அம்பானி, அதானிகளுக்காக இந்திய நலன்களை பலி கொடுக்கும் மோடி!

-ச.அருணாச்சலம்

உலகப் பெரும் முதலாளியான எலான் மஸ்க்கின் எக்ஸ் தளப் பதிவு  ஒன்று பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்தியாவை ஆள்வது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரா? அல்லது பிரபல தொழில் அதிபர்களா? பிரதமர் பதவி மக்கள் சேவைக்கானதா? தொழில் அதிபர்களின் சேவைக்கானதா? அதானி, அம்பானிக்கு அடி பணியும் மோடியின் நடத்தை அமெரிக்க அளவில் கேள்விக்குள்ளாகியுள்ளது;

தனது ஸ்டார்லிங் எனப்படும் மிகப்பெரிய மின்தொலை சேவையை சொந்த சாட்டிலைட்டுகள் மூலம் அளிக்கும் எலான்மஸ்க் இந்தியாவில் அத்தகைய சேவையை தொடங்க விண்ணப்பித்து ஐந்து ஆண்டுகளாகியும் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.  இதனால், இந்திய சட்ட விதிகள் அனைத்தையும் கடைபிடித்த பிறகும் இந்திய அரசு ஏன் லைசன்ஸ் கொடுக்காமல் இழுத்தடிக்கிறது? ஒருவேளை இந்தியாவின் உண்மையான பாஸ் அம்பானி தானோ? என்று எலான் மஸ்க் கிண்டலடித்துள்ளார்.

இந்தியாவில் மின்தொலைசேவை (broadband service) வழங்குவதில் முன்னணியில் இருப்பது அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே! நீண்ட காலமாக இருக்கும் ஏர்டெல் நிறுவனத்தை மார்க்கட் ஷேரில் பின்னுக்கு தள்ளி சில ஆண்டுகளிலேயே முன்னுக்கு வந்துள்ளது அம்பானியின் ஜியோ நிறுவனம் . இதற்கு முற்று முழுதாக உதவியவர் நமது பிரதமர் மோடி தான். இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி எஸ் என் எல் , மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை கழுத்தை நெறித்து முடக்கி அதன் கட்டமைப்புகளை அம்பானிக்கு அள்ளிக் கொடுத்து ஜியோ நிறுவனத்தை ஊட்டி வளர்த்ததில் மோடிக்கு பெரும் பங்குண்டு.

அதானியை மோடி வளர்த்த கதையும், அதானி குழுமத்தை காப்பாற்றி கட்டி எழுப்ப நாட்டு நலன்களை  அடகு வைத்து எந்த எல்லைக்கும் செல்ல துணிந்தவர் மோடி என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மண்டியிட்டு அதானி மீது அமெரிக்காவில் போடப்பட்டுள்ள மோசடி வழக்கை வாபஸ் பெற கெஞ்சியதில் நாம் அறிவோம். இதற்காக இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தங்களில் , அமெரிக்காவுக்கு பல சலுகைகள் கொடுக்க  மோடி அரசு ஒத்துக் கொண்டதை நாடறியும். அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அதானி முன் வந்தது கூட வழக்கை அமெரிக்க அரசு கைவிட வேண்டும் என்பதற்கான கையூட்டு தானே என்று அமெரிக்க நீதிபதி கூட கேள்வி கேட்டுள்ளார்.

இந்த குஜராத்தி பண முதலைகளுக்காக மோடி, ஏறத்தாழ 13 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஒரு ஆண்டில் மட்டும் வரி சலுகைகளை வழங்கி உள்ளார். இவர்களுக்காக , இந்த நாட்டில் இயங்கி வரும் ஏனைய சிறு, குறு முதலாளிகளை அடித்து நொறுக்கினார் மோடி,

இந்திய மக்களுக்கு வேலை வாய்ப்பையும், சம்பாத்தியத்தையும் வாழ்வாதாரத்தையும் தரும் (தந்து கொண்டிருந்த) அமைப்பு சாரா பொருளாதாரத்தையே (informal economy) பணமதிப்பிழப்பு மூலமும் ஜிஎஸ்டி வரிச்சுமை மூலமும் முடக்கி அதானி அம்பானியை கொழுக்க வைத்தார் மோடி!

பொதுச் சொத்துக்களை தாரை வார்த்து, சுரங்கங்கள்,துறைமுகங்கள்,விமான நிலையங்கள் ஆகியவற்றை அடிமாட்டு விலைக்கு அதானிக்கு கொடுத்து அவரை கொழுக்க வைத்தார் மோடி. ஏனைய இந்திய முதலாளிகள் இந்தியர்களாக மோடியின் கண்களுக்கு தெரியவில்லை.

