சுமார் 35 படங்களுக்கு மட்டுமே இசை அமைத்துள்ளார் என்றாலும், திரை இசையில் டி.ராஜேந்தரின் பங்களிப்பு என்பது முக்கியமானது. சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்தில், அவருக்கு இணையாக டி.ராஜேந்தர் ஒரு கோடி சம்பளம் பெற்றது அவரது இசை மற்றும் பாடல்களின் சந்தை முக்கியத்துத்தை உணர்த்துகிறது. டி.ஆர் பாடல்கள் ஒரு அலசல்;
தமிழில் டி.ராஜேந்திரருக்கு இருக்கும் பேரார்வம், காட்டாற்று வெள்ளம் போன்ற உணர்ச்சி வெளிப்பாடு.. ஆகியவை அவரே மெட்டமைத்து, ‘பாட்டு கட்டும்’ திறமையைத் தந்துள்ளது எனலாம்.
இளையராஜா என்ற பிரம்மாண்டத்தோடு ஒப்பிட முடியாது என்றாலும், ராஜாவின் கொடி உயரப் பறந்த காலத்தில் தனக்கென ஒரு தளம் அமைத்துக் கொண்டு, கொடி நாட்டிப் பறக்கவிட்டார், டி.ஆர் என்பது தான் வரலாறு.
1980 காலகட்டத்தில் சுமார் 20 இளையராஜா படப் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்த காலத்தில் அவை அனைத்தையும் விஞ்சி ஒரு தலை ராகம் பாடல்கள் அனைவரது இதயத்தையும் ஊடுருவி சிம்மாசனமிட்டு உட்கார்ந்தது. அதன் எல்லா பாடல்களும் ஹிட் என்றாலும், வாசமில்லா மலரிது, வசந்தத்தை தேடுது, இது குழந்தை பாடும் தாலாட்டு, கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…போன்றவை சூப்பர் ஹிட். இந்தப் பாடல்களை அன்று உச்சரிக்காத உதடுகள் இருக்காது…எனலாம். இந்தப் பாடல்களில் டி. ராஜேந்தர் கையாண்ட உவமைகளும், அதில் வெளிப்பட்ட தமிழ் வளமும் பாடல்களுக்கு அழகு சேர்த்தன!
ஒரு தலை ராகத்திற்கு பிறகு டி.ராஜேந்தர் பல படங்கள் இசை அமைத்திருந்தாலும் அந்த பாடல்களில் அமைந்த ஒரு ஒழுங்கமைவு, பின்னணி இசை, சீரான இசையொட்டம்..மற்றப் படங்களில் அமையவில்லை. அதே போல ஒரு தலை ராகத்திற்கு இணையான இன்னொரு படத்தை டி.ராஜேந்தரால் இன்று வரை தர முடியவில்லையே.. ஏன்? என்ற தேடுதல் எனக்கு பல ஆண்டுகளாக இருந்தது.
ஒரு தலைராகம் திரை இசை உருவான விதம்!
அதற்கான விடை வாமனன் எழுதியுள்ள திரை இசை அலைகள் நான்காம் பாகம் நூலில் கிடைத்தது. ஒரு தலை ராகம் படம் தொடங்க திட்டமிட்ட போது, படத் தயாரிப்பாளரும், இயக்குனருமான இப்ராஹிம் அன்றைக்கு பல பெரிய இசை அமைப்பாளர்களுக்கு உதவி இசை அமைப்பாளரகவும், ஒரு சில படங்களுக்கு தானே இசை அமைத்தும் இருந்த ஏ.ஏ.ராஜ் என்பவரை தி. நகர் சுதாரா ஹோட்டலுக்கு அழைத்தார். அப்போது அங்கே ஒரு இளைஞரை அறிமுகம் செய்து வைத்தார் இப்ராஹிம். அந்த இளைஞர் மேஜையில் தாளம் போட்டு பாடல்களை பாடிக் காண்பித்தார். அப்போது, ”இவரே மெட்டோடு பாடலும் எழுதியுள்ளார். இவர் புதியவர். ஆகவே இந்தப் படத்திற்கு நீங்க உதவி இசை அமைப்பாளராக இருக்க வேண்டும்” என்கிறார்.
