனம்.. அர்த்தமுள்ள இந்து மதம் பத்து பாகங்கள் போன்ற பல படைப்புகள் ஆன்மீகத்தில் மூழ்கி முத்தெடுத்தவையாகும்!

சேரமான் காதலி, ஊமையன் கோட்டை, அவளுக்கென்று ஒரு பாடல், சிவப்பு கல் மூக்குத்தி, கடல் கொண்ட தென்னாடு, முப்பது நாளும் பெளர்னமி..என பல நாவல்கள் எழுதியுள்ளார்! அவரது எழுத்து நடை சிறு, சிறு வாக்கியங்களாக செதுக்கப்பட்ட சிற்பம் போல இருக்கும். எளிய சொல்லாடல்கள், அதில்  ஈர்க்கும் சொல்லாட்சித் திறன், வசிகரமான வார்த்தைகள்..என அவரது எழுத்துக்களை வாசிப்பதே ஒரு சுகானுபவமாக இருக்கும்!

திருமகள், திரை ஒலி, சண்டமாருதம் , தென்றல், கண்ணதாசன் ஆகிய பத்திரிக்கைகளின் ஆசிரியராக இருந்துள்ளார். இதில் தென்றல், கண்ணதாசன் இரண்டும் கண்ணதாசனே சொந்தமாக நடத்திய பத்திரிக்கைகளாகும். இது தவிர காங்கிரஸ் நாளிதழான நவசக்தியில் அவர் நாள் தோறும் தீ பறக்க எழுதிய தீஞ்சுவை கட்டுரைகளும், குமுதம், ராணி, துக்ளக் ஆகிய பருவ இதழ்களில் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளும் கணக்கில் அடங்காதவை!

இத்தனைக்கும் மேலாக அரசியல்வாதியாகவும் அவர் தீவிரமாக செயல்பட்டுள்ளார். முதன் முதலாக திமுகவிலும், பிறகு தமிழ் தேசிய கட்சியிலும், அதன் பிறகு காங்கிரசிலுமாக அவர் அரசியல் செயல்பட்டாளராகவும் திகழ்ந்துள்ளார். கண்ணதாசன் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அரசியல் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். காமரஜரையும், நேருவையும் தன் ஆதர்சத் தலைவர்களாக பாவித்தார் கண்ணதாசன். கட்சியைக் கடந்து பேரறிஞர் அண்ணா மீது பேரன்பு கொண்டிருந்தார் கவிஞர். மனதிற்கு பட்ட நியாயங்களை மறைக்காமல் பேசுவது என்ற வகையில் கருணாநிதியையும், எம்.ஜி.ஆரையும் கடுமையாக விமர்சித்த போதிலும், கண்ணதாசனைப் போல  களங்கமில்லாமல் நட்பு பாராட்டியவர்களும் இல்லை.

 

தன் காலகட்டத்தில்  அரசியலும், சினிமாவிலும் மிகப் பெரிய ஆளுமைகளாகத் திகழ்ந்தவர்களான அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்றோரையெல்லாம் ஆவேசமாக எதிர்த்து அரசியல் செய்துள்ளார், கண்ணதாசன். இது அவரது திரைப்பட வாய்ப்புகள் சிலவற்றை இழக்க காரணமாக இருந்த போதிலும் அவர் உயிரோடு இருக்கும் வரை திரைப் பாடல்களில் அவரது முதன்மை  இடத்தை அவரிடம் இருந்து யாராலும் பறிக்க முடியவில்லை.

அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு நிகராக சொல்லும்படி இன்னொரு கவிஞனில்லை என்ற வகையில் வாழும் போதே ஒரு வரலாறாகப் பார்க்கப்பட்ட  பேராளுமையே கண்ணதாசனாகும்.

இப்படிப்பட்ட இனிமையான கண்ணதாசனை படிப்பதும், ரசிப்பதும், பேசுவதும், எழுதுவதும் பேரானந்த அனுபவமாகும்.

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time