தொலை தொடர்பு துறை மார்க்கட்டில் 2014ல் வெறும் 13 விழுக்காடு மட்டுமே கொண்டிருந்த ரிலையன்ஸ் நிறுவனம் இப்பொழுது 2026ல் 39 விழுக்காடு பெற்றிருப்பது ஆரோக்கியமான போட்டியின் மூலமாக நிகழ்ந்ததில்லை.

அதானிக்கு நிலக்கரி இறக்குமதி லைசன்சும், மின்உற்பத்தி லைசன்சும் கொடுத்துவிட்டு மின் கட்டணத்தை கூட்டவும் அனுமதி கொடுத்தது மோடி அரசு தானே? இதை எதிர்த்து மாநில அரசுகள் நீதிமன்றம் சென்றால் அங்கும் அதானிக்கு உதவும் வகையில் தீர்ப்பளித்த அருண் மிஸ்ரா , கன்வில்கார் போன்ற நீதிபதிகளுக்கு பதவிகாலம் முடிந்தவுடன் தேசீய மனித உரிமைகள் ஆணையம், தேசீய பசுமை தீர்ப்பாயம்,லோக்பால் அமைப்பு தலைவர் போன்ற பெரிய பதவிகள் கொடுத்து தட்டி கொடுப்பதும் மோடி அரசு தானே!

இதில் மக்களுக்கு விளைந்த நன்மை என்ன?

இவ்வளவு சலுகைகள்  போதாது என்று தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் மூலம் (National Company Law Tribunal) நொடித்து போன நிறுவனங்களை அதானி குழுமம் கபளீகரம் செய்ய அனுமதிப்பதும் மோடி அரசு தான்.

சமீபத்தில் சுபாஷ் சந்திரா கோயங்கா என்ற முதலாளியின் 97,000 கோடி கடனை வெறும் 6.5 கோடி பெற்றுக் கொண்டு தள்ளுபடி செய்த NCLTமும்பை, குர்கான் மற்றும் தில்லி,  நொய்டா போன்ற இடங்களில் பல்லாயிரங்கோடி மதிப்புள்ள திட்டங்களை தன்வசம் வைத்துள்ள HDIL நிறுவனத்தின் சொத்துக்களை 16 கோடிக்கு ஏலம் விடும் NCLT, LANCO போன்ற நிறுவனங்கள், ஏராளமாக கடன் வாங்கி நொடித்த நிறுவனச் சொத்துக்களை  அதானி குழுமம் கைபற்றுவதற்கு  உதவுகிறது. கடன் கொடுத்த வங்கிகளுக்கு கிடைப்பதோ மிக மிக சொற்பத்தொகையே. வங்கிகள் இதனால் அடையும் நட்டங்களோ மக்களின் தலையில் . ஆனால் மதிப்பு மிகுந்த சொத்துக்களெல்லாம் அடிமாட்டு விலைக்கு ஏலம் எடுத்த அதானி குழுமத்திற்கு!

வேறு நபர்கள் ஏலத்தில் வெற்றி பெற்றால் எடுத்த ஏலத்தை செல்லாது என அறிவிப்பத்ற்கும், அடிமாட்டு விலைக்கு அதானி கேட்டவுடன் ஏலத்தை அவருக்கு முடித்து வைப்பதையும் தனது கடமையாக கொண்டுள்ளது மோடி ஏற்படுத்தி உள்ள NCLT (சட்டமும் , அமைப்பும் ) என்பது ஊரறிந்த ரகசியம் .

இந்த ரகசியங்கள் எலான் மஸ்கிற்கும் தெரிந்திருப்பதில் வியப்பில்லை. அதானி அம்பானிகளுக்காக உலக நாடுகளை சுற்றி சுற்றி வந்து ஒப்பந்தங்கள் பல போடும் மோடி, இந்திய அரசின் சட்டங்களையும் அவர்களுக்காகவே வளைக்கிறார்.  இது உலக கோடீஸ்வரனான எலான் மஸ்கிற்கு தெரியாமல் போகுமா? அது தான் புலம்பியுள்ளார் !

ஆனால் இங்குள்ள “குருட்டு பக்தர்கள் “ அம்பானி – அதானி போன்ற முதலாளிகளை தேசீய நலன்களை பாதுகாப்பவர்கள் போல கற்பிதம் செய்து கொண்டு அவர்களை விமர்சிப்பவர்களை தாக்குகிறார்கள்!

இத்தனை வரி சலுகைகள் இந்திய அரசிடம் இருந்து பெற்ற பின்னரும்  அதானியும், அம்பானியும் இந்தியாவில் புதிய முதலீடுகள் ஏதேனும் செய்கிறார்களா?  என்றால், இல்லை. மாறாக, வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் முதலீடுகளை செய்கிறார்கள்! இதை நாம் அம்பானி கலிபோர்னியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு துறையில் (Refinary) மூதலீடு செய்ய முன்வந்திருப்பதன் மூலம்  அறியலாம்.