ஏ.ஏ.ராஜுவிற்கு மனம் ஒப்பவில்லை. தயாரிப்பாளர் வற்புறுத்தலின் பேரில் ராஜ் கேட்டார். ”ஒரு பாடலுக்கு ஐநூறு ரூபாய் தருவீர்களா?” தயாரிப்பாளர் சம்மதம் என்றதும் ஒத்துக் கொண்டார். ஏ.ஏ.ராஜ் அவர்கள் தான் டி.ராஜேந்தர் மெட்டோடு உருவாக்கிய பாடலை ஒரு திரை இசை வடிவத்திற்கு கொண்டு வந்தார். அதாவது ராகத்தின் அடிப்படையிலும், ஸ்கேலின் அடிப்படையிலும் இசை கோர்வைகளை உருவாக்கியதோடு, மற்ற வாத்திய கலைஞர்களுக்கும் நோட்ஸ் கொடுத்து பாடல்களை திரை இசை வடிவத்திற்கு கொண்டு வந்தார். பல நாட்கள் போராட்டத்திற்கு பின்பு தான் பாடல்கள் உருவாயினவாம். படத்தின் முழு பின்னணி இசையும் ஏ.ஏ.ராஜ் இசை அமைத்தது தான். ஆகவே தான் இசை என்ற டைட்டிலில் டி.ராஜேந்தரரோடு ஏ.ஏ.ராஜ் என்ற பெயரும் இணைந்தே இருக்கும். இவர் ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகரின் நெருங்கிய நண்பர். இந்த இருவரும் சேர்ந்து பல படங்களுக்கு பணியாற்றி உள்ளனர்.

இதன் பிறகு ஜேப்பியார் தான் டி.ராஜேந்தரை தேடிச் சென்று தான் எடுக்கவிருக்கும் படத்திற்கு இசை அமைக்கும்படி கேட்டார். ஆனால், டி.ராஜேந்தரோ தான் ஒரு கதை வைத்திருப்பதாகக் கூறி அந்த படத்தை இயக்கும் வாய்ப்பு தந்தால் இசை அமைப்பையும் சேர்த்து செய்வேன் எனக் கூற, வசந்த அழைப்புகள் வாய்ப்பை தந்தார் ஜேப்பியார். படம் வெளியாகி பாடல்கள் ஹிட்டாகின்றன.
இதைத் தொடர்ந்து டி.ஆர் இயக்கம் மற்றும் இசையில் வந்த ரயில் பயணங்களில், நெஞ்சில் ஒரு ராகம், உயிருள்ள வரை உஷா, மைதிலி என்னை காதலி, தங்கைகோர் கீதம், ஒரு தாயின் சபதம், என தங்கை கல்யாணி அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்ததோடு, பாடல்களும் புகழ் பெற்றன. இவை அனைத்துமே 1980 களில் வந்தப் படங்களே!
இவற்றில் இன்று கேட்டாலும் நம்மை பெரிதும் ஈர்க்கக் கூடிய டி.ஆரின் முக்கிய பாடல்கள் உள்ளன.

”வைகை கறை காற்றே நில்லு”
”வசந்தம் பாடி வர வைகை ஓடி வர”
”ஒரு பொன் மானை நான் காண..”
”தினம், தினம் உன் முகம் நினைவினில் மலருது”
”நெஞ்சம் பாடும் புதிய பாடல்”
”இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி”
”விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்”
”என் பாடல்களில் நீ நீலாம்பரி..”
”அட, யாரோ பின்பாட்டுப் பாட..”
”சொல்லாமத் தானே இந்த மனசு துடிக்குது..”
”மூங்கிலிலே பாட்டிசைக்கும்..”
”மாலை என்னை வாட்டுதே…”
போன்றவை குறிப்பிடத் தக்கவை. தனித்துவமானவை. துள்ளல் இசை கொண்டவை. மனதை இதமாக்குபவை, டி.ராஜேந்தர் பாடல்களில் முத்திரை பதித்தவை எனலாம்.
டி.ராஜேந்தர் தானே சுமார் 35 பாடல்கள் பாடியுள்ளார் எனினும், அவற்றில் ஐந்தாறு பாடல்களே பெரிதும் விரும்பப்பட்டுள்ளன.
”தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி”
”என் ஆசை மைதிலியே”
”அட பொன்னான மனசே, பூவான மனசே”
மற்றவை எல்லாம் பெரும்பாலும் குத்துப்பாட்டுக்களே! தமிழ் திரைக்கு அதிக குத்துப் பாடல்களை தந்தவர், டி.ஆர் எனலாம்.
