இடைத் தேர்தல் மூலம் பல குழப்பங்களுக்கு மக்கள் விடை தந்துள்ளனர். அரசியல்வாதிகளை விட மக்கள் தெளிவானவர்கள் என்ற வகையில் ஒவ்வொரு கட்சிக்கும் மக்கள் பாடம் புகட்டி உள்ளனர். இந்தச் சூழலுக்கு இந்த முடிவைத் தான் மக்கள் எடுக்க முடியும் என்ற சூழல் நிர்பந்தங்களும் இருந்தன. இந்த மக்கள் தீர்ப்பு என்னென்ன விளைவுகளை தோற்றுவிக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்;
மிக முக்கியமாக அதிமுகவில் இருந்து விலகி தவெகவிற்கு வந்த எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டது, பொட்டி தரப்பட்டது என்ற குற்றச்சாட்டை மக்கள் நிராகரித்துள்ளனர். அதிக தொகுதிகளில் வென்று ஆட்சிக்கு வந்த கட்சிக்கு பெரும்பான்மை தேவைப்பட்ட நிலையில், அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த எம்.ஏல்.ஏக்கள் தவெகவிற்கு ஆதரவளித்ததை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.
அதாவது அதிமுக எம்.எல்.ஏக்கள் பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறவில்லை என்பதோடு, பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆதரவு தந்துவிட்டு நாளும், பொழுதும் மிரட்டிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட்களை நம்ப முடியாது என்பதால் தடுமாற்றமில்லால் ஆட்சி நீடிக்க மக்கள் ஆதரவுக் கரம் தந்துள்ளனர்.
மதுராந்தகத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பு தவெக பெற்ற வாக்குகளை விட 8,658 வாக்குகள் கூடுதலாகவும், தாராபுரத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பு தவெக பெற்ற வாக்குகளை விட 20,403 கூடுதலாகவும் பெற்றுள்ளதன் மூலம் இந்த ஐந்து மாத தவெக ஆட்சி எதிர்கட்சிகள் கூறுவது போல மோசமில்லை, நன்றாகவே உள்ளது தொடரலாம் என தீர்ப்பு தந்துள்ளனர்.

அதே சமயம் சட்ட சபையை நடத்தவிடாமல் சதா காலமும் பிரச்சினை செய்தும், பொதுவெளியில் ஆபாசமாகவும் பேசி வந்த திமுகவுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு போட்ட ஓட்டுகளை விடவும் மதுராந்தகத்தில் 9064 ஓட்டுகள் குறைவாகவும், தாரபுரத்தில் 7003 ஓட்டுகள் குறைவாகவும் தந்து திமுகவுக்கு பின்னடைவை தந்துள்ளனர் மக்கள்! உதயநிதியின் தலைமை திமுகவுக்கு உதவாதினி என இந்த தேர்தல் உணர்த்தியுள்ளது. வெறும் வெறுப்பு அரசியல் மட்டுமே பேசினால் உதயநிதியால் அஸ்தம கதியே அடையும் திமுக!
இந்த இடைத் தேர்தலில் தன் பாரம்பரிய வாக்கு வங்கியை பரிதாபகர நிலையில் இழந்துள்ளதை அதிமுக தலைமை தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என மக்கள் தந்த தீர்ப்பாகவே பார்க்கிறேன். ஐந்தே மாதத்தில் அதிமுக தன் வாக்கு வங்கியை தாராபுரத்தில் 35,820 ஓட்டுகளையும், மதுராந்தகத்தில் 23, 896 ஓட்டுகளையும் பறி கொடுத்துள்ளது.
அதிமுகவின் வாக்கு வங்கி என்பதே திமுக எதிர்ப்பு அரசியல் தான். திமுக ஒரு தீய சக்தி என்று எம்.ஜி.ஆரு, ஜெயலிதாவும் சாடியுள்ளனர். இது மட்டுமின்றி திமுகவை எதிர்த்த பல போராட்டக் களங்களில் அதிமுக தொண்டர்கள் உயிரையும், ரத்ததையும் சிந்தி கட்டமைக்கப்பட்டது தான் அதிமுக.
அதிமுக உருவாகி 54 ஆண்டுகளை தொட்டுள்ள இந்த தேர்தலில் மட்டும் தான் திமுக எதிர்ப்பை சுத்தமாக கைவிட்டு தேர்தலை எதிர்கொண்டது அதிமுக தலைமை. ஜெம் வீரமணியின் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தில் கூட சென்ற ஆட்சியில் திமுக காட்டிய அலட்சியத்தை எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக கண்டிக்காதது பெரும் பின்னடைவே. இதன் மூலம் திமுகவுடன் அதிமுக தலைமை மறைமுகமாக சமரசம் கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் அதிமுக ஆதரவாளர்கள் மனதில் தோன்றி இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே தீய சக்தி திமுகவை எதிர்க்க இன்றைக்கு தவெகவை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அதிமுக தன் ஆதரவாளர்களை தள்ளிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