அதானி அமெரிக்க சிலிக்கான் வேலி எனப்படும் கலிஃபோர்னியாவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முன் வந்துள்ளது எதை காட்டுகிறது? இந்திய தேசப் பற்றையா? அவரது லாப நோக்கத்தையா?

அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை மீறி ரஷ்யாவிடமிருந்து அம்பானி கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய மோடி அரசு அனுமதிப்பது இந்திய மக்களின் நலன்களுக்காகவல்ல.  அதை சுத்தீகரித்து ,நல்லவிலைக்கு  ஐரோப்பாவில் கொள்ளை லாபம் அடிப்பதற்காகவே.

இந்த முதலாளிகளுக்கு  அவர்களின் லாபம் மட்டுமே உயிர் மூச்சாகவுள்ளது. முதலாளிகளின் குணாம்சம் நேற்றும் அது தான், இன்றும் அது தான் நாளையும் அது தான். அவர்களது முயற்சிகளுக்கு தேசீய சாயம் பூசுவது எல்லாம் பம்மாத்து வேலை.

உலகமயமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் , ஒரு முதலாளி இந்தியராக பிறந்ததாலேயே அவரை “ நம்மவராக “ கருத முடியுமா? ஐரோப்பாவில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதற்காக ரஷ்யாவில் இருந்து மலிவான எண்ணெய் இறக்குமதி செய்வது இந்திய மக்களின் நலன்களுக்காகவா? இதற்கு மோடி அரசு உதவியதால் இந்திய  ஏற்றுமதியாளர்கள் தான் அமெரிக்காவின் அதிக வரிச் சுமையை அனுபவிக்க வேண்டியதாயிற்று.

இஸ்ரேலில் இந்திய தண்ணீரை, இந்திய வனத்தின் வளங்களை  விற்கும் அதானியால் இந்திய மக்கள் அடைந்த பயன் என்ன? இங்கு கொள்ளையடித்த பணத்தை (லாபத்தை) மொரீஷியசிலும், சேஷல்ஸிலும் பதுக்கி வைக்கும் இந்த முதலாளிகள் தங்கள் குடும்பத்தினர்களுக்கு வெளிநாட்டு குடியுரிமையை விரும்பி பெற்றுள்ளது இந்திய தேசப் பற்றின் காரணமாகவா? இவர்களெல்லாம் நம்மவர்களா? அவர்கள் லாபவெறி ஒன்றையே கொண்ட  முதலாளிகள்.  இவர்களுக்கு இந்திய மக்களை சுரண்டுவதில்  தான் அக்கறை! இந்திய மக்களின் நலன்களில் ஏது அக்கறை?  அதானி, அம்பானியை  தேசிய பிம்பமாக கட்டி எழுப்புபவர்கள், அவர்களால் பலன் பெறும் அரசியல் வியாபாரிகள்!

எலான் மஸ்க் தென்னாப்ரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற பெரு முதலாளி. அவனது நோக்கமெல்லாம் உலக முழுவதும் கால்பரப்பி தனது லாபத்தை பெருக்கவதுதான். இந்திய கார்ப்பரேட் சூழலில் உள்ள மோசடிகளையும் , இந்திய சந்தையை ஏகபோகமாக இரண்டு குஜராத்தி முதலாளிகள் கட்டுபடுத்தும் கசப்பான உண்மையை எலான் மஸ்க் இங்கு குறிப்பிடுகிறார். அது சிலருக்கு உறுத்துவது ஏன்? இதில் தேச பற்று எங்கிருந்து வருகிறது?

இந்த இரு முதலாளிகளின் (அதானி அம்பானி) ஆதிக்கத்தால் இந்திய நுகர்வாளர்கள் படும் அவஸ்தையை மனதில் வைத்தே ராகுல்காந்தி, “ வாருங்கள், வந்து பாருங்கள் விரைவில் மற்றொருவரின் ஆதிக்கத்தையும் உணர்ந்து கொள்வீர்கள் “ என்று கிண்டலடித்துள்ளார்.

அதானி அம்பானிகளுக்காக குரல் கொடுப்பது தேசப் பற்று அல்ல, அவர்கள் – முதலாளிகள் தொழில் தொடங்குவதும் நடத்துவதுதும் தேச பற்றினால் அல்ல என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய கார்ப்பரேட் உலகில் தடக்கும் மோசடிகள் ஒன்றல்ல இரண்டல்ல, இந்திய வங்கிகளை இம்முதலாளிகள் சூறையாடுவது மட்டுமல்ல, இந்திய இயற்கை வளங்களை அழித்தொழித்து, சுற்று சூழலை சூறையாடி தங்களது லாபத்தை பெருக்குவதே முதலாளிகளின் ஒற்றை நோக்கமாக உள்ளது. இந்திய சுற்று சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக அவற்றை திறந்துவிட்டு இவ்விரு முதலாளிகளும் கொள்ளையடிக்க துணை நிற்பதும் , அதற்கேற்றார் போல் இந்திய சட்டங்களை திருத்துவதும் , முடக்குவதுமே மோடி அரசின் வேலையாக உள்ளது.