டி.ராஜேந்தர் படங்கள் 90 களில் மெல்ல முக்கியத்துவம் குறைந்தது. இரண்டாயிரத்தில் மேலும் குறைந்தது. 2007க்கு பிறகு முற்றிலும் கவனம் பெறாமல் போய்விட்டது. இந்தச் சூழலில் புதிதாக கன்னடத்து பைங்கிளி என்ற படத்திற்கு பாடல்கள் எழுதி இசை அமைக்கிறார், டி.ஆர். இதில் இளையராஜாவையும் ஒரு பாடல் பாட வைத்துள்ளார்.
டி.ராஜேந்தர் தான் இசை அமைத்த படங்களுக்கு கண்ணதாசன், வாலி, வைரமுத்து என யாரிடமும் ஒரே ஒரு பாடலைக் கூட கேட்டு வாங்கியதில்லை. காரணம், தன் மனவோட்டத்திற்கு ஏற்ப மெட்டை உருவாக்கி, வார்த்தைகளை எழுதுபவர் டி.ஆர். தனது பாடல்களுக்கு மெட்டு சீராக இல்லையென்றாலும், இசை கோர்வை முறையாக இல்லையென்றாலும் அவர் இழுத்து, வளைத்து இஷ்டத்திற்கு விதவிதமான சொற்களை போட்டு, எழுதி பாடகர்களை பாட வைத்துவிடுவார். தமிழில் அவருக்கு இருக்கும் புலமையே அவர் பாடல்களின் வெற்றிக்கு பிரதான காரணமாகும். ராக ஆலாபனையில் அசத்துவார்.

‘ஒரு பொன் மானை நான் காண, ஒரு அம்மானை நான் பாட’ என்ற பாடலுக்கு முன்பு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நீண்ட, நெடிய ஆலாபனை ஆ… என்று உச்சஸ்தாயிக்கு போய் இழுப்பார் பாருங்கள்.. . அது நம்மை ஒரு தியான நிலைக்கே அழைத்துச் செல்வது போல இருக்கும்.
அதே போல, ‘நெஞ்சம் பாடும் புதிய ராகம்’ என ஜானகியம்மா இதமாகப் பாட, பின்னணியில் எஸ்.பி.பி வெறும் தாளக்கட்டு மட்டும் ஆ.. ஊ.. ஹே..ஹேய், ஹேய் என உச்ச ஸ்தாயியில் அசத்துவார். இந்தப் பாடலும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரக் கூடியதாகும்.
டி.ராஜேந்தர் ஒரு சுயம்பு. யாரிடமும் உதவி இசை அமைப்பாளராக இல்லையென்றாலும் முதல் படத்திலேயே ராஜ் மாஸ்டரிடம் ஓரளவு உள்வாங்கி இருப்பார். டி.ராஜேந்தர் படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகர் அவர்களும் பின்னணி இசையில் உதவியதாக கேள்விப்பட்டுள்ளேன்.
டீ.ஆரின் மற்ற பல பெரும்பான்மையான பாடல்கள் பச்சையாக காம இச்சையை தூண்டும் விதத்தில் எழுதப்பட்டவை. பல பாடல்கள் பெரும் இரைச்சல்களாக இருந்து கவனம் பெறாமல் போய்விட்டன. தன்னிச்சையாக அவரே உருவாக்கி, ‘நான் எழுதியதே பாடல் , நான் போடுவதே இசை..’ என்ற பாணியில் பல பாடல்கள் வந்தமையால், பெரும்பாலானவை கவனம் பெறாமல் போய்விட்டன.
விஸ்வநாதன் – ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ் என இரட்டையர்கள் இருந்ததைப் போல டி.ராஜேந்தர் அவர்களும் நல்ல இசை ஞானம் உள்ள ஒருவரை தனக்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்து இணைந்து செயல்பட்டிருந்தால், அவர் பாடல்கள் இன்னும் மெருகேறி இருக்கும். இசை குளறுபடிகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இன்னும் அதிக முக்கியத்துவம் பெற்று இருக்கும்.
இதே போல மற்ற பெரிய கவிஞர்களிடம் ஓரிரு பாடல்களேனும் ஒவ்வொரு படத்திலும் வாங்கி இசை அமைத்திருந்தால் அது மேலும் அவர் பாடல்களுக்கு வலு சேர்த்திருக்கும்.
சாவித்திரி கண்ணன்
























Leave a Reply