உண்மையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பும், பின்பும் தவெகவானது அதிமுகவோடு கூட்டணி காணவே ஆர்வம் காட்டியது. தேர்தலுக்கு முன்பு கூட்டணி கண்டிருந்தால் விஜய் துணை முதல்வராகவும், எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பகிர்வை விரும்பவில்லை. ஆந்திராவில் மிக மூத்த அரசியல்வாதியான சந்திரபாபு நாயுடு பவன் கல்யாணுடன் அதிகார பகிர்வை மேற்கொண்டதால் தான் தொடர்ந்து அரசியலில் கோலோச்ச முடிகிறது. மாறி வருகின்ற இளைஞர் அரசியலுக்கான புதிய சூழலை கொஞ்சமும் உணரவில்லை எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் முடிவுக்கு பிறகும் தவெகவை தவிர்த்துவிட்டு திமுக தயவில் முதல்வராக முடிவெடுத்தது எடப்பாடி செய்த மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாகும். அதற்கு இது வரை வருந்தவும் இல்லை, திருந்தவும் இல்லை பழனிச்சாமி. அதற்கான விளைவைத் தான் இந்த தேர்தலில் அவர் அறுவடை செய்துள்ளார். இனி அதிமுகவை தன் தலைமையில் கொண்டு செலுத்துவது எடபாடிக்கு சவாலாகவே இருக்கும்.

நாம் தமிழர் கட்சி பலவீனப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் கடந்த 15 ஆண்டுகளாக பாடுபட்டு அவர் உருவாக்கிய திமுக எதிர்ப்பு அரசியலில் தீடீரென்று அவர் செய்து கொண்ட சமாதானம் தான். 2026 தேர்தலில் அதன் வாக்கு வங்கி எட்டு சதவிகிதத்தில் இருந்து நான்கானது. தற்போதோ தாராபுரத்தில் 2.8 சதவிகிதமாகவும், மதுராந்தகத்தில் 1.18 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டது. சீமானிடம் அரசியல் நேர்மை அறவே இல்லை என்பதற்கு மக்கள் தந்த விலையே இந்தத் தீர்ப்பாகும்.
கம்யூனிஸ்டுகளை இனி தவெக மதிக்காது. தவெக அரசில் பங்கேற்று அமைச்சாராகி, மக்கள் பணியாற்ற கிடைத்த பொன்னான வாய்ப்பை விசிக பயன்படுத்திக் கொண்டதை போல, கம்யூனிஸ்ட்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அந்தக் கட்சிகளின் செல்வாக்கும் அதிகரித்திருக்கும். இந்த ஆட்சியாளர்களை கூடவே இருந்து வழி நடத்தும் வாய்ப்பும் கிடைத்திருக்கும். தங்களின் திமுக சார்பு நிலையால் நல்வாய்ப்பை தவறவிட்டதோடு, தேவையில்லாமல் களம் கண்டு தங்கள் பலவீனத்தை பட்டவர்த்தனமாக காட்டிக் கொண்டனர். மூன்று கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து மும்முரமாக களம் கண்டாலும், ஒரு சதவிகித வாக்கைக் கூட எட்ட முடியாத அவல நிலையானது இனி கம்யூனிஸ்டுகளுக்கு எந்த பெரிய கட்சியும் பழைய எண்ணிக்கையில் சீட்டு ஒதுக்குவதை கேள்விக்கு உள்ளாக்கிவிட்டது.

ஆக, இன்னும் ஐந்து தொகுதிகளில் இடைத் தேர்தல் நடந்துவிட்டால் தவெக 114 ஐ பெற்று விடும். அதன் பிறகு விசிக விலகினாலும் கூட பிரச்சினையில்லாத காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஏழு பேரின் ஆதரவைக் கொண்டு ஐந்தாண்டுகள் நிம்மதியாக ஆட்சி செய்யலாம். பா.ம.கவை சேர்த்துக் கொள்ள வேண்டியதில்லை.
ஆனால், இந்த இடைத் தேர்தலில் தவெக பெற்ற வெற்றி அதற்கு தலைகனத்தை தந்துவிடக் கூடாதே என்ற கவலையும் நமக்கு ஏற்படுகிறது. இது இன்னும் அதிமுகவில் இருந்து பலர் தவெக வருவதற்கு கதவை திறந்துவிடுமோ.. என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. அவ்வாறு நடந்தால் அதன் மூலம் தவெக பலம் பெறாது. மாறாக பலவீனமே ஏற்படும்.
இந்த இடைத் தேர்தலில் வழக்கமாக ஆளும் கட்சி செய்யும் பண அரசியலையும், அதிகார துஷ் பிரயோகத்தையும் தவெக செய்யாதது ஒரு வகையில் நல்ல மாற்றம் தான். அதே சமயம் ஒரு முதலமைச்சர் மிக அதிகமாக மெனக்கிட்டு தெருத்தெருவாக ஓட்டு கேட்ட இடைத் தேர்தலும் தமிழக அரசியல் வரலாற்றில் இது தான் என்பதை கவனப்படுத்த விரும்புகிறேன். ஆரம்ப காலத் தவறு என்பதாலும், பெரும்பான்மைக்கு உதவலாம் என்ற பெருந்தன்மையாலும் மக்கள் தவெகவின் தவறை ஒரு முறை மன்னிக்கலாம். ஆனால், இதையே தொடர்ந்தால் தமிழக மக்கள் தண்டிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
சாவித்திரி கண்ணன்
























ஆசிரியர் கருத்து யான் அப்பட்டமான நிலவனம்
ஆசிரியர் கருத்து தான் அப்பட்டமான நிலவரம்
அப்படியானால் திமுக அதிமுக ஒன்றிணைந்து செயல்பட்டால்
தவெக வை வீட்டுக்கு அனுப்பலாமா?