அதானி அம்பானியை தவிர நீண்டகாலமாக இந்திய அடையாளமாக திகழும் டாடா குழுமத்தை “வழிக்கு கொண்டுவர” மோடி அரசு பல்வேறு முயற்சிகள் செய்கின்றன.

இன்று டாடா குழுமத்தில் டாடா சன்ஸ் அமைப்பிற்கும் டாடா டிரஸ்டு அமைப்பிற்கும் சிண்டு முடிவதன் மூலம் பங்குதார்ர்கள் ஒரு நிறுவனத்தை ஜனநாயக ரீதியில் (பெருவாரியான பங்குகளை வைத்திருப்பதன் மூலம் நிருவகிப்பதை) நிருவகிப்பதை ரிசர்வ் வங்கி மூலமும், சாரிட்டி கமிஷனர் என்ற அரசு அதிகாரி மூலமும் முடக்கி வைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன என்பதை கார்ப்பரேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோடி அரசின் நேர்மையற்ற இத்தகைய நடவடிக்கைகளை அக்குழுமத்மின் சேர்மனாக உள்ள சந்திரசேகர் மூலமாகவும், டாடா டிரஸ்டு உறுப்பினராக மறைந்த ரத்தன் டாட்டாவால் நியமிக்கப்பட்ட தமிழகத்தை சார்ந்த டி வி எஸ் குழுமத்தின் தலைவரான வேணு ஶ்ரீனிவாசன் மூலமாகவும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

டி வி எஸ் குடும்பத்தை சார்ந்த வேணு சீனிவாசன் மற்றும் முன்னாள் டிசிஎஸ் சேர்மனும் இன்னாள் டாடா குழுமத்தலைவர் சந்திரசேகரன் அவர்களும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தீவிர விசுவாசிகள் என்பது பரம ரகசியமல்ல! தேர்தல் ஆணையத்தின் சட்டவிரோத படிவம்6 மாற்றங்களும்,குளறுபடிகளும் சந்திரசேகரனின் ஒத்துழைப்பாலாயே நடைபெற்றதாக பேசப்படுகிறது. இதற்கு பிரதிபலனாகவே டாடா குழுமத்தின் சேர்மனாக (தலைமை பொறுப்பு) மூன்றாவது முறையாக சந்திரசேகரனை நியமிக்க முயற்சிகள் நடைபெறுகின்றனவாம்.

இதற்கு வலு சேர்க்கவும், பார்ஸி இனத்தாரோல் கட்டுபடுத்தப்படும் டாடா டிரஸ்டு , அதன் வழியாக டாடா சன்ஸ் குழுமத்தின் கட்டுபாட்டை தகர்க்க டி வி எஸ் ஸின் வேணு சீனிவாசன் முடுக்கி விடப்பட்டுள்ளார். வேணு சீனிவாசன் மீது சிலை திருட்டு வழக்குகளும் உள்ளன என்பதை மறுக்க முடியாது. எனவே இவரின் தேவை மோடி அரசிற்கும் மோடி அரசின் தயவு சீனிவாசனுக்கும் தேவை என்பதை அறியாதவர்கள் அப்பாவிகளாகத்தான் இருக்க முடியும். இந்துத்துவ சக்திகளுக்கு ஆதிக்கமும் லாபமும்தான் குறியே தவிர தேசம், மக்கள் என்று கதைப்பதெல்லாம் ஊரை ஏமாற்றத்தான் என்பதை “தேச பக்திக்கு” மொத்த குத்தகைதார்ர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் கடைசி ட்விஸ்டாக ஒரு செய்தி: டாடா டிரஸ்டு பஞ்சாயத்தில் மூக்கை நுழைத்த வேணு சீனிவாசனின் டி வி எஸ் குடும்பத்தில் சீனிவாசனின் வாரிசுகள் சண்டையில் இறங்கி உள்ளனர் என்பதுதான்!

லாப வேட்டையிலும் ஆதிக்க போரிலும் மதங்கள் மற்றும் தேசங்களின் பெயர்கள் உச்சரிக்கப்படலாம் ஆனால் உண்மையான சண்டை, பணத்தை அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகத்தானே ஒழிய வேறு நோக்கங்களுக்காக இல்லை.

ச.அருணாச்சலம்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time